Skip to main content

சிறுமியின் தங்க நகை | தி. ஜ. ரங்கநாதன்

ஹரிஜன பணி மிகவும் முக்கியம்’ - இப்படி எண்ணினார், காந்தி. 'ஹரிஜனங்களை உயர்த்த வேண்டும்; இதற்குப் பணம் வேண்டும்' என்றார். ஊர் ஊராய் இதற்காக வந்தார்.
கன்னட நாட்டில் உடுப்பி என்ற ஊர் இருக்கிறது. அங்கே கிருஷ்ணர் கோயில் இருக்கிறது. அது மிகவும் புகழ்பெற்றது. உடுப்பிக்குக் காந்தி சென்றார்.
பலர் வரவேற்பு அளித்தார்கள். ஹிந்திப் பிரச்சார சபையினரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள். வரவேற்புப் பத்திரம் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.
ஒரு சிறுமி அதை வாசித்தாள். அவளுக்கு வயது ஒன்பது; பெயர் நிருபமா. அந்த வயதிலேயே ஹிந்தி கற்றிருந்தாள். ஹிந்தியில் பேசுவாள், எழுதுவாள்.
கழுத்திலும் கையிலும் தங்க நகைகள் அணிந்திருந்தாள்.
பத்திரம் வாசித்து முடித்தாள். காந்தியிடம் அளித்தாள்.
அப்போது காந்தி சொன்னார்: "பத்திரத்தைக் கொடுக்கிறாய். சரி; வாங்கிக் கொள்கிறேன். நகைகள் போட்டிருக்கிறாயே! அவற்றையும் கொடுப்பாயா?"
நிருபமா தயங்கவில்லை. கழுத்திலே தங்கச் சங்கிலி இருந்தது. அதைக் கழற்றினாள். காந்தியிடம் கொடுத்தார்
"ஆமாம். உன் கையில் தங்க வளையல் இருக்கிறதே! அதையும் கொடுத்துவிடேன்" என்றார் காந்தி.
வளையலையும் நிருபமா கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். அவளுடைய கண்ணிலே நீர் துளும்பியது. அதைக் காந்தி பார்த்துவிட்டார். அவளை முதுகிலே தட்டிக் கொடுத்தார்.
"நீ அழுகிறாய். இப்படிக் கொடுத்தால் நான் வாங்கமாட்டேன்" என்றார்.
வளையலை அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அங்கே நிருபமாவின் பெற்றோர் இல்லை.
ஒரு வீட்டிலே காந்தி தங்கினார். காந்தியோடு கூடவே நிருபமாவும் போனாள். அங்கே நிருபமாவின் பெற்றோர் வந்தார்கள்.
இந்தச் செய்தியை நிருபமாவின் அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள்.
நிருபமாவிடம் அம்மா சொன்னாள்: அசடே காந்தி கேட்டால் அழலாமா? வளையலையும் கொடுத்துவிடு."
உடனே வளையலை நிருபமா மறுபடி கழற்றினாள்; காந்தியிடம் கொடுத்தாள். காதுத் தோட்டையும் கழற்ற முயன்றாள். காந்தி தடுத்தார்.
"வேண்டா, வேண்டா. அதை நீயே வைத்துக்கொள் இது போதும் எனக்கு" என்றார். நிருபமா, சரி என்று பேசாதிருந்தாள்.
மறுபடியும் காந்தி சொன்னார்: "நகைகளைக் கொடுத்தாய். இது எனக்குச் சந்தோஷம் தருகிறது. ஆனால், ஒன்று; இனி நீ ஒருநாளும் நகையே அணியக்கூடாது. சரிதானா?"
"சரி, நான் இனிமேல் நகை அணிய மாட்டேன்" என்றாள் நிருபமா. நாற்பதாண்டு உருண்டோடியது. நிருபமா சொன்னபடி நடந்தாள். அவள் நகையே அணியவில்லை. டாக்டர் வேலைக்குப் படித்தாள்; பட்டமும் பெற்றாள்.
நிருபமாவுக்கு காந்தி கடிதம் எழுதுவார். அவளும் அவருக்கு எழுதுவாள். கடிதங்கள் இந்தியில்தான் இருக்கும்.
மேடையில் ஏறி நிருபமா பேசுவாள். அதில் அவளுக்கு ஆசை. அவளுக்கு அசாத்தியக் கூச்சம்; கூட்டத்தில் பேச வராது. கண்ணீர் சொரிவாள்.
காந்திக்கு அவள் இதை எழுதினால் அதற்குக் காந்தி பதில் எழுதினார்: "நீ இன்னும் சிறு பெண். அதனால்தான் உனக்கு அழுகை வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேடையில் ஏறாதே, பேசாதே. தனியே இருப்பாய் அல்லவா? அப்போதெல்லாம் உரத்துப் பேசிப் பழகு. ஆசையை இப்படி அடக்கு. அதனால் உன் திறமை பெருகும். மேடையில் பேசத் தானாக வந்துவிடும்."

அடுத்தக் கதை: பறக்கும் வித்தை

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...