உ றங்கும்போது காண்பது கனவு. விழித்திருக்கின்ற நிலையிலும் கனவு காண்பதுண்டு. அது பகற் கனவு. பகற் கனவு என்றவுடன் பகலிலே உறங்கும் போது காணும் கனவு என்று கருதிவிடக் கூடாது. நன்றாக விழித்திருக்கும்போதே எழுகின்ற மனக் கோட்டைக்குத்தான் அப்பெயர் வழங்குகிறது. காலம் பகலாகவும் இருக்கலாம். இரவாகவும் இருக்கலாம். உறக்கநிலையிலே தோன்றுவது கனவு; விழிப்பு நிலையிலே தோன்றுவது பகற் கனவு. கனவு காணாதவர்களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். பகற் கனவு காணாதவர்களும் வெகு அருமை. மக்கள் கூட்டத்தையே இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். பகற் கனவு காண்பவர் ஒரு பிரிவு, செயலிலே ஈடுபடுகின்றவர் மற்றொரு பிரிவு. ஆனால், பகற் கனவு காண்பவன் செயலிலேயே இறங்கமாட்டான் என்பதில்லை. அதுபோலவே செயல் புரிகின்றவன் பகற் கனவு, காணமாட்டான் என்பதில்லை. பகற் கனவில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் ஒரு பகுதி; செயல் புரிவதில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் மற்றொரு பகுதி. பகற் கனவு வேறு; சிந்தனை வேறு. பகற் கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொள்ளுகிருன். ஆனால் சிந்தனை செய்பவன...