Skip to main content

தீபாவளி யாருக்கு? - மகாத்மா காந்தி


சகோதர சகோதரிகளே,

இன்று தீபாவளி. இத்தருணத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இந்துக்களின் நாட்காட்டியில் ஒரு சிறப்பான நாள். விக்ரம் நாட்காட்டி1யின்படி நாளை, வியாழக்கிழமை புத்தாண்டு பிறக்கிறது. தீபாவளி ஒளிமயமாகக் கொண்டாடப்படுவது ஏன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த மகத்தான போரில் நன்மையின் சின்னமாக ராமனும் தீமையின் சின்னமாக ராவணனும் உள்ளனர். ராமன் ராவணனை வெற்றி கொண்டான். அந்த வெற்றி இந்தியாவில் ராம ராஜ்யத்தை நிறுவியது.

ஆனால் இன்று இந்தியாவில் ராம ராஜ்யம் இல்லை. அப்படியானால் நாம் எப்படி தீபாவளியைக் கொண்டாட முடியும்? யாரெல்லாம் ராமனைத் தன்னுள்ளேயே கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் இந்த வெற்றியைக் கொண்டாட முடியும். கடவுள் ஒருவரே நம் ஆன்மாவில் ஒளியேற்றக் கூடும். அந்த ஒளியே உண்மையான ஒளியாகும். இன்று பாடப்பட்ட பஜனை கடவுளைக் காண்பதற்கு அந்தக் கவிஞர்2 கொண்டிருந்த விருப்பத்தையே வலியுறுத்துகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் செயற்கையான ஒளியைக் காணச் செல்கிறார்கள்; ஆனால், இன்று நமக்கு வேண்டியிருப்பது அகத்தில் ஏற்றப்படும் அன்பின் ஒளிதான். நாம் நமக்குள் அன்பின் ஒளியை ஏற்ற வேண்டும். அப்போதுதான் நாம் வாழ்த்துக்களுக்குத் தகுதியானவர்கள் ஆவோம். இன்று ஆயிரக்கணக்கானவர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நெஞ்சில் கை வைத்து இந்து, சீக்கியர், முஸ்லிம் என யாராக இருந்தாலும் துன்பத்தில் உள்ள அனைவரும் எம் சகோதர சகோதரிகள் என்று சொல்ல முடியுமா? இதுதான் உங்களுக்கான பரிசோதனை. ராமனும் ராவணனும் நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் என்றுமே முடிவுறாத போராட்டத்தின் குறியீடுகள். உண்மையான ஒளி உள்ளத்திலிருந்து பிறப்பதே.

புண்பட்ட காஷ்மீரைக் கண்ட பண்டித ஜவஹர்லால் நேரு எவ்வளவு மன வருந்தத்தோடு திரும்பியிருக்கிறார்! அவரால் நேற்றும் இன்று பிற்பகலிலும் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இயலவில்லை. அவர் பாராமுல்லா4விலிருந்து எனக்கு மலர்களைக் கொண்டுவந்துள்ளார். நான் எப்போதும் இதுபோன்ற இயற்கையின் பரிசுகளை நேசிக்கிறேன். ஆனால் இன்று கொள்ளை, கலவரம் மற்றும் ரத்தக்களறிகள் அந்த எழில்மிகு நிலப்பரப்பின் அழகைக் குலைத்துள்ளன. ஜவஹர்லால் ஜம்முவுக்கும் சென்றார். அங்கும் நிலைமை நன்றாக இல்லை.

ஸ்ரீ ஷ்யாமள்தாஸ் காந்தி மற்றும் தேபர்பாய்5 ஆகியோர் சர்தார் படேலின் ஆலோசனைக் கோரியதால், அவர் ஜூனாகத் செல்ல வேண்டியிருந்தது. ஜின்னா, பூட்டோ இருவருமே கோபமாக இருக்கிறார்கள்; இந்திய அரசாங்கம் அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் ஜூனாகத் (இந்திய) ஒன்றியத்தில் இணைய அழுத்தம் கொடுப்பதாகவும் நினைக்கிறார்கள்.

தேசத்தில் அமைதியையும் நல்லெண்ணத்தையும் நிலைநாட்டும் பொருட்டு, அவர்கள் மனதில் வெறுப்பையும் அவநம்பிக்கையையும் போக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. கடவுளின் இருப்பை உங்களுக்குள்ளேயே உணரவில்லை எனில், அற்ப உட்பூசல்களை மறக்கவில்லை எனில், காஷ்மீரிலோ ஜூனாகத்திலோ வெற்றி பெற்றும் பயனில்லை. அஞ்சி ஓடிய முஸ்லிம்கள் எல்லோரையும் திரும்ப வரவழைக்கும் வரை நாம் தீபாவளி கொண்டாட முடியாது. அதேபோல பாகிஸ்தானும் அங்கிருந்து ஓடிய இந்து மற்றும் சீக்கியர்களை அழைக்காமல் இருக்க முடியாது.

காங்கிரஸ் செயற்குழு விஷயத்தில் நான் என்ன செய்ய முடியும் என்பதை நாளை சொல்கிறேன். வியாழக்கிழமை பிறக்கும் புத்தாண்டில் உங்களுக்கும், இந்திய நாட்டுக்கும் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும். கடவுள் உங்கள் அகத்தில் ஒளியேற்றட்டும்; அது பரஸ்பர உதவிக்கும் இந்தியாவுக்கும் மட்டுமன்றி இவ்வுலகம் முழுமைக்கும் சேவை புரியட்டும்.

(நவம்பர் 12, 1947 அன்று பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியின் பேச்சு)

1 குஜராத்தி நாட்காட்டியின்படி
2  ரஞ்சூத் தாஸ்.
3 பாராமுல்லா பயங்கர கலவரத்துக்குப் பின் இந்தியப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.
4 யு. என். தேபர் அல்லது உச்சரங்கராய் நவல்சங்கர் தேபர் (1905-77);

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...