Skip to main content

புதுமையும் பித்தமும் - 2 | க. நா. சுப்ரமண்யம்

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம் 

சங்க காலம் என்று தீர்மானமாகாத ஒரு காலத்தைச் சுட்டிக்காட்டுவது போல, மணிக்கொடிக் காலம் என்று சமீப காலத்திய முப்பதுகளில் சில ஆண்டுகளைக் குறிப்பிடுவது பரவலாக வழக்கமாகிவிட்டது. ‘மணிக்கொடி’ என்கிற பத்திரிகையின் பெயர் அது ஏற்படுத்திய பாதிப்பினாலும், சந்தர்ப்ப விசேஷத்தினாலும் ஒரு குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தையாகிவிட்டது. இன்று திரும்பிப் பார்க்கும்போது அதை ஏற்றுக்கொள்வது அப்படியொன்றும் தவறில்லை என்றுதான் சொல்லவேண்டும். முப்பதுகளில் முழுக்க முழுக்கச் சிறுகதைப் பத்திரிகையாகப் பல நல்ல சிறுகதாசிரியர்களின் எழுத்துகளைத் தாங்கி ‘மணிக்கொடி’ என்கிற பத்திரிகை, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் விட்டு விட்டுச் செயல்பட்டது. ஒரு ஐந்தாறு ஆண்டுகள்தான். தமிழ் இலக்கியத்தில் ஒரு புது அலையை உருவாக்க அது போதுமானதாக இருந்தது. குறிப்பிட்ட ஒருசில சிறுகதாசிரியர்கள் அதில் எழுதினார்கள். அந்தக் காலத்தில் சிறுகதைகளையோ, நாவல்களையோ மற்றும் எந்த உரைநடை இலக்கியங்களையுமோ இலக்கியமாகக் கருதுவது பெரும்பாலாக வழக்கத்தில் வரவில்லை. அந்தக் காலத்தில் டாக்டர் பட்டங்களோ சாம்ராட் சக்ரவர்த்திப் பட்டங்களோ இருக்கவில்லை. சிலர் தொடர்ந்து மணிக்கொடியில் எழுதி விஷயம் தெரிந்த வாசகர்கள் சிலரிடையே பெரும்பெயர் பெற்றார்கள். இப்படி எழுதியவர்களில் ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன், மௌனி, இவர்களுடன், ‘மணிக்கொடி’ ஆசிரியர்களான பி. எஸ். ராமையா, கி.ரா. இருவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, முன்னும், பின்னுமாக இன்னும் பலரும் எழுதினார்கள். சந்தர்ப்ப சமய விசேஷமாகவும், தமிழ் இலக்கியத்தில் உள்ள ஆர்வம் காரணமாகவும் இவர்கள் ‘மணிக்கொடி’யின் பக்கங்களில் ஒன்று சேர்ந்தார்களே தவிர மற்றபடி வாழ்க்கை நோக்கங்களிலோ, போக்குகளிலோ இவர்களிடம் ஒற்றுமை ஒன்றும் கிடையாது. எனினும், பொதுவாகச் சுதந்திரத் தாகம் (அவ்வளவாக அரசியலில் வெளிப்படாதது), இலக்கிய வேகம் (ஆங்கிலப் படிப்பினால் பெரும் அளவுக்குத் தூண்டிவிடப்பட்டது), லட்சிய நோக்கங்கள் (வாழ்க்கையே லட்சியங்களுடன் வாழப்பட வேண்டும், சில லட்சியங்கள் கைகூடியும் வரலாம்) என்றெல்லாம் இவர்களுக்கு ஒரு ஆதார ஸ்ருதி அமைந்தது. பொதுவாக வாழ்க்கையில் பொருளாதாரக் கஷ்டங்களை அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பதும் இவர்களைப் பற்றிச் சொல்லக்கூடிய அடிப்படை விஷயம். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பார்வைகளுடன், பலதிறப்பட்ட செயல்திறன்களுடன், வித்தியாசப்பட்ட மண்ணில் பிறந்து வளர்ந்து பெரியவர்களானவர்கள்; சென்னை நகரில் குடியேறியவர்கள். இந்தக் கோஷ்டியினரின் சராசரி வயது முப்பது முதல் நாற்பது வரையில் - அதாவது, அந்தக் காலத்தில்.

சிவனைத் தமிழ் செய்வதற்கு நாயன்மார்கள் போல, சிறுகதையைத் தமிழ் செய்வதற்குப் பிறந்தவர்கள் போல இவர்கள் தோன்றினார்கள். இவர்களுடைய பார்வை வீச்சு சிறுகதைகளுக்கு அப்பாலும் சென்றது என்றாலும், தங்கள் சிறுகதைகளையே மிகச் சிறப்பான சாதனைகளாகக் கருதியவர்கள் இவர்கள்.

தமிழிலக்கிய மறுமலர்ச்சியில் முதல் அலை நாவலில் தோன்றியது. 19ஆம் நூற்றாண்டில் வேதநாயகம் பிள்ளையும், ராஜம் அய்யரும், அ. மாதவையாவும் முதல் மூன்று தமிழ் நாவல்களைச் சிருஷ்டித்துத் தமிழுக்குப் புது உரம் தர முயன்றார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே தமிழ் நாவல் ஓரளவுக்குத் தேக்கம் கண்டுவிட்டது. ஆனால் சுப்ரமண்ய பாரதி மூலம் கவிதையிலும், வ.வே.சு. ஐயர் மூலம் இலக்கிய விமர்சனத்திலும், சிறுகதையிலும் உரம் பெற்றது. பாரதியார் தந்த தமிழ் வேகமும், வ.வே.சு. ஐயர் தந்த ஊக்கமும்தான் ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களுக்கு ஆதாரமாக அமைந்தன என்று சொல்லவேண்டும். மரபுக் கவிதைகளிலும் ஜோதி ராமலிங்கம், கோபாலகிருஷ்ண பாரதியார் என்று தொடங்கிய மறுமலர்ச்சி சுப்ரமண்ய பாரதியில் உச்சக்கட்டத்தை எட்டியது. தமிழ் வசனத்திலும், கவிதையிலும், வசன கவிதையிலும் பாரதியாரின் புரட்சி மிக மிகச் சிறப்பானதாக, இன்றுவரை தாக்கமுள்ளதாகச் செயல்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் சுப்ரமண்ய பாரதியாருடன் ஒப்பிடக்கூடிய கவிகள் ஒருவரும் அவருக்குப் பின் தமிழில் தோன்றவில்லை. ஆனால், எழுத்துக்கு அவர் தந்த வேகம் இன்னும் தொடர்கிறது.

சுப்ரமண்ய பாரதியாரின் சமகாலத்தவராகிய வ. வே. சுப்ரமண்ய ஐயர் ஆரம்பக் காலத்திலிருந்தே இலக்கியச் சிந்தனைகளை வளர்த்து வந்தவர் என்றாலும் அரசியல் காரியங்களில் - அதுவும், முக்கியமாகப் புரட்சி வேலைகளில் - ஈடுபட்டிருந்ததால் அவரால் போதுமான அளவு ஆரம்பக் காலத்தில் இலக்கியச் சாதனை காட்ட இயலவில்லை. புதுவை வந்து பாரதியாரின் நேர்சந்தியும் ஏற்பட்ட பின், கட்டாய அரசியல் ஓய்வின் காரணமாகவும், இலக்கிய விமர்சனம், சிறுகதை என்கிற இரண்டு துறைகளிலும் ஈடுபாடும் சாதனையும் காட்டினார். மிகவும் சிறப்பான சாதனைகள் அவை. பாரதியாரும் மாதவையாவும் கதைகள் எழுதினார்கள். சிறுகதைகள் என்று உருவம் தெரிந்து எழுதவில்லை. வ.வே.சு. ஐயர், சிறுகதை என்று உருவம் தெரிந்து ஐரோப்பிய இலக்கியத்தில், முக்கியமாக ஃபிரெஞ்சு மொழி இலக்கியத்தில் தமக்கு இருந்த பரிச்சயத்தினால் தமிழில் சிறுகதைகளை உருவாக்கிக் காட்டினார். வ.வே.சு. ஐயரின் ‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்கிற நூலில் உள்ள சிறுகதைகள் மணிக்கொடிக்காரர்களுக்கும், அவர்களுக்குப் பின்னர் வந்த தமிழ்ச் சிறுகதாசிரியர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தன. வ.வே.சு. ஐயர் ஏற்படுத்திய சிறுகதை அலை முப்பதுகளில் பலம் பெற்றது. இருபதாண்டுகளுக்குப் பிறகு, ஐம்பதுகளில்தான் அவரது விமர்சனப் போக்குத் தமிழர்களிடையே உரம் பெற்றது; பயன் தந்தது என்று சொல்லவேண்டும். முப்பதுகளில் சிறுகதைகள் எழுதியவர்கள் பலரும் - இதற்கு மௌனி ஒரு விதிவிலக்காக இருக்கலாம். அவர் பாரதியையோ, வ.வே.சு. ஐயரையோ தன் கதைகளை எழுதிய காலத்தில் படித்திருந்ததாகத் தெரியவில்லை - மற்ற எல்லோருமே வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ என்கிற கதையைத் தங்களுக்கு ஆதர்சமான சிறுகதையாகக் கருதினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதைக் கு.ப.ரா.வும் புதுமைப்பித்தனும் குறிப்பிட்டே சொல்லியிருக்கிறார்கள்.

தமிழில் சிறுகதை அலை முப்பதுகளில் தோன்றியதற்குப் பல காரணங்கள் கண்டு சொல்லலாம். சுதந்திரத் தாகம் இலக்கியத் துறைகளில் படிந்து சிறுகதையாக உருப்பெற்றது என்று புதுமைப்பித்தன் ஓர் இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில இலக்கியப் படிப்பு அதற்கு முந்திய இருபது முப்பது வருஷங்களில் தமிழர்களிடையே பரவி, தமிழர்களுக்கு இலக்கிய அளவில் பயன் தரத் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டில் புதுவிதமான பத்திரிகைகள் தோன்றி பொழுதுபோக்குக்கும், அறிவு விருத்திக்கும் அஸ்திவாரம் போட்டுக்கொண்டிருந்தன. சில ஆசிரியர்கள் பொதுஜன விருப்பத்தைத் திருப்திப்படுத்துகிற அளவில் பல நல்ல, மற்றும் மட்டரகமான ஆங்கிலக் கதைகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருந்தார்கள். முப்பது, முப்பத்தைந்து வயதை எட்டியிருந்த ஒருசில தமிழ் அன்பர்களுக்கு ஆங்கிலத்தில் உள்ளது போல பல இலக்கியத் துறைகளிலும் செயலாற்றித் தமிழுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்கிற ஆவல் பரவலாக ஏற்பட்டது. மரபுவழி வந்த தமிழ் இலக்கியங்கள் பொதுஜனத்தையோ, ஆங்கிலம் படித்து ஆங்கில, ஐரோப்பிய இலக்கியம் அறிந்தவர்களையோ எட்டவில்லை. பண்டைத் தமிழிலக்கியம் பண்டிதர்களின் சொத்தாகவே இருந்தது. இதோடெல்லாம் பாரதியாரும், வ.வே.சு. ஐயரும் தந்த வேகமும் சேர்ந்துகொண்டது. இதெல்லாம் காரணமாகவே ஆங்கிலம் மூலம் உலக இலக்கியம் படித்து, இலக்கிய ஆர்வத்தினால் தூண்டப்பட்டவர்களாக ‘ஒன்றுக்கும் உதவாதவர்களாகப் போய்விட்ட’ ஒரு கோஷ்டியினருக்கு இலக்கியம், இலக்கியச் சிருஷ்டி என்பது மன ஆறுதல் தருவதாக இருந்தது. குடும்பம், சுற்றத்தார், உறவினர்கள் எல்லோராலும் ‘ஒன்றுக்கும் உதவாதவர்களாக’க் கருதப்பட்டவர்கள்தான் பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், மௌனி முதலியவர்கள்.

இப்படிச் சொல்லுகிறபோது ஏதோ இதில் ஒரு கேலி தொனிக்கிற மாதிரித் தோன்றினாலும், உண்மையில் இருந்த நிலைமை இதுதான். 1900இல் பிறந்த பிச்சமூர்த்தி பி.ஏ. படித்து, பி.எல்’லும் பாஸ் செய்து சுதந்திரத் தாகம், லட்சிய வேகம், இலக்கிய மோகம் இவற்றினால் உந்தப்பட்டவராக, வக்கீலாகப் பொருளீட்ட முடியாதவரானார். கு. ப. ராஜகோபாலனும் பி.ஏ. படித்துவிட்டு, கொஞ்ச காலம் சொல்ப சம்பளத்தில் குமாஸ்தாவாக இருந்து, அந்த அடிமை வாழ்வு பிடிக்காமல், கண் உபத்திரவமும் சேரவே வேலையை உதறிவிட்டு, இலக்கியத்தை நம்பிப் பிழைக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்தார். இருவரும் கும்பகோணத்துக்காரர்கள். கு.ப.ரா. சிறிது காலம் கஷ்டப்பட்டு நாற்பத்தியிரண்டாவது வயதில் இறந்துவிட்டார். இன்னொரு கும்பகோணத்துக்காரரான மௌனி (இயற்பெயர், கல்லூரிப் பெயர் எஸ். மணி) முந்திய இருவரும் செய்வதை நான் இவர்களையும் விட அதிகச் சிறப்புடன் செய்யமுடியும் என்று, அதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு எழுத ஆரம்பித்துப் பதினைந்து, இருபது சிறுகதைகள் மட்டும் எழுதிவிட்டு, மேலும் இலக்கிய உந்துதலோ பணம் தேடும் நோக்கமோ இல்லாததால் எழுதுவதை நிறுத்திவிட்டவர். மௌனியின் சூழ்நிலையிலும் ஏகப்பட்ட அதிருப்தி. அவரும் ‘ஒன்றுக்கும் உதவாத’ கோஷ்டியைச் சேர்ந்தவர்தான். ஒரு சகோதரர் ‘ஐ.ஏ.ஏ.எஸ்’ பரீட்சை கொடுத்து, தேறி, பெரிய உத்தியோகத்துக்குப் போய்விட்டார். இவரும் பரீட்சைக்குப் போனார்; தேறவில்லை, பி.ஏ. ஹானர்ஸ் என்று போனவருக்கு பி.ஏ. டிகிரிக்குத்தான், கணக்கில், சிபாரிசு கிடைத்தது. பலவிதமான, பணக்கார மைனர் மற்றும் மேஜர் நடவடிக்கைகளினாலும் அவருடைய தகப்பனாரின் நிர்தாட்சண்யமான திட்டுகளுக்கும் விரோதத்துக்கும் பாத்திரமானவர். காஃப்காவின் தகப்பனார் ‘கரப்பான்பூச்சி’ என்று அவரை ஆத்திரமாகத் திட்டுவாராம். மௌனியின் தகப்பனாரின் வசவுகள் கிராமியமாக, துடைத்துவிடக்கூடாதவையாக இருக்கும். எனக்குச் சிதம்பரத்தில் மில் வைத்திருந்த மௌனியின் தகப்பனார் சாமாவையரைத் தெரியும்.

இந்தக் கோஷ்டியுடன் அவர்களின் பின்புலம் தெரிந்தோ, தெரியாமலோ - தெரியாமல் என்றுதான் சொல்லவேண்டும் - வந்து சேர்ந்துகொண்டவர் புதுமைப்பித்தன் என்கிற சொ. விருத்தாசலம். திருநெல்வேலிக்காரர். மற்றவர்களைப் போலவே இவரும் பி.ஏ. படித்தவர்தான். ஆனால், பி.ஏ. டிகிரியை அவர் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. பரீட்சை தேறிய பின் தகப்பனாருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால் தேவையான ரூபாயைக் கொடுத்து டிகிரியை அவரால் வாங்க முடியாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன். வீட்டில் இளைய தாயார். புதுசாகக் கல்யாணமான புது மனைவி. சொ.வி.க்கும், அவர் மனைவிக்கும் உள்ள நியாயமான ஆசைகள்கூடத் தகப்பனாரின் கூரையின் கீழ்ப் பூர்த்தியாகச் சந்தர்ப்பம் ஏற்படாது என்ற நிலை வந்தவுடன் உத்தியோகம் தேடி முதலில் காரைக்குடிக்கும், பின்னர் சென்னைக்கும் அவர் மனைவி கமலாம்பாளுடன் வந்துவிட்டதாகத் தெரிகிறது. சற்றேறக்குறைய இருபதாண்டுகள் சென்னையில் வாழ்ந்தும் (வாழாமல் வாழ்ந்தும் என்று சொல்லலாமா?) திருநெல்வேலியின் பிடிப்பு அவரை விட்டு விலகிவிட்டதாகக் கடைசிவரையில் சொல்ல முடியாது. சிந்தனைகளிலும், பேச்சிலும், வார்த்தைகளிலும், செயல்களிலும் புதுமைப்பித்தன் கடைசிவரை திருநெல்வேலிக்காரராகவேதான் இருந்தார் என்பது என் நினைப்பு. இந்த விஷயத்தில் அவர் மற்ற மூவரிலிருந்தும் சற்று வித்தியாசப்பட்டவர் என்று சொல்லலாமா? உதாரணமாக, கு. ப. ராஜகோபாலன் தன் கடைசிக்காலம் வரையில் கும்பகோணத்திலேயே இருந்தார் - சென்னை தற்காலிக வாசம் போக, மற்றக் காலமெல்லாம். என்றாலும் அவரிடம் கும்பகோணத்தின் பிடிப்பு சற்றுக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் தெலுங்கு பேசுபவர். எப்பொழுதோ வந்து தமிழ்நாட்டில் குடியேறிவிட்ட தெலுங்குப் பரம்பரையில் வந்தவர். அதனாலேயே அவருக்கு ஒரு ‘காஸ்மாபாலிடன்’, கும்பகோணத்துக்கு அப்பாற்பட்ட பார்வையும் இருந்தது என்று சொல்லலாமா? இதெல்லாம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கவேண்டிய விஷயங்கள். தெரிந்துகொள்ள முடியுமானால் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள். இவையெல்லாம் பற்றி நமக்கு முன்னோடியான ஆராய்ச்சிப் புத்தகங்கள் கிடைப்பதில்லை.

பிச்சமூர்த்தியின் தகப்பனாரும் ஒரு நாடகக் கலைஞர். அதேபோல புதுமைப்பித்தனின் தகப்பனாரும் - அவரே சொல்லிக்கொண்டபடியும், சொ.வி.யே சில சமயம் கேலியாகச் சொன்னது போலவும் - ஒரு எழுத்தாளர்தான். தாசில்தாராக அவர் சர்க்கார் உத்தியோகம் பார்த்துக்கொண்டு குறும்பர், இருளர் என்கிற பின்தங்கிய மக்கள் பற்றி ஆராய்ந்து, அவர்கள் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றிப் பல தகவல்கள் சேர்த்து லண்டனில் ‘லூஸாக்’ கம்பெனி பிரசுரமாக மூன்று பாகங்களில் ஒரு நீளமான நூல் எழுதியிருக்கிறார். நன்றாகவே எழுதப்பட்ட நூல்; நான் அதைப் படித்துப் பார்த்திருக்கிறேன். எழுதுகிற போக்கும், அறிவும் ‘சொ.வி.’க்கு அவருடைய தகப்பனாரிடமிருந்து பிதுரார்ஜிதமாக வந்ததுதான் என்று சொல்வதில் எதுவும் தவறிருக்க முடியாது. பிதுரார்ஜிதமாக, மற்றத் தன் சம்பாத்யமான சொத்துக்களைத் தன் இந்தப் பிள்ளைக்குத் தரமாட்டேன் என்று கடைசிவரை சொல்லி, தான் இறந்த பிறகு அவருக்கு உரிய பகுதி கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார் தகப்பனார் என்று கேள்வி. அந்தச் சொத்து முன்னாலேயே கிடைத்திருந்தால், முன்னாலேயே செலவு செய்துவிட்டிருப்பார் சொ.வி. அவர் கடைசிக் காலத்தில், நாற்பது வயதில் சொத்து கிட்டியபோது அதைப் ‘பர்வதகுமாரி புரொடக்‌ஷன்ஸ்’ என்கிற அவருடைய சினிமா கம்பெனிக்குச் செலவிட்டார் என்றும் கேள்வி. நான் அச்சமயம் சிதம்பரத்தில் இருந்தேன். சொ.வி. உடன் இருந்து அதைப் பார்க்கவில்லை. நான் மீண்டும் அவரைச் சந்திப்பதற்குள் கிடைத்த பொருள் கரைந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.

எழுதும் திறம் அவருக்குப் பிதுரார்ஜிதமாக வந்தது என்று சொன்னாலும், அவருடைய இலக்கிய அறிவும் மேதைமையும் எப்படி ஏற்பட்டன என்பதை நிர்ணயிக்கப் போதுமான அளவில் அவர் இளம்பருவத்துத் தகவல்கள் கிடைக்கவில்லை. என்னென்ன நூல்கள் படித்தார் என்பதோ, எந்த மாதிரியான நண்பர்களைத் தேடிக்கொண்டு அவர் போனார் என்பதோ போதுமான அளவில் தெரியவில்லை. அவர் காலேஜ் லெக்சரர் ஒருவரைப் பற்றி அவர் பின்னால் ஜோக் அடிப்பதைக் கேட்டிருக்கிறேன். “பொன்னுசாமிப் பிள்ளையும் முஸ்ஸலோனி மாதிரி ஒரு டிக்டேடர்தான். முஸ்ஸலோனி இத்தாலிக்கு டிக்டேடர். பொன்னுசாமிப் பிள்ளை ஈஸ் ஏ டிக்டேட்டர் ஆப் நோட்ஸ்” என்று சொல்லுவார். இந்தப் பொன்னுசாமிப் பிள்ளையை நான் 1957, 58இல், நாகர்கோயிலில் சந்தித்திருக்கிறேன். அவர் மூலமாகத் தெரிந்துகொண்ட சில சிறு தகவல்களைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலாது.

1925 இலிருந்து 35 வரையில் தமிழ்நாட்டில் கல்லூரியில் ஆங்கிலம் படித்த மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தில் ஷெல்லி, கீட்ஸ், டென்னிஸன், டிக்கன்ஸ், ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட், ஸர் வால்டர் ஸ்காட், ஹாஸ்லிட், லாம்ப், ஜான்ஸன், அடிஸன், ஸ்டீல், தாமஸ் ஹார்டி, ஜார்ஜ் மெரிடித், ஆர். எல். ஸ்டீவென்ஸன் போன்ற ஆசிரியர்கள் தெரியும். மற்றும் எட்கர் ஆலன் போ, நெத்தேனியல் ஹாதார்ன், வாஷிங்க்டன் இர்வின், எமெர்ஸன் முதலியவர்களையும் தெரியும். கல்லூரிக்கு அப்பால் படிப்பது ஜி. டபிள்யூ. எம். ரெய்னால்ட்ஸ், மிஸஸ். ஹென்றி வுட், மேரி கோர்ரலி போன்ற நாவலாசிரியர்கள். சொ.வி.யும் தன் கல்லூரி நாட்களில் இவைகளெல்லாம் படித்துத்தான் இருக்கவேண்டும். விக்டர் ஹீயூகோவும், கை. டி. மாப்பஸானும், ஆண்டன் செக்கோவும், டாஸ்தாவ்ஸ்க்யும், டர்கனீவும் ஆங்கிலக் கல்லூரிப் படிப்பில் வராதவர்கள். ஆனால், இவர்களையும் படிப்பில் ஆர்வமிருந்த அந்தக்கால மாணவ மாணவியர் படித்திருக்கக்கூடும். சொ.வி.யினுடைய இளவயது நண்பர்கள் யாராவது அவர் என்னென்ன படித்தார், தங்களுடன் என்னென்ன விஷயங்களைப்பற்றி விவாதித்தார் என்று எங்காவது எழுதி வைத்திருந்தால் உபயோகமாக இருக்கும். அப்படி எதுவும் குறிப்புகள் எழுதி வைத்திருப்பதாகத் தெரியவில்லை. இனிமேல், இந்த மாதிரியான விஷயங்கள் பற்றித் தகவல் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.

காரைக்குடியில் ‘ஊழியன்’ பத்திரிகையில் உழைத்து, பத்திரிகைத் தொழிலை சொ.வி, கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. பத்திரிகைத் தொழிலில் சிரமங்கள் பல உண்டு என்றாலும் ஓரளவுக்கு உலக நடப்பைச் சரிவர அறிந்துகொள்ள அது உதவுகிறது என்றுதான் சொல்லவேண்டும். பலதரப்பட்ட விஷயங்களையும் பற்றி சுப்ரமண்ய பாரதியார் பரவலாக எழுதியதற்குக் காரணம் அவர் பத்திரிகையாளராக இருந்ததுதான். இதேமாதிரி ஆரம்பக் காலப் பத்திரிகைத் தொழில் அனுபவம் சொ.வி.க்கும் உதவியிருக்க வேண்டும். அந்தக் காலத்தில் பிரபலமாகிக்கொண்டிருந்த பொழுதுபோக்குப் பத்திரிகையான ‘ஆனந்த விகட’னிலும் அவர் ஏதோ எழுதி வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. சிறுகதைகள் எழுதுவது என்பதும், அரசியல், நாட்டு நடப்பு விஷயங்கள் பற்றிக் குறிப்புகள் எழுதுவதுபோலப் பத்திரிகைகளில் இன்றியமையாத விஷயம். பல மோபாஸான் கதைகளைப் புதுமைப்பித்தன் தழுவி ‘ஊழிய’னில் எழுதி வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தழுவல் பழக்கம் அவரைக் கடைசிவரை விடவில்லை என்றும் சொல்லலாம். தழுவலை ஒரு இலக்கிய முறையாகவே, ஒரு வெற்றிகரமான பத்திரிகைக் கோஷ்டி அப்பொழுது கைக்கொண்டிருந்தது. (கல்கி, துமிலன், தேவன், றாலி). சொல்லியும், சொல்லாமலும், பல நல்ல கதைகளையும், மட்டமான கதைகளையும் தழுவல் செய்து தங்கள் பெயரில் போட்டுக்கொள்வது என்பது தமிழ்நாட்டில் ஒரு சாதாரணமான பழக்கமாக இருந்தது. ஒருசிலர் மூல ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னார்கள். பலர் மூல ஆசிரியர்களின் பெயர்களைச் சொல்லாமலே, எல்லாம் தங்கள் சொந்தக் கற்பனையே போலப் பாசாங்கு பண்ணிப் புகழ் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். புதுமைப்பித்தன் பிற்காலத்தில் தழுவல்காரர்களையும், தழுவல் கட்சியையும் வன்மையாகக் கண்டித்தாலும்கூட அவசியம் நேர்ந்தபோது; தன் சொந்தக் கற்பனை ஓடாத சில சமயங்களில் சில கதைகளைப் பெயர் சொல்லாமலும்கூடத் தழுவி எழுதியதுண்டு. ஆனால், தழுவல்காரர்களின் கற்பனை வறட்சியைப் போலப் புதுமைப்பித்தனுக்குக் கற்பனை வறட்சி இல்லை என்பது நிதர்சனமாகத் தெரிகிற ஒரு காரியம். கதை சொல்லும் மேன்மையும், சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பது போலத் தமிழில், இந்த ஒரு நூறாண்டில், வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாமே அவர் கற்பனைத் திறனுக்கும், கதை சொல்லும் மேன்மைக்கும் சான்றுகள். ஆகையினால், அவர் செய்த சில தழுவல்களைச் சுட்டிக்காட்டி அவரும், தழுவல்களால் மட்டும் பெயர்பெற்ற மற்றவர்களும் ஒன்றுதான் என்று சொல்லுகிற ஒரு கூட்டம் சமீபகாலத்தில் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இந்தக் கூச்சல், விமர்சனமல்ல. இதற்கு அர்த்தம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தழுவல் தவிர வேறு எந்தவிதமான எழுத்தும் இல்லாதவர்களையும், புதுமைப்பித்தனையும் சமமாகக் காட்டுவது ‘விஷமமான’ ஒரு முயற்சி.

ஆங்கில அறிவு தந்த இலக்கியப் பரிச்சயத்துடன் சொ. விருத்தாசலத்திற்குத் திருநெல்வேலிக்காரர் என்பதனால் (தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களுக்கு, அதுவும் முக்கியமாகப் பிராம்மணர்களுக்கு, இல்லாத ஒரு தமிழ் மரபு அறிவு ஏற்பட்டிருந்தது என்பது தெரிகிறது. சொ.வி. விஷயத்தில் இது அதிகமாகச் சைவச் சார்பு பெற்றது என்பது வெளிப்படை. நான் அவரைச் சந்தித்த காலத்தில் அவர் சித்தர் பாடல்கள் - முக்கியமாகச் சிவவாக்கியர் - மற்றும் கம்பராமாயணம் - முக்கியமாக யுத்த காண்டம், - மற்றும் கலிங்கத்துப்பரணி, திருமந்திரம் என்று பேசிக்கொண்டிருப்பார். என்னைச் சில சமயங்களில் யுத்த காண்டத்திலுள்ள பாடல்களைப் படிக்கச் சொல்லுவார். எனக்கு அப்போதெல்லாம் தமிழில் அவ்வளவாகப் பரிச்சயம் கிடையாது. சந்தி பிரித்து யுத்த காண்டத்துப் பாடல்களைப் படிக்க நான் சிரமப்படுவது கண்டு என்னைக் கேலி செய்வார். ஆனால், ஒருபோதும் சந்தி பிரித்துச் சொல்லித்தரமாட்டார். அதற்கு அவருக்குப் பொறுமை கிடையாது. நானாகச் சந்திப் புதிரை விடுவிக்கவில்லை என்றால், “போதும் படித்தது. மூடிவிடு புஸ்தகத்தை” என்பார்.

தமிழில் இருந்தது போலவே அவருக்கு, பேச்சிலும் எழுத்திலும், சமஸ்கிருத வார்த்தைகள் பிரயோக விஷயத்திலும் ஒரு சாதுரியம் இருந்தது கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதுவும் திருநெல்வேலிக்காரர்களின் தினசரி வாழ்க்கை மரபிலிருந்து வந்ததுதான் என்று எண்ணுகிறேன். தமிழில் எழுதுகிற வேகமோ, கல்வியறிவோ, போதுமானது இல்லாத காலத்தில் நான் ‘ஆட்சேபம்’ என்று எழுதுவதா, ‘ஆட்சேபனை’ என்று எழுதுவதா என்று சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கின்ற பொழுது, இந்த மாதிரியெல்லாம் சந்தேகம் இல்லாதவராக அவர் இருந்தது எனக்கு அதிசயமாகவே தோன்றிற்று. இதே மாதிரியான ஒரு லாவகத்தை அவர் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப்படுத்துவதிலும் காட்டியதாக அவருடைய சக பத்திரிகையாளர்கள் (‘தினசரி’, ‘தினமணி’) எனக்குச் சொன்னதுண்டு. சில சமயம் பெருமையாகவும் சொல்லுவார்கள். சில சமயம் சொ.வி.யைக் கேலி செய்கிற மாதிரியும் சொல்லுவார்கள்.

நான் அவரோடு பழகிய காலத்தில் அவர் படித்த நூல்கள் சில எனக்கு நினைவுக்கு வருகின்றன. நாவல், சிறுகதைகள் இவை பற்றி மட்டும் சொல்லுகிறேன். முதல் தடவை அவரை ‘மணிக்கொடி’ காரியாலயத்தில் சந்தித்தபோது என் கையிலிருந்த ‘அப்ஸல்யூட் அட் லார்ஜ்’ என்கிற காரல் சப்பக் நாவலைப் ‘படித்துவிட்டுத் திருப்பித் தருகிறேன்’ என்று வாங்கிப் போனார். அவரிடம் போன என் புஸ்தகங்கள் எதுவும் என்னிடம் திரும்பி வந்ததில்லை. அந்தக் காலத்தில் புஸ்தகங்களை, புதுசானாலும், பழசானாலும் அதிக விலை கொடுக்காமல் வாங்கமுடியும். என் தகப்பனார் தயவில் நான் ஒரே நூலை இரண்டு பிரதியாக வாங்குவதற்கும் சக்தி படைத்தவனாக இருந்தேன். கொடுத்த புஸ்தகங்களைத் திருப்பி வாங்கிக்கொள்ள வேண்டுமென்று அந்தக் காலத்தில் நான் அதிகமாகக் கவலைப்பட்டதில்லை. அதுவும் சொ.வி.க்குக் கொடுப்பதில் திருப்திதான்.

ஸ்டீபன் ஸ்வெய்க் (Stephen Zweig), அர்னால்ட் ஸ்வெய்க் (Arnold Zweig) இரண்டு ஜெர்மன் நாவல், சிறுகதை ஆசிரியர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தவர் புதுமைப்பித்தன்தான். அதேபோல வில்லியம் ஸராயனின் [William Saroyan] ‘த டாரிங் எங் மேன் ஆன் த பிளையிங் டிரப்பீஸ்’ [The Daring Young Man on the Flying Trapeze] என்கிற கதைத்தொகுப்பு வெளிவந்ததும் அதை வாங்கிப் படித்துவிட்டு, என்னையும் வாங்கிப் படி என்று அவர் உற்சாகமூட்டியது எனக்கு நினைவிருக்கிறது. டி. எஃப். போவிஸ் [T. F. Powys] என்பவர் எழுதிய ‘பேபில்ஸ்’ [Fables] என்கிற சிறுகதைத் தொகுப்பும், ‘மிஸ்டர் வெஸ்டன்ஸ் குட் வைன்’ [Mr. Weston's Good Wine] என்ற நாவலும் அவர் விரும்பிப் படித்த நூல்கள் என்று சொல்லலாம். ‘மிஸ்டர் வெஸ்டன்ஸ் குட் வைன்’ என்ற நாவலின் தாக்கத்தில்தான் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ எழுதப்பட்டது. ஆனால், இரண்டிற்கும் அமைப்பிலும், நோக்கிலும், கருத்திலும் எவ்வளவு வித்தியாசம் என்று இரண்டையும் படித்துப் பார்த்திருப்பவர்களுக்குத் தெரியும். சிறுகதை, நாவல் என்கிற வித்தியாசத்துடன், புதுமைப்பித்தனின் மேதாவிலாசத்தினால் போவிஸின் கிறிஸ்துவக் கடவுள் தென்னாடுடைய சிவனே ஆகிவிடுகிறார்! ஒரு புதிய தத்துவ தரிசனமே உதயமாகிவிடுகிறது புதுமைப்பித்தனின் கதையில். புதுமைப்பித்தனின் மரபுசால் கைவண்ணத்தை இந்தக் கதையில் முழுமையாகக் காண்கிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. மரபோடு ஒட்டியே சில புதுமை, புரட்சிகளையும் செய்துகாட்டுகிறார் சொ.வி.. போவிஸின் நாவலில் கிறிஸ்துவ மரபிற்கு அப்பாற்பட்ட விஷயம் எதுவும் இல்லை.

போவிஸ் சகோதரர்களில் இன்னொருவரான லெவலின் போவிஸ் [Llewelyn Powys] என்பவர் எழுதிய ‘எபனி அண்ட் ஐவரி’ [Ebony and Ivory] என்கிற சிறுகதைத் தொகுப்பையும் விரும்பிப் படித்தார் சொ.வி. என்று எனக்குத் தெரியும். புதுமைப்பித்தனுடையதைப் போலவே கசப்புக் கலந்த ஒரு சிரிப்பு லெவலின் போவிஸினுடையது. அந்தத் தொகுப்பில் ஒரு கதை எனக்கு நினைவுக்கு வருகிறது. அதைப் புதுமைப்பித்தனேகூட எழுதியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். புதுமைப்பித்தனின் ‘பாவ’த்தை தத்ரூபமாகக் காட்டுகிற கதை அது. ‘ஸ்பெரிக் லாஃப்டர்’ (Spheric Laughter) என்பது கதையின் தலைப்பு. ‘நக்ஷத்திரங்கள் சிரித்தன’ என்றும் மொழிபெயர்க்கலாம். புயலில் அகப்பட்டுக்கொண்டு, வீடு திரும்ப அவஸ்தைப்பட்ட ஒரு கிராமத்து அழகியை, தெருவோடு போகிற ஒரு வாலிபன் காப்பாற்றி ஜாக்கிரதையாக வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கிறான். முரட்டுக் கணவன் அந்தப் பெண்ணை, “அந்த வாலிபனுடன் ஏன் வந்தாய்?” என்று போட்டு அடிக்கிறான். இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வாலிபன், ‘இவள் இப்படிக் காரணமில்லாமலே சந்தேகத்தில் அடிபடுவாள் என்று தெரிந்திருந்தால் நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டிருந்திருக்கலாமே... நக்ஷத்திரங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றன’ என்று மனம் வருந்துகிறான் என்று கதை. இதுபோலப் பல கதைகள், புதுமைப்பித்தனே எழுதியிருக்கக்கூடிய கதைகள் என்று சொல்லக்கூடியவை பல லெவனின் போவிஸின் ‘எபனி அண்ட் ஐவரி’ என்ற நூலில் காணக்கிடைக்கின்றன. இதுவும் பென்குயின் நூலாக வந்த தொகுப்புதான். ஒரு ஆசை அபூர்த்தி, விரக்தி, ஒரு சினிகல் [Cynical] நிர்தாட்சண்யம், தர்மம் என்று சொல்லப்படுவதின் லேசான மறுப்பு - இவை புதுமைப்பித்தனுக்கும், லெவனின் போவிஸிக்கும் பொதுவான விஷயங்கள். லெவனின் போவிஸினால் புதுமைப்பித்தன் பாதிக்கப்பட்டார் என்றுகூடச் சொல்ல முடியாது. ஏனென்றால், சுபாவமாகவே புதுமைப்பித்தனுக்கு உள்ள பார்வையின் ஒரு பகுதியை இந்த ஆங்கில ஆசிரியரும் கொண்டிருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். இருவரும் வேறு வேறு உலகங்களைப்பற்றி எழுதினார்கள்.

அண்டன் செக்காவ் [Anton Chekhov], எட்கர் ஆலன் போ [Edgar Allan Poe], கை. டி. மாப்பஸான் [Guy de Maupassant] மூவரையுமே புதுமைப்பித்தன் நன்றாகப் படித்திருந்தார். அம்ப்ரோஸ் பெய்ர்ஸ் [Ambrose Bierce], பிரேங் ஆர் ஸ்டாக்டன் [Frank R. Stockton], பிரெட் ஹார்டே [Bret Harte] முதலியவர்களின் சிறுகதைகளைப் படித்து அவை பற்றிப் பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பேசியிருக்கிறோம். ‘கிரேட் ஷார்ட் ஸ்டோரிஸ் ஆப் த வோர்ல்டு’ [The Worlds Greatest Short Stories] என்கிற ஒரு நூலும் (இலண்டன்), அதேபோல, அமெரிக்கப் பதிப்பான ‘த வோர்ல்டு புக் ஆப் ஷார்ட் ஸ்டோரிஸ்’ [The World Book of Short Stories] என்பதில் இருபது பாகங்களில் ஒரு மூன்று பாகங்களும் எங்களுக்கு மூர் மார்க்கெட்டில் மலிவு விலையில் கிடைத்தன. அவற்றில் பல ஸ்பானிய, இத்தாலிய, ஜெர்மன், டர்க்கிஷ், அரபிக் கதைகளைப் படித்து விவாதித்ததும் நினைவிற்கு வருகிறது. இரண்டாவது நூலின் மற்றப் பாகங்களும் கிடைக்குமோ என்று தேடித் துருவிப் பார்த்ததும் ஞாபகமிருக்கிறது. ஸ்லோகப் [Sologub], ஸ்செட்ரின் [Shchedrin] என்கிற ரஷ்ய ஆசிரியர்களின் உருவகக் கதைகள் பல இரண்டு தொகுதிகளாகக் கிடைத்தன. இந்த மாதிரி ‘பேபில்ஸ்’ [Fables] எழுதவேண்டுமென்று சொ.வி. ஆசைப்பட்டதும் நினைவிருக்கிறது. ஆனால், அவர் எழுதவில்லை.

சொ.வி.க்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர்களில் தாமஸ் மான் [Thomas Mann] என்கிற ஜெர்மன் ஆசிரியரும் ஒருவர். ‘பட்டன்புரூக்ஸ்’ [Buddenbrooks], ‘மந்திர மலை’ [Magic Mountain] முதலிய நாவல்களுடன், ‘ஸ்டோரிஸ் ஆப் திரி டிகேட்ஸ்’ [Stories of Three Decades] என்ற சிறுகதைகளையும் பற்றிப் பல நாட்கள் பேசியது நினைவிருக்கிறது. பஜாஸ்ஸோ என்ற ஒரு கோமாளியின் கதை அவருக்கும் எனக்கும் மிகவும் பிடித்ததாக இருந்தது. ஒரு பிரதர் சிஸ்டர் இன்செஸ்ட் கதையையும் ரசித்தது நினைவிற்கு வருகிறது. ஃபிரான்ஸ் காஃப்காவின் [Franz Kafka] கதைகள் ஒரு தொகுப்பு வெளிவந்து கண்ணில் பட்டதும், மூர் மார்க்கெட் வி. ஸி. வெங்கடேசனிடம் இரண்டு பிரதிகள் வாங்கி ஒரு பிரதியைப் புதுமைப்பித்தனிடம் கொடுத்ததும் நினைவில் இருக்கிறது. காஃப்காவின் கதைகளைப் படித்தவுடன் பாராட்டியவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர். அந்தக் காலத்தில், 39, 40இல் காஃப்காவின் பெயரோ, மேதமையோ பரவலாகத் தெரிந்திருக்கவில்லை. ஜேம்ஸ் ஜாய்ஸின் [James Joyce] ‘டப்ளினர்ஸ்’ (Dubliners), ‘ஏ போர்ட்ரெய்ட் ஆப் த ஆர்டிஸ்ட் அஸ் ஏ யங் மேன்’ [A Portrait of the Artist as a Young Man] என்கிற இரண்டு நூல்களையும் இரண்டு மூன்று தடவைகளாவது படித்திருப்பார் புதுமைப்பித்தன் என்று எண்ணுகிறேன். ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘உலிஸெஸ்’ [Ulysses] அப்போதுதான் சென்னையில் கிடைக்க ஆரம்பித்திருந்தது. மாடர்ன் லைப்ரரி ஜைன்ட் பதிப்பில் வாங்கிப் புதுமைப்பித்தன் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

ஹான்ஸ் பாலெடா [Hans Fallada] என்பவர் எழுதிய ‘லிட்டில் மேன் வாட் நௌ’ [Little Man, What Now?] என்கிற நாவலைச் சொ.வி. பிரமாதமாகப் புகழ்ந்து கேட்டிருக்கிறேன். நானும் படித்து மகிழ்ந்த புஸ்தகம்தான் அது. அதேபோல அதே ஆசிரியரின் ‘ஹூ ஒன்ஸ் ஈட்ஸ் அவுட் ஆப் த டின் பௌல்’ [Who Once Eats Out of the Tin Bowl] என்கிற நாவலையும், பல சிறுகதைகளையும் பாராட்டி புதுமைப்பித்தன் கூறியதுண்டு. இந்த ஆசிரியர் ஜெர்மானியர். அடால்ப் ஹிட்லரின் நாஜிக் கட்சியை ஆதரித்தவர் என்பதற்காகக் கெட்ட பெயர் பெற்றவர். 1945க்குப் பிறகு இவர் பெயரை யாரும் சொல்லுவதில்லை. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த கதாசிரியர். இவர் சிறுகதைகளில் ஒன்றைப் புதுமைப்பித்தன் தன் ‘உலகத்துச் சிறுகதைகள்’ தொகுப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். இதேபோல நட் ஹம்ஸன் [Knut Hamsun] என்கிற நார்வீஜிய நாவல், சிறுகதாசிரியரையும் படித்திருந்தார் புதுமைப்பித்தன். இவரும் நாஜி ஆதரவாளராக இருந்தவர்தான்.

ஆங்கில இலக்கியாசிரியர்களின் சிறுகதைகளைத் தாங்கி வந்த ‘ஆர்கஸி’ (Argosy) என்கிற மாதாந்திரப் பத்திரிகையில் பல ஆங்கில ஆசிரியர்களை மாதாமாதம் படிப்பது என்பது வழக்கம். இந்த ‘ஆர்கஸி’ இலக்கியத்தர நிர்ணய அளவில் மணிக்கொடிக்காரர்களுக்குப் பொதுவாக மிகவும் உபயோகப்பட்ட பத்திரிகை. அதிகமாக ஆங்கிலப் பழக்கம் இல்லாத ராமையாகூட ‘ஆர்கஸி’ பத்திரிகையைத்தான் தன் சிறுகதைப் பத்திரிகையான ‘மணிக்கொடி'க்கு முன்மாதிரியாகச் சொல்லுவார். அடாஸ் ஹிக்ஸ்லே (Aldous Huxley), ஆர்னால்ட் பென்னட் (Arnold Bennett), ஹில்லைர் பெல்லாக் (Hilaire Belloc), ஈ.வி. லூகாஸ் (E. V. Lucas), ஏ. பி. ஹெர்பெர்ட் (A. P. Herbert), ஜேக்கப்ஸ் (W. W. Jacobs), ஏ. ஈ கப்பார்ட் (A. E. Coppard) போன்ற பல ஆசிரியர்களின் கதைகளைத் தனிக்கதைகளாகவும், தொகுப்புகளாகவும் படித்திருக்கிறோம். சொ.வி.க்கு பி. ஜி. வுட்ஹவுஸ் [P. G. Wodehouse], ஸ்டீபன் லீகாக் [Stephen Leacock] இருவரையும் அதிகம் பிடிக்காது. சூப்பர்பீஸியல் [Superficial] என்று அவர்களைப் பற்றி அவர் சொல்லுவார். மாறாக எட்கர் வாலஸ் [Edgar Wallace] நாவல்கள் பலவற்றை விரும்பிப் படித்திருக்கிறார். ஜே. பி. பிரிஸ்ட்லே [J. B. Priestley] என்பவர் எழுதிய நாவல்கள், நாடகங்களையும், காலம் பற்றி அவர் கருத்துகளையும் எடுத்துச் சொல்லுவார். 1937-38இல் வெளிவந்த லயனல் பிரிட்டன் [Lionel Britton] என்பவர் எழுதிய ‘லவ் அண்ட் ஹங்கர்’ [Hunger and Love] என்கிற பெரிய நாவலின் தலைப்பை மாத்திரம் பார்த்துவிட்டு தன் கதை ஒன்றிற்கு அந்தத் தலைப்பை மாற்றி அழகாக அமைத்து உபயோகித்துக்கொண்டார் - ‘கவந்தனும் காமமும்’ என்பது அவர் கதையின் தலைப்பு. மேரி ஷெல்லியின் [Mary Shelley] ‘பிராங்ஸ்டைன்’ [Frankenstein] அவருக்கு மிகவும் பிடித்த நூல். அதைச் சுருக்கி தமிழில் ‘பிரேத மனிதன்’ என்று எழுதியிருக்கிறார். பிரேம் ஸ்டோக்கர் [Bram Stoker] என்கிற அதிக இலக்கியத்தரமில்லாத ஆசிரியர் எழுதிய ‘ட்ராகுலா’ [Dracula] என்கிற திகில் நாவலைப் பல தடவைகள் படித்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும். ‘ரத்தக் காட்டேரி’ என்கிற விஷயத்தைப்பற்றி புதுமைப்பித்தன் ஒரு நிபுணத்துவத்துடன் பேசுவார்! ‘செவ்வாய் தோஷம்’, ‘காஞ்சனை’ முதலிய கதைகளில் இந்த விஷயத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். ‘ட்ராகுலா’ முதல் தடவையாக சினிமாப் படமாக சென்னைக்கு வந்தபோது பல தடவைகள் சொ.வி. போய்ப் பார்த்திருக்கிறார். மினர்வா தியேட்டரில் அது நடந்தபோது அவரும், நானும், கி.ரா.வும் போய்ப் பார்த்தோம். எனக்குப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால், சொ.வி. உற்சாகமாக, அதை நாலாவது தடவை பார்ப்பதாகச் சொன்னது நினைவிருக்கிறது! இதேபோல செரிடன் லிபானு [Sheridan Le Fanu] என்பவருடைய திகில் கதைகளையும், அவை அப்போது நூலாகச் சென்னையில் கிடைக்காததால் ‘ஆர்கஸி’ பத்திரிகைகளில் வந்ததைச் சேர்த்து வைத்திருந்தார். திகில் என்கிற அம்சமிருந்தாலும் பிரேம் ஸ்டோக்கரிலோ செரிடன் லிபானுவிலோ புதுமைப்பித்தனின் திகில் கதைகளில் கிடைக்கிற இலக்கிய அனுபவம் கிடைப்பதில்லை என்பதுதான் என் நினைப்பு. எட்கர் ஆலன் போவின் ‘பிட் அண்ட் த பெண்டுலம்’ [The Pit and the Pendulum], ‘லிஜியா’ [Ligeia], ‘த ஃபால் ஆப் த ஹவுஸ் ஆப் உஷர்’ [The Fall of the House of Usher], ‘காஸ்க் ஆப் த அம்மாண்டிலேடோ’ [The Cask of Amontillado] என்கிற கதைகளில் புதுமைப்பித்தனின் திகில் கதைகளில் கிடைக்கிற இலக்கிய அனுபவம் கிடைக்கிறது என்று சொல்லலாம். கடைசிக் கதையைப் புதுமைப்பித்தனே தனது ‘உலகத்துச் சிறுகதைக’ளில் மொழிபெயர்த்துச் சேர்த்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில், எனக்குத் தெரிந்து, புதுமைப்பித்தன் அந்தக் காலத்தில் படித்த நூல்கள் எல்லாம் அடங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது. இன்னும் பல ஆசிரியர்கள், நூல்கள் சொல்லலாம். ஆனால், அவசியமில்லை என்று எண்ணுகிறேன். அவருடைய படிப்பு அதன் அளவில் விஸ்தாரமானது. படித்ததைச் சொந்தமாக்கிக்கொள்ளும் சக்தியும் அவருக்கு அதிகமாக இருந்தது என்று சொல்லலாம்.

தன்னோடு சமகாலத்தில் எழுதிய தமிழ் ஆசிரியர்கள் சிலரது சிறுகதைகள் பற்றியும் அவர் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். முக்கியமாக ‘குளத்தங்கரை அரசமரம்’, ‘நக்ஷத்திரக் குழந்தைகள்', ‘சிவசைலம்', ‘எங்கிருந்தோ வந்தான்’ - இப்படிப் பலவற்றைச் சொல்லியிருக்கிறார். மௌனியைப் பற்றிக் கடைசிவரையில் திடமான நல்ல அபிப்பிராயம் இருந்தது என்பது பலருக்கும் தெரியும். அவர் அபிப்பிராயத்தை மதித்துத்தான் நானே மௌனியைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். பின்னர் எழுதத் தொடங்கியவர்களில் சிதம்பர ரகுநாதன், கு. அழகிரிசாமி இவர்கள் ‘பிரசண்ட விகட’னில் எழுதி வெளியிட்ட கதைகளை என்னிடம் தந்து, “படித்துப் பாரும் வேய்! - நம்ம பையன்கள்” என்று சொன்னார் என்பது நினைவில் இருக்கிறது. இது 1940-41இல் என்று எண்ணுகிறேன்.

என் சிறுகதைகளையும், அப்போது வெளிவந்திருந்த சில நாவல்களையும் பற்றியும், பொதுவாக என் எழுத்துக்களைப் பற்றியும் புதுமைப்பித்தன் என்ன அபிப்பிராயம் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் கேட்டுக்கொண்டதில்லை. ‘முதற்சுடர்’, ‘ராகவன்’ என்கிற என் கதைகளைத் ‘தினமணி ஆண்டு மல’ரில் பிரசுரிக்கும்போது அவர் உற்சாகமாகப் பாராட்டினார் - அது வெறும் பதிப்பாசிரியர் தோரணையாகவும், மணிக்கொடி ‘முதல் அத்தியாய’ விவகாரமாகவும் இருக்கலாம். நான் எழுதிய சிறுகதைகளில் ‘வரவேற்பு’ என்பதும், ‘விதியும் மதிப்பும்’ என்பதும் தனக்குப் பிடித்திருந்ததாக என்னிடம் ஒருதரம் தானே சொன்னார். ‘தினமணி ஆண்டு மலர்’களில் நான் எழுதிய ‘இலக்கியச் சோலை’, ‘தமிழில் மறுமலர்ச்சி’ என்கிற ஆரம்ப விமர்சனக் கட்டுரைகளைப் பாராட்டியதுடன், “இதுமாதிரி நிறைய எழுதுங்களேன்” என்று சொன்னதும் ஞாபகம் இருக்கிறது. தாகூரைப்பற்றி நான் ஒரு நூல் எழுத ஒப்புக்கொண்டது பற்றி அவருக்குச் சம்மதமில்லை. அது வெளிவந்ததும் (Alliance) அதைத் தானே நேரடியாகக் கண்டனம் செய்யாமல் வேறு ஒரு பெயரில் மதிப்புரை எழுதினார். ‘ஆண்டாள்’ என்கிற பெயரில் ‘தினமணி ஆண்டு மல’ருக்கு எழுதிக் கொடுத்த கவிதையை மிகவும் பாராட்டியதாக நினைவிருக்கிறது. ‘அழகி’ என்கிற என் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்ததும் ஒரு பிரதியில் ‘குருவினிடமிருந்து சிஷ்யனுக்கா? சிஷ்யனிடமிருந்து குருவுக்கா?’ என்று எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். அந்தப் பகுதியைக் கிழத்தெறிந்துவிட்டு, “குரு - சிஷ்யன் என்றால் இருவரும் முட்டாள்கள் என்று அர்த்தம்” என்று வியாக்யானம் சொன்னது ஞாபகமிருக்கிறது.

சொ. விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன் இறந்து சற்றேறக்குறைய 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவரோடு சமகாலத்தில் ஓரளவு ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய இன்னொரு சிறுகதாசிரியரான கு. ப. ராஜகோபாலன் இறந்து நாற்பத்தி நாலு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த அரை நூற்றாண்டில் அவர்கள் தொடர்ந்து உயிர் வைத்துகொண்டு வாழ்ந்துகொண்டிருந்தால் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று யோசிக்கும்போது இலக்கியக் கர்த்தாக்கள், அதுவும், சொ.வி. போன்ற மேதைகள், கு.ப.ரா போன்ற இலக்கியத் திறன் உள்ளவர்கள் அதிக வயது இல்லாமல் இறந்துவிடுவதுதான் நல்லதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. ‘தெய்வத்துக்கு வேண்டியவர்கள் அல்பாயுசிலே போய்விடுவார்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்கிறது. உலக நியாயம், ‘நீண்ட ஆயுள் - அதிர்ஷ்டம்' என்று இருக்கலாம். ஆனால், ‘உலக நியாயத்திற்கு அப்பால் தெய்வ நியாயம் என்று ஒன்று இருக்கிறதே’ என்று யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. பாரதியார்கூட முப்பத்தியொன்பது வயதில் காலமானதை ஒரு தெய்வ நியாயமாகத்தான் சொல்லவேண்டும். அதற்கு முன் ராஜமய்யர் தனது இருபத்தியாறாவது வயதிலேயே காலமானவர். இலக்கியத்தில், திறமைக்கும், மேதைமைக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் சம்பந்தமே இல்லாமல்தான் இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுகொடுக்க முடிவதில்லை என்பதுடன் தமிழ்நாட்டின் சூழ்நிலை இலக்கியம், கலை என்கிற நினைப்புகள் இல்லாத, பண்பாடற்ற சூழ்நிலையாக இருக்கிறது என்பதனால், இவர்கள் இருந்து இன்னும் கஷ்டப்படாமல் போனது நல்லதுதானே என்று கேட்கத் தோன்றுகிறது. இப்படி நானும் போய்விட முடியவில்லையே என்ற ஏக்கமும் எனக்கு உண்டு. இது ஒரு ஹார்ட்லெஸ் ஸ்டேட்மென்ட் என்று தோன்றினாலும்கூடத் தமிழர்கள் எந்த விதத்தில் புதுமைப்பித்தன் போன்ற மேதைகளைப் படைக்கத் தகுதியுள்ளவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறார்களா என்று கேட்பது நியாயமான கேள்வி என்றுதான் சொல்லவேண்டும்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...