Skip to main content

முதல் சிறைவாசம் | தி. ஜ. ரங்கநாதன்

காந்தி எப்போதும் அநீதியை எதிர்த்தார். அதனால் பல முறை சிறை புகுந்தார். தென் ஆப்பிரிக்காவில்தான் அவரது முதல் சிறைவாசம்; அப்புறம் இந்தியாவில். இங்கே முதல் முறை ஆறாண்டு சிறைத்தண்டனை பெற்றார். எரவாடா சிறையில் அவரை வைத்தார்கள்.
சிறை அதிகாரி அவரிடம் முரட்டுத்தனமாய் நடந்தார். இடுப்புத்துணிதான் காந்தி உடுத்திருந்தார். ஆனால், அவரைத் தினமும் அதிகாரி சோதிப்பார். அவருடைய இடுப்பைத் தடவிப் பார்ப்பார்; கம்பளிகளை உதறுவார்; மலஜலப் பானையைப் பூட்ஸால் உதைப்பார்.
இவற்றையெல்லாம் பார்த்துக் காந்தி வருத்தப்பட்டார். அதிகாரியோடு வாதித்தார். "இவையெல்லாம் நியாயம் இல்லை" என்றார். நயமாகவே எடுத்துரைத்தார்.
அதிகாரி சிறிது மனம் மாறினார். காந்தியைக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினார். மற்ற கைதிகளும் சற்று வசதி பெற்றார்கள்.
சிறை கட்டுப்பாடுகளை காந்தி ஒருபோதும் மீறமாட்டார். அவற்றுக்குத் தாமாக உட்படுவார்.
முதல் முதல் ராஜாஜி, காந்தியின் முதல்வர் தேவதாஸ் - இந்த இருவரும் காந்தியைப் பேட்டி கண்டார்கள்.
சிறை அதிகாரியும் கூடவே இருந்தார். அவர் காந்திக்கு ஆசனம் அளிக்கவில்லை. காந்தி நின்றுகொண்டே பேசினார். தேவதாஸுக்கு இது வருத்தமாக இருந்தது.
காந்தி சொன்னார்: "மகனே! சிறையை ஒழிப்பதா நம் நோக்கம்? இல்லையே! சுயராஜ்ஜியம் நமக்கு வரும். அப்போது நாமே சிறையை நடத்த வேண்டியிருக்கும். குற்றவாளிகளை அதில் அடைப்போம். அவர்களைச் சீர்திருத்துவோம்; ஒழுங்காக இருக்கச் செய்யவோம். ஒழுங்கீனம் கூடாது; கட்டுப்பாட்டை மீறலாகாது. பண்பாடு உள்ள மக்களுக்கு அதுதான் அழகு. நாம் அநீதியான சட்டங்களையே மீறுகிறோம். அதற்குக் கிடைக்கும் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். கஷ்டங்களை அனுபவிப்போம். நியாயமான சட்டங்களை மீறமாட்டோம். இதுதான் சத்தியாக்கிரகம்.''

அடுத்தக் கதை: அறுவை சிகிச்சை

Comments

Most Popular

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...