க.நா.சு.வின் தொகுக்கப்படாத, மறுபதிப்பு காணாத படைப்புகள் அழிசி வெளியீடாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு ராணிதிலக் தொகுத்த ‘விசிறி’ சிறுகதைத் தொகுப்பும் ‘விமரிசனக்கலை’ கட்டுரைத் தொகுப்பும் வெளியாயின. அவற்றைத் தொடர்ந்து இன்னும் சில க.நா.சு. நூல்கள் வெளிவருகின்றன.
1. எமன்
சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் என இதுவரை தொகுக்கப்படாத பல்வகை படைப்புகளைத் தேடித் தொகுத்திருக்கிறார் 'காவிரி' இதழ் ஆசிரியர் விக்ரம். இந்நூலின் பின்னிணைப்பில் க.நா.சு.வின் அரிய புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
2. சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்
எழுத்து இதழில் க.நா.சு. எழுதிய தொடர் முதன்முறை நூலாகிறது. நிறைவுபெறாத இத்தொடரில் க.நா.சு. கட்டுரைகளுக்கு அப்போது வெளியான எதிர்வினைகளும் க.நா.சு. தேர்ந்தெடுத்த கதைகளும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
3. புதுமையும் பித்தமும்: ஆளுமை – படைப்பு – விவாதம்
புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. எழுதியவற்றின் தொகுப்பு. ஏற்கெனவே 2006ஆம் ஆண்டு வெளியான நூலின் விரிவாக்கப்பட்ட மறுபதிப்பு. புதிய கட்டுரைகளுடன் பு.பி. - க.நா.சு. இருவரும் பங்குகொண்ட விவாதப் பதிவுகளையும் உள்ளடக்கியது.
4. இலக்கிய அரசியல்
இது தொகுக்கப்படாத கட்டுரைகளின் திரட்டு. முப்பதுகளிலிருந்து எண்பதுகள்வரை க.நா.சு. பல்வேறு இதழ்களில் எழுதியவை. ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள் சிலவும் இந்நூலில் இடம்பெறுபவை. பல முக்கியமான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு.
5. படித்திருக்கிறீர்களா? (பாகம் 1)
சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் எழுதிய கட்டுரைத் தொடரின் முதல் பாகம். இதன் மறுபதிப்பு வெளிவந்துவிட்டது. அடுத்த பாகமும் விரைவில் வெளியாகும்.
6. கு.ப.ரா. என்கிற முழுமை
கு.ப.ரா. பற்றி க.நா.சு. எழுதிய கட்டுரைகளின் திரட்டு இது. இந்நூல் மின்னூலாக மட்டும் வெளியாகிறது. வெவ்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.
***
இவை தவிர, புத்தாண்டுக்கான திட்டத்தில் இருப்பவை:
துரை. லட்சுமிபதி தொகுத்திருக்கும் 'க.நா.சு. நேர்காணல்கள்' (‘சதங்கை’ இதழில் வெளியான நேர்காணல் இன்னும் கிடைக்கவில்லை. அதுவும் கிடைத்தால் தொகுப்பு முழுமையடையும்.)
'நினைவுகள்' என்ற தன்வரலாற்றுத் தொடர். (க.நா.சு.வின் கைப்பிரதிகளிலிருந்து எடுத்து ‘முன்றில்’ இதழில் வெளியிட்டவர் மா. அரங்கநாதன்.)
விஷால் ராஜா தொகுக்கும் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு.
(பின்குறிப்பு: இம்மாத இறுதியில் புதிய நூல்களுக்கான முன்பதிவுத் திட்டம் அறிவிக்கப்படும்)
Comments
Post a Comment