Skip to main content

அறுவை சிகிச்சை | தி. ஜ. ரங்கநாதன்

முதல் சிறைவாசத்தில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. காந்திக்குக் குடல் அநுபந்த நோய் வந்தது. வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது.
அதைக் கண்டு சிறையின் மேல் அதிகாரி பயந்தார். தமது காரிலே காந்தியை ஏற்றிக் கொண்டார். சிறைக்கு வெளியே புனா நகரில் ஸாஸூன் ஆஸ்பத்திரி இருக்கிறது. அவரை அங்கே கொண்டுபோய்விட்டார்.
கர்னல் மேடாக் என்ற ஆங்கிலேயர் அங்கே பெரிய சர்ஜன். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நோய் கடுமையாகிவிடும்என்று அவர் சொன்னார்.
காந்தி இணங்கினார்.
"உங்கள் சொந்த டாக்டர்கள் இருப்பார்கள் அவர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டுமா?" என்று அதிகாரிகள் அவரைக் கேட்டார்கள்.
"பம்பாயில் டாக்டர் தலால் என்பவர் இருக்கிறார்; பரோடாவில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா என்பவர் இருக்கிறார். இருவரையும் வரவழையுங்கள்'' என்றார் காந்தி.
காந்தி தெரிவித்த டாக்டர்களுக்கு அப்படியே செய்தி அனுப்பினார்கள். ஆனால், காந்தியின் நாடித்துடிப்பு மோசமாயிற்று. காய்ச்சல் கடுமையாயிற்று. உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; இல்லாவிட்டால் காந்தியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலை தோன்றியது.
நோய்ப்பகுதியைக் கத்தியால் அறுப்பார்கள் - இதுதான் அறுவைச் சிகிச்சை. எல்லா டாக்டர்களும் இதைச் செய்யமுடியாது; நிபுணர்களே செய்ய முடியும்.
சிறிது பிசகினால் அபாயம். அறுவை நன்றாய் நடந்திருக்கலாம்; அப்போதும் உயிர் பிழைக்காமல் போகலாம். "நான் சம்மதிக்கிறேன்" என்று நோயாளி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்புறந்தான் அறுவையை டாக்டர் செய்வார்.
காந்தியோ பெரிய தலைவர்; மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர். ஆங்கிலேயரோ சர்க்காரை நடத்துகிறவர்கள். ஆங்கில டாக்டர் இந்த அறுவையைச் செய்யலாமா?
"நன்றாய்ச் செய்யலாம். ஆங்கில டாக்டரிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் சூதுவாது புரியமாட்டார்" என்று காந்தி சொன்னார். எதிரியிடமும் நல்லெண்ணம் கொண்டவர் காந்தி.
காந்தி சம்மதித்துவிட்டார்; மக்கள் என்ன நினைப்பார்களோ? தவறாக எண்ணிக் கலகம் செய்யமாட்டார்களா? - இப்படியெல்லாம் அதிகாரிகள் பயந்தார்கள்.
ஆனால், ஆங்கில டாக்டர் மேடக் பயப்படவில்லை. அறுவையைச் செய்யத் துணிந்துவிட்டார்.
"உங்கள் நண்பர் சிலர் உடன் இருக்கட்டும். யார் யாருக்குச் சொல்லி அனுப்பலாம்" என்று அதிகாரிகள் கேட்டார்கள்.
"கனம் சீனிவாச சாஸ்திரியார், டாக்டர் பதக், என்.ஸி.கேல்கர் - இந்த மூன்று பேருக்கும் சொல்லி அனுப்புங்கள்" என்றார் காந்தி.
கனம் சாஸ்திரியார் அந்த ஊரிலேயே அப்போது இருந்தார். அவரும் நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்கள்.
எழுத்து மூலம் காந்தியின் சம்மதம் வேண்டும். ஒரு கடித வாசகத்தைக் காந்தி சொன்னார்; சீனிவாச சாஸ்திரியார் அதை எழுதினார். "அறுவை செய்துகொள்ள எனக்குச் சம்மதம்'' என்று கடிதத்தில் காந்தி தெரிவித்தார்.
கடிதத்தில் காந்தி கையெழுத்திட வேண்டும் அவரிடம் நீட்டினார்கள். அப்பொழுது அவருடைய கை 'வெடவெட' என்று நடுங்கியது.
டாக்டர் மேடக்கை நோக்கிக் காந்தி சொன்னார்: "என் கை எப்படி நடுங்குகிறது, பார்த்தீர்களா? இதை நீங்கள்தாம் சரி செய்ய வேண்டும்."
"கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் டன் கணக்கான பலத்தை நாங்கள் ஏற்றிவிடுகிறோம்" என்றார் டாக்டர் மேடக்.
இரவு பத்து மணிக்கு மின்சார விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடந்தது.
என்ன விபரீதம்! அப்போது வானம் இடித்தது; மின்னல் வீசியது. மின்சாரம் தடைப்பட்டது. விளக்கு அணைந்தது.
'ஹரிகேன் லைட்' என்ற மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினார்கள். அந்த வெளிச்சத்தில் அறுவையை டாக்டர் செய்து முடித்தார்.
செம்மையான சிகிச்சை; காந்தி பிழைத்தார்.

அடுத்தக் கதை: ஆஸ்பத்திரி காட்சி

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...