Skip to main content

சிறுவனின் அன்புப் பரிசு | தி. ஜ. ரங்கநாதன்


காங்கிரஸ் மகாசபை கூடியிருந்தது.
காந்தி தமது கூடாரத்தில் இருந்தார். ஏதோ தேடிக்கொண்டிருந்தார். வெகு கவலையோடு தேடினார். பரபர என்று தேடினார்.
காகா காலேல்கர் அங்கே வந்தார். அவர் ஒரு பேராசிரியர்; பெரிய படிப்பாளி. ஆசார்ய காலேல்கர் என்று அவரைச் சொல்வார்கள்.
"பாபு, என்ன தேடுகிறீர்கள்?" என்று ஆசார்யா கேட்டார்.
"ஒரு சிறு பென்சிலை தேடுகிறேன்" என்றார் காந்தி.
காலேல்கர் தமது கைப்பையைத் திறந்தார். ஒரு பெரிய பென்ஸிலை எடுத்து."இந்தாருங்கள். இதை வைத்துக்கொள்ளுங்கள். அந்தச் சிறு பென்சில் போனால் போகிறது" என்றார். பென்சிலைக் காந்தியிடம் கொடுத்தார்.
"இல்லை, இல்லை. எனக்கு இது வேண்டாம். அந்தச் சின்ன பென்சில்தான் வேண்டும்" என்று காந்தி சொன்னார்.
"இப்போது அதை உபயோகியுங்கள் பாபு. அப்புறம் அதை நான் தேடி எடுத்துத் தருகிறேன் " என்று காலேல்கர் சொன்னார்.
"இல்லை, காகா. அந்தப் பென்சில் எவ்வளவு முக்கியமானது, தெரியுமா? உங்களுக்குத் தெரியாது. அது காணாமற்போகக் கூடாது" என்றார் காந்தி.
காலேல்கர் கேட்டார்: "என்ன அப்படி முக்கியம் அந்தப் பென்சிலில்?"
காந்தி சொன்னார்: "நான் சென்னைக்குப் போயிருந்தேனே; அப்போது கிடைத்தது அது. ஜி. ஏ. நடேசன் என்ற தலைவரை உங்களுக்குத் தெரியுமே. அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்; சிறுவன். எனக்கு ஒரு பென்சில் வேண்டியிருந்தது. அவன் ஓட்டமாய் ஓடினான்; ஒரு பென்சிலைக் கொண்டுவந்தான்; எனக்குக் கொடுத்தான். அதுதான் நான் தேடுகிற பென்ஸில். அடடா! என்ன அன்போடு கொடுத்தான்! அதை நான் தொலைக்கலாமா? கூடாது. கூடாது."
"அப்படியானால் நானும் தேடுகிறேன்" என்றார் ஆசார்யா.
அந்தப் பொல்லாத பென்சிலை இருவரும் தேடினார்கள். கடைசியில் அது அகப்பட்டது. காந்திக்கு அப்போதுதான் மனநிம்மதி ஏற்பட்டது. அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.
ஆனால், அந்தப் பென்சிலின் நீளம் என்ன தெரியுமா? ஒரே ஓர் அங்குலந்தான் !
அதன் நீளமா முக்கியம்? அதைத் தந்தானே சிறுவன், அவனுடைய அன்புதான் முக்கியம். அது அவனுடைய அன்புப்பரிசு. அதை அசட்டை செய்யலாமா? கூடாது என்று காந்தி எண்ணினார்.
அன்பை காந்தி போற்றினார். எல்லார் மீதும் அன்பு செலுத்தினார். யார் எப்படி அன்பைக் காட்டினாலும் கொண்டாடினார்.

அடுத்தக் கதை: சிறுமியின் தங்க நகை

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...