( மொப்பஸான் கதையின் தழுவு ) அன்று கப்பலில் வெகு கூட்டம் . நான் சிங்கப்பூருக்குப் புறப்பட்டிருந்தேன் . கப்பலும் ஏக கோஷம் , இரைச்சலுடன் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது . நான் கப்பலின் மேல்தட்டிலிருந்து கப்பல் கடலுக்குள் செல்லுவதை கவனித்துக்கொண்டிருந்தேன் . திடீரென்று என்னை யாரோ கூப்பிட்டார்கள் . திரும்பிப் பார்த்தேன் . எனது பழைய நண்பன் ஹரிஹரன் . இருவரும் கை குலுக்கினோம் . நண்பன் சீமையில் வக்கீல் பரிட்சை கொடுத்துவிட்டு , இலங்கையில் இருக்கிறான் என்று மட்டும் தெரியும் . பார்த்து வெகு நாளாகிவிட்டது . இருவரும் கை குலுக்கினோம் . ' எங்கு பார்த்தாலும் இந்த வெள்ளைக்காரக் கூட்டம்தானா . என்ன வெறுப்பாக இருக்கிறது !' என்றான் என் நண்பன் . ' ஏன் இப்படி அவர்களை வெறுக்கிறாய் ?' என்றேன் . ' நீதான் பார் . சமுத்திரத்தையே தங்களுக்குப் பட்டா எழுதிவைத்த மாதிரி பார்க்கிறதை ; அதில் என்ன மமதை . என்னமோ பெரிய சண்டைக் கப்பல்கள் இருந்துவிட்டால் பக்கத்தில் இருப்பவன் மனிதன் என்றுகூடத் தெரியாது போல...