‘காதலாவது உருளைக்கிழங்காவது’
- சி. சுப்பிரமணிய பாரதி
நான் ஆராய்ச்சிப் பிரியன். அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால், அதுதான் எனது தெய்வம். கம்பனுடைய காவியங்கள் முதல், நாணயச் செலாவணி, தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக, எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை. இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம்.
இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில், சாதாரணமாக அல்ல, அபரிமிதமாக, காவியங்கள், நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன. இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல், கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது, அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது.
ஆழ்ந்து யோசிக்குந்தோறும், தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு, அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன. எனது ஆராய்ச்சியின் முடிவைச் சொல்லவா? தெரியாத விஷயத்தைப் பற்றி சொல்வது கடினந்தான். ஆனால் அதுதான் அறிவுடைமை.
இதை எல்லோருக்கும் பொதுவாக தெரியக்கூடிய விஷயத்திற்கு மாற்றிக்கொண்டால் எளிதில் விளங்கிவிடும். மாணவர்கள் கணித வகுப்பில், எல்லாவற்றையும் பைசா கலத்திற்கு மாற்றிக்கொண்டு லேசாக கணக்கு செய்வதுபோல், உபாத்தியாயர் 'பிரம்மம் என்றால் என்ன?' என்று கேட்டபோது 'சாப்பாடு' என்று பையன் பதில் சொன்னதாக ஓர் உபநிஷதக் கதை ஞாபகம். சாப்பாட்டின் மகிமையை எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய திறமையில் உபநிஷதக்காரருடைய மாணவனுக்கு நாம் சற்றேனும் குறைந்தவர்கள் அல்ல.
பீடிகை பெரிதாகி விட்டது. ஆனாலும் ஆராய்ச்சிக்கு இவ்வளவும் அவசியம். இனி ஓர் உதாரணத்தில் விஷயத்தை விளக்குவோம்.
நான் திடீரென்று குலாப்ஜான் மீது காதல் கொண்டுவிட்டேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கண்டதும் காதல்; 'கண்ணொடு கண்ணினை' இத்யாதி விஷயம். உடனே நான் என்ன செய்யவேண்டும் தெரியுமா? செய்யுள் எழுதத் தெரிந்தால், அகப்பொருள் இலக்கணத்திற்குச் சிறிதும் பிசகாமல், சிலேடை, யமகம் முதலிய சொல் நயங்கள் மலிந்து திகழ, சந்திரோபாலம்பனம் உள்பட குறைந்தது 2000 கவிகளில், 'குலாப்ஜான் காதல்' எழுதி முடித்து, பிறகு வள்ளல் என்ற ஒருவரை தேடியடைந்து, அரங்கேற்றி, பரிசில் பெற்று அப்பொருளின் உதவியால் காதலித்த பொருளையடைந்து மகிழ வேண்டும்.
காதலின் போக்கு வெகு கரடுமுரடு என்று கூறுவார்கள். அதன் போக்கே ஒரு தனிப்போக்கு. காதல் வயப்பட்டவனுக்கு காடும், மரமும், செடியும் அவளாகத் தோற்றுமாம். கண்களுக்கு எதிரில் வருகிற எருமைக்கன்று முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜ் வரை எல்லாம் ஒரே தோற்றம்தான். 'ஒன்றே யதுவாய் உலக மெல்லாம் (அதன்) தோற்றமுமாய்' தெரியுமாம். இது மட்டுமா? காதல் வயப்பட்டானுக்கு காதற் பொருளைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாதாம்! ஸர்வீஸ் கமிஷனால் கிடைக்கக்கூடிய குமாஸ்தா பதவி முதல் திவான் பகதூர் பட்டம், மந்திரிப் பதவி - ஏன்? - முஸோலினி மாதிரி ஸர்வாதிகாரி வரை கிடைத்தாலும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய தைரியம் வந்துவிடுமாம்.
காதலித்த பொருள் கிடைக்காவிட்டால் என்ன செய்யவேண்டும் தெரியுமா? மடல் ஏற வேண்டுமாம்; அதாவது பனை ஓலை மடல்களை அராபிக் குதிரையாக நினைத்துக்கொண்டு நான்கு ரஸ்தாக்கள் சேரும் சந்தியில், அதன் மேல் சவாரி செய்து தான் காதலித்த பொருளைப் பற்றி ஓர் பிரசங்கம் செய்யவேண்டும். செய்யுள் எழுதத் தெரிந்தால் மடல் என்ற ஒரு விதமான கவி இயற்றி தப்பித்துக் கொள்ளலாம். இது ஆழ்வார்கள் முதலிய பெரியார்கள் கைக்கொள்ளும் வழி. கஷ்டமில்லை, செய்யுள்தான் எழுதத் தெரியவேண்டும்.
இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் காதல் கொண்ட பொருளும் திரும்ப நம்மைக் காதலிக்க வேண்டும். இது நமது குலாப்ஜானைப் பொறுத்தமட்டில் கொஞ்சம் கஷ்டந்தான். ஆனால் காட்டுக்குப் போகும் ராமனைக் கண்டு கல்லும் மரமும் மண்ணாங்கட்டியும் அழுதால், இது ஏன் அசம்பாவிதம்? அப்படி காதலித்தால் பிறகுதான் விசேஷம். அதற்கு ஆழிவாய்ச்சத்தம் முதல் சந்திரோதயம், காரிருள் ஈறாக ஒன்றும் பிடிக்காது. முக்காலணா ஸ்டாம்பு வாங்கி கடிதம் போடவேண்டும் என்பதையும் மறந்து, வண்டு, மேகம், தேன், சவ்வாது, அன்னம், கிளி இவைகளைத் தூதனுப்ப ஆரம்பித்துவிடும். இரவு, கார்காலம் இவைகளெல்லாம் காதலித்த பொருளுக்கு ஆகாத காலங்கள்.
ஒரு வேளை அதிர்ஷ்டவசத்தால் சந்திக்க நேர்ந்தாலோ? 'ஓங்கி வரும் உவகை ஊற்றிலறிவோம், ஒட்டும் இரண்டுளத்தின் தட்டிலறிவோம்'. அடைந்துவிட்டாலோ? அதுதான் முக்தி!
'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?'
இவ்வளவு தூரம் என்னுடன் ஒத்துழைத்து இந்த ஆராய்ச்சியைப் பின்பற்றி வந்த நீங்கள் சொல்லுங்கள். இதை தர்க்கமறிந்த ஆறறிவுடைய மனிதன் ஒருவன் செய்வானா? இந்த வேடிக்கையான விஷயத்தை சார்லி சாப்ளின் நடித்தாலும் அவனுக்குப் பயித்தியம் பிடித்து விட்டதென்று சொல்ல மாட்டோமா? மளிகைக்கடை செட்டியார் முதல் கலெக்டர் கோஷ்டி வரை இதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்களே?
காதல், காதல் என்று கும்பலுடன் ‘ஜே’ போட்டுக் கொண்டிருக்கும் கம்பனுக்கும் இது நன்றாகத் தெரியும். ஆனால் இதை இலக்கியம் படிப்பவரிடம் சொன்னால் மண்டை சுக்கு நூறாகப் போய்விடுமென்று பயந்து கடைசியில் இரகசியமாக வைத்திருக்கிறான் பாருங்கள்.
இத்திற மெய்திய காலை யெய்துறும்
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான்
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய
பித்தரின் ஒருவன் பெயர்ந்து போயினான்
இதற்கு மேலும் சந்தேகமா? நாகரிகமாய் டை, பூட்ஸ் போட்டவர் வேண்டுமானால் ஷேக்ஸ்பியரை திருப்பிப் பாருங்கள். இனியும் சந்தேகமானால் நீங்கள் ஒரு தடவையாவது காஞ்சி புராணம் கட்டாயம் படிக்க வேண்டும்.
காந்தி, 18 அக்டோபர் 1933
(அச்சில் வெளிவந்த புதுமைப்பித்தனின் முதல் படைப்பு)
Comments
Post a Comment