Skip to main content

புதுமையும் பித்தமும் - 4 | க. நா. சுப்ரமண்யம்

 

புதுமையும் பித்தமும் - 3 | க. நா. சுப்ரமண்யம்

சிறுகதை பற்றிப் பொதுவாக இந்த மூன்று கட்டுரைகளையும் தவிர தன் கதைகளைக் குறிப்பிட்டுப் புதுமைப்பித்தன், ‘என் கதைகளும் நானும்என்று ஒரு கட்டுரையும், ‘காஞ்சனை’ என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரையாகச் சில குறிப்புகளும் தந்திருக்கிறார். புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள மிகவும் உபயோகமான குறிப்புகள் இவை. அவற்றையும் பார்த்துவிட்டுப் புதுமைப்பித்தனின் கதைகளைப் படிப்பது பயன்தரக்கூடிய விஷயம்.

‘... என்னுடைய கதைகளைப் பொறுத்தவரை அமிதமான பாராட்டும் பரவசமும் ஒரு சார்; மற்றொரு புறம் பலத்த மனப்பூர்வமான கண்டனம். இந்த இரண்டும் என்னுடைய கதைகள் பெற்றுள்ள கவர்ச்சிகள்’ என்று சொல்லிவிட்டு மேலும் சொல்கிறார்:

‘என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத்தன்மை வாய்ந்திருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன். பிறகு நான் எடுத்தாளும் விவகாரங்கள் பலர் வெறுப்பது; சிலர் விரும்புவது...

என் கதைகளில் எது நல்ல கதை? எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் நல்ல கதையாகத்தான் இருக்கிறது. இப்பொழுது படித்துப் பார்க்கும்போதும் எனக்கு வாசிக்கப் பரம சுகமாக இருக்கிறது ... ‘சில்பியின் நரகம்’... ‘நினைவுப் பாதை’... ‘நாசகாரக் கும்பல்’...

அச்சுப்பிழை பார்க்கிறவர்களை ஒதுக்கிவிட்டால் என் கதையின் முதல் வாசகன் நான்தான். அவ்வளவு ரசித்துப் படிப்பேன். வேகமாக எழுதிக்கொண்டு போவதனால், எழுதியதில் அங்கொன்றும் இங்கொன்றும்தான் என் ஞாபகத்தில் இருக்கும். கோவையாக எழுத்து ரூபத்தில் என் கதைகளை நான் அச்சில்தான் பார்த்துவருகிறேன்...

... பிரசுரிக்கும் நோக்கமே இல்லாமல் நான் எழுதிக் கிழித்துப்போட்ட கதைகள் எத்தனையோ! எழுத்துக்குக் கைப்பழக்கம் மிகவும் அவசியம். முடுக்கிவிட்ட யந்திரம் மாதிரி தானே ஒரு இடத்தில் வந்து நிற்கும். இது என் அனுபவம் ... என் கதைகளிலே ஏற்றத்தாழ்வு உண்டு. அவற்றிற்குக் காரணம் வார்ப்புப் பிசகு அல்ல; அதை எழுதத் தூண்டிய மன அவசத்தின் உத்வேகத்தைப் பொறுத்தது கதையின் கவர்ச்சியில் காணும் ஏற்றத்தாழ்வு.

நான் கதை எழுதுவதற்காக நிஷ்டையில் உட்கார்ந்து யோசித்து எழுதும் வழக்கம் இல்லை ... என் கதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு எடுத்த எடுப்பில் எழுதியும், வெற்றி காணுவதற்குக் காரணம் என் நெஞ்சில் எழுதாக் கதைகளாகப் பல எப்பொழுதும் கிடந்துகொண்டே இருக்கும். அந்தக் கிடங்கிலிருந்து நான் எப்பொழுதும் எடுத்துக்கொள்ளுவேன்; கதை எழுதும் சிலர் இவற்றை விவரப்பட்டியல் எழுதி ஒரு மூலையில் போட்டு வைப்பார்கள்; நான் அப்படியல்ல. ஞாபகமறதிக்கு அரிய வசதி அளிப்பேன்; ... ஆனால் ஒன்று: எழுத்து ரூபத்தில் அமையும்வரை மனசில் உறுத்திக்கொண்டு கிடக்கும் நிலையில் இந்தக் கதைகள் யாவும் இவற்றைவிடச் சிறந்த ரூபத்தில் இருந்தன என்பது என் நம்பிக்கை. எழுதி முடித்த பிறகு அவை சற்று ஏமாற்றத்தையே அளித்துவந்திருகின்றன. ஆனால் ஏமாற்றம் வெகுநேரம் நீடிப்பதில்லை.

என் கதைகளில் எதையாவது ஒன்றைக் குறிப்பிட்டு அது பிறந்த விதத்தைச் சொல்லுவதென்றால் ரிஷிமூலம் நதிமூலம் காணுகிற மாதிரிதான். சில ஆபாச வேட்கையில் பிறந்திருக்கலாம்; சில குரோத புத்தியின் விளைவாகப் பிறந்திருக்கலாம்; வேறு சில அவை சுமக்கும் பொருளுக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத ஒரு காரியம் கைகூடாதபோது எழுதப்பட்டிருக்கலாம்...

என் கதைகளின் தராதரத்தைப் பற்றி ‘எரிந்த கட்சி, எரியாத கட்சி’ ஆடுகிறார்கள். அதற்குக் காரணம், பலர் இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால்தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக் கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும், இலக்கியமென்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் - இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல் காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற, அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை.

நீளமாகத் தலை கத்தரித்துவிட்டுக்கொண்டு, அடையாறு ஜிப்பா போட்டுக்கொண்டு, பங்கியடித்த மாதிரி கண்களை ஏறச்சொருக வைத்துக்கொண்டிருக்கும் படங்கள், அவை போன்ற கதைகள், நாசூக்கான கட்டம் வரை, அதாவது உடை குலையாத கட்டம் வரை எழுதிக்கொண்டிருப்பதே கலையல்ல; அவைகளே, ‘அப்புறம்’ என்ற நினைப்பைத் தட்டிவிட்டு ஆபாச வேட்கைகளைக் கிளப்புகின்றன. இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத் துடிதுடிப்பில்தான் இருக்கிறது ... என் கதைகளில் ஒவ்வொன்றும் ஒரு விவகாரத்தைப் பற்றியதாக இருக்கும். ஆனால், என் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி. ‘எதிர்மறையான குணங்கள். இலக்கியத்துக்கு வலுக் கொடுக்குமா?’ என்று கேட்கலாம். அது ஏற்பவர்களின் மனப்பக்குவத்தைப் பொறுத்ததேயொழிய எதிர்மறை பாவத்தின் ‘விஷ’த்தன்மையைப் பற்றியதல்ல.

ஒருவர் என்னுடைய புனைபெயரை வைத்துக்கொண்டு என் கதையை விமர்சனம் செய்தார். ‘பித்தமும் இடையிடையே புதுமையும் காணப்படும்’ என்றார். வாஸ்தவம்தான். ‘பித்தா பிறைசூடி பெருமானே’ என்ற உருவகத்தில் பொதிந்துள்ள உன்மத்த விகற்பங்களை அவர் குறிப்பிடுகிறார் என்று பொருள் கொண்டு, அவ்வளவும் நமக்கு உண்டு என ஒப்புக்கொள்ளுகிறேன்; அவரவர் மனசுக்கு உகந்த ரீதியில் இருப்பவைகளே புதுமை எனக் கொள்ளப்படுகின்றன. நான் பொருள் கொடுக்கும் பித்தம்தான் அதில் புதுமை. என் கதைகளின் புதுமை அதுதான்.’

இந்தக் கட்டுரையில் புதுமைப்பித்தன் எழுதுகிற முறை, எழுதியதில் எல்லாம் ஒரே தரத்ததாக அமையவேண்டும் என்கிற அவசியமில்லாமை, உள்ளடக்கத்தின் மூலம் எழுகின்ற சர்ச்சைகள் - எல்லாவற்றையும் பற்றிக் குறிப்பிட்டுப் பல முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவர் காலத்தில் மட்டும்தான் சில விஷயங்களை நேருக்குநேர் நோக்கக்கூடாது என்கிற நினைப்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. இன்றும் பல ரூபங்களில் அந்த நினைப்பு நம்மைத் தொடருகிறது. அதை எதிர்நோக்கிச் சமாளிக்கவேண்டிய பொறுப்பு இலக்கியாசிரியர்களுக்கு இன்றும் உண்டு. அதேபோல, ஒண்ணே முக்கால் கதைகளை எழுதிவிட்டு, ‘நானும் புதுமைப்பித்தனைப் போல சிறுகதைகள் எழுதியிருக்கிறேனே, அது ஏன் உங்கள் கண்ணில் படவில்லைஎன்று கேட்கிற இலக்கிய சாம்ராட்டுகள் எண்ணிக்கையில் இன்று அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கும் வலுவான பதில் இந்தக் கட்டுரையில் காணக் கிடைக்கிறது. இவையெல்லாம் புதுமைப்பித்தன் கதைகளைப் படிக்கிறபோது அத்துடன் சேர்த்துப் படித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்.

காஞ்சனைஎன்கிற தொகுப்பின் முன்னுரையாக நாலு பக்கங்கள் ‘எச்சரிக்கை!என்று அவர் எழுதிய பகுதியிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்கள் உண்டு. அதில் சில முக்கியமான பகுதிகளை இங்கு எடுத்துத் தருகிறேன்.

‘... இவை யாவும் கலை உத்தாரணத்திற்கென்று கங்கணம் கட்டிக்கொண்டு செய்த சேவை அல்ல. இவை யாவும் கதைகள். உலகை உய்விக்கும் நோக்கமோ, கலைக்கு எருவிட்டுச் செழிக்கச் செய்யும் நோக்கமோ, எனக்கோ என் கதைகளுக்கோ சற்றும் கிடையாது. நான் கேட்டது, கண்டது, கனவு கண்டது, காண விரும்பியது, காண விரும்பாதது ஆகிய சம்பவக் கோவைகள்தாம் இவை.

... பொதுவாக நான் கதை எழுதுவதன் நோக்கம் கலை வளர்ச்சிக்குத் தொண்டு செய்யும் நினைப்பில் பிறந்ததல்ல...

நான் கதை எழுதுகிறவன். கதையிலே கல் உயிர்பெற்று மனிதத்தன்மை அடைந்துவிடும். மூட்டைப் பூச்சிகள் அபிவாதயே சொல்லும். அதற்கு நான் என்ன செய்யட்டும்? கலையுலகத்தின் நியதி அது. நீங்கள் கண்கூடாகக் காணும் உலகத்தில், மனிதன் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கவில்லையா? மனிதன் கல் மாதிரி இருக்கும்போது கல்தான் சற்று மனிதன் மாதிரி இருந்து பார்க்கட்டுமே! தவிரவும் பழைய கதைகளை எடுத்துக்கொண்டு, அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்றுகொண்டு பார்க்க எங்களுக்கு உரிமையுண்டு.

... திருப்பணியில் ஈடுபாடுடைய பக்தர்கள் பலருக்கு அவர்கள் ஆர்வத்துடன் செதுக்கி அடுக்கும் கல்லுக் குவியலுக்கு இடையில் அகப்பட்டு நசுங்கிப் போகாமல் அவர்களுடைய இஷ்ட தெய்வத்தை (‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற கதையில்) நான் மெதுவாகப் பட்டணத்திற்குக் கூட்டிக் கொண்டு விட்டதில் பரம கோபம். நான் அகப்பட்டால் கழுவேற்றிப் புண்ணியம் சம்பாதித்துக்கொள்ள விரும்புவார்கள். என்னுடைய கந்தசாமிப் பிள்ளையுடன் ஊர் சுற்றுவதற்குத்தான் கடவுள் சம்மதிக்கிறார். இதற்கு நானா பழி?

பொதுவாக, என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் பண்ணி உய்விக்க ஏற்பாடு செய்யும் ஸ்தாபனம் அல்ல. பிற்கால நல்வாழ்வுக்குச் சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்துகொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள்; இன்னும் சிலர் கோபிக்கிறார்கள். இவர்கள் கோபிக்கக் கோபிக்கத்தான் அவர்களை இன்னும் கோபிக்கவைத்து முகம் சிவப்பதைப் பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.’

தமிழில் சிறுகதை என்ற இலக்கியத்துறை வளருவதற்குப் புதுமைப்பித்தன் தெரிந்து, அதிசயமாகவே செயல்பட்டிருக்கிறார். ‘மணிக்கொடி’ காலத்தில் அந்தத் துறை வளம்பெற்று, தரம் பெற்று, உரம் பெற்று, உருவம் பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்த நான்கு விஷயங்களிலும் தெரிந்து செயல்பட்டவர் புதுமைப்பித்தன். ஆனால், அவர்களில் பலரையும்விட அதிகமான விஷயங்களை நேருக்கு நேர் பார்த்து எழுதும் தெம்பு அவருக்கு இருந்தது. பரப்பினாலும், ஆழத்தினாலும் அவர் கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் இன்றும் வாசகர்களின் கவனத்தைக் கவருவதாக இருக்கின்றன; புதுமை நிறைந்தவையாக இருக்கின்றன. பிரச்சாரகராக அல்லாமல் ‘கலை உய்விக்க வந்தவன் அல்ல நான்' என்று அவரே சொன்னாலும் கலை உய்ய, இலக்கியம் ஓங்க வந்தவர்தான் அவர் என்பது நமக்கு நிதர்சனமாகத் தெரிகிறது.

புதுமைப்பித்தன் படைப்புகளில் புதுமை ஐம்பதாண்டுகளுக்குப் பிறகும் நிறைந்துதான் இருக்கிறது. பித்தமும் நிறைந்தேதான் இருக்கிறது. இரண்டுக்கும் அப்பால் இன்றும் தெரிந்துகொள்ளக்கூடிய, படித்த மாத்திரத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய இலக்கியத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கிறது. இந்த இலக்கியத் தன்மை பேராசிரியர்களோ, இலக்கண ஆசிரியர்களோ சொல்லுகிற அளவில் வரிந்து கட்டிக்கொண்டு செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது அல்ல. இது இயற்கையாகவே புதுமைப்பித்தன் என்கிற சொ. விருத்தாசலத்தின் தனித்துவமாக அமைந்து இன்றும் அவரைப் படிக்க நம்மைத் தூண்டுகிறது. அவர் எழுத்துகளை மற்றவர் எழுத்துக்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில் பலரும் எழுதினார்கள். அப்படிச் சிறப்பாக எழுதியவர்களில் முன்னணியில் நின்றவர் என்று புதுமைப்பித்தனைக் காலமும் விமர்சகர்களும் கணிப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மை.

என் சுய அனுபவம் ஒன்றையும் இங்கு, இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம் என்று தோன்றுகிறது. 1954 - 55 இல் பம்பாயில் தங்கியிருந்தபோது ஒருநாள் மாலை ஒரு மராத்தி இலக்கிய அன்பருடன் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அந்த மராத்திய அன்பரும் எழுத்தாளர்தான். அவர் சிறுகதைகள் நிறைய எழுதியவர். அவற்றில் சிலவற்றை ஆங்கில மொழி பெயர்ப்பில் படித்துவிட்டு நன்றாக இருப்பதாக நான் நினைத்திருந்தேன். அவருக்கு வயது ஐம்பது இருக்கும். பேசிக்கொண்டிருந்தபோது புதுமைப்பித்தனைப் பற்றிச் சிறப்பாகச் சொன்னேன். அவர் எந்த மாதிரிக் கதைகள் எழுதியவர் என்று மராத்திக்காரர் கேட்டார். எனக்கு உடனடியாக எதுவும் பதில் சொல்லத் தெரியவில்லை. “புதுமைப்பித்தன் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டைச் சுருக்கிச் சொல்லுகிறேன் உதாரணமாக. நீங்கள் அதிலிருந்து அவர் எப்படிப்பட்ட கதாசிரியர் என்று யூகித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, ‘சாப விமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘விநாயக சதுர்த்தி’ என்ற மூன்று கதைகளையும் நினைவில் இருந்தபடி ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொன்னேன். மராத்தி நண்பருக்குப் புதுமைப்பித்தன் எப்படிப்பட்ட சிறுகதாசிரியர் என்பது ஓரள வுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவர் போன பின்னர், கூட இருந்த தமிழ் நண்பர் சொன்னார். “நீங்கள் சுருக்கிச் சொன்ன கதைகள் மூன்றையும் நானும் படித்திருக்கிறேன். நீங்கள் சொல்லுகிற அளவில் அவை அப்படிச் சிறப்பாக அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லையே” என்றார். “அப்படியா? அது உமது துரதிருஷ்டம்” என்றேன் நான். “புதுமைப்பித்தன் கதைகளில் இல்லாதது எதையாவது நான் சேர்த்துச் சொன்னேனா? என்று கேட்டேன். “இல்லை” என்று ஒப்புக்கொண்டார் நண்பர். “திருப்பிச் சொல்லும்போது தரம் கூடுகிற மாதிரி தோன்றுவதும் ஒரு இலக்கிய நயம்தானே? இப்படித்தான் மகாபாரதமும் ராமாயணமும்கூட உருப்பெற்றிருக்கின்றன” என்றேன். நண்பர் பதில் சொல்லவில்லை.

சிலருடைய நாவல்களோ, கதைகளோ திருப்பிச் சொல்லப்படும்போது ஒன்றும் இல்லாமல் வெங்காயம் உரித்த கதையாகப் போய்விடும். ஒருசில கதைகள் அவசரமாகச் சுருக்கிச் சொல்லப்பட்டபோதும், சரியாக வராத மொழிபெயர்ப்பிலும்கூட அற்புதமாக இருப்பதாகத் தோன்றும். இரண்டாவது ரகமான கதைகளில் ஒரு இலக்கியத் தெம்பு இருப்பதை நாம் காண்கிறோம். இதுமாதிரி எப்படிச் சொன்னாலும் இலக்கிய நயமும், விஷய கனமும் காட்டுகிற கதைகள் புதுமைப்பித்தனின் கதைகள் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்படி உள்ளதனால்தான் செக்காவையும் மோப்பாஸானையும்கூட நம்மால் மட்டமான மொழிபெயர்ப்பிலும் புரிந்துகொண்டு ரசிக்க முடிகிறது.

இப்பொழுது, இந்த நாட்களில் சில சிறுகதாசிரியர்கள் தங்கள் கதைகள் சில இந்திய மொழிகளில் மட்டுமின்றி, பல ஐரோப்பிய மொழிகளிலும் வந்திருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். டாக்டர் பட்டத்தையும் சேர்த்துக் கையெழுத்துப் போடுகிற மாதிரி சிலர் இப்படித் தங்கள் கதைகள் பல மொழிகளில் வந்திருப்பதாக ‘லெட்டர் ஹெட்’டில்கூடக் குறித்துக்கொள்கிறார்கள். வீட்டு முன்வாசலில் பெயர்ப் பலகைகளில்கூடக் குறித்து வைத்திருக்கிறார்களோ என்னவோ! ஆனால், காலத்தால் முதல்வரான, நிஜமாகவே முதல்வரான புதுமைப்பித்தனின் கதைகள் சீராக, இலக்கிய அளவில் பொறுக்கியெடுக்கப்பட்டு, விமர்சன ரீதியில் அவற்றின் தரம் சுட்டிக்காட்டப்பட்டு, பிற அந்நிய மொழிகளில் இதுவரை வந்திருப்பதாகத் தெரியவில்லை. சில மொழிகளில் சில கதைகள் மட்டும் வந்திருக்கலாம்; அப்படி வந்திருக்கிற இடங்களில், புதுமைப்பித்தனைப் படிப்பவர்களுக்கு அவருடைய இலக்கிய மேதைமை தெரியாமல் போயிருக்காது. இன்னும் விமர்சனபூர்வமாக, இலக்கியத் திறனுடன் இதைச் செய்வது தமிழின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்லுவது போல அமையும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இந்தக் காரியம் இன்னமும் வள்ளுவர், இளங்கோ, காரைக்கால் அம்மையார், ஆண்டாள், சைவ வைஷ்ணவ பக்திப் பாடலாசிரியர்கள் சிலர், சுப்ரமண்ய பாரதியார் இவர்களுக்குக்கூட விமர்சன அடிப்படையில் இலக்கியபூர்வமாகச் செய்யப்படவில்லை. அந்த வரிசையில் புதுமைப்பித்தன் கதைகளையும் கொண்டு தமிழின் பெருமைகளில் ஒன்றாக உலகுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய காலம் வரவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எப்போது வரும் என்ற கேள்விக்கு இப்ப சத்தியாகப் புதுமைப்பித்தன் வார்த்தைகளிலேயே, ‘காலத்தேவன் லோபியல்ல’ என்று பதில் சொல்லவேண்டியதுதான்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

Comments

Most Popular

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.