Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மாயக் குரங்கு | பெ. தூரன்


னம் மிகப் பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதன் மாயச் செய்கை ஒன்றை இங்குக் கூற விரும்புகிறேன். ஒருவனுக்கு ஏதாவது ஒன்றின்மேல் விருப்பம் இருக்கும். ஆனால் அவன் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதைப் பிறர் உணர்ந்தால் அவனைப் பற்றிக் குறைவாக எண்ணுவார்கள். சமூகம் அவனைப் பழிக்கும். இது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த ஆசை மட்டும் விடாது. அந்த நிலையிலே அவன் தன்னை அறியாமலேயே தனது செய்கையைப் பிறர் ஆமோதிக்க வேண்டுமென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு காரணம் கற்பிக்கத் தொடங்குவான். அவனுடைய மனம் இந்த வேலையைச் செய்கிறது. அவன் தெரிந்தே காரணம் கண்டுபிடிக்கலாம். அல்லது அவனறியாமலேயே இந்தக் காரணம் கண்டுபிடிக்கும் வேலை நடக்கும். அவனுக்கே இந்த மர்மம் தெரியாது. மனம் தந்திரமாக இதைச் செய்துவிடும். அவனும் அது சரியான காரணந்தான் என்றும், அதனாலேயே அதை விரும்புவதாகவும் நிச்சயமாக நம்புவான்.

மது அருந்தும் பழக்கமுள்ள ஒருவனை எனக்குத் தெரியும். அவன் கள் குடிப்பதற்குத் தனக்குள்ள ஒரு நோய்தான் காரணம் என்று பிறர் அறியும்படி கூறுவான். கள்ளைக் குடிக்காவிட்டால் வயிற்றுவலி நீங்குவதில்லையாம். எத்தனையோ மருந்துகளையெல்லாம் சாப்பிட்டும் இந்த நோய் குணமடையவில்லை. இறுதியாக இந்த மருந்துதான் குணம் கொடுத்ததாம். கள்ளைக் குடித்துக்கொண்டிருந்தால் வயிற்று வலியே அவனுக்கு வருவதில்லை.

குடிகாரனைச் சமூகம் தாழ்வாக மதிக்கும் என்று அவன் அறிந்திருக்கிறான். இருந்தாலும் கள்ளின் மேலுள்ள ஆசை மட்டும் அவனை விடுவதாகக் காணோம். அதனால் அவனுடைய மனம் இது போன்ற ஒரு காரணத்தை அவனறியாமலேயே கற்பித்துக் கொடுத்திருக்கிறது. அந்தக் காரணம் முற்றிலும் சரியென்று அவனே நம்புகிறான்.

இவ்வாறு நிகழ்வதில் அவன் தன் காரணத்தைச் சரியானதென்று நம்புவதோடு இன்னும் ஒரு ஆச்சரியமென்னவென்றால் உடல் நிலையும் பல சமயங்களில் அதற்கேற்றவாறு அமைந்துவிடுகிறது. கள் குடிக்காவிட்டால் வயிற்றுவலி உண்மையாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.

ஒரு சங்கீத வித்வான் தமது இசையரங்கிற்குக் கூட்டம் வராததற்குக் கீழ்வருமாறு காரணம் சொன்னார். “இன்றைக்குக் குதிரைப் பந்தயமல்லவா? அதனால் எல்லாரும் அங்கே போயிருப்பார்கள்” என்றார் அவர். உண்மையில் அவருடைய இசையரங்கு மக்களுக்குப் பிடிக்கவில்லை என்ற உண்மை அவருக்குத் தெரியும். அதை மறைப்பதற்காக அவர் தெரிந்தே இந்தக் காரணத்தைக் கற்பித்திருக்கிறார்.

இது போன்று அறிந்தோ அறியாமலோ காரணம் கற்பிக்கும் செயலுக்கு அறிவுப் பொருத்தந் தேடல் (Rationalisation) என்று பெயர். ஆனால் மேலே கூறியது போல அறிவுப் பொருந்தந் தேடல் என்பது அவ்வளவு எளிமையானதுமல்ல. அது இன்னும் சிக்கலானது. மனத்திலே ஆழ்ந்து பதிந்து கிடக்கும் ஏதோ ஒரு உணர்ச்சியாலும் இது ஏற்படலாம். வீட்டின் உட்புறச் சுவரில் ஒட்டுவதற்காக ஒருத்தி சிவப்பு நிறக் காகிதம் வாங்க விரும்பியதை அவள் கணவன் தடை செய்தானாம், “சிவப்பு நிறமான சுவர்க் காகிதம் கண்ணுக்குத் தொந்தரவு கொடுக்கிறது” என்று அவன் காரணம் கூறினான். அவன் கூறிய காரணத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தபோது அவன் சிவப்பு நிறத்தை வெறுத்ததற்கு உண்மையான காரணம் தெரிந்தது. சிறு வயதிலே அவன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது ஒரு சமயம் தண்டனை பெறுவதற்காகத் தலைமையாசிரியரின் அறைக்குச் செல்லவேண்டியிருந்தது. அப்போது அந்த அறைக்குச் சிவப்பு நிறச் சுவர்க் காகிதம் ஒட்டியிருந்தது. அந்த நிறம் அவன் சிறு வயதிலே பெற்ற தண்டனையின் வேதனை உணர்ச்சியை மேலோங்கித் தோன்றும்படி செய்ததே அவன் அதை வெறுத்ததற்கு உண்மையான காரணம் என்றும், கண்ணுக்குத் தொந்தரவு கொடுக்கின்றது என்பது அறிவுப் பொருத்தந் தேடல் என்றும் பிராய்டு என்ற உளவியலறிஞர் கூறுகிறார்.

இந்த உணர்ச்சி இதுவரையில் எங்கிருந்தது? அவனுக்கு இதைப் பற்றி நல்ல நினைவுகூட இல்லையே? அவ்வாறிருக்க அந்த உணர்ச்சி எங்கே பதுங்கிக் கிடந்தது? இப்பொழுது அது எப்படி மேலே வந்தது? இவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முதலில் மனத்தின் அமைப்பைப் பற்றி இன்னும் சற்று விரிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

அறிவுப் பொருத்தந் தேடுவதிலே மற்றொரு வகையுமுண்டு.

அண்ணாமலை கணக்குத் தேர்விலே வெற்றி பெறவில்லை. “ஏண்டா இப்படி ஆயிற்று?” என்று கேட்டால், "அது என் குற்றமல்ல. கணக்காசிரியர் சரியாகக் கற்றுக்கொடுக்கவில்லை” என்று அவன் பதில் சொல்லுகிறான். தான் சொல்லுவது சரியான காரணம் என்று கூட அவன் நினைத்துக்கொண்டிருக்கிறான்.

எனக்குத் தெரிந்த இளங்கவிஞர் ஒருவர் தமது பாடல்களைப் பத்திரிகையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு அடிக்கடி ஒரு காரணம் சொல்லுவார். “இந்த ஆசிரியர்களுக்கு உண்மையான கவிதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளத் தெரியவே தெரியாது. எல்லாரும் சுவை உணர்ச்சியே இல்லாதவர்கள்” என்று அவர் சினம் பொங்கப் பேசுவார்.

இவ்வாறு குற்றத்தைப் பிறர்மேல் ஏற்றிச் சொல்லுவதற்கு உளவியலிலே விட்சேபம் என்று பெயர் வழங்குகிறது. விட்சேபத்திற்கும் அறிவுப் பொருத்தம் தேடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல சமயங்களிலே இரண்டையும் பிரித்துப் பார்ப்பதுகூட இயலாமற்போகும்.

இந்த இரண்டு தன்மைகளுக்கும் அடிப்படையான காரணம் ஒன்றுதான். தன்னைப்பற்றிப் பிறர் இழிவாகக் கருதக்கூடாது என்ற எண்ணமே இங்கே வேலை செய்கிறது. மனத்தின் மாயச் செயல்களில் இதுவும் ஒன்று. ஆதலால் அந்த மனத்தைப் பற்றி இன்னும் சற்று விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதன் மாயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். இதை அடுத்த பகுதியில் காண்போம்.

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...