Skip to main content

அடிமனம் | அதீத அகம் | பெ. தூரன்


மனத்திலே நனவிலி மனம் என்ற ஒரு பெரும்பகுதி இருக்கிறதென்று பிராய்டு தமது ஆராய்ச்சியின் மூலம் கூறினாரல்லவா? அதிலே இயல்பூக்கங்களும், நிறை வேறாத இச்சைகளும், அடக்கப்பட்ட உந்தல்களும் அழுந்திக் கிடக்கின்றன. இவையெல்லாம் மறைமுகமாகவாவது வெளியே வந்து திருப்தியடைய முயலும்போதுதான் மனக்கோளாறுகள் ஏற்படுகின்றன என்று பிராய்டு முதலில் விளக்கியபோது பொதுவாக அனைவரும் அவரை ஆமோதித்தார்கள். ஆனால் அவர் அந்த அடிமன உந்தல்களின் அடிப்படையான வேகம் பாலியல்பிலிருந்துதான் தோன்றுகிறது என்று கூறத் தொடங்கியதும் அவருக்கு எதிர்ப்பு உண்டாயிற்று.
இந்த இடத்தில் நாம் 'பால்’ என்று எதைக் குறிப்பிடுகிறோம் என்பதை மீண்டும் சற்று விரிவாக ஆராய்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பற்றிய ஒரு புதிய விளக்கத்தையும் இங்கு தெரிந்துகொள்ள வேண்டும்.
ஆண் பெண்ணின் உடல் சம்பந்தமான கலவி வேட்கையைக் காமம் என்ற சொல்லால் குறிப்பிடலாம். அந்தச் சொல்லை வழங்கும்போது அது உடலுறவையே முக்கியமாகக் குறிப்பதாக நாம் இன்று கருதுகிறோம். பிராய்டு கூறுவது இந்தக் காமமாகிய உடலுறவு மட்டுமல்ல. சில சமயங்களிலே பிராய்டு குறிப்பதை ‘அன்பு வாழ்வு' என்று சொல்லுவதுண்டு. ஆனால் 'அன்பு' என்கிற சொல் பொதுப்படையானது. அதைக்கொண்டு பிராய்டின் கருத்தை விளக்க முயல்வதும் பல சமயங்களிலே குழப்பத்தை உண்டாக்கிவிடும். ஆகையால்தான் 'பால்’ என்ற சொல்லைக் கையாள நேர்ந்திருக்கிறது. ஆங்கிலத்திலேயுள்ள செக்ஸ் (Sex) என்ற சொல்லுக்குச் சமமான சொல்லாகப் பால் என்பதைக் கருதலாம். அவ்வாறு கொள்ளும்போது 'பால் வாழ்க்கை' (Sex life), பாலுந்தல் (Sex drive) என்ற தொடர்கள் பிராய்டு கூறுவதை நன்கு விளக்குவனவாக ஏற்படும். எனவே பாலுந்தல் என்பது வெறும் காமம் மட்டும் அல்ல; ஆனால் அது காமத்தையும் அறவே விலக்குவதில்லை. அது அன்பின் அம்சங்களையும் கொண்ட ஒரு வேகம் என்பதாக நாம் அறிய வேண்டும்.
நனவிலி மனம் என்பதை பிராய்டு பிற்காலத்தில் ‘இத்’ என்ற சொல்லால் குறிப்பிடலானார். இந்த இத்திலிருந்து கிளம்பும் வேகத்தை லிபிடோ என்று அவர் விளக்குவதையும் நாம் அறிவோம். லிபிடோவின் சக்தியாக அமைவது 'பாலுந்தல்' என்கிறார் பிராய்டு. இக்கருத்தையும் யுங் போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதில்லையென்பதையும் நாம் முன்பே அறிவோம்.
இத்திலிருந்து அகம் பிறக்கின்றது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றி அதன்மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறது. அகம் என்பது இத்துக்கும் அதீத அகத்துக்கும் இடையிலே அகப்பட்டுக்கொண்டு தடுமாறுகிறது என்றுகூடச் சொல்லலாம். இத்துக்குத் தனது திருப்திதான் பிரதானம். அதற்கு அறநெறியைப் பற்றியெல்லாம் கவலையில்லை. அது மனிதனுக்குள்ளேயிருக்கும் மிருகம். அதீத அகம் என்பதை மனச்சான்று என்று முன்பே கூறினேன். எது ஒழுங்கானது, எது ஒழுங்கற்றது என்று அது தீர்மானிக்கிறது. மனிதனுடைய செயல்களை மட்டுமல்லாமல் அவனுடைய எண்ணங்கள், ஆசைகள், மனோபாவங்கள் முதலியவற்றையும் சரியா தவறா என்று சீர்தூக்கிப் பார்க்கிறது. அகத்திற்கு இரண்டு பக்கத்திலும் தாக்குதல் நேரும். “இத்தின் தூண்டுதலுக்கும், அதீத அகத்தின் குற்றச்சாட்டுக்கும் இடையிலே அகம் தன்னைக் காத்துக்கொள்ள முயல்கிறது” என்று பிராய்டு ‘அகமும் இத்தும்’ என்னும் தமது நூலில் கூறுகிறார்.
அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுவதைப் பற்றி பிராய்டு கூறும் விளக்கந்தான் மிகுந்த பரபரப்பையும் ஆட்சேபங்களையும் உண்டாக்கியது. குழந்தையின் வாழ்வு தொடங்கும்போது குழந்தை தனது இன்பத்தையே நாடும் மனப்பாங்குடையதாக இருக்கிறது. ஆண் குழந்தை தாயிடம் மிகுந்த அன்பும், பெண் குழந்தை தந்தையிடம் மிகுந்த அன்பும் கொள்ளுகின்றன. இந்த அன்பு பாலியல்பு கொண்டது என்பது பிராய்டின் கருத்து. ஆண் குழந்தை தாயிடம் அன்பு செலுத்தும்போது அதற்குப் போட்டியாக இருக்கும் தந்தையிடம் பகைமை உணர்ச்சி கொள்ளுகிறது. தந்தையின் ஸ்தானத்தை அது கைப்பற்ற முயல்கிறது. தந்தையைப்போல நடக்கவும் விரும்புகிறது. இவையெல்லாம் கைகூடாமற்போவதால் தந்தையிடம் வெறுப்புக்கொண்டு அவனை ஒழித்துவிடவும் முயல்கிறதாம். இம்மாதிரியான மனக் கோளாறை பிராய்டு ஈடிப்பஸ் மனக்கோட்டம் (Oedipus Complex) என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.
ஈடிப்பஸ் என்பது ஒருவனுடைய பெயர். அவனைப் பற்றிய சுவையான கதை கிரேக்க நாட்டுப் புராணங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. தீப்ஸ் என்பது பண்டைக்கால கிரீஸ் தேசத்தில் ஒரு நகரம். அதை ஒரு காலத்தில் லேயஸ் என்பவன் ஆண்டுவந்ததாகப் புராணம் கூறுகிறது. லேயஸுக்கும் அவன் மனைவி ஜொக்காஸ்ட்டா என்பவளுக்கும் புத்திரனாக ஈடிப்பஸ் பிறந்தான். ஈடிப்பஸ் தனது தந்தையைக் கொல்வதோடல்லாமல் தாயையே மணப்பான் என்று அவனைப் பற்றித் தெய்வ மொழியாக வாக்குக் கூறினார்கள். அதனால் லேயஸ் அந்தக் குழந்தையை ஓர் அடிமையிடம் கொடுத்து அதைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டான். அந்த அடிமை குழந்தையைக் கொல்லாமல் மலைக்காட்டிலே எறிந்துவிட்டு வந்துவிட்டான். ஈடிப்பஸின் கால்களில் மட்டும் காயம் உண்டாக்கினானாம். ஈடிப்பஸை இடையர்கள் கண்டெடுத்துத் தங்கள் அரசனான பாலிப்பஸ் என்பவனிடம் கொடுத்தார்கள். ஊர், பெயர் தெரியாத அந்தக் குழந்தையை அவன் தன் குழந்தையைப் போலவே வளர்த்து வருகிறான். அதன் கால்களில் ஏற்பட்ட காயத்தால் பாதங்கள் வீங்கியிருந்தமையால் விங்கிய பாதம் என்று பொருள்படக்கூடிய ஈடிப்பஸ் என்ற பெயரால் அக்குழந்தையை அழைக்கலானார்கள். அதுவே அதன் பெயராக அமைந்துவிட்டது. ஈடிப்பஸ் இளைஞனாக வளர்ந்துவந்த காலத்தில் முன்னால் கூறிய வாக்கையே தெய்வ மொழி அவனிடமும் கூறிற்று. அவன் பாலிப்பஸே தனது தந்தையென்று நினைத்து அவனைக் கொல்லாமலிருப்பதற்காக ஊரைவிட்டு வெளியேறினான். வழியிலே அவன் தனது உண்மைத் தந்தையாகிய லேயஸைச் சந்திக்கும்படி ஏற்பட்டது. இருவருக்கும் சண்டையும் மூண்டது. அதிலே ஈடிப்பஸ் தனது தந்தையென்று தெரிந்துகொள்ளாமலேயே அவனைக் கொன்றுவிட்டான். பிறகு ஈடிப்பஸ் தீப்ஸ் நாட்டுக்குச் சென்று அந்த நாட்டுக்கு ஏற்பட்டிருந்த தீமையைப் போக்கி மக்களை மகிழ்வித்தான். அவன் செய்த உதவிக்காக மக்கள் தங்கள் ராணியாகிய ஜொக்காஸ்ட்டாவையே அவனுக்கு மணம்செய்து கொடுத்தார்கள். அதன் பிறகு திடீரென்று தீப்ஸில் கொள்ளை நோய் பரவி மக்களை வாட்டி வதைத்தது. லேயஸைக் கொன்றவன் யாரென்று கண்டுபிடிக்கும் வரையில் அந்த நோய் மக்களை வாட்டும் என்று தெய்வ மொழி கூறிற்று. அந்தக் கொலைகாரனைக் கண்டுபிடிக்க ஈடிப்பஸ் தானே புறப்பட்டான். அப்படி அவன் முயற்சி செய்யும்போது ஒரு தீர்க்கதரிசியின் மூலம் அவனுக்கு உண்மை தெரிந்தது. ஈடிப்பஸ் தன் கண்களையே குத்திக்கொண்டான். கடைசியில் காட்டில் புகுந்து மறைந்துவிட்டான். ஜொக்காஸ்ட்டா தூக்குப்போட்டுக்கொண்டு உயிர் துறந்தாள்.
இவ்வாறு தந்தையைக் கொன்று தாயை மணந்த ஒருவன் பெயரைக் கொண்டு பிராய்டு குழந்தையின் மனக்கோட்டத்திற்கு ஈடிப்பஸ் மனக்கோட்டம் என்று பெயர் வைத்தார். இத்தகைய மனக்கோட்டம் ஏற்படக்கூடிய நிலைமை எல்லோருக்கும் குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிறதென்று பிராய்டு சொல்லுகிறார்.
ஆனால் தந்தையை ஒழித்துவிடக் குழந்தையால் முடியுமா? அதற்குத் தாயும் இடம் கொடுப்பதில்லை; தந்தையும் இடம் கொடுப்பதில்லை. அதனால் குழந்தை தன்னுடைய வெறுப்பைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டியதாகிறது. இதன் விளைவாக “தந்தை போல் ஆக வேண்டும்” என்கிற லட்சியமும், “தந்தையை ஒழித்துவிட்டுத் தாயின் அன்பு முழுவதையும் தானே அடைய முயலக்கூடாது” என்கிற எண்ணமும் உடைய அதீத அகம் தோன்றுகிறது. நாளடைவில் இந்த அதீத அகம், “இதைச் செய், இதைச் செய்யாதே” என்று அகத்திற்கு ஆணையிடத் தொடங்கிவிடுகிறது. அது தந்தையின் ஸ்தானத்தையே எடுத்துக்கொள்ளுவதாகக் கூறலாம். ஆசிரியனுடைய ஸ்தானத்தையும் கொள்ளுவதாகக் கூறலாம். இவ்வாறு அது அற வாழ்க்கைக்குத் தணிக்கை அதிகாரியான மனச்சான்றாகிவிடுகிறது. அதீத அகம் தவறு என்று கண்டிக்கும்போது அகம் பயந்துபோய்த் தனது இச்சைகளை அடக்கிவிடுகிறது. அவ்வாறு அடக்குவதாலேயே பலவகையான மனக்கோளாறுகள் ஏற்படக் காரணமாகின்றது.
நனவிலி மனத்தைப் பற்றி பிராய்டு முதலில் கூறியபோது பலர் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் குழந்தையின் வாழ்க்கையிலும் பாலுந்தல்தான் பெரிய சக்தியாக இருக்கிறதென்றும், ஈடிப்பஸ் மனக்கோட்டம் உண்டாகிறதென்றும் பிராய்டு கூறத் தொடங்கியபோது அவருக்குப் பல எதிர்ப்புக்கள் தோன்றலாயின. முன்பு அவரை ஆமோதித்தவர்களிலும் பலர் அவரைவிட்டு விலகினார்கள்.
அப்படி விலகிய போதிலும் பிராய்டு தமது முயற்சியில் தளர்வடையவில்லை. தமது கருத்துக்களை விளக்கியும், தமது பரிசோதனைகளை விளக்கியும் புதிய புதிய நூல்கள் எழுதிக்கொண்டே இருந்தார்.
முதல் உலக யுத்தம் முடிந்தபிறகு பிராய்டுக்கு மேலும் மேலும் பாராட்டுதல்கள் கிடைத்தன. உலகம் முழுதும் அவரை அறியலாயிற்று. உளப்பகுப்பியல் எல்லாத் துறைகளிலும் இடம்பெற்றது. கல்வி, இலக்கியம், ஒவியம், நாடகம் இவற்றிலெல்லாம் இதைப் புகுத்தினார்கள். புதிய கலை இயக்கமே இதன் அடிப்படையில் வளரத் தொடங்கியது.
பிராய்டு ஒரு பெரிய மேதை. அவருடைய ஆராய்ச்சி முடிவுகள் மனத்தைப் பற்றிய கருத்துக்களில் ஒரு புதிய சகாப்தத்தையே உண்டாக்கிவிட்டன.

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம் இந்தப் பகுதியில் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் , சிறப்பாகத் தமிழ்ச் சிறுகதை பற்றியும் புதுமைப்பித்தன் சொல்லிப் போயிருக்கிற சில விஷயங்களைப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவர் படைப்புகளில் ஆட்சி செலுத்திய கொள்கைகள் , சித்தாந்தங்கள் முதலியவற்றையும் , அவருக்கிருந்த இலக்கிய நோக்கம் , வாழ்க்கை லட்சியங்கள் இவற்றையும் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள இது உபயோகமாக இருக்கும். இலக்கியம் என்றால் என்ன என்கிற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்கிற மாதிரி தன் கட்டுரைத் தொகுப்பிற்கு அவர் முன்னுரை எழுதுகிறபோது சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். ‘வாழ்வு , வாழ்க்கை என்று இரண்டு பதங்கள் உண்டு. இவற்றிடையே உள்ள தொடர்பையோ தொடர்பற்ற தன்மையையோ விளக்குவது , மனித சிந்தனையின் சாரம். வாழ்வு எனில் தோற்றம் , ஸ்திதி , மறைவு என முக்கூறாகத் தோன்றும் பிரபஞ்சத்தன்மை. வாழ்க்கை என்பது தனிப்பட்ட ஜீவராசியின் உயிர்ப் பாசத்தினால் நிகழும் அவஸ்தை. இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவது மனித சிந்தனையின் சாரம். அது தத்துவமாக உருவாகிறது. வாழ்வின் நியதி ஒன்று , சூத்திரம் ஒன்று என்று வற்பு