![]() |
| சி. சு. செல்லப்பா |
‘எழுத்து’ இதழ்களை மின்னூலாக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டானதற்கு விமலாதித்த
மாமல்லன் அவர்கள் முதல் காரணம். அவர் ‘கசடதபற’, ‘கவனம்’, ‘ழ’, ‘மீட்சி’ ஆகிய
சிறுபத்திரிகைகளை மின்னூலாக்கி வெளியிட்டிருக்கிறார். அவரது முயற்சியைக் கவனித்து
வந்ததால் சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ்களை நாம் மின்னூலாக்கலாம் என்ற
எண்ணம் உண்டானது. நண்பர் சு. அருண் பிரசாத் மூலம் சி. சு. செல்லப்பாவின் புதல்வர்
சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொண்டு அனுமதி கோரினேன்; மகிழ்ச்சியுடன் இசைந்தார்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் சி. சு. செல்லப்பா பிறந்தநாளில் முதல் இதழ்
பதிவேற்றப்பட்டது. அதிலிருந்து நான்கு வருடங்களாக ‘எழுத்து’ இதழ்கள் சிறுகச்சிறுகப்
பதிவேற்றப்பட்டுள்ளன.
*
இந்தப் பணி நிறைவேற உதவிய பலருக்கு நன்றி சொல்லவேண்டும். ‘எழுத்து’ இதழ்களை
மின்னூலாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்று
ஊக்கப்படுத்தியவர் திரு. சுப்ரமணியன் அவர்கள். அவர் வைத்த நம்பிக்கைக்கும்
ஆதரவுக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளத்தில் ‘எழுத்து’ பத்திரிகையின் சுமார் 70 இதழ்கள் ஏற்கெனவே பதிவேற்றப்பட்டிருந்தன.
அவை இப்பணியில் பயன்பட்டன. முதல் 24 இதழ்களும் இடையிடையே சில இதழ்களும்
தேவைப்பட்டன. அவற்றைத் தந்து உதவிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துக்கும்
பிரெஞ்சு நிறுவன நூலகத்துக்கும் மனமார்ந்த நன்றி.
நண்பர் சு. அருண் பிரசாத் திரு. சுப்ரமணியன் அவர்களைத் தொடர்புகொள்ள
உதவியதுடன் ‘எழுத்து’ இதழ்கள் மின்னூலாக வெளிவருவது குறித்து ‘எழுந்து வரும்
எழுத்து’ (ஆனந்த விகடன், 13.10.2021) என்ற கட்டுரையையும் எழுதினார். நண்பர்
ராம்பிரசாத் ஹரிஹரன் ‘எழுத்து’ இதழ்கள் ஒவ்வொன்றையும் ‘அழியாச்சுடர்கள்’
பக்கத்தில் பகிர்ந்து அதிக கவனிப்பைப் பெற உதவினார். இவர்களுக்கும் நன்றி.
*
‘எழுத்து’ பத்திரிகையின் மின்னூலாக்கம் நிகழ்ந்ததால் துணை வினைகள் பலவும்
நடந்தேறின. ந. சிதம்பர சுப்ரமண்யன் ‘எழுத்து’ இதழில் எழுதிய ‘விண்ணும் மண்ணும்’
என்ற தொடர் நூலாக்கம் பெற்றது. க.நா.சு. எழுதிய ‘சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்’
தொடரும் நூலாகத் தொகுக்கப்பட்டது. ‘எழுத்து’ இதழில் சி.சு.செ. அளித்த சிறிய
குறிப்பின் மூலமாகவே க.நா.சு. ‘கல்கி’ இதழில் எழுதிய ‘உலகத்துச் சிறந்த
நாவலாசிரியர்கள்’ என்ற தொடர் நூலாக வெளியாகியுள்ளது. ‘எழுத்து’ இதழில் வெளியான
‘வெற்றியின் பண்பு’ என்ற கதை ‘பராங்குசம் கதைகள்’ தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
‘உண்மைதேடியின் அநுபவ இலக்கிய வடிவங்கள்’ என்ற கட்டுரை ‘தி. ஜானகிராமன் கட்டுரைகள்’
தொகுப்பில் இடம்பெற்றது. இதுபோல இன்னும் வெளிவர இருக்கும் சில நூல்களுக்கும்
‘எழுத்து’ இதழ்களின் மின்னூலாக்கம் பயன்பட்டுள்ளது.
‘கல்கி’, ‘சரஸ்வதி’, ‘தீபம்’, ‘தாமரை’, ‘நடை’, ‘The Quest’, ‘Thought’, ‘Poetry India’, ‘The Sunday Standard’ போன்ற பிற பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளை ‘எழுத்து’ விவாதத்துக்கு
எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த இலக்கியச் சர்ச்சைகள் அந்தக்காலத்து மற்ற
இதழ்களையும் பார்வையிடத் தூண்டி, புதிய தேடல்களுக்கு வழிவகுத்திருக்கின்றன.
குறிப்பாக, ‘தீபம்’ வெளியிட்ட சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து அனுபவங்கள்’, ‘நமது
இலக்கியத் தேட்டம்’ என்ற இரு தொடர்களும் முக்கியமானவை. அவை நூலாக்கம் பெறவேண்டும்.
‘எழுத்து’ 11 ஆண்டுகளில் 119 இதழ்களைக் கண்டது. 34-35, 66-67, 92-93, 101-102,
103-104, 105-106, 107-108 ஆகியவை இரட்டை இதழ்கள். மொத்தமாக சுமார் 2600 பக்கங்கள்
வருகின்றன. அச்சில் 5000 பக்கங்கள் வரக்கூடும். ஆய்வாளர்களின் தேடலுக்கு உதவும்
வகையில் ‘எழுத்து’ முழுத்தொகுப்பாகவும் விரைவில் பதிவேற்றப்படும். குறிப்பிட்ட
எழுத்தாளரின் படைப்புகளை மட்டும் தேடியெடுக்க உதவும் வகையில் பொருளடைவும்
தயாரித்து வெளியிடப்படும்.
இந்தப் பணியை முடிக்க நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்ட குறை மட்டும் என்னைச்
சேர்ந்தது. இக்குறையை மறந்துவிட்டால் உள்ளிய வினை முடித்த இனிமை மிகுதிதான்.
இதுவரை உடன்வந்த அனைவருக்கும் நன்றி.
- ஶ்ரீநிவாச கோபாலன்
(சி. சு. செல்லப்பா ‘எழுத்து’ காலத்துக்குப் பிறகும் ‘பார்வை’, ‘சுவை’ என்ற
சிற்றிதழ்களையும் சிறுது காலம் நடத்தியிருக்கிறார். அந்த இதழ்களை கைவசம்
வைத்திருப்பவர்கள் உதவினால், அவற்றையும் மின்னூலாக பதிவேற்றலாம்.)
*
எழுத்து 119 இதழ்களையும் இங்கே பெறலாம்

Comments
Post a Comment