திடீரென்று ஒருநாள், ரங்கூனுக்குப் போவதென்று முடிவு செய்தேன். ஆனால்
எந்த வழியாகச் செல்வது என்பதுதான் யோசனை. இந்தியாவிலிருந்து ரங்கூனுக்குக் கப்பல்
வழியாக மூன்று நகரங்களிலிருந்து செல்லலாம். கல்கத்தா, சென்னை, விசாகபட்டணம்.
யுத்தம்
ஆரம்பமான பிறகு கப்பல் போக்குவரத்து முன்னிருந்தது போல ஒழுங்காக இல்லை. முன்னர், 5000, 7000 டன் நிறையுள்ள கப்பல்கள், மூன்று அல்லது நான்கு தினங்களில் ரங்கூனை
அடைந்துவிடும். இப்பொழுது,
கல்கத்தா, சென்னை முதலிய நகரங்களிலிருந்து 2000 அல்லது 3000 டன் நிறையுள்ள சிறிய சீனக் கப்பல்களும், நார்வீஜியக் கப்பல்களும், நினைத்த பொழுது
செல்கின்றன. இவைகள் எல்லாம் முன்னர் சாமான் கப்பல்கள். இப்பொழுதும் பிரயாணிகளை, சாமான்களைப் போலத்தான் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன.
சில சமயங்களில் இக்கப்பல்கள் ரங்கூனை அடைவதற்கு எட்டு
நாட்கள் கூட ஆகிவிடுகின்றன.
தற்போது
ரங்கூனுக்குச் செல்கின்ற கப்பல்களில் விசாகப்பட்டணத்திலிருந்து செல்கின்ற கப்பல்கள்தான்
சிறிது வசதியுள்ளவை. விசாகப்பட்டணத்திற்கு இப்பொழுது சுக்கிர தசை அடிக்க ஆரம்பித்திருக்கிறது.
ஆந்திர சர்வகலாசாலை, சினிமா ஸ்டுடியோ, நாற்புறமும் மலைகளாலும் நிலப்பரப்பாலும் சூழப் பெற்ற இயற்கையான துறைமுகம், சிந்தியா கம்பெனியாரின் கப்பல் கட்டும்
புதுமுயற்சி, உடுப்பி பிராமணாள் காபி கிளப்புகள்
இவ்வளவும் இருக்கும் பொழுது விசாகப்பட்டணத்திற்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்குக்
கேட்பானேன்? இந்த அழகான ஊரைப் பாதுகாக்க
ஆயிரக்கணக்கான வெள்ளை சோல்ஜர்கள் இங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். விசாகப்பட்டணத்திலிருந்து
‘சில்கா’ என்ற கப்பலில்
பிரயாணமானேன். மற்றக் கப்பல்களைவிட ‘சில்கா’வுக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. சாதாரணமாக, கப்பல்களில் பிரயாணிகள் உலாவுவதற்கு 'டெக்' வசதி இருக்குமல்லவா? ஆனால் சில்காவில் டெக் என்பதே கிடையாது. டெக்கே இல்லாமலிருக்கும் பொழுது
டெக் விளையாட்டுக்கள் எப்படி இருக்க முடியும்?
முதலிரண்டு
நாட்கள் கப்பல் கரையோரமாகவே சென்றது. இந்த இரண்டு நாட்களில் மூன்று ஊர்களில்
கப்பல் நின்றது.
முதலாவது
கலிங்கப்பட்டினம், இரண்டாவது பாரூவா, மூன்றாவது கோபால்பூர். இந்த மூன்று ஊர்களிலும்
துறைமுகங்கள் இல்லை. கப்பல் சுமார் இரண்டு மைல் தூரத்தில் நங்கூரம் போட்டிருக்கும்; பிரயாணிகள் படகுகளில் வந்து கப்பலில் ஏறிக்கொள்வார்கள்.
கோபால்பூர், ஏழ்மைக்குப் பேர்பெற்ற ஒரிஸா மாகாணத்தைச்
சேர்ந்தது. கப்பல் நங்கூரம் போட்டிருக்கும் பொழுது, ஏராளமான செம்படவர்கள் படகுகளில் வந்து, மீன், இளநீர் முதலியவைகளை விற்பார்கள். இச்செம்படவர்கள்
அணிந்திருக்கும் குல்லாய் மிக விநோதமாயிருக்கும். இவர்களின் படகுகள் மிக
நீளமாயிருக்கும்; அகலம் மட்டும் ஒருவர் உட்காருவதற்குப்
போதுமானதாயிருக்கும். இச்செம்படவர்கள் கால்களைப் பின்புறமாக மடக்கிக்கொண்டு
உட்கார்ந்திருப்பார்கள். சில சமயங்களில் இவர்கள் படகோட்டுகிறார்களா, அல்லது தண்ணீரில் மிதக்கிறார்களா என்று சந்தேகமுண்டாகும்.
***
கோபால்பூரிலிருந்து
நான்காவது நாள் கப்பல் ரங்கூனை அடைந்தது. கப்பல்
காப்டன், விசாகப்பட்டணத்திலேயே என்னுடைய காமிராவை
வாங்கி வைத்துக்கொண்டார். ரங்கூன் துறைமுகத்தில் இறங்கும் பொழுதுதான் காமிராவை என்னிடம்
திருப்பிக் கொடுத்தார்.
கஸ்டம்ஸ்
அதிகாரிகள் காமிராவை என்னிடம் கொடுத்துவிட்டு, காமிராவுக்குள் இருந்த பிலிம் சுருளை மட்டும் எடுத்துக்கொண்டுவிட்டார்கள்.
ரங்கூன்
மிகவும் அழகான நகரம். ரங்கூனில், எந்த இடத்திற்கு
வேண்டுமானாலும் கண்ணை மூடிக்கொண்டு போகலாம் என்று கூறுவார்கள். ஆனால் அப்படிச்
சென்றால் நிச்சயமாய் ஆபத்துண்டாகும். என்றாலும் ரங்கூன் நகரின் சிறந்த அமைப்பைக்
குறிப்பிடுவதற்கு இவ்வாறு கூறுவது வழக்கம்.
ரங்கூன் நகர
அமைப்புப் படத்தைப் பார்த்தால், செங்கல் கற்களை
அளவுடன் பரப்பி வைத்ததைப் போல் இருக்கும். 900 மைல் தூரம் வரை கப்பல் செல்லும் வசதியுள்ள அழகான
ஐராவதி நதியின் கரை ஒருபுறம், பர்மா ரயில்வே
லைன் ஒருபுறம், இதன் மத்தியில் ஐந்து நீளமான வீதிகள், இந்த ஐந்து வீதிகளுக்குக் குறுக்கே சுமார் நூறு
வீதிகள், நகரின் மத்தியிலே அழகே உருவான சூலே பயா
என்னும் புத்தர் திருக்கோயில், - இதுதான் ரங்கூன்
நகரம். நாகரிக நகரத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று டிராம் வண்டி அல்லவா? ஆனால் ரங்கூனில்
டிராம் வண்டிகளைப் பெரும்பாலும் எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக மின்சாரத்தில் ஓடும் மோட்டார்களை (Trolly Buses) அமைத்திருக்கிறார்கள். சில வருஷங்களில் ரங்கூனில்
டிராம் வண்டிகளே இல்லாமல் போய்விடலாம். ‘ஏர் கண்டிஷனிங்’ வந்த பிறகு மின்சார விசிறி கர்நாடகம் போல
ஆகிவிட்டதல்லவா? அதைப்போல டிராலி பஸ்கள் வந்த பிறகு
டிராம் வண்டிகளும் கர்நாடகமாகிவிட்டன.
வசதியான டிராலி
பஸ்கள் ஓடும் ரங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கான ரிக்ஷாக்கள் இருக்கின்றன. இந்த ரிக்ஷாக்களை இழுக்கும் தொழில் ஆந்திர சகோதரர்களின்
ஏகபோக உரிமை. ஆனால். அதற்கும் இப்பொழுது ஆபத்து
வந்துவிட்டது. 1943 ஜனவரி முதல் தேதியிலிருந்து பர்மாவில்
மனிதனை மனிதன் இழுக்கும் வழக்கம் நின்றுவிடும். ஆனால் மனிதனை மனிதன் ஆளும் வழக்கம்
என்று நிற்குமோ?
***
ரங்கூன்
நகரத்தில், உலகத்திலுள்ள பல்வேறு நாட்டினரைப்
பார்க்கலாம். பர்மா ரோடு திறந்தது முதல் ஏராளமான சீனர்கள் வந்து குடியேறியிருக்கின்றனர்.
ரங்கூனுக்கும் சுங்கிங்குக்கும் 4000 மைலுக்கு
மேலிருக்கும். பர்மா ரோடு மூலமாக சுமார் பத்தாயிரம் லாரிகள் வியாபாரப் பொருள்களை
ஏற்றிச் செல்கின்றன.
தற்பொழுது
ரங்கூனைப் பார்த்தால் சீனாக்காரன் பட்டணம் போலத் தோன்றுகிறது. எங்கே பார்த்தாலும்
சீன ஹோட்டல்கள், சீனர்களின் சினிமாத் தியேட்டர்கள்; தவறி விழுந்தால் சீனன் மீதுதான் விழவேண்டும்.
பர்மியர்கள்
நல்ல ஜனங்கள். பட்டாடையுடுத்திப் பகட்டாக வாழ்வதில் அவர்களுக்குப் பிரியமதிகம்.
பர்மியர்களுக்கு இந்தியாவிடம் பெருமதிப்பு உண்டு. காந்திஜியும் நேருவும் அங்கு
சென்ற பொழுது, பர்மியர்கள் ராஜ உபசாரத்துடன் வரவேற்றனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பர்மியர்களுக்கும் இந்தியர்களுக்கும் வெகுநாட்களாக நல்லுறவே
இல்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியர்கள் பர்மாவை வியாபாரக் கண் மட்டும் கொண்டு
நோக்குவதேயாகும். பொதுவாக இந்தியர்களும் பர்மியர்களும் சமூக வாழ்வில் நெருங்கிப்
பழகுவதில்லை. இந்தியர்களைப் போலவேதான் ஆங்கிலேயர்களும் ஒதுங்கி வாழ்கின்றனர்.
ஆனால், அவர்கள் ஆளும் ஜாதியினர்.
பர்மியர்கள் பல
துறைகளிலும் படிப்படியாக முன்னுக்கு வருகிறார்கள்; ஆனால் ஒவ்வொரு படியிலும் தடைகள் உண்டாகின்றன. இதற்குக் காரணம் அந்நியர்கள்.
பொதுவாக பர்மியர்களைவிட,
பர்மாவிலுள்ள அந்நியர்கள்
மிகவும் திறமையானவர்கள். இதை பர்மியர்களும் உணர்கின்றனர். “ஆயிரமுண்டிங்கு ஜாதி, எனில் அந்நியர்வந்து புகலென்ன நீதி” என்றார் பாரதியார். இதே மாதிரியான ஒரு கேள்வியைத்தான் பர்மியர்களும்
கேட்கின்றனர்.
பர்மாவின்
முக்கியமான வியாபாரப் பொருள்கள் மூன்று. அரிசி, மரம், பெட்ரோல் இம்மூன்று வியாபாரங்களும்
தற்சமயம் அந்நியர்கள் கையிலிருக்கின்றன.
பர்மியர்கள்
உணர்ச்சியின் வசப்பட்டவர்கள். ரொம்பவும் தேசிய வெறி கொண்டவர்கள். தேசியக் கொடியான மயில்
கொடியை வணங்குவார்கள். உடை விஷயத்தில் பர்மியர்கள் முற்றிலும் தேசியவாதிகள். டவாலி முதல் பிரதம மந்திரி வரையில், தேசிய முறையிலேதான்
உடை அணிவார்கள். ஆங்கில முறையில் உடையணியும் பர்மியர்களை விரல் விட்டு
எண்ணிவிடலாம்.
பர்மியர்களுக்கு
நாடகம், கூத்து, சினிமா முதலியவைகளிலே அதிகமான பிரியம். பர்மியர்கள் இப்பொழுது இந்தியப்
படங்களையும் பார்த்து ரசிக்கின்றனர்.
பர்மாவைப்பற்றி
நினைக்கும் பொழுது, கம்பீரமாகத் தோற்றமளிக்கும் தங்க மயமான
ஸ்வேதகான் கோவிலும் பர்மாவிலுள்ள எண்ணற்ற நண்பர்களின் மாறாத அன்புந்தான்
ஞாபகத்திற்கு வருகின்றன. இந்தச் சந்தோஷ நினைவுகளுக்கு மத்தியிலே, பர்மாவில் இந்தியர்களின் எதிர்காலத்தைப்பற்றிய
கவலையும் உண்டாகிறது.
***
பர்மா ஒரு
காலத்தில் இந்தியாவின் மாகாணங்களில் ஒன்றாய் இருந்தது. பிரித்தாளும்
சூழ்ச்சிக்குப் பேர்போன பிரிட்டிஷார், பர்மாவையும்
இந்தியாவிலிருந்து பிரித்துவிட்டார்கள். பர்மாவை இந்தியாவிலிருந்து பிரிக்கக்கூடாதென்று
பர்மியர்களில் பெரும்பான்மையோர் விரும்பினார்கள். பிரிவினை வேண்டாத கட்சிதான்
சட்டசபையில் மெஜாரிட்டியாக வந்தது. கீழ் நாடுகளைப் பொறுத்தவரை பெரும்பான்மையோர்
விருப்பத்துக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் என்றுதான் மதிப்புக் கொடுத்தது?
சில பர்மிய
அரசியல் கட்சிகளுக்கு, இந்தியர்கள் மீது துவேஷம் உண்டாக்குவதே
முக்கிய நோக்கம். இன்று பர்மாவின் பிரதம மந்திரியாக இருக்கும் ஊஸோ இந்தியர்களின் பரம விரோதி. இந்த ஊஸோவை பரம விரோதியாக்கியதும்
இந்தியரே.
தற்பொழுது
வெளியாகியிருக்கும் இந்திய
- பர்மா குடியேற்ற
ஒப்பந்தம் இந்தியர்களுக்கு ஒரு அவமானம். இந்த முறையற்ற ஒப்பந்தத்தை மறைமுகமான
முறையில் நிறைவேற்றுவதற்கு உடந்தையாயிருந்தவர் ஒரு இந்தியர் என்பதை நினைக்கும்
பொழுது, ‘கடவுளே! எங்கள் நாட்டை அந்நியர்களிடமிருந்து
காப்பாற்றாவிட்டாலும் பாதகமில்லை. எங்கள் சொந்த நாட்டாரிடமிருந்தாவது காப்பாற்ற
மாட்டாயா?’ என்றுதான் பிரார்த்திக்க வேண்டியிருக்கிறது.
பர்மா
பர்மியர்களின் நாடு. அது அவர்களுக்கே சொந்தம். பர்மாவின் முன்னேற்றத்தை உத்தேசித்து, குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்குப்
பூரண உரிமையுண்டு. நமக்கு இதில் ஒன்றும் ஆட்சேபமில்லை. ஆனால், இந்தக் குடியேற்ற ஒப்பந்தம் அந்நியர்கள்
எல்லோரையும் கட்டுப்படுத்துமானால் நியாயமென்று கூறலாம். பர்மா, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தது.
பிரித்தானியர்களும் இந்தியர்களும்
பிரிட்டிஷ் பிரஜைகளே. இவ்விருவரும்
அன்னியர்களே. அப்படி இருக்கும் பொழுது, 6000 மைல்களுக்கு அப்பாலிருந்து வந்திருக்கும் பிரித்தானியர்களுக்குச்
சலுகை கொடுத்துவிட்டு, பல நூற்றாண்டுகளாகத் தொடர்புள்ள இந்தியர்களை, பர்மாவின் இன்றைய நன்னிலைக்கு முக்கிய காரணமாயுள்ளவர்களான
இந்தியர்களை, அடித்து விரட்டுவதைப் போல ஒப்பந்தம்
செய்வது மிகவும் அநீதியாகும். இந்தியா சுதந்திர நாடாக இருந்தால், அல்லது காங்கிரஸ் மந்திரி சபையாவது பதவியிலிருந்தால், இப்பொழுது இந்தக் குடியேற்ற ஒப்பந்தம் நடைபெற்றிருக்காது
என நிச்சயமாய் கூறலாம்.
பிரிட்டிஷ்
சாம்ராஜ்யத்தில் இந்தியர்கள் கேவலமாக நடத்தப்படுவதைப் போல, உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இந்தியர்கள் நடத்தப்படுவதில்லை.
(இக்கட்டுரை பர்மா யுத்தத்திற்கு முன் எழுதப்பட்டது.)
'பிரயாண நினைவுகள்' நூலிலிருந்து.
Comments
Post a Comment