Skip to main content

புதுமையும் பித்தமும் - 5 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 4 | க. நா. சுப்ரமண்யம் 

புதுமைப்பித்தனின் சிறுகதைகளில் காணப்படுகிற சிறப்பான இலக்கிய அம்சங்கள் என்னென்ன என்று கேட்டால் எல்லோரும் ஒரே மாதிரியான பதிலைச் சொல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு. ‘ஹியர் ஈஸ் காட்ஸ் பிளண்டி டூ சூஸ் ஃப்ரம்என்று ஷேக்ஸ்பியர் பற்றியும், ஹோமர் பற்றியும், டாண்டே பற்றியும், டால்ஸ்டாஸ் பற்றியும், மகாபாரதம் பற்றியும் சொல்லுவது போல புதுமைப்பித்தனைப் பற்றியும் சொல்ல முடிகிறது என்பது ஒரு தனிப்பட்ட விசேஷம். புதுமைப்பித்தன் எழுதத் தொடங்குவதற்கு ஒரு மாமாங்கத்திற்கு முன் இறந்துவிட்ட - அவரே போல அல்பாயுசில் இறந்துவிட்ட - சுப்ரமண்ய பாரதியாரிலும் ‘ஹியர் ஈஸ் காட்ஸ் பிளண்டிஎன்று சொல்ல இடம் இருக்கிறது என்று கவனிக்கிறோம். பாரதியாரில் மேலெழுந்தவாரியான சமுதாய அரசியல் சுதந்திர நிலைகள் தெரிகின்றன என்றால் புதுமைப்பித்தனில் இந்த ‘காட்ஸ் பிளண்டி’ சிருஷ்டிகர்த்தாவினால் உருமாற்றி அழகேற்றப்பட்டு ஆழமான தளத்தை மனித மனத்தின் ஆழத்தில் போய்க் கவ்விப் பிடிக்கின்றது என்று சொல்லவேண்டும். இருவரும் சிருஷ்டிகர்த்தாக்களாக இருந்தது மட்டுமன்றி சக்தி வாய்ந்த பத்திரிகைக்காரர்களாகவும் உருவெடுக்க சமுதாயத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதும் தெரிகிறது.

நல்ல இலக்கிய சிருஷ்டிகர்த்தா என்று சொல்லக்கூடிய அளவில் உலகில் எந்த மொழியில் எழுதியிருந்தாலும் ஒருசில அடிப்படையான அம்சங்கள் அவர்களிடம் தெளிவாக, ஆணித்தரமான அளவில் காணமுடிகிறது. அந்த மாதிரி அடிப்படையான அம்சம் என்று, ‘வாக்கினிலே உண்மையொளி’ என்று பாரதியார் தெளிந்து சொன்னதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த உண்மையொளி புதுமைப்பித்தன் படைப்புகள் எல்லாவற்றிலும், முக்கியமாக, அவர் சிறுகதைகளிலும், கவிதைகளிலும் வியாபித்து நிற்பது நன்றாகவே தெரிகிறது. வாழ்க்கையில், தினசரி நடைமுறையில், வெற்றி அவ்வளவாகப் பெறாதவர்தான். பொருளாதார ரீதியில் பிற்பட்டவர்தான். ஒரு மேதையின் குழந்தைத்தனத்துடன் பொறுப்பு எதுவும் இல்லாதது போல நடந்துகொள்ளக்கூடியவர்தான் - பேசக்கூடியவர்தான். எனினும், சிறுகதை, கவிதை என்று அவர் எழுத முன்வரும்போது அவர் எழுதுகிற ஒவ்வொரு வாக்கியத்திலும் ‘உண்மையொளிஎன்று வாசிப்பவன் தெரிந்துகொள்ளக்கூடிய அளவில் பிரகாசிப்பதைக் காண்கிறோம். மற்ற எல்லா அம்சங்களையும்விட புதுமைப்பித்தனில், கதைக்குப் பின் கதையில், கவிதைக்குப் பின் கவிதையில் உண்மையொளியைக் காணமுடிகிறது. இந்த உண்மையொளி என்று சொல்லக்கூடியது எல்லாச் சிருஷ்டிகர்த்தாக்களுக்கும் பொதுவானதுதான் என்றாலும் புதுமைப்பித்தனில் அவர் முத்திரையுடன் விசேஷமாகச் செயல்படுகிறது என்பதைக் காண்கிறோம்.

கலைக்கெல்லாம் பொதுவாகச் சொல்லவேண்டிய இரண்டாவது அம்சம் மனத்தில் பொறி தட்டி ஏதோ ஒரு தீபத்தை ஏற்றி வைக்கிற சக்தி, ஒரு அறிவார்த்தமான சிந்தனை இருப்பதும். அது ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விஷயம். இன்றுபோல புதுமைப்பித்தன் காலத்தில் (1930 - 1945 காலகட்டத்தில்) சிந்திக்கத் தெரிந்தவர்கள் அவ்வளவாக அருகிவிடவில்லை. தமிழ்நாட்டில் இன்று சிந்தனா சக்தி மிகவும் குறைவான அளவில் இருக்கிறது என்றாலும், சமுதாயம் உருப்பெற சரியானபடி செயல்பட, சிந்தனா சக்தி தேவையாக இருக்கிறது. அன்று இருந்த அளவு இன்று சிந்திக்கிறவர்கள் இல்லை. ஆனால், சிந்திக்க மறுப்பவர்களையும் சிந்திக்க வைக்கிற காரியத்தை அன்றும் புதுமைப்பித்தன் செய்தார்; இன்றும் புதுமைப்பித்தன் எழுத்துக்கள் செய்கின்றன. ஒரு தனிப்பட்ட மனிதனின், ஒரு இலக்கியக் கர்த்தாவின் சிந்தனை வேகத்தையும், அது செயல்படுவதையும் நாம் புதுமைப்பித்தன் கதைகளில் சுலபமாகவே பார்க்க முடிகிறது. சமுதாயச் சிந்தனை, அரசியல் சிந்தனை, முற்போக்குச் சிந்தனை, சனாதனச் சிந்தனை, விஞ்ஞானச் சிந்தனை, மெய்ஞ்ஞானச் சிந்தனை என்று குறுக்கி, சுருக்கித் தனிப்படுத்தப்பட்ட முறையில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லாத வகையில், எல்லாமே புதுமைப்பித்தன் படைப்புகளில் காணக் கிடைக்கிறது என்பது அவரைப் படிப்பவர்களுக்கு நிதர்சனமாகத் தெரிகிறது. நீங்கள் பிரித்துத் தரம் கண்டு சொல்லக்கூடிய எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர் அவர். மற்ற நல்ல சிருஷ்டிகர்த்தாக்களைப்போல, பாரதியாரைப்போல, ஒரு கட்சியிலும் புதுமைப்பித்தன் அடங்கிவிடாதவர்.

இன்னொரு விசேஷம். ‘மணிக்கொடி’ கோஷ்டியினர் என்று சொல்லப்படுகிறவர்கள் அந்தக் காலத்து எழுத்தாளர்கள் சிலரேனும் சிந்தனைச் சுதந்திரத்தைப் பெருமளவிற்குப் படைத்திருந்தார்கள். அதைப்பற்றி அவர்கள் அதிகமாகப் பேசவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இந்தக் காலத்தில் சுதந்திரம் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது; சுதந்திரமும் சுதந்திரமாகச் செயல்படுவதில்லை. சிந்தனைச் சுதந்திரத்தைப் பாரதியாரில் கண்ட அளவுக்கும் அதிகமாகவே புதுமைப்பித்தனில் காணமுடிகிறது. புதுமைப்பித்தன் காலத்திய வேறு எந்த இலக்கியாசிரியர்களிடமும் சிந்தனைச் சுதந்திரம் இந்த வகையில் செயல்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிந்தனைச் சுதந்திரத்தின் காரணமாகப் புதுமைப்பித்தனால் மற்றவர்கள் கையாள முடியாத விஷயங்களைத் தைரியமாகவும் லாகவமாகவும் கையாள முடிந்தது. கந்தசாமிப் பிள்ளையின் முன் தோன்றிய கடவுள் சிவசமயத்தின் பிரதிநிதியாகவே விளங்குகிறார் என்றாலும் புதுமைப்பித்தனே சொல்வதுபோல, கர்ப்பகிரஹத்தில் அடங்கி நிற்க மறுக்கிறார். அன்று இரவில் வருகிற பிட்டுக்கு மண் சுமந்த, வெள்ளத்துக்குக் கரை போடுகிறவனும், பிரம்படி பட்டவனும் சிவசமயத்தின் பிரதிநியாகவே இருந்தாலும் மனிதனாகவும், தெய்வமாகவும், அதற்கப்பாலும் தனித்தன்மை பெற்றுவிடுகிறான். இதேபோல பல சிரமசாத்தியமான காரியங்களைப் புதுமைப்பித்தன் தன் கதைகளில் எளிய முறையில் சாதித்துக்காட்டுகிறார். பரமண்டலத்திலே இருக்கும் பிதாவைச் செயற்கையாக நம்மில் ஒருசிலர் ஏற்றுக்கொண்டிருப்பது சமீபத்திய சரித்திர விசேஷம். இந்த அறிவு திருநெல்வேலிச் சீமையில் சற்று அதிகம். இருநூறு, முன்னூறு வருஷத்து மரபு என்றுகூடச் சொல்லலாம். கர்த்தரைப்பற்றி சிருஷ்டிகர்த்தாவாகப் புதுமைப்பித்தனால் சில விஷயங்களைச் சொல்ல முடிகிறது. சிவனாருக்கு அவ்வளவாக அடிமைப்படாதவர் என்றாலும் கிறிஸ்துவ தத்துவ அர்த்தம் புதுமைப்பித்தனில் பரோடி (Parody) ஆகத்தான், கேலி செய்வதற்குரிய பொருளாகத்தான் வருகிறது என்பது கவனிக்கவேண்டிய விஷயம். சமய சம்பந்தமானது இது என்றால் ‘சிற்பியின் நரக’த்தில் காவேரிப்பூம்பட்டினத்தின் பகைப்புலத்தை ஒரு ‘கம்ப்ளீட் அட்மாஸ்பியரை’ நாலைந்து வாக்கியங்களில் கொண்டுவந்துவிடுகிறார்! அதற்குச் சமதையான ஒரு இடம் தமிழிலக்கியத்தில், சமீபகாலத்தில் வேறு ஒருவர் எழுத்திலும் காணமுடியாது. அதேபோல, சென்னை என்கிற நகரத்தின் சிமண்ட் நாகரிகம் அத்துடன் மனித மன அவசங்களை ‘மகாமசான'த்திலும், ‘சுப்பையா பிள்ளையின் காதல்க'ளிலும் கொண்டுவந்துவிடுகிறார். சென்னை நகரத்து ஆட்சி இன்னும் பல கதைகளிலும் காணக்கிடைக்கிறது. பார்வை வேண்டுமானால் அடிமட்டத்தில் திருநெல்வேலிப் பார்வை என்று சொல்லலாம்.

இதேபோல, சிந்தனைச் சுதந்திரத்தின் எல்லைகளாக “எல்லாவற்றையும் அழிக்கிறாயே, உன்னையே அழித்துக்கொள்ள முடியுமா? என்று சிவனைக் கேட்கிற குழந்தையும், “என் உயிரைத்தானே கொண்டுபோக முடியும், என் உடலையும் கொண்டுபோக முடியுமா? என்று கேட்கிற கிழவியும், ‘வெள்ளைக் களிமண்ணால் ஆன பிள்ளையார் என்றால் வெள்ளைக்காரர்கள் ஆண்ட அந்தக் காலத்தில் மதிப்பு அதிகம்’ என்று எண்ணுகிற மனமும், ராமனின் ரெட்டைத்தனமான மதியைக் கண்டு மீண்டும் கல்லான அகலிகையும், பயங்கரக் கனவாக பக்தர்களின் குரலை, கலையைக் காணாத குருடாகக் கண்டாலும் சிலை தெய்வமாவதுதான் சரி என்கிற நினைப்பும், ‘அது வேறு உலகமய்யாஎன்று அம்மாளுவின் காரியங்கள் பொன்னகரத்தைச் சேர்ந்தவை என்று சொல்வதும் புதுமைப்பித்தனுக்குச் சாத்தியமாகிறது. கருத்துச் செறிந்த விஷயங்கள் என்று ஏதோ சொல்கிறார்களே, அதற்கு ஏதாவது அர்த்தம் உண்டு என்றால் அந்த அர்த்தத்தைப் புதுமைப்பித்தன் கதைகள் ஒவ்வொன்றிலும் காணமுடியும்.

சிந்தனைகளைச் சுதந்திரமாகச் சொல்லிவிடுவதுகூடச் சுலபமாக இருக்கலாம். ஆனால், சிந்தனைகளை நேருக்குநேர் பார்த்து, அவற்றை அவற்றின் எல்லைவரை தொடர்ந்து சென்று அவற்றிற்கு உருவம் தருவது என்பது மிகவும் சிரமமான காரியம். அந்தக் காரியத்தைப் புதுமைப்பித்தன் கடைசிவரை தடம் தவறாமல், செய்திருக்கிறார் - ‘கயிற்றர’வில், ‘சித்தி’யில், ‘செல்லம்மா’ளில், ‘நினைவுப் பாதை’யில், ‘காஞ்சனை'யில் - இன்னும் நீங்களும் நானும் உதாரணமாக எடுத்துச்சொல்லக்கூடிய பல கதைகளிலும் தீர்க்கமான சிந்தனைகளின் முடிவுகளுக்கு அவரால் உருவம் தர முடிந்திருக்கிறது. இந்த முடிவுகள் சில சமயம் சாதாரண நிலையில் முற்போக்காகவும், சில சமயங்களில் பழமைக்கும் பழமையாகவும் உருவெடுப்பது சிலருக்கு எரிச்சலூட்டும்தான். பாரதியாரை ஒருசிலர் புரட்சிக்காரர் மட்டுமே என்று சொல்லுகிற மாதிரி புதுமைப்பித்தனையும் இது மட்டுமே என்று பட்டம் கட்டி விலாசம் தெரிய, அலமாரியில் அடைத்து வைத்துவிட முயற்சி செய்து தோற்பவர்களுக்கு இதனால் கோபம் வருவது சகஜமே. ஆனால் இலக்கிய சிருஷ்டி கர்த்தாக்கள் எப்போதுமே ஒரு லேபிளுக்குள் அடங்கிவிட மறுப்பவர்கள். ஒரு கல்லூரி ஆய்வாளரின் சித்தாந்தங்களுக்குள் அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல. சொல்லச் சொல்ல, மேலும் சொல்லப் பாக்கியிருக்கிறது - மறுத்தும் சொல்லலாம், ஒட்டியும் சொல்லலாம் என்பதுதான் விசேஷம்; அவர் கையாண்ட விஷயங்களைப்பற்றிச் சொல்லக்கூடிய உண்மை.

கலைஞனாக, கருத்துகள் சுதந்திரம் என்பதெல்லாம் சரி. இலக்கியாசிரியனாக உருவம் என்பது அவர் கதைகளில் எப்படி அமைந்தது, எப்படிச் செயல்பட்டது என்று விசாரிப்பதும் அவசியமாகிறது. பல சிறப்பான உருவங்களை அவர் தன் கதைகளுக்கு என்று சிருஷ்டித்துக்கொண்டு கையாண்டு பார்த்திருக்கிறார். ‘செல்லம்மாள்’, ‘சித்தி’, ‘காஞ்சனை’, ‘சாப விமோசனம்’, ‘செவ்வாய் தோஷம்’, ‘கயிற்றரவு’, ‘வேதாளம் சொன்ன கதை’, ‘கட்டிலை விட்டிறங்காக் கதை’, ‘காலனும் கிழவியும்என்பது போல ஒரு முப்பது சிறுகதைகளுக்கும் அதிகமாகவே சொல்லி, அவற்றில் தவிர்க்க முடியாத உருவமும், கருத்தும் பரிபூரணமாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம். அதே அளவுக்கு இல்லாவிட்டாலும், ‘பொன்னகரம்’, ‘துன்பக்கேணி’, ‘மகாமசானம்’, ‘மனித இயந்திரம்போன்ற பல கதைகளில் உருவ விஷய அமைதியை ஓரளவுக்குக் காணமுடிகிறது. நூறு கதைகளில் ஒரு அறுபதுக்கும் மேற்பட்டவற்றில் இப்படி உருவ விஷய அமைதி காணக் கிடைப்பது உலக இலக்கியச் சரித்திரத்திலேயே வெகு சிலருடைய எழுத்தில்தான் சாத்தியமாக இருக்கிறது.

தன் கதைகளில் புதுமையும் பித்தமும் இருப்பதாகப் புதுமைப்பித்தனே சொல்கிறார். புதுமை என்கிற அம்சம் தமிழுக்குச் சிறுகதைத்துறை புதிது என்பதுடன், அதன் ஆரம்ப காலத்தில் செயல்பட்டவர் என்பதனால், புதுமைப்பித்தனில் தூக்கி நிற்கிறது. இப்படி, புதுமையை சிருஷ்டி செய்வதில்கூட அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது. ‘பிரம்மராக்ஷஸ்’ என்கிற புதுமைப்பித்தன் கதையையும், இன்று எழுதுகிற சுஜாதாவுடைய விஞ்ஞானக் கதைகளில் ஒன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எது சிறுகதையாக வெற்றி பெற்றிருக்கிறது என்பதுடன் புதுமைப்பித்தன் கதையில் விஞ்ஞான சிந்தனை எப்படி அமைதி பெறுகிறது என்பதையும் காணமுடிகிறது. ‘ஞானக்குகைபோன்ற மரபு அறிவுக் கதைகளில் இந்த அமைதி கூடுமானதாக இருக்கிறது. ‘கபாடபுர’த்தில் உடல் இல்லாத தலை பேசுவதையும், பிரேதங்களாலான புணை கடலைப் கடப்பதும், நரபட்சிணிகளான சித்தர்கள் தங்களில் ஒருவனை மரச்சாறாகவே பண்ணிக் குடிப்பதையும் எவ்வளவு அனாயாசமாக, யதார்த்தமாகச் சொல்லுகிறார்! நவீனத்தின் பல அம்சங்கள் புதுமைப்பித்தன் கதைகளில் இடம்பெறுகின்றன என்பதில் ஆச்சரியமில்லை. அந்த 1930 - 1945 நவீனத்துவம் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் நவீனத்துவமாகவே காட்சியளிப்பதுதான் ஒருவிதத்தில் ஆச்சரியம். ஸம்ஸ்கிருதத்தில் ‘வக்ரோக்திஎன்று இலக்கியத்துக்கு ஆதாரமாக ஒரு தத்துவத்தை ஒரு சாரார் சொல்லுகிறார்கள். அதன் அம்சங்களாகப் புதுமையையும் பித்தத்தையும் சொல்லலாம். வேறு யாரும் செய்யாத காரியங்களை, சொல்லாத விஷயங்களைச் சொல்பவனையே இலக்கியாசிரியன் என்று சொல்லமுடியும்.

புதுமைப்பித்தன் என்கிற ஒரு முழுமையான ஆளுமை, பர்சனாலிட்டி, அவர் கதைகளைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிற மாதிரி இருக்கிறது. அவர் வாழ்க்கையில் பட்ட அன்றாட அவஸ்தைகள், அவை சிருஷ்டித்துத் தந்த ஒரு நம்பிக்கை வறட்சி - இந்த நம்பிக்கை வறட்சியைத்தான் அவர் தன் கதைகளில் அடிநாதமாகக் கண்டார் என்றாலும், அதை, அப்படியே, முழு உண்மை என்று நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது. ‘சில்பியின் நரகம்தொடங்கி ‘சித்தி’, ‘கயிற்றரவுவரையில் பல கதைகளில் நம்பிக்கை வறளவில்லை என்பதை நாம் காணமுடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, புதுமைப்பித்தன் என்ற கலைஞனின் உருவம், உயிர் வாழும் மனிதனின் உருவம், நம்பிக்கை தரும் சித்தாந்தங்களுடன் வாழும் மனிதனின் உருவம் என்று நமக்குத் தெரிகிறது. உடைந்து தெறித்துவிட்ட ஒரு நிலைக்கண்ணாடியின் சில்லிலும்கூட உலகம் பூராவுமே பிரதிபலிக்கப்படுவது போல, புதுமைப்பித்தனின் முழு உருவம் அவர் கதைகள் ஒவ்வொன்றிலும் தெரியவருகிறது. இந்த உருவத்தில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும் எல்லாமாகச் சேர்ந்துதான் புதுமைப்பித்தன் என்கிற உருவம். பாரதியின் பர்சனாலிட்டியைக் குறிப்பிடுவதற்கு வேகம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லலாம். அவர் எழுதியது எல்லாவற்றிலும் ஒரு தனியான, அவருக்கேயுரிய ஒரு வேகம் காணப்படுகிறது. அதேபோல, புதுமைப்பித்தனுடைய பர்சனாலிட்டியைக் குறிக்க ஒரு வார்த்தை வேண்டுமானால் தேடிப் பார்க்கலாம். ‘செல்லும் வழி இருட்டு, அடையும் இடம் இருட்டு’ என்று அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதிலிருந்து ‘இருட்டுஎன்கிற வார்த்தையை புதுமைப்பித்தனுடைய பர்சனாலிட்டியைக் குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இந்த இருட்டு வெறும் குருட்டு இருட்டு அல்ல. இந்த இருட்டில் உருவங்கள் பலவும் சிகரங்கள் பலவும் உள்ளத்துக்கு இன்பம் பயக்கும் லேண்ட்ஸ்கேப்ஸ் பலவும் புதுமைப்பித்தனின் வார்த்தைகள் என்கிற விளக்கினால், கருத்துக்கள் என்கிற நிர்மாணத்தினால் தெரிகின்றன. இந்த இருட்டிலும் பாதைகள் இருக்கின்றன. உயிர்த்துடிப்புள்ள மனிதர்கள் வந்து வந்து போகிறார்கள். இருட்டுதான். ஆனால், வாழ்வு, வாழ்க்கை இரண்டும் அற்றுவிடவில்லை. கலை அம்சம் நிறைந்த இருட்டு.

புதுமைப்பித்தனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு வகையானவை. நகரவாசிகள், கிராமவாசிகள், திருநெல்வேலிச் சீமையை விட்டுவிட்டு வெகுகாலம் முந்தியே கிளம்பிச் சென்னைக்கு அடிமைப்பட மறுப்பவர்கள் என்று பலரையும் காணலாம். புதுமைப்பித்தனின் கதைகளில் ஆண்கள் உருவான அளவுக்குப் பெண்கள் உருவாகவில்லை. பெண்கள் வருகிறபோது அனேகமாக ஆண்களின் மனங்கள் மூலம்தான் வருகிறார்கள். ஆண்கள், பெண்கள், மூட்டைப்பூச்சி, முயல் உருவான அளவுக்கும் அதிகமாக ஒரு இலக்கிய முழுமையுடனும் அமைதியுடனும் தன் குழந்தைகளை உருவாக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனின் குழந்தைகள் அவர் இருட்டு உலகத்தில் ‘பளிச்’சென்று தெரிகிற உருவங்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உயிர் தரக்கூடிய கதாசிரியரை நம்பிக்கை வறட்சி மட்டும் கொண்டவர் என்று எப்படிச் சொல்லுவது? மாறாக, உலகத்தின் எதிர்காலத்தில் மிகமிக நம்பிக்கைக் கொண்டவர் புதுமைப்பித்தன் என்று சொல்லவேண்டும். இன்று, நல்லெண்ணமும், நல்லெண்ணெயும்கூடக் கலப்படம் செய்யப்படுகின்றன என்றாலும் எதிலும் கலப்படமில்லாத காலம் ஒன்று வரும் என்கிற நம்பிக்கை அவர் எழுத்திலே இருப்பதைக் காணமுடிகிறது. இன்று இலக்கிய அறிவைப் பாரிச வாயுவும் பக்கவாதமும் பற்றிக்கொண்டிருந்தாலும் எதிர்காலத்தில் அவை நீங்கிவிடக்கூடும் என்கிற நம்பிக்கையும் அவர் எழுத்திலே தொனிப்பதை நாம் காணலாம்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல