ம னம் மிகப் பொல்லாதது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதன் மாயச் செய்கை ஒன்றை இங்குக் கூற விரும்புகிறேன். ஒருவனுக்கு ஏதாவது ஒன்றின்மேல் விருப்பம் இருக்கும். ஆனால் அவன் அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதைப் பிறர் உணர்ந்தால் அவனைப் பற்றிக் குறைவாக எண்ணுவார்கள். சமூகம் அவனைப் பழிக்கும். இது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த ஆசை மட்டும் விடாது. அந்த நிலையிலே அவன் தன்னை அறியாமலேயே தனது செய்கையைப் பிறர் ஆமோதிக்க வேண்டுமென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு காரணம் கற்பிக்கத் தொடங்குவான். அவனுடைய மனம் இந்த வேலையைச் செய்கிறது. அவன் தெரிந்தே காரணம் கண்டுபிடிக்கலாம். அல்லது அவனறியாமலேயே இந்தக் காரணம் கண்டுபிடிக்கும் வேலை நடக்கும். அவனுக்கே இந்த மர்மம் தெரியாது. மனம் தந்திரமாக இதைச் செய்துவிடும். அவனும் அது சரியான காரணந்தான் என்றும், அதனாலேயே அதை விரும்புவதாகவும் நிச்சயமாக நம்புவான். மது அருந்தும் பழக்கமுள்ள ஒருவனை எனக்குத் தெரியும். அவன் கள் குடிப்பதற்குத் தனக்குள்ள ஒரு நோய்தான் காரணம் என்று பிறர் அறியும்படி கூறுவான். கள்ளைக் குடிக்காவிட்டால் வயிற்றுவலி நீங்குவதில்லையாம். எத்தனையோ...