கனவைப் பற்றி மூன்று விதமான கருத்துகள் இருக்கின்றன. ஒன்று பாமர மக்களுடையது.
அவர்களுக்குக் கனவிலே அறிவுக்குப் பொருந்தாத ஆழ்ந்த நம்பிக்கையுண்டு. தெய்வ வாக்காகவே
அதை எடுத்துக்கொள்ளுவார்கள். மதிநுட்பம் வாய்ந்தவர்கள்கூட சில வேளைகளில் கனவில் தாம்
கண்டவற்றைப் பின்பற்றி வாழ்க்கையில் நடக்கத் தொடங்குவார்கள். கனவு ஒருசில வேளைகளில்
மெய்யாவதும் உண்டு. அந்த அனுபவ உண்மையை ஒட்டித்தான் நந்தனாரின் கனவும் திரிசடையின்
கனவும் தீட்டப்பட்டிருக்கின்றன. கனவு பலித்ததாகச் சிலர் கூறுவதையும் கேட்டிருக்கிறோம்.
இந்த நம்பிக்கையே சொப்பன நூல்கள் எழக் காரணம். அவை விஞ்ஞான முறை ஆராய்ச்சிக்குப் பொருந்துமா
என்பதை ஊன்றி நோக்க வேண்டும். கனவைப் பற்றி மற்றொரு கருத்து விஞ்ஞானிகளில் ஒரு சாரார்
கொண்டிருப்பதாகும். கனவுகள் உண்டாவதற்கு உடல் நிலையே காரணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
உணவு செரிக்காமை, மலச் சிக்கல் போன்ற கோளாறுகள் மூளையைப் பாதித்து உறக்கத்திலே கனவுகளை
உண்டாக்குகின்றனவென்றும் உறங்கிக்கொண்டிருக்கிற ஒருவன் மேல் ஒரு சொட்டுத் தண்ணிர் விட்டால்
அவன் மழை பெய்வது போலக் கனவு காண்பான் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற சோதனைகள்
செய்து கனவுகளையுண்டாக்கியும் இருக்கிறார்கள்; நான் பல சிறுவர்களுடைய கனவுகளை ஆராய்ந்திருக்கிறேன்.
உறங்கும்போது சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிறைந்துவிட்டால் கனவு ஏற்பட்டு முடிவில்
அதை வெளிவிடுவது போன்ற நிகழ்ச்சி ஏற்படுவதாகப் பலர் உரைக்கிறார்கள். அதன் காரணமாக உறக்கத்தில்
படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுகின்ற சிறுவர்களுமுண்டு. உறக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கு
வேறு காரணங்களும் உண்டு.
மூன்றாவது கருத்தும் உளவியலை அடிப்படையாகக் கொண்டது. மன நிலையே கனவுக்குக் காரணமென்றும்,
உடற் கோளாறால் கனவு தொடங்கினாலும், அதில் தோன்றுகின்ற நிகழ்ச்சிகள் மன நிலையைப் பொறுத்தவையே
என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறர்கள். ஒரு துளி நீரைத் தூங்குகிறவன் மேல் தெளித்தால்
மழை பெய்வது போலக் கனவு உண்டாகலாம். ஆனால் பலரைக்கொண்டு இச்சோதனையைச் செய்து பார்த்தால்
எல்லாரும் ஒரே விதமாகக் கனவு காணமாட்டார்கள் என்பது தெரியவரும். சிறு துாறல் விழுவதுபோல
ஒருவன் கனவு காணலாம்; பெருமழை பெய்வதுபோல மற்றொருவன் காணலாம். இடியும் மின்னலும் சேர்ந்திருப்பதாக
வேறொருவன் காணலாம். மேலும், மழை பெய்வதுடன் வேறு பல நிகழ்ச்சிகளையும் அவர்கள் காண்பார்கள்.
அவைகள் ஒன்றிற்கொன்று மாறுபட்டிருக்கும். அவையெல்லாம் மன நிலையைப் பொறுத்தது என்று
உளவியல் அறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். சிக்மண்ட் பிராய்டுதான் முதல் முதலில் கனவுகளைப்
பாகுபடுத்தி அவற்றின் பொருளை விஞ்ஞான முறையில் அறிய முயன்றவர் என்பதை முன்பே கண்டோம்.
எல்லாக் கனவுகளும் ஆசை நிறைவேற்றத்திற்காக ஏற்படுபவை என்பது பிராய்டின் கொள்கை.
“நனவில் கைகூடாத ஆசைகள் கனவில் கைகூடுவதால் மனத்திற்கு ஆறுதல் கிடைக்கிறது; நல்ல உறக்கமும்
ஒய்வும் கிட்டுகின்றன; ஆதலால் கனவே உறக்கத்தைப் பாதுகாக்கிறது” என்று அவர் சொல்லுகிறார்.
“உறக்கத்தைக் கனவு பாதிப்பதில்லை; அதைப் பாதிக்கும் படியான மனச் சுமைகளை நீக்கி நல்ல
ஓய்வைக் கொடுக்கக் கனவு முயல்கிறது.”
“மறைந்து கிடக்கும் ஆசைகள் கனவில் நிறைவேறுவதால் மனத்தில் அமைதி ஏற்படுகின்றது.
ஆனால் பிராய்டு கருதுவது போல எல்லாக் கனவுசளும் ஆசை நிறைவேற்றத்திற்காகவே உண்டாகின்றன
என்றால் ஆசை என்பதற்கு மிக விரிந்த பொருள் கொள்வது சரியல்ல” என்று பல உளவியல் அறிஞர்கள்
எண்ணுகிறார்கள்.
பொதுவாகக் கனவுகளை ஆராய்வது மிகச் சுவையுடையது. ஒன்பது முதல் பன்னிரண்டு வரை
வயதுள்ள சிறுவர்கள் கண்ட சிக்கலில்லாத சில கனவுகளைக் கீழே தருகிறேன்.
கனவு 1. “நான் ஒரு பெரிய அரண்மனைக்குள் நுழைந்துவிட்டேன். அங்கு லட்டு, ஜிலேபி,
எல்லாம் இருந்தன. நான் அவற்றை என் வாயில் எடுத்தெடுத்துப் போட்டுக் கொண்டேன். அப்பொழுது
ஒரு பெரிய தடி மனிதன் வந்து என்னை அடித்தான். நான் அழுதுகொண்டு விழித்துக்கொண்டேன்.”
கனவு 2. “என் தகப்பனர் நூறு ரூபாய் கொடுத்து என்னை ஊருக்குப் போகச் சொன்னார்.
நான் போய்க்கொண்டிருந்தேன். அப்பொழுது ஓர் ஆகாய விமானம் வந்தது. நான் அதில் ஏறிக்கொண்டேன்.
அதில் உள்ளவர்கள் எல்லாரும் வெள்ளைக்காரர்கள். கொஞ்ச தூரம் போனதும் விமானம் கெட்டுவிட்டது.
உடனே பாரஷுட் என்னும் குடையைக் கொடுத்தார்கள். நான் அதைப் பிடித்து இறங்கினேன். ஒரு
குளத்திற்குள் போய் விழுந்தேன். உடனே விழித்துக் கொண்டேன்."
கனவு 3. "நான் பழனிக்கு ரெயிலில் போவதாகக் கனவு கண்டேன். ஒரு ஸ்டேஷனில்
இறங்கினேன். அப்பொழுது பயணச்சீட்டுப் பரிசோதகர் வந்து பயணச்சீட்டைக் காட்டும்படி கேட்டார்.
நான் வாங்கவில்லையென்று கத்தினேன். ‘ஏண்டா சத்தம் போடுகிருய்?’ என்று அப்பா கேட்டார்.
நான் விழித்துப் பார்த்தேன். அப்பொழுது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தேன்."
வெவ்வேறு அளவில் ஆசை நிறைவேற்றத்தை இக்கனவுகளில் காணலாம். அதிகாரம் செய்தல்,
மிரட்டுதல், அடித்தல் முதலிய செயல்களைச் செய்வதைக் கனவில் தோன்றுபவர் பொதுவாகத் தந்தையைக்
குறிப்பார். உயரத்திலிருந்து விழுவது போன்ற கனவுகள் மனித பரிணாமத்திலே இவன் விலங்கு
நிலையிலிருந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தைக் குறிப்பதாகச் சிலர் கூறுகிறார்கள். மரங்களில்
வசித்த அவ்விலங்குகள் தூக்கத்தில் தவறிக் கீழே விழுந்ததால் உண்டான ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சி
என்றும் மறையாமல் மனத்தில் பதிந்துவிட்டதாகவும், அது வழிவழியாக வந்து இன்னும் உறக்கத்திலே
கனவாகத் தோன்றுகிறதென்றும் அவர்கள் விளக்குகிறார்கள். உறங்கும்போது கால்களை நீட்டுவதாலோ,
அல்லது வேறு உடல் அசைவுகள் ஏற்படுவதாலோ கீழே விழுவது போன்ற கனவு பிறக்கலாமென்று உடலியலார்
கூறுகிறார்கள். நல்ல நடத்தையிலிருந்து தவறி நடக்க உதித்துள்ள விருப்பத்தை அக்கனவு காண்பிக்கிறது
என்று உளப்பகுப்பியலார் எண்ணுகிறார்கள்.
கனவில் தோன்றும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிப் பொதுவான விளக்கம் சொல்லலாமென்றாலும் அவ்வாறு விளக்கம் சொல்வதற்கு யாதொரு திட்டமான விதியோ சூத்திரமோ கிடையாது. கனவு காண்பவனுடைய தனிப்பட்ட மன நிலைக்கு ஏற்றவாறு அவற்றிற்குப் பொருள் காணவேண்டும். பல கனவுகளை ஆராயும்போது அவை விந்தையாகவும், தொடர்பின்றியும், சிக்கல்கள் மிகுந்தும் இருப்பது தெரியவரும். அவற்றையெல்லாம் புரிந்துகொள்ளுவதற்கு பிராய்டு ஒரு புதிய முறையைக் கையாண்டார். அதைத்தான் விருப்பக் கருத்தியைபு முறை (Free Association Method) என்கிறார்கள். ஒரு கனவைப் பல பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதியையும் அக்கனவைக் கண்டவனிடம் கூறும்போது அவன் மனத்தில் ஏற்படும் எண்ணங்களையெல்லாம் ஒளிக்காமல் சொல்லும்படி கேட்கவேண்டும். அப்படிக் கேட்கும்போது அவனைத் தனியாக ஒரு இருண்ட அறையில் படுத்திருக்கும்படி செய்யவேண்டும். அவன் கூறுகின்றவைகளைக் கனவுடன் சேர்த்து ஆராய்ந்தால் அவனுடைய மன நிலையையும் அதில் மறைந்து கிடக்கும் ஆசைகளையும் அறியமுடியும் என்று பிராய்டு சொல்லுகிறார். அவ்வாறு ஆராய்ந்த ஒரு கனவைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.
Comments
Post a Comment