Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | ஓட்டம் முன்னதா, அச்சம் முன்னதா? | பெ. தூரன்

ள்ளக் கிளர்ச்சிகள் எத்தனை என்பது பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னலெல்லாம் பெரிய பெரிய பட்டியல்கள் வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு கிளர்ச்சியின் தன்மையென்ன, அதனோடு தொடர்புள்ள இயல்பூக்கம் என்ன, அது பிறப்பிலிருந்தே உண்டானதா அல்லது சூழ்நிலையால் தோன்றியதா என்று இப்படியெல்லாம் ஆராய்ச்சிகள் நடைபெறும்.
நடத்தைக் கொள்கை உளவியலைத் தோற்றுவித்த வாட்ஸன் என்பவர் பச்சைக் குழந்தைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனாக மனிதனுக்கு அச்சம், இனம், அன்பு என்ற மூன்று உள்ளக் கிளர்ச்சிகள்தான் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினார். இவர் கூறியதைப் பொதுவாக எல்லாரும் ஆமோதித்தார்கள்.
ஆனால் அண்மையிலே சில உளவியலறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக மேலே கூறியவாறு குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் இருக்கின்றனவா என்பதில் ஐயம் தோன்றியிருக்கிறது.
குழந்தைப் பருவத்திலேயே உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சிகளை உளவியல் அறிஞர்களுக்கு விட்டுவிடலாம்.
உள்ளக் கிளர்ச்சியைப் பற்றி இன்னும் ஒரு வேடிக்கையான விவாதம் உண்டு. உள்ளக் கிளர்ச்சி முதலில் தோன்றி அதன் விளைவாகச் செயல் நடைபெறுகிறதா அல்லது செயல் நடைபெற்று அதன் விளைவாக உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறதா என் பதிலே பெரிய விவாதம் ஏற்பட்டுவிட்டது.
மனத்திலே துயரம் உண்டாகிறது; அதனால் ஒருவன் அழுகிறான் என்று நாம் சொல்லுகிறோம். அதுதான் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞரும், கார்ல் லாங் என்ற உடலியல் வல்லுநரும் நமது நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான ஒரு கருத்தைப் புதிதாக வெளியிட்டார்கள். “முதலில் மனிதன் அழுகிறான்; பிறகுதான் துயரம் என்ற உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறது” என்று அவர்கள் கூறினார்கள். அதாவது உடலிலே மாறுதல்கள் ஏற்பட்ட பிறகே அவற்றிற்கேற்ற உள்ளக் கிளர்ச்சிகள் எழுகின்றன என்று அவர்கள் வாதித்தார்கள்.
இந்தக் கொள்கை உண்மையென்றும் உண்மையன்று என்றும் நிலைநாட்ட எத்தனையோ சோதனைகள் நடந்திருக்கின்றன. “நீ முதலில் ஒட்டம் பிடிக்கிறாய்; பிறகுதான் அச்சம் தோன்றுகிறது" என்று கூறினால் சிரிக்கத்தான் தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக இக்கொள்கையை ஒதுக்கித்தள்ளிவிட இதுவரையிலும் முடியவில்லை.
ஷெரிங்டன், கானன் என்ற இருவர் தாங்கள் செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கை தவறானது என்று காட்ட சில ஆண்டுகளுக்கு முன்னே முயன்றார்கள். ஆனால் இவர்களுடைய ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கையை முடிவாக மறுக்க முடியாது என்று ஆங்கெல் என்ற மற்றொரு அறிஞர் தக்க காரணங்களுடன் விளக்கியிருக்கிறார்.
இந்த விவாதத்தின் முடிவு எப்படியானலும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றிப் பொதுவாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அது பெரிதும் மாற்றிவிடாது.
நமது உடம்பின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான சுரப்பிகள் (Glands) இருக்கின்றன. வாயில் உமிழ்நீர் சுரப்பது ஒருவகைச் சுரப்பியால் தான். வளர்ச்சிக்கு உதவ ஒருவகைச் சுரப்பி இருக்கிறது. இப்படிப் பல சுரப்பிகள் இருந்து பல வேலைகளைச் செய்கின்றன.
சுரப்பிகளிலே நாளமில்லாத சுரப்பிகள் சில உண்டு. அவை தம்மிடத்துச் சுரக்கும் சுரப்புப் பொருளை நேராக இரத்தத்தில் கலக்கும்படி செய்கின்றன. அவைகள் உள்ளக் கிளர்ச்சிகளால் உடம்பிலும் செயலிலும் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக இருக்கின்றனவென்று கண்டிருக்கிறார்கள். ஆட்ரீனல் என்ற சுரப்பி சிறுநீர்ப் பைக்கு மேலே இருக்கிறது. வலி, அச்சம், சினம் ஆகிய கிளர்ச்சிகளால் அந்தச் சுரப்பி பாதிக்கப்படுகிறது என்றும் செயற்கை முறையிலே அச்சுரப்பி நீரை ஒருவனுடைய இரத்தத்தில் சேரும்படி செய்தால் அச்சத்தால் ஏற்படும் உடல் மாறுபாடுகளெல்லாம் உண்டாகிறதென்றும் கானன் என்பார் ஆராய்ந்து கண்டிருக்கிறார். இவ்வாறே மற்றச் சுரப்பிகளின் தன்மைகளையும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்.
சுரப்பிகள் அல்லது மற்ற உடல் உறுப்புகளின் செய்கைகளால் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுவதானாலும் அல்லது உள்ளக் கிளர்ச்சிகளால் உறுப்புகளின் செய்கைகள் மாறுபாடடைவதானாலும் மனிதனுடைய வாழ்க்கையிலே ஏற்படும் விளைவு ஒன்றுதான். இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளுக்கு ஆட்பட்ட மனிதன் வீழ்ச்சியடைகிறான். அவற்றிற்கு ஆட்படாமல் அவற்றை உயர்மடைமாற்றம் செய்துகொண்டவன் உயர்வடைகிறான். இந்த உண்மையைத்தான் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அறிவு, பகுத்தறிவு என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஆனால் உள்ளக் கிளர்ச்சிகளே ஒருவனுடைய செயல்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. நல்ல பழக்கங்களையும், பற்றுதல்களையும், குறிக்கோள்களையும் உண்டாக்கிக் கொள்வதாலும், மனத்திட்பத்தாலும் ஒருவன் தனது உள்ளக் கிளர்ச்சிகளை நல்வழிப்படுத்திக்கொள்ள முடியுமானால் அவன் மேம்பாடடையலாம். மனச்சான்றும் அறிவும் இம்முயற்சியிலே அவனுக்குத் துணையாக நிற்க வேண்டும்.

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

இலக்கிய விமரிசனம் - சில சிந்தனைகள் | க. நா. சுப்ரமண்யம்

எனக்கு இலக்கிய விமரிசனம் செய்வதிலே அவ்வளவாக நம்பிக்கை கிடையாது . இலக்கியத் துறைகளிலே சிலருக்குச் சில துறைகளில்தான் ஈடுபாடிருக்க முடியும் . எனக்குச் சிறுகதை , நாடகம் , நாவல் , கதை என்கிற துறைகளிலே ஈடுபாடு உண்டு . விமரிசனம் , கட்டுரை போன்ற துறைகளில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாதுதான் . எனினும் ஒரு இருபத்தைந்து வருஷங்களாகவே நான் இலக்கிய விமரிசனம் செய்துகொண்டு வரவேண்டியதாக இருந்திருக்கிறது . இஷ்டமில்லாமலேதான் நான் இலக்கிய விமரிசனம் செய்து கொண்டு வருகிறேன் - தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தினால் . சில சமயம் நான் ஆழந்தெரியாமல் காலை விட்டுவிடுவதும் உண்டு - ஆனால் நான் சொல்வதெல்லாவற்றையும் என்னளவில் உண்மையென்று நம்பித்தான் சொல்கிறேன் . என்னளவில் உண்மைதான் . அதனால் உங்களுக்கும் உண்மையாகத்தானே இருக்கவேண்டும் ? இலக்கிய விமரிசனத்தின் அவசியத்தைப்பற்றிப் பலரும் சொல்லிவிட்டார்கள் . அவசியம் என்று ஏற்றுக்கொள்ளுபவர்களும்கூட இன்று தமிழில் இலக்கியம் சரியானபடி வளர்ச்சியடையாத தோஷத்தினால் இலக்கிய விமரிசனத்துக்கு அவ்வளவாக அவசியமில்லை ...