Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | மனவசியம் | பெ. தூரன்

ஸ்திரியா நாட்டின் தலைநகராகிய வியன்னா நகரத்தில் மெஸ்மர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது ஓர் அதிசயம் நடந்தது. அவர் நோயாளியை உறக்கத்தில் ஆழ்ந்து போகும்படி செய்துவிட்டார். இதைவிட அதிசயமென்னவென்றால் அந்த உறக்கநிலையிலேயே நோயாளி தமக்கு மருத்துவர் இட்ட கட்டளைகளையெல்லாம் செய்தார்! உறக்கநிலையிலேயே பேசவும் செய்தார்!
டாக்டர் மெஸ்மர் வேறு சில நோயாளிகளையும் இவ்வாறு உறக்கநிலையில் ஆழ்த்த முயன்றார். அவருக்கு வெற்றியே கிடைத்தது. இவ்வாறு உறங்கச் செய்து அந்த உறக்கநிலையிலேயே உடல் நலத்திற்காக நோயாளிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறாரோ அவற்றை விழித்த பிறகும் நோயாளிகள் மிக அக்கறையோடு செய்தார்கள். விழித்து எழுந்த உடனேயே நோயாளிகள் தங்களுக்குப் பெரிதும் நன்மை ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தார்கள். டாக்டர் மெஸ்மர் தம் கைவிரல் நுனிகளின் மூலம் ஏதோ ஒருவகையான காந்த திரவம் போன்ற சக்தி செல்லுவதாகவும் அதனாலேயே நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைப்பதாகவும் நம்பினார். இந்த மனவசியமானது மெஸ்மரிசம் என்று அவர் பெயராலேயே வழங்கலாயிற்று.
அடுத்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் இந்த மெஸ்மரிச முறையைப் பற்றி ஐரோப்பிய நாடுகளில் மிக விரிவான ஆராய்ச்சிகள் நடந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையில் பிரிட்டனில் மான்செஸ்டரில் ஜேம்ஸ் பிரெய்டு என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் மெஸ்மரிசத்தைப் பற்றி ஆராய்ந்து டாக்டர் மெஸ்மர் கூறியபடி மனவசியம் செய்பவரிடமிருந்து காந்த சக்தி ஒன்றும் பாய்வதில்லை என்பதை நிரூபித்தார். மன ஆற்றல் மிகுந்த யாரும் வேறொரு வரை உறக்கம் போன்ற ஒரு நிலையில் ஆழ்த்த முடியும் என்றும் அந்த நிலையிலேயே ஏவியவாறு செய்யும்படி தூண்டவும் முடியுமென்றும் அவர் காட்டினர். மனவசியம் செய்து அதன் மூலம் நல்ல பயன்களை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்துகொண்டால் மனவசியம் செய்வோருடன் மனவசியம் செய்யப்படுபவரும் ஒத்துழைப்பார். இந்த ஒத்துழைப்பு மிகவும் தேவையாகும். மனவசியம் செய்பவருடன் வைத்துள்ள நம்பிக்கையே வசியப்படுத்துவதற்கு அடிப்படையாகும். முழு ஒத்துழைப்புக் கிடைக்காதபோது வசியப்படுத்துவது பெரும்பாலும் இயலாது.
வசியமடைய வேண்டியவரை எளிதில் உறங்குமாறு செய்ய அதற்கேற்ற அமைதியான சூழ்நிலையை அமைத்து வசியம் செய்பவர் தம்மையோ அல்லது ஏதேனும் ஒரு பளபளப்பான பொருளையோ இமைகொட்டாமல் பார்க்கும்படி செய்வது உறக்கநிலை ஏற்படுவதற்கு முதற்படியாகும். பிறகு முகத்தையும், மார்பையும் மெதுவாக வருடிவிட்டுக்கொண்டே, “உறங்கு; நீ இதோ உறங்கப்போகிறாய். உறங்கப்போகிறாய். உறங்கியாகிவிட்டது” என்று கூறுவது இரண்டாவது படி. இவற்றின் பயனாக வசியம் செய்யப்படுபவர் உறங்கிவிடுவார். மீண்டும் விழித்துக்கொள் என்று கூறும் வரையில் இந்த உறக்கநிலை நீடித்திருக்கும். இந்த நிலையிலே மனவசியம் செய்பவர் கட்டளையிட்டவாறெல்லாம் வசியம் செய்யப்படுபவர் செய்வார்; ஆனால் அவரை எது வேண்டுமானலும் செய்யும்படி தூண்ட இயலாது. வசியம் செய்யப்படுபவருக்கு விருப்பமில்லாத செயலைச் செய்யும்படி அவரை ஏவ முடியாது. அவருடைய கொள்கைகளுக்கும், ஒழுக்கத்திற்கும் மாறுபட்ட எதையும் வசிய நிலையில்கூடச் செய்ய அவர் உடன்படமாட்டார். ஒருவர் புலால் உண்பதை வெறுப்பவராக இருக்கலாம். அவரைப் புலால் உண்ணும்படி வசிய நிலையிலேகூடச் செய்ய முடியாது. ஆனால் புலால் உணவை இரகசியமாகச் சாப்பிடுபவர் புலாலை உண்ணுமாறு கட்டளை இடப்பட்டால் அவர் அதைச் செய்வார். கொள்கைக்கு மாறான கட்டளை இடப்பட்டால் மனவசியம் உறக்கம் கலைந்துபோகும்.
மனவசியத்திற்கு இப்பொழுது மெஸ்மரிசம் என்ற பெயரைவிட ஹிப்னாட்டிசம் என்ற பெயர்தான் அதிகமாக வழங்குகிறது. ஹிப்னாஸ் என்ற கிரேக்கச் சொல்லிற்கு உறக்கம் என்பது பொருள். அந்தச் சொல்லைக் கொண்டு இம்முறைக்கு ஹிப்னாட்டிசம் என்ற பெயரை டாக்டர் பிரெய்டு கொடுத்தார்.
இந்த மனவசிய நிலையைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். மனம் என்பதில் நனவு மனம், நனவிலி மனம் என்பதாக இரண்டு பகுதிகள் இருப்பதை நாம் முன்பே அறிவோம். நனவு மனத்தைவிட நனவிலி மனம்தான் பெரிதும் ஆற்றல் கொண்டது என்பதையும் நாம் அறிவோம். விழித்திருக்கும் நிலையில் நாம் நனவு மனத்தையே பெரிதும் பயன்படுத்துகிறோம். ஆனால் நனவிலி மனத்தை நல்ல வழிகளிலே செல்லும்படி செய்து அதையும் பயன்படுத்த முடியுமானால் மிகுதியான நன்மை கிடைக்கும்.
நனவு மனம் எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை வாய்ந்தது. ஆனால் நனவிலி மனம் நாம் விழித்திருக்கும்போது வேலை செய்யாமல் இருப்பதோடு, அதற்குச் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மையும் இல்லை. அதன் ஆதிக்கம் ஓங்காதபடி நனவு மனமே தடுத்து வைத்திருக்கிறதென்பதை நாம் முன்பே தெரிந்துகொண்டிருக்கிறோம். அதனால் ஏதாவது ஒரு கருத்தை ஒருவருக்குக் கூறினால் அவருடைய நனவு மனம் காவற்காரன்போலத் தடையாக நிற்பதனால் அந்தக் கருத்து நனவிலி மனத்திற்கு எளிதில் செல்ல இயலாது. ஆனால் மனவசிய நிலையில் இருக்கும் பொழுது இந்த நிலைமை முற்றிலும் மாறிவிடுகிறது. மனவசிய உறக்கநிலையில் நனவு மனத்தின் ஆதிக்கம் குறைந்துவிடுகிறது. நனவிலி மனம் ஓங்கியெழுந்து மனவசியக்காரரோடு ஒத்துழைக்கத் தொடங்கிவிடுகிறது. ஆதலால் அந்த நிலையில் மனவசியம் செய்பவர் கூறுகின்ற கட்டளைகள் நனவிலி மனத்தை நேராக அடைய முடிகிறது. அதனால் மனவசியம் செய்யப்பட்டவர் மனவசியம் செய்வோருக்குப் பணிந்து அவர் சொல்கின்றபடி செய்கின்றார்.
மனவசிய உறக்கம் என்பதை நாம் உறக்கநிலையில் இருப்பதைப்போன்ற உறக்கமென்று எண்ணி விடக்கூடாது. அது உறக்கமுமில்லை; நினைவிழந்த தன்மையுமன்று. அது பொதுவாக உறக்கம் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் ஏற்படும் ஒரு நிலைமையைப் போன்றதேயாகும். மனவசிய உறக்கநிலையில் மனவசியம் செய்பவர் ஆணையிட்டால் நடக்கலாம்; பேசலாம்; விழிப்பு நிலையிலே இருப்பதைப் போலவே வேறு செயல்களையும் செய்யலாம். மனவசிய நிலையிலே ஒருவனுடைய பொறிகளின் ஆற்றல்களைக் குறைக்கவும் கூடும்; கூர்மைப்படுத்தவும் கூடும். அந்த நிலையிலே அவர் உடலில் ஏற்பட்டுள்ள மிகுந்த வலியையும் அவர் உணரமாட்டார். கசப்பான பண்டத்தை மிகவும் இனிப்பானதென்று கூறிக் கொடுத்தால் அப்பண்டம் இனிப்பதாகவே எண்ணி அவர் சுவைத்து உண்பார். அருவருக்கத்தக்க கெட்ட நாற்றத்தையும் நறுமணம் என்று கூறி முகரச் சொன்னால் அவ்வாறே முகர்ந்து மகிழ்வார்.
மனவசியத்தால் நமது ஐம்புலன்களின் கூர்மையை மிகுதிப்படுத்தலாம். இதற்கும் ஒரு எல்லை உண்டென்றாலும் நோயைக் குணப்படுத்தவும், தவறான எண்ணங்களை நீக்கவும் இது கையாளப்படுவதுண்டு. மனவசிய நிலையில் நோய் குணமாகிவிட்டது என்ற கருத்தைக் கொடுப்பதன் மூலம் நோயைக் குணமாக்கலாம். ஆயினும் நோய்களைக் குணப்படுத்த இதை யாரும் இன்று பெரிதும் பயன்படுத்துவதில்லை. நோய்க்கு அடிப்படையான காரணத்தைக் கண்டுபிடித்து அந்நோயைக் களைய முயல்வதே விஞ்ஞான முறைச் சிகிச்சையாகுமென்பது இன்றைய கருத்தாகும். நரம்புக் கோளாறுகளையும், உறக்கமின்மையையும், திக்கிப் பேசுதலையும் நகத்தைக் கடித்துக்கொண்டே இருத்தலையும், இன்னும் இவை போன்ற பலவற்றையும் குணப்படுத்துதற்கு மேல்நாடுகளில் இம்முறை பயன்பட்டு வருகிறது.
எமிலி கூவே என்னும் பிரான்சு நாட்டு உளவியலார், "ஒருவன் தன்னைத்தானே வசியம் செய்து கொண்டு நோயையும், உள்ளச் சோர்வையும் நீக்கிக் கொள்ளலாம்" என்று காட்டியுள்ளார். இவ்வாறு தனக்குத்தானே கருத்தேற்றிக்கொள்ளப் பழகிக்கொண்டால் அதனால் சிறந்த நன்மைகள் விளையும் என்பது அவருடைய எண்ணமாகும்.
மன வசியம் புதிதான முறையல்ல. நமது நாட்டில் யோகிகள் இதைக் கையாளுகிறார்கள். பாரசீக ஞானிகளுக்கும் மற்றவர்களுக்கும் இது தெரிந்திருந்தது.
இக்காலத்தில் விளம்பரம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள் மக்களின் மனத்தை வசியப்படுத்தக் கூடிய அழகிய படங்களோடு ஒரு பொருளை விளம்பரம் செய்து தங்கள் வாணிகத்தைப் பெருக்கிக்கொள்கிறார்கள். பதவியிலிருப்பவர்கள் தங்கள் அதிகாரக் கட்டளைகளால் பிறரைப் பணிந்து நடக்குமாறு செய்துவிடுகிறார்கள். இவை போன்ற பலவும் மனவசியத்தின் பல கிளைகளாகும்.
உளவியல் உண்மைகளை அறிந்துகொள்வதற்கும் மனவசியம் பயன்படுகிறது. மனவசிய உறக்கத்தின் போது நினைவு ஆற்றல் மிகுந்திருப்பதாலும் நனவிலி உளத்தின் ஆதிக்கம் ஓங்குவதாலும் அதிலே அழுந்தியிருக்கும் எண்ணங்களையும், இச்சைகளையும் அறிந்து கொள்வதற்கு இது ஒரு வழியாகப் பயன்படுகிறது.
இந்த வழியில் ஒருசில குறைபாடுகள் உண்டு. ஆனால் அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டுவதில்லை. மனவசியம் என்பது மனத்தின் ஆழத்தில் புதையுண்டு கிடக்கும் இச்சைகளை அறிந்துகொள்ள உதவும் என்பதை அறிந்துகொள்வதே இங்கு முக்கியமாகும்.

Comments

Most Popular

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...