Skip to main content

கொள்ளையோ கொள்ளை | முன்னுரை

மொழிபெயர்ப்பாளரின் முன்னுரை
ஆசிரியர் குமரப்பா அவர்கள் சமீபத்தில் (மார்ச் 1947) ‘கிளைவ் முதல் கெய்ன்ஸ் வரை’ (Clive to Keynes) என்று ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்கள். அதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூலாகும். மூல நூலுக்கு அவ்வாறு பெயரிட்ட காரணத்தை விளக்கி குமரப்பா அவர்கள் ஒரு குறிப்பு எழுதியுள்ளார்கள். அதாவது:-
கிளைவ் பிரபுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர் சிறுவராக இருந்த பொழுது ஆசிரியர்களுக்கு அளவற்ற துன்பம் கொடுத்துவந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் அவரைக் கிழக்கிந்தியக் கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்க்குமாறு இந்திய தேசத்திற்கு அவருடைய 18வது வயதில் அனுப்பி வைத்தார்கள். அவர் இந்தியாவில் 17 வருஷம் வேலை பார்த்துவிட்டு, 35வது வயதில் இங்கிலாந்து திரும்பினார். அப்பொழுது அவர் கையில் ரொக்கமாக 3 லட்சம் பவுனும், வருஷத்தில் 27 ஆயிரம் பவுன் வருமானம் வரக்கூடிய பூஸ்திதியும் இருந்தது. இந்த சூழ்ச்சிக்கார ராஜதந்திரி எவ்வாறு இந்தியப் பொதுப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்துச் சென்றாரோ அதே முறையைத்தான் இன்று வரை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
இந்த இருபதாம் நூற்றாண்டு ஆரம்பித்த காலத்திலிருந்து இங்கிலாந்து தேசத்தின் சர்க்கார் நிதி விஷயத்தில் யோசனை கூறும் நிபுணர் கெய்ன்ஸ் பிரபு என்பவர்.
பிரிட்டிஷார் பிற நாட்டோடு செய்யும் ஒப்பந்தங்கள், நஷ்டஈடுகள், யுத்தக் கடன்கள் முதலிய விஷயங்களை எல்லாம் அவரேதான் முடிக்கிறார். பிரிட்டன் வுட்ஸ்என்னும் இடத்தில் நடந்த மகாநாட்டை ஆட்டிவைத்தவரும் அவரே. அதுபோலவே இந்திய சர்க்காருடைய நிதி விஷயத்திலும் அவருக்கு அதிகமான செல்வாக்கு உண்டு. அவர் சுமார் 34 வருஷங்களுக்கு முன், ‘இந்தியச் செலாவணியும் நிதியும்என்று ஒரு நூல் எழுதினார். அன்று முதல் இந்திய விவகாரங்களிலும் அவருக்குச் செல்வாக்கு உண்டாயிற்று.
நம்முடைய வரிப்பணத்தை நாசமாக்கும் வமிச பரம்பரையை ஆரம்பித்து வைத்தவர் கிளைவ் பிரபு. அப்பரம்பரை கெய்ன்ஸ் பிரபுவுடன் முடிவடைந்துவிட வேண்டும் என்று விரும்புகிறோம்.
நூலிலுள்ள விஷயத்தைப் பொறுத்து தமிழில் கொள்ளையோ கொள்ளைஎன்ற இப்பெயர் பொருத்தமாக இருக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மூல நூலிலுள்ள ஆங்கிலப் பதங்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்களைக் கோத்து இப்புத்தகம் ஆக்கப்படவில்லை. தேவையான இடங்களில் விஷயங்களைக் கூடிய வரையில் விளக்கியுமிருக்கிறேன். சாதாரணத் தமிழ் அறிவுள்ளவர்கள் கூட இந்நூலைப் படித்து விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே என் நோக்கமாகும். மூல நூலிலுள்ள விஷயங்களும் அவைகள் எடுத்துரைக்கப்பட்டிருக்கும் சுவையும் சற்றும் குன்றாது இதில் காணப்படும் என்பது என் நம்பிக்கை.
மீ. விநாயகம்
மகன்வாடி,
வர்தா, ம.மா.
12-6-47
நூலாசிரியரின் முன்னுரை
தனக்கு உரிமை இல்லாத பிறரின் பொருள்களைக் கண்டு பேராசை கொள்ளுகின்ற ஒருவன் அப்பொருள்களை அபகரித்துக்கொள்ளப் பல்வேறு தந்திரங்களைக் கைக்கொள்ளுகிறான். இவைகளில் சர்வ சாதாரணமாகக் கருதப்படுவது வழிமறித்தல். அதாவது பொருள் உள்ளவன் தனிவழியே போக நேரிடுங்கால் அவனை வழிமறித்துப் பயமுறுத்துவதால், அவன் தன் உயிருக்கு அஞ்சிப் பொருள்களை எறிந்துவிட்டு ஓட்டமெடுக்கிறான். இதற்கு அடுத்தபடியாகச் சொல்லக்கூடியது, வஞ்சகன் பொருளுள்ளவனை அண்டிச்சென்று தன்னை அவனுடைய நம்பிக்கைக்கு உரியவனாக முதலில் செய்துகொள்ளுதல்; இக் கபட நாடகத்திற்குப் பிறகு, தன் கைவரும் தொகைகளைத் தன் சொந்தத்திற்கு உபயோகித்தல். மூன்றாவது தந்திரம் சாதாரணமாக வரவு செலவுக் கணக்கு எழுதுவோருக்குத் தெரிந்திருக்கக்கூடியதே. அதாவது பொய்க்கணக்கு எழுதுவது. வாங்காத சாமான்களை வாங்கியதாகச் செலவு எழுதவும், விற்று வந்த தொகையைச் சரியானபடி வரவு வைக்காமலும், சேமிப்புத் தொகையைச் சிறுகச்சிறுகச் சுரண்டுவதும், இன்னும் இதுபோன்ற பல்வேறு தந்திரங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நான்காவதாக, முதலாளியின் விலையுயர்ந்த பொருள்களை அற்பத் தொகைக்கு அடகு வைத்து உபயோகித்துக்கொள்ளுதல். கடைசியாக ஒரு சொத்திற்குத் தருமகர்த்தாவாக நியமிக்கப்பட்ட பிறகு, அச்சொத்துக்களை சுயநலத்திற்கு உபயோகித்தல். சொத்தின் உடைமைக்காரர்களுக்குக் காலணாவும் கண்ணில் காட்டுவதில்லை. இவை போன்று இன்னும் அநேக சூழ்ச்சிகளைப் பற்றி அடிக்கடி நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். மேலே சொன்னவை யாவும் ஒரு தனிநபரின் சொத்தை அபகரிப்பதற்கான தந்திரங்கள்.
பிரிட்டிஷார் நம் நாட்டுடன் கொண்டுள்ள தொடர்பைப் பற்றிச் சரித்திரபூர்வமாக ஆராயுமிடத்தே மேலே சொல்லப்பட்ட விபரீதச் சூழ்ச்சிகள் யாவற்றையும் தவறாது கையாண்டுள்ளதை நன்கு அறியலாம். இத் தந்திரங்கள் மட்டுமின்றி இன்னும் நவீனமான கொள்ளை முறைகளையும் இவர்கள் கண்டுபிடித்து அனுசரித்தும் வந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
பிரிட்டிஷ் கஜானாவின் இரண்டாம் காரியதரிசியாகிய சர் வில்லியம் ஈடி, இங்கிலாந்து பாங்கியின் டிபுடி கவர்னர் மிஸ்டர் சி. எப். கோபால்ட், இங்கிலாந்திலுள்ள இந்தியா ஆபீஸின் பொருளாதார இலாகா தலைவர் மிஸ்டர் கே. ஆண்டர்சன், இங்கிலாந்து பாங்கின் நாணயமாற்று இலாகாவைச் சேர்ந்த மிஸ்டர் பி. எஸ். பேல் ஆகியவர்கள் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்துள்ள விஷயம் பற்றி நாம் அறிந்திருப்போம். இவர்கள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுக்கப்படவேண்டிய ஸ்டர்லிங்பாக்கியைப் பற்றி இந்திய அரசாங்க அதிகாரிகளுடனும், ரிசர்வ் பாங்கு அதிகாரிகளுடனும் கலந்து பேசப்போகிறார்களாம்.
இந்த ஸ்டர்லிங் கடன்என்றால் என்ன? ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இந்நாட்டின் திரவியங்களை மனம் போனபடி அள்ளிச் செலவு செய்திருக்கிறார்கள் என்பது உலகமறியும் உண்மை. இந்த ஊதாரிச் செலவின் பெரும்பாகத்துக்கு இந்தியாவே பொறுப்பாளி என்று அடாவடியாகப் பொய்க்கணக்கும் எழுதியுள்ளார்கள். இவ்வாறு அவர்களே தயாரித்துள்ள வரவு செலவுக் கணக்கின்படி இன்று இங்கிலாந்து இந்தியாவிற்குப் பலகோடி ரூபாய்கள் திருப்பிக் கொடுக்கவேண்டி ஏற்படுகிறது. இதையே ஸ்டர்லிங் கடன்என்கிறார்கள்.
இவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய்களை இந்த ஏழை இந்தியா எவ்வாறு கடன் கொடுக்க முடிந்தது என்பது ஒரு ரஸமான சரித்திரமாகும். இதை நாம் ஒவ்வொருவரும் விளக்கமாகத் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இன்று இங்கிலாந்திலுள்ள வனப்பு மிகுந்த மாளிகைகள் யாவும் ஏழை இந்தியர்களின் எலும்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளனஎன்று சொல்வது உண்மையாகும். இதையே இங்கு விளக்குவோம்.
ஜே. சி. குமரப்பா
15, பிப்ரவரி-'47
மகன் வாடி,
வர்தா, ம.மா.

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...