Skip to main content

ஆரோக்கிய நிகேதனம் - படிக்குமுன்...


('ஆரோக்கிய நிகேதனம்' நாவல் அமேசான் கிண்டிலில் ஜூலை 23ஆம் தேதி, தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அவர்களின் பிறந்த நாளில் வெளியாகிறது. இந்த நாவலுக்கு அதன் மொழிபெயர்ப்பாளர் த. நா. குமாரஸ்வாமி எழுதிய முன்னுரை இது.)

அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாடு 1959ஆம் ஆண்டு சென்னையில் கூடியது. ஸ்ரீ தாராசங்கர் பந்த்யோபாத்யாய் அதற்குத் தலைமை தாங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் அவருடன் அளவளாவ அவருடைய அறைக்குச் சென்றேன். அவருடைய நவீனங்களில் ஒன்றான ஆகுன், அப்பொழுது என்னுடன் வைத்திருந்தேன். (இந்நூலை அக்கினி என்ற பெயரில் 1943ஆம் ஆண்டில் மொழிபெயர்த்து நான் தாராசங்கரை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தினேன்) அதனை அவரிடம் தந்து அவர் தம் நினைவை நான் போற்றும் வகையில் ஒரு நல்லுரையை அதில் பதிக்கும்படி வேண்டினேன். அந்நூலின் உட்புறமமாக வங்காளிப் பத்திரிகையொன்றில் வந்த அவர் உருவப்படத்தை ஒட்டிவைத்திருப்பதைப் பார்த்து மென்னகை பூத்து அவர், “எத்தனை வருஷங்களுக்கு முன் எடுத்த என் படம்! அந்த நாட்கள் மறைந்துவிட்டன. இப்போது நான் எவ்வளவோ மாறிப்போய்விட்டேன். இன்று அந்த தாராசங்கரின் மெலிந்த நிழலே நான் என்றதும் அவருடைய கண்கள் கடந்த அத்தொலைவு நாட்களை நோக்கி நிலைத்தன. அந்தப் படத்தின் கீழேயே ஒரு கவிதையை வரைந்து தம் முத்திரையையும் வைத்தார்[1].

அன்னாருடைய மற்றொரு சிறந்த நவீனமான ராஇ கமல்என்ற நூலைப் பின்னர் கமலினி என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

ஆரோக்கிய நிகேதனம்என்ற அவருடைய இந்நவீனம் முற்றிலும் புது வகையானது. உலகத்துப் பேரிலக்கியங்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான தகுதியுடையது இது. இதுபோன்ற ஒரு ரசனையை உருவாக்க எழுத்தாளனுக்குத் தன் நாட்டைப்பற்றிய ஆழ்ந்த பரிச்சயம் வேண்டும்; பல்வேறு மக்களுடன் இழைந்து பழகி அவர்கள் நெஞ்சத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் வேண்டும். இவற்றுடன் காவிய நோக்கும் கலந்துவிட்டால் அந்த எழுத்துச்சிற்பம் என்றும் அழியாது. ஜீவன் மஷாய் என்ற பாத்திரமே கதையில் ஊடுபாவாகப் பரவி நிற்கிறது. அவரின்றி இந்நவீனத்தில் ஒரு சிறு நிகழ்ச்சிகூட நகரவில்லை. எத்துணையோ தன்மையான மனிதர் அவருடன் மோதுகின்றனர். காந்தம்  இரும்புத்துகளை இழுத்துக்கொள்வது போல் மையமாக விளங்கும் அவரை நோக்கியே ஈர்க்கப்படுகின்றனர். சித்த வைத்தியர் ஜீவன் மஷாய் ஓர் உயர்வகைக் குணசித்திரம். ஆயிரக்கணக்கான நினைவோட்டங்கள் (Stream of consciousness) கலந்த ஆரோக்கிய நிகேதனம்எக்காலத்தும் படிப்பவர் உள்ளத்தில் ஆழப் பதியவல்லது. நமது நாட்டுப் பண்டைய ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகள் பிற்போக்கானவை, வெறும் பச்சிலைச் சாறும் செங்கல் சூரணமும் கொண்ட விஷயங்கள் என ஒருவகை அலட்சிய மனப்பான்மை பரவியுள்ளது. இந்த நூலைப் படித்தால் இம்மருள் முற்றிலும் விலகும்.

1955இல் இந்நூலுக்கு ரவீந்திர புரஸ்கார் (பரிசு) கிடைத்தது. மறு ஆண்டே சாகித்திய அக்காதெமியும் இதற்குத் தன் பரிசை வழங்கியது. சரத் சந்திரருக்குப் பிறகு வங்க இலக்கிய பீடத்தில் அமர்ந்து அழியா பல இலக்கியங்களைப் படைத்த இவர் இன்று நம்மிடையே இல்லை. அன்னாருடைய இந்நூலைத் தமிழ் வடிவில் தருவதற்கு ஆதரவு தந்த சாகித்திய அக்காதெமியாருக்கு எனது நன்றி. எனது விருப்பம் போல் இதனைச் செம்மையாக அச்சுருவில் வருவதற்குத் துணை நின்ற ஜயம் கம்பனியாருக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாவேன். தமிழ் ஆர்வலர் இதனை ஏற்பரென நம்புகின்றேன்.

சென்னை-35
16-5-1972
தண்டலம் நா. குமாரஸ்வாமி

[1] ஆமார் புராதந கியேச்சே ஹாராயே

ஸந்த்யார் மத்யாஹ்நே கே திபே பிராயே

- தாராசங்கர்.

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...