Skip to main content

ஆஸ்பத்திரி காட்சி | தி. ஜ. ரங்கநாதன்


ஆஸ்பத்திரியில் மிகவும் ஒழுங்காக காந்தி நடந்துகொண்டார். இது டாக்டருக்கு மகிழ்ச்சி அளித்தது; நர்ஸுக்குப் பிரியமாயிருந்தது. எல்லாரும் காந்தியிடம் அன்பு கொண்டார்கள்.
ஒரு நர்ஸ் இங்கிலீஷ்காரி. இங்கிலாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரிந்தவள்; நீண்ட கால அனுபவம் உடையவள். மிகவும் கண்டிப்பாய் நடப்பவள்.
"நோயாளிகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படாதே. அதற்கு ஒரு நாளும் முயற்சி செய்யாதே" இப்படித்தான் அவளுடைய டாக்டர்கள் சொல்வார்களாம். காந்திக்கு இதை எல்லாம் அவள்தான் சொன்னாள்.
மூன்று நாள்கள் சென்றன. காந்தி மீது அவள் பற்று கொண்டாள். காந்தியின் அறையை அலங்காரம் செய்தாள். பூக்களைக் கொண்டுவந்தாள்; அழகழகாய் ஜோடித்து வைத்தாள்.
"எப்படி இருக்கிறது அறை? என் கைவேலையைப் பார்த்தீர்களா?" என்று காந்தியைக் கேட்டாள்.
அங்கு இன்னொரு நர்ஸ் இருந்தாள். அவள் மிக இளம் பெண். "என் மனத்துக்கு இசைந்த முதல் நோயாளி இவர்தாம். காந்திக்குப் பணிவிடை செய்வதே ஓர் இன்பம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம்என்றாள். அவள் காந்தி பற்றி நல்ல அறிக்கை எழுதினாள்; அதில் அவரைப் பாராட்டியிருந்தாள்.
டாக்டர் வந்தார். "இதற்கு முன் இந்த மாதிரி அறிக்கையை நீ எழுதியதே இல்லையே!" என்று அவளைக் கேட்டார்.
"இதற்குமுன் இந்த மாதிரி நோயாளி எனக்குக் கிட்டியது இல்லையே!" என்று அவள் பதில் சொன்னாள்.
மற்ற நர்ஸுகள் அவளைக் கிண்டல் செய்தார்கள். "என்ன இது! காந்தியிடம் மிகமிகப் பிரியம் கொள்கிறாயே; வேடிக்கைதான்!" என்றார்கள்.
"ஆமாம். அவருக்குப் பணிவிடை செய்வது ஒரு பாக்கியம். அது உங்களுக்குக் கிட்டவில்லை. கிட்டினால், நீங்களும் என் போல்தான் நடப்பீர்கள்!" என்று அவள் கூறினாள்.
இதை அவளே மஹாதேவ தேசாயிடம் சொன்னாள். அவர் காந்தியின் காரியதரிசி; அதோடு துணைவருங்கூட.
வெள்ளைக்கார டாக்டர் மட்டும் என்ன அவரும் காந்தியிடம் பேரன்பு செலுத்தினார். அந்த டாக்டரை மக்களெல்லாம் பாராட்டினார்கள்; அவரைப் புகழ்ந்து கடிதம் எழுதினார்கள்; தந்தி அடித்தார்கள்.
எண்ணற்ற கடிதங்கள், தந்திகள் பறந்தன!
"இத்தனைக்கும் நான் எப்படிப் பதில் எழுதுவேன்" என்று டாக்டர் மலைத்தார்.
எல்லோருக்கும் பொதுவாய்ப் பத்திரிகையிலே எழுதிவிடுகிறேன்என்றார். அப்படியே செய்தார்.
பெரிய பெரிய தலைவர்களெல்லாம் புனா நகருக்கு ஓடி வந்தார்கள்; காந்தியைப் பார்க்கத்தான்.
காந்திக்கு ஓய்வு வேண்டும்; அவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது - இது எல்லாருக்கும் தெரியும்.
ஜயகர் வந்தார். "நான் எட்ட இருந்து தரிசனம் செய்கிறேன்" என்றார்.
ஜவஹர்லால் நேரு வந்தார். "நான் முதலிலே வந்துவிடவில்லை; எல்லாருக்கும் கடைசியிலே வந்து காண்கிறேன்" என்றார். காந்தியின் மகன் தேவதாஸிடம் இப்படி உறுதி கூறினார்.
மௌலானா சௌகத் அலி வந்தார். காந்தி பேச முயன்றார். "நீங்கள் என்னோடு பேசவே கூடாது. நான் பதில் சொல்லமாட்டேன்" என்று மௌலானா சொல்லிவிட்டார். படுக்கையைத் துழாவினார். காந்தியின் பாதத்தைப் போர்வை மூடியிருந்தது. அதை விலக்கினார். பாதத்தை முத்தமிட்டார்; விடைபெற்றார்.
சங்கர்லால் பாங்கர் வந்தார்; அவருக்குத் துயரம் நெஞ்சை அடைத்தது; கண்ணீர் பெருக்கினார்.
மோதிலால் நேரு வந்தார்; கண்டார்; விடை பெற்றார். ஆனால், போக மனம் வரவேயில்லை. ரயில் வண்டியை வேண்டுமென்றே தவறவிட்டார். மறுபடியும் காந்தியிடம் வந்தார்; இரண்டாவது முறையும் விடைபெற்றார்.
லாலா லஜபதிராய் வந்தார்; காந்தியிடம் பேச அவருக்கு மிக்க ஆசையாயிருந்தது. சிரமப்பட்டு அந்த ஆசையை அவர் அடக்கிக்கொண்டார் ஒதுங்கி ஒருபுறமாய்ப் போய் நின்றார். பிறகு அகன்றார். நகரைவிட்டுச் செல்லுமுன் மறுபடியும் வந்தார். ஏதோ சொல்ல வந்தார். பேச்சைக் கண்ணீர் தடுத்தது. கண்ணீர் பேச்சைத் தடுத்தது. இதைக் கண்டார் காந்தி. அவருக்குச் சிரிப்பு வந்தது. அவர் எப்போதும் 'ஹஹ்-ஹஹ்-ஹ' என்று வாய்விட்டுச் சிரிப்பார். இப்போது புன்சிரிப்பே மலர்ந்தது.
"லாலாஜி! இது பெரிய வேடிக்கையாய் இருக்கிறது. கலகல என்று சிரிக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. ஆனால், இந்தக் காயம் இருக்கிறது. தையல் பிரிந்துபோகுமே! அதனால்தான் சிரிக்க முடியவில்லை'' என்றார். லாலாஜிக்கு இது களிப்பூட்டியது. அவருடைய நெஞ்சுக்கனம் குறைந்தது. வெளியே வந்தார். "நாம் இப்போது துயரப்பட வேண்டியதில்லை; மகிழவேண்டும். கருணைக்கடலான கடவுள் நமக்கு அருள் சுரந்துவிட்டார்என்று எல்லோரிடமும் சொன்னார்.
கடைசியில் ஒரு நாள் ஆங்கில டாக்டர் வந்தார். "அரசாங்கத்தார் உங்களை விடுதலை செய்துவிட்டார்கள்" என்று அறிவித்தார் காந்தி சில நிமிட நேரம் பேசாமல் இருந்தார்.
பிறகு புன்சிரிப்புடன் சொன்னார்: "அது சரி; ஆனால், இன்னும் சில நாள் வரையில் நான் உங்கள் நோயாளியும் விருந்தாளியுமாயிருக்க விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா?"
டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்: "ஆஹா! அப்படியே இருங்கள். என் நோயாளியான உங்களை நம்புகிறேன். நான் டாக்டர் என்ற முறையில் போடும் கட்டளைகளை மீறமாட்டீர்களே? உங்களை இங்கு தங்க வைத்துக்கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி; திருப்தி. நீங்கள் முற்றும் குணம் அடையச் செய்கிறேன். அது என் பொறுப்பு." அப்படியே ஒரு மாத காலம் காந்தி அந்த ஆஸ்பத்திரியிலிருந்தார். நன்றாய்க் குணமானதும் விடைபெற்றுச் சென்றார்.

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...