திடீரென்று ஒருநாள் , ரங்கூனுக்குப் போவதென்று முடிவு செய்தேன். ஆனால் எந்த வழியாகச் செல்வது என்பதுதான் யோசனை. இந்தியாவிலிருந்து ரங்கூனுக்குக் கப்பல் வழியாக மூன்று நகரங்களிலிருந்து செல்லலாம். கல்கத்தா , சென்னை , விசாகபட்டணம். யுத்தம் ஆரம்பமான பிறகு கப்பல் போக்குவரத்து முன்னிருந்தது போல ஒழுங்காக இல்லை. முன்னர் , 5000, 7000 டன் நிறையுள்ள கப்பல்கள் , மூன்று அல்லது நான்கு தினங்களில் ரங்கூனை அடைந்துவிடும். இப்பொழுது , கல்கத்தா , சென்னை முதலிய நகரங்களிலிருந்து 2000 அல்லது 3000 டன் நிறையுள்ள சிறிய சீனக் கப்பல்களும் , நார்வீஜியக் கப்பல்களும் , நினைத்த பொழுது செல்கின்றன. இவைகள் எல்லாம் முன்னர் சாமான் கப்பல்கள். இப்பொழுதும் பிரயாணிகளை , சாமான்களைப் போலத்தான் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. சில சமயங்களில் இக்கப்பல்கள் ரங்கூனை அ டைவதற்கு எட்டு நாட்கள் கூட ஆகிவிடுகின்றன. தற்போது ரங்கூனுக்குச் செல்கின்ற கப்பல்களில் விசாகப்பட்டணத்திலிருந்து செல்கின்ற கப்பல்கள்தான் சிறிது வசதியுள்ளவை. விசாகப்பட்டணத்திற்கு இப்பொழுது சுக்கிர தசை அடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆந்திர சர்வகலாசாலை , சினிமா ஸ்டுடியோ , நாற்புறமு...