[இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் பிரிட்டிஷ் அரசு தேசியத் தலைவர்களை பரோலில்
விடுதலை செய்தது. சிறையிலிருந்து வெளியே
வந்த காந்தி பூனாவிலுள்ள மணிபவனம் என்ற இடத்துக்கு இயற்கை வைத்தியத்துக்காகப்
போனார். அங்கு அவரை நான் சந்தித்துப்
பேசிய அனுபவம் இது.]
காலை 4 மணிக்கு
மணிபவனத்திற்குப் போனேன். காலை
பிரார்த்தனைக்கு அவர் 5
மணிக்கு அங்கு வருவார் என்று எனக்குத் தெரியும்.
அவருக்கு மிக நெருக்கத்தில் உட்காரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வழக்கமான ‘ஶ்ரீராம் ஜெய்ராம், ஜெய்ராம்’க்குப் பிறகு கீதையின்
இரண்டாவது அத்தியாயத்தின் ஐம்பத்தைந்தாவது செய்யுளிலிருந்து பாராயணம்
செய்யத் தொடங்கினார். அறுபத்து இரண்டாவது
செய்யுளுக்கு வந்தபோது அவருடைய குரலில் ஒரு கனிவு உண்டானது. அவருடைய பாராயணத்தில் முழுமையான உண்மையுணர்ச்சி
ஒலித்தது. முதன் முறையாக நான் அந்த
செய்யுள்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவற்றின் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை என்றாலும் மகாத்மாவின் வாயிலிருந்து
நேரிடையாகக் கேட்டதால் அவற்றைப் பாராயணம் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று
தோன்றியது. இப்படியாகத்தான் அதன்பிறகு என்
வாழ்க்கைப் பாதையாக இருந்த கீதையை நோக்கி நான் திருப்பப்பட்டேன்.
பிரார்த்தனை முடிந்தவுடன் மகாத்மாவைச் சுற்றி ஒரு தடுப்பு வளையம்
அமைக்கப்பட்டதைப் பார்த்தேன்.
சுற்றியிருந்தவர்கள் தங்களுடைய கையெழுத்துப் புத்தகத்தில் காந்திஜியிடம்
கையெழுத்து வாங்கினார்கள். அவரிடம்
கையெழுத்து வாங்குவதற்காக அவர்கள் முன்கூட்டியே ஒரு பெரிய கூடையில் ஐந்து ரூபாய்
நோட்டுக்களைப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பெரிய ஞானி மக்களிடம் இந்த முறையில் தொடர்பு கொண்டிருந்தது எனக்கு
முதலில் ஒரு குறையாகப் பட்டது. ஒரு
கையெழுத்துக்கு ஐந்து ரூபாய் என்பது மிகப் பெரிய விலையாக எனக்குத் தோன்றியது. காந்தியின் புனித பிம்பமும் ஒரு வணிக வகுப்பைச்
சார்ந்தவருக்கு இருக்கும் இயல்பான உணர்வான பணம் சார்ந்த நடவடிக்கையும் ஒன்றோடொன்று
முரண்பட்டன.
பிரார்த்தனைக் கூட்டத்திற்குப் பிறகு 6.30 மணி வாக்கில் காந்திஜி அவருடைய
அறைக்குச் சென்றுவிட்டார். மீண்டும் 11 மணிக்கு ஒரு அறையின் பளபளப்பான
தரையில் பத்துப் பதினைந்து பேர் சுற்றியிருக்க அவர் உட்கார்ந்திருப்பதைப்
பார்த்தேன். அழைக்கப்படாமல் நுழைவது என்
சுபாவம் இல்லை. தயக்கமும் வெட்கமும் மேலிட
நான் மெதுவாக அறைக்குள் நடந்துபோய் சாத்தியமான அளவு காந்திஜிக்கு அருகாக
உட்கார்ந்தேன். அவர் என்னைப்
பார்த்தார். அந்தக் குழுவிலேயே நான்தான்
வயதில் மிக இளையவன்.
அவர் இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்.
விமானப்படையிலும் பிறகு ராணுவத்திலும் சிறிது காலம் இருந்ததால் என்னால்
இந்தி மொழியைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனாலும் பால் வேறுபாடு காட்டும் வார்த்தைகளோடு வினைச்சொற்களை இணைப்பதில்
எனக்கு சிரமம் இருந்தது. எனவே பேசுவதற்கு
ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தேன்.
இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து நான் வருகிறேன் என்று காந்திஜி என்னைக்
கேட்டார். “நான் கேரளாவிலிருந்து வருகிறேன்” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். “கேரள மக்களுக்கு
ஆங்கிலம்தான் தாய்மொழியா?”
என்று அவர் மீண்டும் இந்தியில் கேட்டார்.
மலையாளி அல்லாதவர்களோடு பேசும்போது கேரள மக்கள் ஆங்கிலத்தில் பேசுவதாக நான்
ஆங்கிலத்திலேயே சொன்னேன்.
நான் என்னுடைய தாய்மொழியில்தான் பேசவேண்டும் என்று காந்திஜி
வலியுறுத்தினார். நான் சொன்னேன், “பாபுஜி, நீங்கள் இங்கிலாந்தில்
படித்தவரென்றும், ஆங்கிலத்தில்
பேசுபவரென்றும் எனக்குத் தெரியும். எந்த
மொழியிலும் என்னுடைய சரளத்தைக் காட்டுவதற்காக நான் இங்கு வரவில்லை. நான் இங்கு எண்ணப் பரிமாற்றத்திற்காக
வந்திருக்கிறேன். ஆங்கிலம்தான் இந்தியாவில்
இணைப்பு மொழி. நாம் பேசுவதால் தீங்கில்லை.”
பிறகு அவர் கேட்டார்,
“இந்தியாவின் தேசிய மொழியில் நீ ஏன் பேசவில்லை?” இளமையும்
தன்முனைப்பும் ஏற்படுத்திய கோபத்தில், “இந்தி என்னுடைய தாய்மொழியுமல்ல, தந்தை மொழியுமல்ல” என்று ஆவேசத்துடன் சொன்னேன்.
பிறகு மென்மையான குரலில் காந்திஜி பதில் சொன்னார். “பிரிட்டிஷாருக்கு நீ அடிமைப்பட்டிருக்கிறாய். எஜமானனின் மொழியில் பேசுவதில் ஒரு அடிமை கர்வம்
கொள்வான். நீ ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டிருக்கும்வரை உன்னால் உன் தாய்மொழியில் பாண்டித்தியம்
பெறமுடியாது. உன்னுடைய தேசிய மொழியிலும்
பேசமுடியாது.”
நான் வருத்தமும் அவமானமும் அடைந்தாலும் அமைதியாக அங்கிருந்து போகத்
தீர்மானித்தேன். துயரம் நிரம்பிய
இதயத்தோடும் காயம்பட்ட சுயத்தோடும் நான் என்னுடைய அறைக்குத் திரும்பினேன். பிற்பகல் 3 மணிக்கு மார்க்ஸியம் பற்றி மகாத்மா காந்தியிடம் ஒரு
முழுப்போரை நிகழ்த்தும் திட்டத்துடன் அதே அறைக்கு திரும்பிப் போனேன். மார்க்ஸியம் மட்டுமே இந்தியாவைக்
காப்பாற்றமுடியும் என்று அந்நாளில் நான் முழுதாக நம்பியிருந்தேன். காந்திஜியின் ராமராஜ்யக் கோட்பாடு அரசியல்
விடுதலையை பிற்போக்குத்தனமாகப் பார்க்கிறது என்றும் நான் நினைத்திருந்தேன்.
ஒவ்வொரு முறை நான் காந்திஜியைப் பார்த்தபோதெல்லாம் என் மனதில் இருப்பதைப்
பேசுவதைத் தடுப்பது போல அவர் இரண்டு விரல்களை உயர்த்தியது என்னை எச்சரிப்பதுபோல
இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய
கண்களை நான் நேராகப் பார்த்தபோது அவர் நான் சொல்வதைக் கேட்க விரும்புவதுபோலத்
தோன்றியது. என்னுடைய வார்த்தைகள்
ஒரேவீச்சில் பீரிட்டன. “பாபுஜி, உங்களுடைய ராம்ராஜ்யம்
இந்தியாவை ஒருபோதும் காப்பாற்றாது.
வர்க்கப்போர் மட்டுமே இந்தியாவுக்கு உண்மையான விடுதலையைத் தரும். இரண்டு வர்க்கங்கள் இருக்கின்றன, பணக்காரர்கள், ஏழைகள். இருப்பவர்கள் சுரண்டுகிறவர்கள். இல்லாதவர்கள் சுரண்டப்படுகிறவர்கள். இந்த இரண்டு வர்க்கங்களின் அக்கறைகளும் நேர்
எதிரானவை. அவர்களிடையே ஒரு வர்க்கப்போர்
தவிர்க்க இயலாதது. சுரண்டப்படுபவர்களின்
உரிமைகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.”
இதைக் கேட்ட காந்திஜி கருணையுடன் என்னைப் பார்த்துச் சொன்னார், “கார்ல் மார்க்ஸைப் படித்து
விடுதலை குறித்த அவருடைய கோட்பாட்டைப் பரிசீலிக்க என் வாழ்க்கையில் சந்தர்ப்பமே
நேரவில்லை என்று நீ நினைக்கிறாயா?” அவர் ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டிருந்தது கண்டு நான் பெரிதும் ஆச்சரியப்பட்டேன். குரலைத் தாழ்த்திக் கொண்டு, “நீங்கள் அதைப்
படித்திருக்கலாம். ஆனால் அதற்கு
முக்கியத்துவம் கொடுத்து பரிசீலித்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். பிறகு அவர் சொன்னார், “உன்னுடைய நம்பிக்கைகளில் நீ
உறுதியாக இருப்பதுபோலத் தெரிகிறது.
மார்க்ஸ் சொல்வது சரி என்றால் நான் சொல்வது தவறா?” உடனடியாக
நான், “ஆமாம், அப்படித்தான்” என்று பதில் சொன்னேன்.
ஒரு கணத்துக்குப் பின்,
குணப்படுத்தவே முடியாத ஒரு நோயாளியை ஒரு டாக்டர் பார்ப்பதுபோல என்னுடைய
முகத்தை கூர்ந்து பார்த்துவிட்டு, “நீ உன்னுடைய சுய சிந்தனையைப் புறக்கணித்துவிட்டு, மார்க்ஸின் சிந்தனைக்
கோணத்திலிருந்து உண்மையைப் பார்க்கிறாய்.
என்னிடமும் தாராள மனதுடன் நீ நடந்துகொள்ளக் கூடாதா? என்னுடைய
கருத்தைப் புரிந்துகொள்ள சிரமம் எடுத்துக்கொள்வாயா? உண்மைக்கு எத்தனை பரிமாணங்கள் உள்ளன?” என்றார். “ஒன்று” என்று நான் துடுக்காகச் சொன்னேன். காந்திஜி சொன்னார், “இல்லை, உண்மை வைரத்தைப் போன்றது.
அது பல பட்டைகளைக் கொண்டது.”
முதல்முறையாக அப்படி ஒரு சாத்தியத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன். மனதால் பேச்சற்றுப் போனேன். “உண்மை பல தோற்றங்களைக் கொண்டது. பின் எது உண்மையைப் பார்ப்பதில் சரியான பார்வை?” என்று எனக்கு நானே
முணுமுணுத்துக் கொண்டேன். என்னுடைய
குழப்பத்தைக் கண்ட மகாத்மா,
பகுத்தறிவுப் பார்வை என்பது எப்போதும் அரைகுறைப் பரிசீலனைக்கு சார்பானது என்று
எனக்கு விளக்கிச் சொன்னார். அவர் அதிகம்
பேசப்பேச அவருடைய பேச்சு நயமும் அதிகரித்தது.
என்னுடைய முந்தைய நம்பிக்கைகளெல்லாம் நொறுங்கிப் போயின. கடைசியில் என்னால் வாயைத் திறக்கக்கூட
முடியவில்லை. என்னை அவருக்கு ஒப்புக்
கொடுத்துவிடவேண்டும் என்று திடீரென்று உணர்ந்தேன். கழுவாயும், அடக்கமும் நிறைந்த வார்த்தைகளில் அவரிடம், “பாபுஜி, ஹரிஜன சேவாதளத்தில் சேர்வதன்
மூலம் உங்களுக்கு சேவை செய்ய என்னை அனுமதிப்பீர்களா?” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
சிரித்துவிட்டு அவர் சொன்னார், “சரி,
இந்த நிமிடம் முதலே.” என் மனதில் இருந்த கொந்தளிப்பு திடீரென்று சாந்தமான
அமைதியாக மாறிப்போனது. மறுகரையை
அடைந்ததுபோல இருந்தது. அலுவலகத்திற்குச்
சென்று ஹரிஜன சேவா தளத்தில் என்னை ஒரு தொண்டனாகப் பதிவுசெய்துகொண்டேன்.
மாலையில் மகாத்மாவின் பிரார்த்தனைக் கூடத்திற்குப் போனபோது கீதையின் ஒரு
பிரதியை வாங்கி அவர் பாராயணம் செய்யும் வரிகளைப் பின்தொடர்ந்தேன். அடுத்த மூன்று நாட்களும் எல்லா விவாதங்களையும்
கைவிட்டு ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தேன்.
முதல்முறையாக எதிர் சிந்தனைகளையும் எதிர் விவாதங்களையும் மனதில்
உருவாக்கிக் கொள்ளாமல், பிறர்
சொல்வதை கவனிக்கத் தொடங்கினேன். விவேகம்
நிரம்பிய வார்த்தையை யார் சொன்னாலும் அதை கவனிக்கும் தகுதி வாய்ந்த மாணவனாக நான்
என்னை இப்படியாகத்தான் உருவாக்கிக் கொண்டேன்.
தமிழில் – ஆர்.
சிவகுமார்
நன்றி: ‘அனுபவங்கள் அறிதல்கள்’, யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு, 2004
Comments
Post a Comment