Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கனவு | பெ. தூரன்

"நான் கனவு கண்டால் கண்டது கண்டபடியே நடக்கும்" என்று சிலர் சொல்லிக்கொள்ளுகிறார்கள். “கனவில் காண்பதற்கு நேர்மாறாகத்தான் வாழ்க்கை யில் நடக்கும்; பொருளை இழப்பதுபோலக் கனவு கண்டால் பொருள் வருவாய் கிடைக்கும்” என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள்.
“கனவிற்கு ஒரு பொருளும் கிடையாது; அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதே இல்லை" என்று கூறுபவர்களும் உண்டு.
"கவலையே இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிறவன் கனவு காணமாட்டான்; கவலை நிறைந்தவன்தான் கனவு காண்கிறான்” என்றும் பலர் பேசக் கேட்டிருக்கிறோம்.
உறங்கும்போது கனவு காண்பதென்பது குழந்தைகள் முதற்கொண்டு முதியவர்கள் வரை எல்லாருக்கும் பல சமயங்களில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்ச்சி. அக்கனவிற்கு ஏதாவது காரணம் உண்டா, பொருளுண்டா அதனால் ஏதாவது பயன் உண்டா என்பனவற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
"ஒரு மனிதனுடைய தன்மையை அறிந்துகொள்வதற்கு அவன் காணும் கனவுகள் பெரிதும் துணை புரிகின்றன” என்று மறை மனத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்த பிராய்டு, ஆட்லர், யுங் என்ற மூவரும் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். மன நிலையை அறிந்துகொள்வதற்குக் கனவு ஒரு வழியென்பதை மற்ற உளவியல் அறிஞர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.
மனக் கோளாறுகளைத் தெரிந்துகொள்வதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று பிராய்டு முதலில் கண்டார். அதன் பயனகவே மனத்தில் மறை மனம் என்ற ஒரு பகுதியிருக்கிறதென்றும் அவர் உணர்ந்தார். மன நோய்களைப் போக்குவதற்கு மறை மனத்தில் அழுந்திக் கிடக்கும் எண்ணங்களையும் ஆசைகளையும் அறிய வேண்டும். அதற்குப் பிராய்டு முதலில் மனவசிய (Hypnotism) முறையைக் கையாண்டார். அதில் பல குறைபாடுகள் இருப்பதை அனுபவத்தில் தெரிந்து அவர் வேறு முறையொன்றைப் பின்னால் கையாளலானார். தம்மிடம் சிகிச்சைக்கு வருபவர்களை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிலைமையில் அவர்களுக்குத் தோன்றும் எண்ணங்களையெல்லாம் தோன்றியவாறே ஒளிவு மறைவின்றி சொல்லும்படி கேட்டார். அவர்கள் காணும் கனவுகளைப் பற்றியும் வெளிப்படையாகச் சொல்லச் சொன்னார். மனத்தில் எழுகின்ற இழிந்த எண்ணங்களை எல்லாரும் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். மனவசியத்தாலும் அவற்றை அறிந்து கொள்ளுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் கனவுகளின் மூலம் அவற்றை மறை முகமாகக் கண்டுகொள்ளலாம் என்று பிராய்டுக்குப் புலப்பட்டது. அவர்தாம் முதன் முதலில் கனவுகளைப் பாகுபடுத்தி அவற்றைக்கொண்டு மனநிலையைக் காண முயன்றவர்.
தூங்கி எழுந்தவுடன் பல கனவுகள் மறந்துபோய் விடுகின்றன. சிலவற்றை நாம் நினைவுக்குக் கொண்டுவர முடியுமானலும் அவை தொடர்பில்லாத விந்தைச் செயல்கள் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் கனவுக்குப் பொருளில்லையெனப் பலர் கருதுகிறார்கள். கனவில் நிகழ்வனவற்றை நிகழ்ந்தவாறே உண்மையென எடுத்துக்கொள்ளக் கூடாது. பல கனவு நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட வேறு பொருள்கள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டால்தான் கனவுகளைக் கொண்டு ஒருவனுடைய மன நிலையை நன்கு அறிந்துகொள்ள முடியும்.
கனவுக்குப் பொருளிருப்பதாக நினைப்பது குருட்டு நம்பிக்கை என்று சிலர் கூறலாம். அறிவு வளர்ச்சி பெறாத மக்கள்தான் கனவை நம்புவார்களென்றும் அவர்கள் பேசலாம். ஆனால் பாமரர்கள் கனவை நோக்கும் விதம் வேறு; உளவியலறிஞன் அதை நோக்கும் விதம் வேறு. "விஞ்ஞானப் பார்வையோடு மற்றப் பொருள்களை ஆராய்வதைப் போலவே கனவையும் ஆராயலாம். கனவு என்பது ஒரு அனுபவ உண்மை. இரசாயனத்திலும், உடலியலிலும் உண்மைகளை ஆராய்வதுபோல அதையும் சரிவர ஆராயலாம்” என்று ஜீ.எச்.கிரீன் எழுதுகிறார். ஆதலால் கனவைப் பற்றி உளவியல் முறையில் சோதனை செய்வது அறிவுக்குப் பொருந்தியதொன்றே. அவ்வாறு சோதனை செய்து பிராய்டும் அவரைப் பின்பற்றுவோரும் பல மன நோய்களைப் போக்கியிருக்கிறார்கள்.
மனத்தில் உள்ள எண்ணங்களையெல்லாம் மறைக்காமல் கூறுவதைச் சாதாரணமாக மக்கள் உடைத்துச் சொல்லுவதென்று கூறுவார்கள். நான் உடைத்துப் பேசுகிறேனென்றால் எதையும் ஒளிக்காமல் சொல்லுவதாகப் பொருள். ஏதாவது ஒரு வேளையிலே எழுகின்ற எண்ணங்களையெல்லாம் உடைத்துக் கூறினால் அவற்றின் மூலம் கனவுகளின் உண்மைப் பொருளையும் கனவு காண்பவனின் மன நிலைமையையும் அறிந்துகொள்ள முடியும். எல்லாராலும் அவ்வாறு அறிந்துகொள்ள முடியும் என்று நான் கூறவில்லை. அதற்கு உளவியல் அறிவு நிறைய வேண்டும்; அனுபவமும் வேண்டும். எந்த நிலைமையை உண்டாக்கினால், அதன் விளைவாக எழும் எண்ணங்களைக் கொண்டு மன நிலையைக் காண முடியும் என்பது அனுபவம் வாய்ந்த ஒருவனுக்குத் தெரியும். வெளிப்படையாக எதையும் ஒளிக்காமல் பேசுவதும் கனவும் ஒன்றுக்கொன்று உதவியாக நின்று ஒருவனுடைய மன நிலையை வெளிப்படுத்துகின்றன. சொல்லுவதில் சிலவற்றை மறைத்திருந்தாலும் கனவு அதைக் குறிப்பாகக் காட்டிவிடும்.
சிக்கலில்லாத எளிய பல கனவுகள் இருக்கின்றன. அவற்றின் குறிப்பைக் கண்டுகொள்ள அனைவராலும் பெரும்பாலும் முடியும்.
நனவில் நிறைவேறாத பல ஆசைகள் கனவிலே நிறைவேறுவதுண்டு. காதல் வயப்பட்ட இளைஞன் தன் காதலியோடு கூடியிருப்பதாகக் கனவு காண்கிறான். வறுமையால் வாடியிருப்பவன் கனவிலே குபேரனைப்போல வாழ்கிறான். அழகான பொம்மை வேண்டுமென விரும்பிய குழந்தை அதைப் பெற்று மகிழ்வதாகக் கனவு காண்கிறது.
வீட்டிலே குற்றேவல் புரிவதற்காக ஒன்பது வயதுப் பெண் ஒருத்தி இருந்தாள். அவள் ஒருநாள் இரவில் எழுந்து உட்கார்ந்துகொண்டு, “என் அக்காள் வந்து வெளியே நிற்கிறாள்; கதவைத் திறந்துவிடுங்கள்” என்று கூறினாள். ஆனால் உண்மையில் யாரும் வரவில்லை. அவள் கண்டது கனவு. தன் அக்காளைப் பிரிந்து வந்து பல நாட்களாகிவிட்டபடியால் அவளைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையே இவ்வாறு கனவில் நிறைவேறியிருக்கிறது.
பொதுவாகக் கனவு காணும்போது அதில் நடக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் உண்மையாக வாழ்வில் நடப்பது போலவே உணர்கின்றோம். கனவு காண்பவன் அக்கனவில் தான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கேற்றவாறு வாய்விட்டுச் சிரிப்பதும் அழுவதுமுண்டு. குழந்தைகளிடம் இதை அதிகமாகக் காணலாம்.
கண்ணம்மாளுக்கு வயது நான்கு. அவள் ஒரிரவு தூங்கிக்கொண்டிருக்கும்பொழுதே விம்மிவிம்மி அழத் தொடங்கிவிட்டாள். “ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டபோது, அவள் எழுந்து நின்று “அக்கா என் புதுப்பொம்மையை எடுத்துக்கொண்டாள்” என்று முறையிட்டாள். உண்மையில் யாரும் அவளுடைய பொம்மையை எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். தன் பொம்மையை அக்காள் எடுப்பது போல அவள் கனவு கண்டிருக்கிறாள். முதல் நாளில் நடந்த செயலே அவள் கனவில் பிரதிபலித்திருக்கிறது.
எல்லாக் கனவுகளும் ஆசை நிறைவேற்றத்திற்காக உண்டாவதில்லை. இப்படிக் கூறுவதில்தான் பிராய்டுக்கும் மற்றவர்களுக்கும் கனவைப் பொறுத்தவரையில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. எல்லாக் கனவுகளும் ஆசை நிறைவேற்றங்களே என்று பிராய்டு சாதிக்கிறார், மற்றவர்கள் அவ்வாறு கருதுவதில்லை. மேலே கூறிய குழந்தையின் கனவு ஆசை நிறைவேற்றமல்ல. அதன் உள்ளத்திலிருந்த அச்சத்தின் தோற்றமே அது.
முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் பல தடவைகளில் கனவில் தோன்றுகின்றன. ஒரு நாள் நான் ஒரு சிறந்த நூலைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அதைக் கேட்டுக்கொண்டிருந்த பதினெட்டு வயது இளைஞன் ஒருவனுக்குப் புத்தகத்திலே மிகுந்த பற்றுண்டு. அவன் அந்நூலை ஒரு கடையில் காண்பதுபோலவும் அதை வாங்குவது போலவும் அன்றிரவே கனவு கண்டதாக என்னிடம் மறுநாள் கூறினான். “பெரும்பான்மையான கனவுகள் அண்மையில் உண்டான மனப் போராட்டங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன” என்று ரிவர்ஸ் (W. H. R. Revers) என்பார் கூறுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகளையொட்டி வரும் சில கனவுகளும் உண்டு. எனக்கு எட்டு வயதிருக்கும். என்னை விட ஒரு வயது இளையவனான என் தோழன் ஒருவனுடன் வீதியிலே விளையாடிக்கொண்டிருந்தேன். இரண்டு மாடுகள் ஒன்றையொன்று எதிர்த்துச் சீறிக்கொண்டு ஒடி வந்தன. நாங்கள் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததால் அவற்றைக் கவனிக்கவில்லை. ஒரு மாடு மற்றொன்றின் மேல் திடீரென்று பாயவே அது சமாளிக்க முடியாமல் பின்னடைந்தது. இரு மாடுகளும் வந்த வேகத்தில் என் தோழனை அவை காலால் மிதித்துக்கொண்டு சென்றுவிட்டன. அவன் படுகாயமுற்று நினைவிழந்து கிடந்தான். அருகிலே யாருமில்லை. நான் அஞ்சி நடுங்கி அசைவற்று நின்றுவிட்டேன். அது முதற்கொண்டு அடிக்கடி மாடு கொம்புகளால் குத்த வருவது போலவும் தப்பித்துக்கொண்டு ஓட கால் வராது நான் தடுமாறுவது போலவும் கனவு காண்கிறேன். இன்றைக்கும் மாட்டைக் கண்டால் எனக்குப் பெரிதும் அச்சம். இதுபோன்று திரும்பித் திரும்பி வரும் கனவுகளுக்குக்கூட அவற்றிற்குக் காரணமாக ஏதாவது நிகழ்ச்சிகள் அண்மையில் நடந்திருக்கக் கூடும். வழியிலே ஒரு மாட்டை நான் பார்த்திருக்கலாம். அது பழைய உணர்ச்சிகளை மனத்திலே மேலுக்குக் கொண்டுவந்திருக்கலாம்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட கனவுகளில் சிக்கல் ஒன்றும் இல்லையாதலால் அவற்றை எளிதாக விளக்கிவிடலாம். ஆனால் பொதுவாகப் பல கனவுகள் அவ்வாறிருப்பதில்லை. அவை நம்மைத் திகைக்க வைக்கும் படியாக இருக்கின்றன. நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பதில்லை. விந்தையான காட்சிகளும் உயிரினங்களும் காணப்படுகின்றன. நடக்க முடியாத நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இவற்றிற்கெல்லாம் பொருள் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏன் அவ்வாறு விந்தைக் கனவுகள் ஏற்படுகின்றனவென்பதையும் அவற்றின் குறிப்பு என்னவென்பதையும் அவற்றால் மன நிலையை எவ்வாறு அறிந்துகொள்ள இயலும் என்பதையும் அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...