இதென்ன, பிரேதத்தைக் கூட்டித் தைத்து உயிர் தருவதாவது என்று பலர் நினைக்கலாம். மனிதனுடைய மூலவம்சம் பற்றியும், ஜீவ பரிணாம நியதியைப் பற்றியும் ஆராய்ச்சி நடத்திய சார்லஸ் டார்வின், ஹக்ஸ்லி முதலிய பண்டிதர்கள், வருங்காலத்தில் சாத்தியம் என நினைத்த ஒரு கருத்தை, அதாவது சிருஷ்டி ரகசியம் நம் வசம் கிடைத்துவிடும் என்பதை ஒட்டியே இந்தக் கதை ஜோடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலீஷ் பாஷையில் இந்தக் கருத்தையொட்டிப் பல நாவல்கள் வெளிவந்துள்ளன. எச். ஜி. வெல்ஸ் எழுதிய ஐலண்ட் ஆப் டெரர் (பீதித் தீவு) என்ற நாவலிலும் ஒரு பண்டிதர் மிருகங்களை ரண சிகிச்சை மூலம் மனிதனாக்க முயலுவதாகக் கதை ஒன்று உண்டு. இங்கிலீஷ் பாஷையிலே நன்மை தீமை என்ற இரண்டு சக்திகளை மோதவிட்டு அதன் விளைவுகளைப் பார்க்கும் கதைகள் பல உண்டு. டாக்டர் பாஸ்டஸ், டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட், ஐலண்ட் ஆப் டெரர், இன்விஸிபிள் மான் (சூட்சும சரீரி) முதலிய நாவல்களைப் போலத்தான் பிராங்கன்ஸ்டீன் என்ற இந்தப் பிரேத மனிதனும். பிராங்கன்ஸ்டீன் சிருஷ்டித்த பிரேத மனிதன் அவனைக் கேட்கும் கேள்விகள், மனிதன் தெய்வத்தைப் பார்த்துப் போடும் கேள்விகளாகவே கொள்ள வேண்டும். இதை எழுதி...