Skip to main content

புதுமையும் பித்தமும் - 1 | க. நா. சுப்ரமண்யம்

புதுமைப்பித்தன் கதைகள் எல்லாவற்றையும் ஒரே நூலாக வெளியிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் வெளிவருகிற புஸ்தகம் இது. அவர் எழுதிய கதைகளில் மிகச் சிறந்தவையெல்லாம் இதில் அடங்கியிருக்கின்றன. தொண்ணூற்றுச் சொச்சம் கதைகளில் ஒரு முப்பதுக்கும் அதிகமாகவே சிறந்த கதைகளாகவும், இன்னும் 30 கதைகளுக்கு அதிகமாக நல்ல கதைகளாகவும், மற்றவை சாதாரண தரத்தில் அமைந்தவை என்றும் பொதுவாகச் சொல்லலாம். இந்தப் புத்தகத்தில் அடங்காமல் விட்டுப்போன புதுமைப்பித்தன் எழுதிய சிறுகதைகள் சில - ஒன்றிரண்டு இருக்கலாம். அதிகம் போனால் நாலைந்தும் இருக்கலாம் - அவை கிடைத்தால் அவற்றையும் மறுபதிப்பில் சேர்த்துக்கொள்வார்கள் பிரசுரகர்த்தாக்கள் என்று நாம் நம்பலாம்.

சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை புதுமைப்பித்தன். சில ஓரங்க நாடகங்கள், மற்றும் இலக்கியப் பொதுக்கட்டுரைகள், வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்ற புனைபெயரில் சில கவிதைகள், இவை தவிர பல மொழிபெயர்ப்புகள் (அனேகமாகச் சிறுகதைகள், ‘பிரேத மனிதன்’ என்கிற மேரி ஷெல்லியின் விஞ்ஞான நாவல், குப்ரினின் ‘யாமா’வில் ஒரு பகுதி. இவற்றை மொழிபெயர்த்தார். அவருக்கு ஆங்கிலம் தவிர வேறு ஐரோப்பிய மொழிகள் தெரியாது என்பதனால் இவற்றையெல்லாம் ஆங்கில மொழி மூலம்தான் மொழிபெயர்த்தார்.) இவை தவிர ‘ஃபாஸிஸ்ட் ஜடாமுனி’ என்று முஸ்ஸாலோனி என்கிற இத்தாலிய சர்வாதிகாரியைப் பற்றி ஒரு ஜீவிய சரித்திரம், மற்றும் பல சந்தர்ப்பங்களில் பல அரசியல் கட்டுரைகள் (‘சூறாவளி’யில் இரண்டாவது உலகப்போர் வருமுன் வாராவாரம் ஐந்து மாதங்களுக்கு மேல் எழுதிய ‘அங்கே’ என்கிற ஐரோப்பிய அரசியல் அரங்கக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.) மற்றும் பல புது நூல்கள் பற்றித் ‘தினமணி’ மற்றும் சில பத்திரிகைகளில் அவ்வப்போது ஆணித்தரமான மதிப்புரைகள்! ‘ரசமட்டம்’ என்ற பெயரில் கல்கி கண்டனக் கட்டுரைகள், ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள் (‘உலக அரங்கு’ என்கிற பெயரில்), பல நண்பர்களுக்கு எழுதிய இலக்கியத்தரமான கடிதங்கள் முதலியவற்றை அவர் எழுதியிருக்கிறார்.

‘மேன் ஆப் லெட்டர்ஸ்’ என்று குறிப்பிடத்தக்க அளவில் அவர் பல துறைகளிலும் செயல்பட்டிருக்கிறார். கொஞ்ச காலம்தான் உயிர் வாழ்ந்தார். நாற்பத்தியிரண்டு வருஷங்களே உயிர் வாழ்ந்த அவர் இலக்கியத்தில் செயல்பட்ட காலம் பதினைந்தே ஆண்டுகள்தான் என்றாலும் அவர் எழுத்துகள் சாதனையிலும், விஸ்தீரணத்திலும், ஆழத்திலும் அதிகமானவைதான். உத்தியோக வாழ்க்கையில் பெரும்பகுதியும், தினசரிச் செய்திகளை மொழிபெயர்ப்பது, அதற்காக அந்த நாட்களில் பொதுவாகப் பலருக்கும் கிடைத்தது போல 30, 40 என்ற மாதச் சம்பளம், கிடைத்த தேதியில் பெறுவது - இதுதான் வாழ்க்கை முறையாக அவருக்கு அமைந்தது. காரைக்குடியில்
‘ஊழிய’னில் சில காலம் சேவைக்குப் பிறகு சென்னை வந்து டி. எஸ். சொக்கலிங்கம் கோஷ்டியில் சேர்ந்து பல ஆண்டுகள் ‘தினமணி’யிலும்
, சில ஆண்டுகள் ‘தினசரி’யிலும் பணி செய்தார். கடைசி நாலைந்து ஆண்டுகளில் செய்திப் பத்திரிகை வேலையிலிருந்து விடுதலை பெற்று ‘சோதனை’ என்று இலக்கியத்திற்கு ஒரு பத்திரிகை நடத்தவேண்டுமென்றும், சினிமாவில் சேர்ந்து சாதனைகள் புரியவேண்டுமென்றும் கனவுகள் கண்டார். ‘பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்’ என்று அவரே சினிமா எடுப்பதாக ஆரம்பித்து சரிப்பட்டு வராமல், எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த கடைசிப் படமான ‘ராஜமுக்தி’க்கு வசனம் எழுதினார். பத்திரிகை வேலையைவிட அதிலும் அதிகமாகப் பணம் வந்ததாகத் தெரியவில்லை.

‘ராஜமுக்தி’ படத்திற்காகப் புனா போய்விட்டுத் திரும்பித் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, உடல்நிலை ஏற்கெனவே மோசமானது மிகவும் கெட்டுவிட்டது. திருவனந்தபுரத்தில் அவர் கடைசி நாட்கள் ஆஸ்பத்திரியில் கழிந்தன. சிதம்பரம் என்ற ஒரு திருவனந்தபுரம் நண்பரும், சிதம்பர ரகுநாதனும் உடனிருந்து கடைசிவரை உதவியதாகத் தெரிகிறது. இடையில் ஜெமினி ஸ்டூடியோ வாசனுக்காக எழுதிய ‘ஒளவையார்’ சினிமா ஸ்கிரிப்ட் இலக்கியத்தரமாக அமைந்தும் ஏற்றுக்கொள்ளப்படாததைக் குறிப்பிட வேண்டும். சினிமாவில் அசாதாரணமானது, மேன்மையானது எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பது அன்றுமுதல் இன்றுவரை தொடருகிற ஒரு நிலைமை.

இப்படியெல்லாம் பார்க்கும்போது, தன் நாற்பத்தியிரண்டாவது வயதில், 1948இல் இறந்துவிட்ட சொ. விருத்தாசலம் என்பவர் - ஒல்லியான மனிதர், பற்களும், மார்பு எலும்புகளும் எண்ணிவிடக்கூடிய அளவில் வெளியில் தெரியும். குழந்தைப் பிள்ளைத்தனமாக, காரணமில்லாமலேகூட கடகடவென்று சிரிக்கும் சுபாவம் படைத்த இந்த மனிதர் - முழுவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆண்டுகள் கணக்கில் இல்லாவிட்டாலும், நிறைவில், சாதனைகளில், தெரிந்த நண்பர்கள் மனங்களில், அவரை வாசித்த வாசகர்கள் உள்ளங்களில், புரிந்துகொண்டவர்கள் நினைப்பில் பூரண வாழ்வு வாழ்ந்தவர் என்றே சொல்லவேண்டும். (புதுமைப்பித்தன் செய்த காரியங்களில் ஒன்றை மேலே சொன்ன பட்டியலில் குறிப்பிட விட்டுவிட்டேன். மூன்று ஆண்டுகள் பொறுப்பேற்று அவர் ‘தினமணி’யில் ஆண்டு மலர்கள் தயாரித்தார். வளரும் தமிழ் இலக்கியத்திற்கு வழிகாட்டிய மலர்கள் அவை. அவையும் புதுமைப்பித்தன் சாதனைகளில் குறிப்பிடப்படவேண்டியவை.)

நான் 1935 - 36இல் தமிழில் எழுதத் தொடங்கலாமா என்று தயங்கிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு எழுதத் தெம்பு கொடுத்தது புதுமைப்பித்தனும், அவர் கதைகளும்தான் என்று சொல்வது மிகையே ஆகாது. தமிழில் நான் முதன்முதல் படித்த சிறுகதை வத்தலகுண்டு எஸ். ராமையா என்பவர் ‘காந்தி’ பத்திரிகையில் எழுதிய ‘வார்ப்படம்’ என்ற கதை. அப்போது வத்தலகுண்டு என்கிற கிராமம் தமிழ்நாட்டில் இருப்பது எனக்குத் தெரியாது. ராமையா என்பதும் தெலுங்குப் பெயரோ என்று எனக்குச் சந்தேகம். அந்தக் கதையைப்போல என்னாலும் தமிழில் எழுத இயலும் என்று தோன்றியது. இரண்டாவது படித்த கதை புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’தான் என்று நினைக்கிறேன். ராமையாவின் ‘மணிக்கொடி’யில் 1935இல் வெளிவந்தது. அதைப்போன்ற கதை உலகத்துச் சிறுகதைகளிலேயே வெகுசிலதான் தேடினாலும் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றியது. நான் ராமையாவைத் தேடிக்கொண்டு போய் டக்கர்ஸ் லேனில் ‘மணிக்கொடி’ ஆபீஸில் அவரைச் சந்தித்தபோது அவர் ‘சிற்பியின் நரகம்சிறுகதை வந்திருந்த ‘மணிக்கொடிஇதழ் ஒன்றை எனக்குப் படிக்கத் தந்தார். கலையென்பது மத விஷயத்துக்கு ஆதாரமாக உபயோகப்பட வேண்டும் என்கிற மரபுக் கருத்தைக் கண்டித்தும், கண்டிக்காமலும், ஓரளவுக்கு இரண்டு சித்தாந்தங்களுமே சரி என்று சொல்லுகிற மாதிரியும் அமைந்திருந்தது கதை. மேலெழுந்தவாரியாகப் படிக்கும்போது மதத்துக்கு அனுசரணையாகக் கலை இருப்பது சரியல்ல என்று ஆசிரியர் சொல்வது போலவும் இருந்தது. இதை மறுத்து நான் ஒரு கதை எழுதவேண்டுமென்று எண்ணினேன். ஆனால் ஏழாண்டுகளுக்குப் பிறகுதான் (‘தெய்வ ஜனனம்’) 1942இல் எழுத முடிந்தது. அதில் புதுமைப்பித்தனிலிருந்த பூரணத்துவம் வரவில்லை; த்வனியும் வரவில்லை என்பது எனக்குத் தெரிகிறது.

முதல் முதலாக நான் புதுமைப்பித்தனைச் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. 1936இல் ஜனவரி மாதத்தில் ஒருநாள் கடைசி வாரம் என்று நினைக்கிறேன் - பல்லும் பவிஷுமாக, திருநெல்வேலி ஜிப்பா (?) - அது திருநெல்வேலி ஜிப்பாதானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இப்போது சிதம்பர ரகுநாதனும் அதேமாதிரி ஜிப்பா அணிவதை நான் பார்க்கிறேன் - கடகடவென்று கல்லை ஏதோ பித்தளைப் பாத்திரத்தில் உருட்டிவிட்டது போன்ற அடித்தொண்டையிலிருந்து வந்த ஒரு சிரிப்பு. “உங்கள் கதை ‘சிற்பியின் நரகம்’ நன்றாக இருக்கிறது” என்று நான் சொன்னவுடன், “அப்படித்தான் இருக்கும் ராசாவே! என் கதைகள் எல்லாமே நன்றாகத்தான் இருக்கும்” என்று அகங்காரமில்லாத ஒரு நிச்சயத்துடன் அவர் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. என் கையில் காரல் சப்பக் [Karel Capek] என்கிற ஸெக்கோஸ்லோவேக்கிய நாவலாசிரியர் எழுதிய நாவல் இருந்தது. ‘அப்சலூட் அட் லார்ஜ்’ [Absolute at Large] என்கிற நாவல் என்று எண்ணுகிறேன். ‘நான் படித்துப் பார்க்கிறேன்’ என்று என் அனுமதியைக் கேட்காமலே என் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டுவிட்ட அவருடைய நெருக்கமும் எனக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.

அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு ஒரு நூறு தடவைகளாவது ‘சொ.வி’.யைச் சந்தித்திருப்பேன் என்று தோன்றுகிறது. சந்திப்புகள் குறுகிய கால அளவிலும், சில சந்திப்புகள் மணிக்கணக்கான நேரமும், சில நாட்கள் கணக்கிலும் இருக்கும். இடையில் ஒரு மூன்று மாதங்கள் 222, அங்கப்ப நாயக்கன் தெருவில் நானும், அவரும், கி.ரா.வும் ஒரே அறையில் வசித்தோம். வாசுதேவபுரத்தில் (திருவல்லிக்கேணி) அவர் குடியிருக்கும்போது இருபது, முப்பது நாட்கள் அவர் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டு சென்னையில் தங்கியிருந்திருக்கிறேன். நடுவில் ஒரு தடவை தஞ்சாவூரில் நான் இருக்கும்போது இரண்டு, மூன்று தினங்கள் என் மேலவீதி வீட்டில் அவர் வந்து தங்கியிருந்தார். அந்தச் சந்தர்ப்பம் அவர் திருவனந்தபுரம் போய்விட்டுச் சென்னை திரும்புகிற வழியில். சாப்பிடும்போது “பருப்பும், சாதமும் போதும்” என்று அவர் சொன்னது பற்றி என் மனைவி இன்னமும் ஆச்சரியப்பட்டுச் சொல்வதுண்டு. இடையில் ராமசாமி (மண்ணடித்) தெருவில், ராயப்பேட்டை ஹைரோடில் என்று அவர் குடியிருந்த பல வீடுகளிலும் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். புரசைவாக்கம் ஹைரோடில் 45, 46இல் ‘சந்திரோதயம்நடந்துகொண்டிருந்தபோது பழைய ‘மணிக்கொடிபகைப்புலத்தை மீண்டும் கொண்டுவர முடியுமா என்று பார்ப்பதற்காக, புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, பெரிய கிட்டப்பா, கணேச சாஸ்திரி, ராமரத்னம் முதலியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்திற்குப் பிறகு பேசிக்கொண்டிருந்தது ஞாபகமிருக்கிறது. இந்த விருந்திற்கு ஆர்யாவும், கி.ரா.வும் வராதது ஒரு குறை என்று புதுமைப்பித்தன் சொன்னது நினைவிற்கு வருகிறது.

நான் கடைசியாக அவரைச் சந்தித்ததை நினைவுபடுத்திப் பார்த்துக்கொள்ள முயலுகிறேன். ‘சந்திரோதயம்பத்திரிகை நின்றுபோன பிறகு 1947இல் ராயப்பேட்டை ஹைரோடில் அவருடன் பேசிக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது அவர் மனைவி கமலாம்பாள் ஊரிலில்லை. ஒய்.எம்.ஐ.ஏ. ரெஸ்டாரண்டில் (சமீப காலத்தில்தான் அது ராயப்பேட்டை ஹைரோடில் புதுக்கிளை திறந்திருந்தது என்று எண்ணுகிறேன்) காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தோம். தன் மனைவியை அழைத்துக்கொண்டு வர திருவனந்தபுரத்திற்கு அன்று மாலை கிளம்பப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்குள் கமலாம்பாளே ஊரிலிருந்து வந்துவிடவே நான் அரைமணிநேரம் இருந்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு போய்விட்டேன். அதற்குப் பிறகு இரண்டு வருஷத்திற்குள் அவர் இறந்துவிட்டார். புனேயிலிருந்து உடல்நலம் மோசமாகி அவர் திரும்பியதும், திருவனந்தபுரம் போனதும், நண்பர்கள் பி. வி. லோகநாதனும், சிதம்பர ரகுநாதனும் சொல்லி, எழுதித் தெரிந்துகொண்டதுதான்.

1936 முதல் 1947 வரையில் பழக்கம். சற்று நெருங்கிய பழக்கம் என்றுதான் சொல்லவேண்டும். இலக்கிய நண்பர்கள் என்கிற அளவில் நெருங்கிப் பழகினோம் என்று சொல்லலாம். அப்போதைய தமிழ் எழுத்தாளர்கள் பலருடனும் எனக்கு ஏற்பட்ட பழக்கத்தைவிட அதிக நெருக்கமானதாகத்தான் புதுமைப்பித்தனுடன் நான் பழக நேர்ந்தது. இந்த அளவிற்கு நெருக்கமான பழக்கம் எனக்கு 1942க்குப் பிறகு மௌனியுடனும் ஏற்பட்டது. எங்கள் பேச்சு அனேகமாக படித்த நூல்களையும், எழுதிய விஷயங்களைப் பற்றியும்தான் இருக்கும். சக எழுத்தாளர்களைப்பற்றி அதிகமாகப் பேச்சோ, வம்போ வளர்த்ததாக ஞாபகமில்லை. எங்களிடையே இலக்கிய உலக வம்பு மட்டும் போதுமான அளவு இருக்கும். 1937-38இலேயே மௌனியை, ‘சுவாரஸ்யமான மனிதர்; நீங்கள் சந்திக்க வேண்டும்’ என்று அவர் சொன்னது நினைவிருக்கிறது.

புஸ்தகங்கள் படிப்பதில் எங்கள் இருவருக்கும் ஆர்வம் அதிகம். ஆனால், புதுமைப்பித்தன் படிக்கிற முறையே அலாதியானது. நான் எந்தப் புஸ்தகத்தையும் வரிவிடாமல், ஒரே மூச்சில், ஆரம்ப முதல் இரவு எத்தனை நேரமானாலும் படித்து முடித்துவிட்டுத்தான் படுக்கப் போவேன். சொ.வி. எந்தப் புத்தகத்தையும் முழுதுமாகப் படித்ததாக எனக்கு நினைவில்லை. முதலில் கொஞ்சம், நடுவில் கொஞ்சம், கடைசியில் கொஞ்சம் என்று படித்துவிட்டு நூலின் விஷயத்தைப் பூரணமாகக் கிரஹித்துக்கொண்டுவிடுவார். எனக்கு எந்த நூலையும் முடிக்க நாலு மணிநேரமாவது ஆகும். அவர் ஒரு மணிநேரத்தில் படித்துவிடுவார். ஆனால் படித்த நூலைப்பற்றி அவர் என்னைவிடவும் அதிகமாக விஷயத்தைச் சொல்லுவார் என்பதை நான் கவனித்திருக்கிறேன். இந்தமாதிரிப் படித்துப் புரிந்துகொள்வதற்கும் ஒரு தனி லாவகம், பழக்கம் தேவை என்று எனக்குத் தோன்றும்.

புதுமைப்பித்தன் எழுதுவதும் கனவேகம்தான். இரண்டு மூன்று நீளக்கதைகள் எழுதும்போது நான் கூட இருந்து பார்த்திருக்கிறேன். எழுத்து அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் படிப்பதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். அவர் எழுத்தில் நீளக்கோடு போட்டாரானால் ‘தஎன்று அர்த்தம். சின்னக்கோடு போட்டாரானால் ‘கஎன்று அர்த்தம். எழுதியதைத் திருப்பிப் படிக்கமாட்டார். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘காஞ்சனை’, ‘அன்று இரவுபோன்ற கதைகளை ஒரு மணி, ஒன்றரை மணிநேரத்தில் அவர் எழுதி முடித்துவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். படித்துப் பார்க்கிறேன் என்று கேட்டால் தரமாட்டார். அவரும் திருப்பிப் படித்துப் பார்க்கமாட்டார். ஏதோ ஓர் இடத்தில், ‘என் கதையை முதலில் படிக்கும் வாசகன் நான்தான். அவசரமாக எழுதியதனால் எனக்கே அதில் பல விஷயங்கள் புதுமையாக இருக்கும்’ என்று அவர் எழுதியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல, வாசகர்களுக்கும் பலதும் புதுமையாகவும், உன்னதமான கலையாகவும் இருந்தது என்பதுதான் விசேஷம்.

***

(தொடர்ச்சி...)

'புதுமையும் பித்தமும்' (மின்னூல்)

https://amzn.to/444IAaD

புதுமையும் பித்தமும் (அச்சு நூல்)

https://tinyurl.com/mrzx48by

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந...

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...