'அரிச்சந்திரன்
உண்மையே பேசுவான்; ஒரே ஒரு பொய்கூடச் சொல்ல மறுத்தான்.
அதனால் நாட்டை இழந்தான்; மனைவியைப் பிரிந்தான்; மகனை இழந்தான்; துன்பங்களை அனுபவித்தான். அவனைப்
போலவே ஏன் எல்லாரும் உண்மையே பேசக்கூடாது?' இப்படி எண்ணினார்,
காந்தி. அப்போது அவர் சிறு பையன்.
இரவும்
பகலும் அவர் அரிச்சந்திரனைப்பற்றியே நினைத்தார். 'அரிச்சந்திரனைப்
போலவே நான் நடப்பேன்' என்று உறுதி கொண்டார்.
காந்திக்குப்
பல தோழர்கள் உண்டு. எல்லாரும் களிமண் பொம்மை செய்வார்கள். அதைச் 'சுவாமி' என்று சொல்லுவார்கள். அந்தச் சுவாமிக்கு
ஊர்வலம் நடத்துவார்கள்.
ஒருநாள்
அவர்களுக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. "இந்த மண் பொம்மை
வேண்டாம். கோயிலுக்கு போவோம். அங்கே சுவாமி சிலை இருக்கிறது அல்லவா? அதை எடுத்து வருவோம். அலங்காரம் செய்வோம். ஊர்வலம் நடத்துவோம். அது
மிகவும் நன்றாய் இருக்கும். அல்லவா?" என்றான் ஒரு
தோழன்.
"சரியான யோசனை!" என்றார்கள், மற்றவர்கள்.
கோயிலுக்கு
யார் போவது? சிலையை யார் கொண்டுவருவது? எல்லாரையும் விட சிறியவன் சாந்து. அவனை அனுப்பினார்கள்.
உச்சி
நேரம். பூசாரி ஒரு சிறு தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அதுதான் சரியான சமயம்.
கருவறையிலே சாந்து நுழைந்தான். அங்கு சில சிலைகள் இருந்தன. அவற்றைச் சாந்து
எடுத்தான். 'கிண்கிண்' என்று ஓசை
உண்டாயிற்று.
வெளியே
பூசாரியின் மனைவி இருந்தாள். அவளுக்கு இந்த ஓசை கேட்டது.
"ஐயோ, திருடன்! திருடன்!" என்று அவள் கத்தினாள்.
பூசாரி
விழித்துக்கொண்டார்; ஓடி வந்தார்.
சாந்துவின்
கைகளில் சிலைகள் இருந்தன. சிலைகளோடு அவன் ஓடினான். பூசாரி துரத்தினார். அவன் ஓட,
இவர் துரத்த ஒரே அமளிதான்.
வாயிலில்
காந்தியும் மற்றச் சிறுவர்களும் இருந்தார்கள். அவர்கள் இதைக் கண்டார்கள்; ஓட்டம் பிடித்தார்கள்; ஆளுக்கு ஒரு திசையில்
மறைந்தார்கள்.
வழியிலே
இன்னொரு கோயில் இருந்தது. அக்கோயிலுக்குள் சாந்து நுழைந்தான். பிராகாரத்தில் சற்று
நின்றான். சிலைகளை அப்படியே வைத்தான். ஓடி மறைந்தான்.
இதைப்
பூசாரி பார்க்கவில்லை. அவர் காந்தியின் வீட்டுக்கு ஓடினார். காந்தியின்
பங்காளிதான் சாந்து. சாந்துவின் சந்தையைப் பூசாரி கண்டார்; நடந்ததைச்
சொன்னார். "சிலைகளை வாங்கிக்கொடுங்கள். இல்லாவிட்டால், நான்
இங்கிருந்து நகரமாட்டேன்" என்றார்.
சிந்துவின்.
தந்தை கோபக்காரர்; தவிர, தெய்வத்திடம்
பக்தி உள்ளவர். சாந்துவை விசாரித்தார்; பிற பையன்களையும்
விசாரித்தார். காந்தி மட்டும் அங்கு இல்லை. அப்பொழுது அவர் எங்கோ போயிருந்தார்.
கடுமையான
விசாரணை நடந்தது. பையன்கள் நடுங்கினார்கள். உண்மையை எவனும் சொல்லத் துணியவில்லை.
சாந்துவின்
அண்ணன் சொன்னார்: "நாங்கள் கோயிலுக்குப் போனோம்; அங்கே
விளையாடினோம். இது உண்மை. ஆனால், சிலைகளை நாங்கள் தொடவில்லை;
யார் எடுத்தார்களோ? எங்களுக்குத் தெரியவே
தெரியாது.''
கடைசியில்
காந்தி அங்கு வந்து சேர்ந்தார். காந்திக்கு 'மோனியா' என்று செல்லப்பெயர் உண்டு.
"மோனியா! நீ சொல். நடந்தது என்ன?" என்றார்,
சாந்துவின் தந்தை.
அடி
விழுமே என்று காந்தி பயப்படவில்லை.
"சிலைகளைச் சாந்து எடுத்தது உண்மைதான்" என்றார். நடந்ததை நடந்தபடி
சொன்னார்.
இதனால்
பிற பையன்கள் கோபம் கொண்டார்களா? அதுதான் இல்லை. 'காந்தி நம்மைப் போல் அல்ல; அவன் உயர்ந்தவன்' என்று அவரை மதித்தார்கள். அவர்களுக்குள் ஏதாவது சண்டை வரும். அதைத்
தீர்த்துவைக்க காந்தியையே அழைப்பார்கள். காந்தி சொல்லும் முடிவை அப்படியே
ஏற்பார்கள்; அதன்படி நடப்பார்கள். காந்தி வேறு என்ன தவறு
செய்தாலும் சரி; பொய் மட்டும் சொல்லவே மாட்டார். என்ன
துன்பம் வந்தாலும் சரி; உண்மையே சொல்வார். சிறு வயது முதல்
இந்த உறுதியோடு அவர் நடந்தார். தம் ஆயுளில் அவர் இந்த உறுதியிலிருந்து ஒருபொழுதும்
மாறவே இல்லை.
அடுத்தக் கதை: சிறுவனின் அன்புப் பரிசு
Comments
Post a Comment