குழந்தைகளிடம்
காந்திக்கு மிகுந்த அன்பு. அவர்களை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார். அவருடைய
ஆசிரமத்தில் பல குழந்தைகள் இருந்தன. காந்தி வெளியூர்களில் எங்கே இருந்தாலும் சரி,
ஆசிரமக் குழந்தைகளுக்குத் தவறாமல் கடிதம் எழுதுவார்.
அப்போது
இந்தியா சுதந்தரம் அடையவில்லை. அந்நிய சர்க்கார் இதை ஆண்டது. அந்தக் சர்க்காரைக்
காந்தி எதிர்த்தார். பல முறை போராட்டம் நடத்தினார்; பல முறை
சிறைப்பட்டார்.
அவற்றுள்
ஒன்று உப்புச் சத்தியாகிரகம். அப்போது அவர் சிறைப்பட்டார். ஏரவாடா சிறையில் அவர்
இருந்தார். அந்த நாளிலும் ஆசிரமக் குழந்தைகளை அவர் மறக்கவில்லை; அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஒரு கடிதம் மிக்க அருமையானது. அது
இதுதான்:
சின்னஞ்சிறு
குருவிகளே!
சாதாரணக்
குருவிகள் இருக்கின்றன. அவற்றுக்குச் சிறகு உண்டு. அது இல்லாவிட்டால் அவற்றால்
பறக்க முடியாது.
சிறகு
இருந்தால் யார்தான் பறக்க முடியாது? யாருந்தான் பறக்க
முடியும்
ஆனால்,
சிறகு இல்லாமலே பறப்பது எப்படி? அதை நீங்கள்
கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது உங்கள் தொல்லைகள் எல்லாம் நீங்கிவிடும். சிறகு
இல்லாமலே நீங்கள் பறக்கலாம். அதை நான் கற்றுக்கொடுக்கிறேன்
இங்கே
பாருங்கள்; எனக்குச் சிறகு இல்லை. என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் உங்களை எண்ணுகிறேன்; அந்த
எண்ணத்திலே உங்களிடம் பறந்து வருகிறேன்.
அடடா!
இதோ இருக்கிறாள், விமலா குட்டி; இதோ
இருக்கிறான், ஹரி; இதோ இருக்கிறான்,
தர்மகுமார்!
நீங்களுங்கூட
எண்ணத்திலேயே என்னிடம் பறந்து வர முடியும்.
எப்படி
எண்ணுவது (யோசிப்பது) என்று தெரியவேண்டும். அது தெரிந்தவர்களுக்கு ஆசிரியர்
வேண்டியதில்லை. ஆசிரியர் நமக்கு வழிகாட்டுவார்; ஆனால்,
எண்ணும் ஆற்றலை அவர் தரமுடியாது. அது நம் உள்ளத்திலேயே இருக்கிறது.
அறிவு வேண்டும். அது உள்ளவர்களின் எண்ணம் சிறப்பாய் இருக்கும்.
பிரபு
பாயின் மாலைப் பிரார்த்தனை நடக்குமே; உங்களுள் யார் யார்
அப்போது ஒழுங்காய்ப் பிரார்த்தனை செய்யாதவர்? அவர்களுடைய
பெயர்களை எனக்குத் தெரிவியுங்கள்.
எனக்கு
ஒரு கடிதம் எழுதுங்கள். அதில் எல்லாரும் கையெழுத்திடுங்கள். கையெழுத்திடத்
தெரியாதவர் உங்களுள் சிலர் இருப்பார்கள். அவர்கள் ஒரு சிலுவைக்குறி போடலாம்;
அதுவே போதும்.
உங்களுக்கு
என் ஆசிகள்,
பாபு.
அடுத்தக் கதை: முதல் சிறைவாசம்
Comments
Post a Comment