Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | பகற் கனவு | பெ. தூரன்

றங்கும்போது காண்பது கனவு. விழித்திருக்கின்ற நிலையிலும் கனவு காண்பதுண்டு. அது பகற் கனவு. பகற் கனவு என்றவுடன் பகலிலே உறங்கும் போது காணும் கனவு என்று கருதிவிடக் கூடாது. நன்றாக விழித்திருக்கும்போதே எழுகின்ற மனக் கோட்டைக்குத்தான் அப்பெயர் வழங்குகிறது. காலம் பகலாகவும் இருக்கலாம். இரவாகவும் இருக்கலாம். உறக்கநிலையிலே தோன்றுவது கனவு; விழிப்பு நிலையிலே தோன்றுவது பகற் கனவு.
கனவு காணாதவர்களே பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். பகற் கனவு காணாதவர்களும் வெகு அருமை. மக்கள் கூட்டத்தையே இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். பகற் கனவு காண்பவர் ஒரு பிரிவு, செயலிலே ஈடுபடுகின்றவர் மற்றொரு பிரிவு. ஆனால், பகற் கனவு காண்பவன் செயலிலேயே இறங்கமாட்டான் என்பதில்லை. அதுபோலவே செயல் புரிகின்றவன் பகற் கனவு, காணமாட்டான் என்பதில்லை. பகற் கனவில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் ஒரு பகுதி; செயல் புரிவதில் மிகுதியாகக் காலத்தைச் செலவிடுபவர்கள் மற்றொரு பகுதி.
பகற் கனவு வேறு; சிந்தனை வேறு. பகற் கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்துக்கொள்ளுகிருன். ஆனால் சிந்தனை செய்பவன் அப்படியில்லை. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பற்றியோ ஒரு சூழ்நிலையில் எவ்வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியோ அவன் தன் மனத்தை ஊன்றிச் செலுத்தி எண்ணமிடுகிறான். மனம் போன போக்கிலே அவன் செல்லுவதில்லை. அவன் மனத்தை எண்ண உலகில் உறுதியாக நடக்கும்படி அறிவைக்கொண்டு தூண்டுகிறான். பகைவர்களின் கோட்டையைக் கைப்பற்ற வேண்டுமானால் சேனைத் தலைவன் அதற்காக எத்தனை ஆழ்ந்து சிந்தித்துத் திட்டம் போடவேண்டும்! எவ்வாறு தாக்கினால் எளிதில் வெற்றிபெற முடியும் என்றும், அதற்கு எத்தனை பெரிய படை பலம் வேண்டுமென்றும், அவன் நன்கு எண்ணிப்பார்த்து முடிவுகட்ட வேண்டும். பல ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலி கொடுக்க வேண்டுமானாலும் அதற்கு அவன் தயங்காமல் இருக்கவேண்டும். இங்ஙணம் எண்ணிப்பார்த்து வேண்டுவனவற்றையெல்லாம் முன்னேற்பாடாகச் செய்துகொண்டு போர் தொடங்கினால்தான் அவன் வெற்றி காணமுடியும். அவ்வாறில்லாமல் தான் எளிதிலே பகைவர்களை வென்று கோட்டைக்குள் நுழைந்துவிட்டதாகவும், புகழ்மாலை பெற்றுவிட்டதாகவும் அவன் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்தால் வெற்றி கிட்டிவிடாது.
செயலிலேயே நாட்டமுள்ளவனும் பகற் கனவு காண்பதுண்டு. ஆனால், அவன் அத்துடன் நின்றுவிடுவதில்லை. அவன் அக்கனவை நனவாக்க முனைகிறான். உறுதியோடு செயலில் ஈடுபடுகிறான். வான வெளியிலே சிறகை விரித்து வெள்ளைக் கொக்கு ஒயிலாகப் பறக்கின்றது. அதைப் பார்த்து மனிதன் தானும் பறப்பதுபோலப் பகற் கனவு காண்கிறான். ஆயிரக்கணக்கானவர்கள் அத்துடன் மன நிறைவு அடைந்துவிடுகிறார்கள். ஒன்றிரண்டு பேர்கள் அதை வைத்துக் கற்பனைக் கவிதைகள் வரைகிறார்கள். ஒருவன் உண்மையாகவே பறக்க முயலுகிறான், பகற் கனவிலே அவன் அமைத்துக்கொண்ட விமானத்தை உண்மையாகவே உருவாக்கத் தனது அறிவைப் பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கிறான். பறப்பதற்கு வேண்டிய விஞ்ஞான உண்மைகளைக் காண முயல்கிறான். பல சோதனைகள் செய்கிறான். அவற்றின் விளைவாக விமானம் நமக்குக் கிடைக்கின்றது.
கனவிற்கும் பகற் கனவிற்கும் பொதுவானவை பல இருக்கின்றன. அவை இரண்டும் கனவு காண்பவனையே நடுநிலையாகக் கொண்டிருப்பவை. வாழ்க்கையில் நிறைவேறாது மனத்தில் மறைந்து கிடக்கும் ஆசைகள் நிறைவேறுவதையே முக்கியமாக இரண்டிலும் காண்கிறோம். சில ஆசைகளும் எண்ணங்களும் இழிந்தவைகளாக இருக்கலாம். அவற்றை மனிதன் அறிவினால் அடக்க முயலுகிறான். அதனால் அவை மறை மனத்தில் அழுந்துகின்றன. உறங்குகின்றபோது அறிவின் ஆதிக்கம் சற்றுத் தளர்கின்றது. அந்த வேளையிலே அவைகள் கனவாக வெளியாகின்றன. அதுபோலவே பகற் கனவிலும் அவ்வாசைகள் தோன்றி ஒரு வகையான மன நிறைவை அளிக்கின்றன.
பகற் கனவைப் பற்றி ஜீ. எச். கிரீன் என்பவர் பின் வருமாறு எழுதியுள்ளார்:
1. நமக்குத் தெரியாமல் மனத்திலே அழுந்தி மறைந்து கிடக்கும் ஆசைகளைப் பகற் கனவு நிறைவேற்றுகின்றது.
2. ஒருவன் தன்னைப் பற்றியே உயர்வாகக் கருதுவதை அது குறிக்கின்றது.
3. உலகத்தைப் பற்றி அவன் வெளிப்படையாகக் கொண்டுள்ள நினைப்பைத் தவிர வேறொரு நினைப்பிருப்பதையும் அது குறிப்பாகக் காட்டுகிறது.
4. செயலில் வேண்டுமென எழுகின்ற எண்ணத்திற்கும், செயலில் இறங்குவதற்கும் இடையே உண்டாகும் பல முக்கியமான நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.
5. மிக நல்ல முயற்சியோடு திடமாகச் செயலில் ஈடுபட்டிருக்கும் வேளையிலல்லாது மற்ற வேளைகளில் அது ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது.
பகற் கனவும் சிறு வயது முதற்கொண்டே உண்டாகிறது. சிறு குழந்தைகள் விளையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு குழந்தை தன்னைத் தாயாகவும், ஏதாவதொரு பொருளைக் குழந்தையாகவும் கற்பனை செய்துகொள்ளுகிறது. தனது தாய் தன்னிடம் எவ்விதம் நடந்துகொள்ளுகிருளோ அதுபோலவே கற்பனைக் குழந்தையிடம் அது நடக்கின்றது. தாயைப் போலவே பேசுகிறது, கடுஞ்சொல் கூறுகிறது. தண்டனை கொடுக்கிறது. அந்தக் கற்பனைக் குழந்தையிடம் தன்னிடமுள்ள குறும்புகள் எல்லாவற்றையும் இது காண்கிறது. இவ்விதமாகத் தன்னை உயர்த்தியும், தன்னிடமுள்ள குறைகள் அக் கற்பனைக் குழந்தையிடம் இருப்பதாக எண்ணிக்கொண்டும் அது விளையாடி மன நிறைவு பெறுகிறது.
மூன்று வயதாக இருக்கும்போது சுந்தரி அடிக்கடி தனக்கே தனியாக ஒரு சொந்த வீடிருப்பதாகப் பேசுவாள். “என் வீட்டிலே நிறைய மிட்டாய் இருக்கிறது. பெரிய பெட்டி இருக்கிறது" என்று என்ன என்னவோ பெருமையாகச் சொல்லிக்கொள்ளுவாள். ஒருநாள் அவள் தன் வீட்டிலே பெரிய விருந்து நடக்கிறதென்றும், வடை, பாயசம் எல்லாம் ஏராளமாகச் செய்யப்பட்டிருக்கின்றனவென்றும் கூறிவிட்டு எங்களுடன் உணவு கொள்ள மறுத்துவிட்டாள். அது அவளுடைய பகற் கனவைக் குறிக்கின்றது.
“குழந்தைகள்தான் மிகுதியாகப் பகற் கனவு காண்பவர்கள்; அவர்களுடைய பகற் கனவுகளை ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் வாழ்க்கையில் அடையப்பெறாத ஆசைகளை நிறைவேற்றுவனவாக இருக்கும்” என்று மெக்டுகல் எழுதுகிறார்.
பொதுவாகக் கூறினால், பத்தாவது வயதில் துணிகரச் செயல்களைப் பற்றிய பகற் கனவுகள் உண்டாகின்றன. பலருடன் கூடி வீரச் செயல்கள் செய்வது போலவும், அவற்றிலெல்லாம் தானே முக்கியமாக இருப்பது போலவும், தனது தோழர்களுக்குத் தானே தலைவனாக விளங்குவது போலவும் காட்சிகள் தோன்றுகின்றன. காளைப் பருவத்திலே பிறக்கும் பகற் கனவுகள் பலதிறத்தனவாகும். அப்பொழுது அதில் காதலுணர்ச்சியும் இயல்பாகவே கலந்திருக்கும்.
இவ்வாறாக ஒவ்வொரு பருவத்திலும் அதற்கேற்றவாறு பகற் கனவுகள் உண்டாகின்றன. சிறுவர்களின் பகற் கனவுகள் பொதுவாகக் குற்றமற்றவைகளாக இருக்கும். ஏனெனில் அந்தப் பருவத்தில் அடக்கியொடுக்க வேண்டிய இழிந்த எண்ணங்கள் உண்டாகக் காரணமில்லை.
கனவுகளை ஆராய்வது போலவே பகற் கனவுகளையும் ஆராய்ந்தால் ஒருவனுடைய மன நிலைமையை அறிந்துகொள்ள முடியும். பகற் கனவிலே அவனுடைய ஆசைகளும் எண்ணங்களும் பொதுவாக நேரிடையாகவே வெளிப்படுகின்றன. அந்த வகையில் அவனுடைய மன நிலையைக் காண இது கனவைவிடச் சிறப்பாகப் பயன்படும். ஆனால் பகற் கனவை வெளிப்படையாகக் கூறும்படி செய்வதுதான் பெரும்பாலும் இயலாது. அது இழிந்ததாக இருக்குமானால் வெளியில் கூற பொதுவாக யாரும் விரும்பமாட்டார்கள்.
கனவின் பொருளை அறிந்துகொள்ள விருப்பக் கருத்தியைபு முறையைக் கையாளுவதைப் பற்றி முன்பே தெரிந்துகொண்டோம். அந்த ஆராய்ச்சியோடு ஒருவன் காணும் பகற் கனவையும் சேர்த்து நோக்கினல் அவனுடைய மன நிலைமையை நன்றாக உணர முடியும்.

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.