Skip to main content

காற்றோவியம் - முன்னுரை | ராகா சுரேஷ்என்னுடைய வலைப்பதிவில் இசையைப் பற்றி எழுதும் பொழுது, “உலகிலே மிக அதிகமாகச் சொல்லப்படும் பொய்கள் இரண்டு - எல்லா மதங்களும் போதிப்பது ஒன்றைத்தான் மற்றும் இசை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பவை அந்த இரண்டு பொய்கள். மதங்களைப் பற்றி இப்பொழுது ஆராய வேண்டாம். இசையைப் பற்றி நாம் பேசுவோம்.

இந்தியாவின் தெற்கு மூலையில் - திருநெல்வேலியோ நாகர்கோவிலோ திருவனந்தபுரமோ - வசிக்கும் ஒரு எழுத்தாளனை உன் ஆதர்ச எழுத்தாளர் யார் என்று கேட்டால், “டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, டிகேன்ஸ், நெருடா, மார்க்கெஸ், போர்ஹேபோன்ற பெயர்கள் பதிலாக வந்தால் நமக்கு ஆச்சரியம் அளிப்பதில்லை. அதே போல் பெங்காலில் உள்ள ஒரு ஓவியன் பிக்காசோ, மோனே, போல்லாக்போன்ற பெயர்களை உதிர்த்தால் நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால் ஒர நாதஸ்வர வித்வான் பாக், பீதோவான்என்ற பெயர்களைக் கூறினால் நாம் மூக்கின் மேல் விரலை வைக்க வேண்டிவரும். கர்நாடக இசை ரசிகர்களுக்குக் கர்நாடக இசை மற்றும் நம் திரையிசை தான் எல்லைகள். ஹிந்துஸ்தானி இசையைக் கேட்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். எல்லைகளை மீறி மேற்கத்தியச் செவ்வியல் இசையைக் கேட்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும்.

ஒரு நாவலைப் படிப்பது போலவோ, ஒரு ஓவியத்தை ரசிப்பது போலவோ அல்ல இசை. இதற்குப் பயிற்சி வேண்டும். மைக்கேல் ஜாக்சன், ரிக்கி மார்டின் போன்ற பாப் இசை கலைஞர்களை நம் மக்கள் ரசிக்கவில்லையா என்று நீங்கள் எதிர்வினை ஆற்றலாம். ஆனால் பாப் / ராப் என்பது இசையெனும் கடலில் ஒரு சிறு துளியே. மேலும் இது நகரங்கள் சார்ந்து வாழும் மேல் தட்டு இளைஞர்களை வெகுவாக கவருகிறதே தவிர எல்லா மக்களையும் சென்று அடைவதில்லை. மேற்கத்தியச் செவ்வியல் இசை ஆகட்டும், ஜாஸ் இசையாகட்டும், ப்ளூஸ் இசையாகட்டும், நம்மால் அவ்வளவு எளிதில் அதன் உன்னதங்களைச் சென்றடையமுடியாது.

என் வாழ்விலிருந்து ஒரு உதாரணம் கூறுகிறேன். ஒரு காலத்தில் எரிக் கிளப்டன் என்ற ராக் இசையின் உச்சியில் இருக்கும் கிட்டார் வல்லுனரின் இசைத் தட்டுகளைத் தேடிக் கேட்டுக்கொண்டிருந்த காலம். Chronicle: Best of Eric Clapton என்ற தொகுப்பு கையில் சிக்கியது. இதில் பல பாடல்களை நான் முன்பே கேட்டிருக்கிறேன். என் மனதிற்கு உகந்த பாடல்கள் அவை. அவை தவிர மற்ற பாடல்களும் என்னைக் கவர்ந்தன ஒரே ஒரு பாடலைத் தவிர. Rambling on my mind என்ற பாடல் அது. எனக்கு இந்த பாடல் அறவே பிடிக்கவில்லை. அதில் கிட்டார்ரும் பெரிதாக ஒன்றும் செய்வது போல் தெரியவில்லை, பாடலிலும் இனிமை என்பதே இல்லை. ஆனாலும் இது போன்ற தொகுப்பில் இந்த பாடலை சேர்த்திருக்கிறார்கள் என்றால் இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும்என்று எண்ணிக்கொண்டு, அந்த பாடலை பல முறை கேட்டேன். மெதுவாக வாசல்கள் திறக்க ஆரம்பித்தன. இந்த பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடலாக மாறியது. இன்டெர்நெட் இல்லாத அந்த காலத்தில் நண்பர்கள் மூலம் இந்த பாடல் பிளுஸ்இசை வகையைச் சேர்ந்தது என்று அறிந்துகொண்டு அடுத்த இரண்டு வருடங்களுக்கு மற்ற எல்லா வகை இசையையும் ஓரங்கட்டிவிட்டு பிளுஸ் இசையை மட்டும் கேட்டேன். இப்பொழுது அதை என்னால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த இசையை இசைப்பவர்களின் தரத்தை  நிர்ணயம் செய்ய முடிகிறது.

இப்படிச் சுற்றி வளைத்து நான் சொல்ல வருவது என்னவென்றால், இலக்கியம் போலோ, ஓவியம் போலோ அல்லாமல், இசையின் எல்லை சுவர்கள் உயரமானவை. அவை எளிதில் தாண்டிவிட முடியாது. பிரம்மபிரயத்தனம்என்பார்கள், அது வேண்டும். வேறொரு நாட்டு இசையை, அல்லது வேறொரு இசை வகையை ரசிப்பதற்கு முதலில் நமக்குப் பொறுமை வேண்டும். அதற்குப் பிறகு அந்த இசை மேல் ஒரு நம்பிக்கை இருக்க வேண்டும், அதன் மேல் மரியாதை இருக்க வேண்டும் . எந்த சூழலில் அந்த இசை உருவானது என்று அறிந்துகொண்டால் ரசிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

நண்பர் கிரிக்கு இவை அனைத்தும் இருக்கின்றன. அவர் பலதரப்பட்ட இசை வகைகளைப் பொறுமையாகக் கேட்கிறார். அவற்றின் மேல் மரியாதை வைத்திருக்கிறார். இசை மேதைகளைப் பற்றி ஆராய்ந்து அவர்கள் செய்த புரட்சியைக் கண்டுகொள்கிறார். அவர் லண்டனில் இருப்பதனால் மேற்கத்தியச் செவ்வியல் இசையை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதை அவர் செவ்வனே பயன்படுத்திக்கொள்கிறார். மற்றும் அவர் கர்நாடக இசையைப் பற்றி நன்கு அறிந்தவர். இவை எல்லாம் ஒன்று கூடிவருவதனால் நமக்கு இந்த அற்புதமான இசை கட்டுரை தொகுப்பு கிடைக்கிறது.

இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறு, இசையில் புரட்சி, இசை வெளியீடுகளின் விமர்சனம், நேரில் கண்ட கச்சேரிகளின் விமர்சனம், இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனம் என்று பலதரப்பட்ட கட்டுரைகளால் நிறைந்தது இந்த தொகுப்பு. மொழி மீது கிரிக்கு நல்ல ஆளுமை உள்ளதால் பல சிக்கலான இசை நுணுக்கங்களை அவரால் எளிய மொழியில் விளக்க முடிகிறது.  இசை, மொழிக்கு அவ்வளவு எளிதில் வசப்படாது. இருப்பினும் இசை பற்றி எழுதுவது கிரிக்கு வசப்பட்டிருக்கிறது.

இந்த தொகுப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டாலும், கிரி முக்கியமாக இரு விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். ஒன்று, இசைக்கலைஞனுக்கும் வரலாற்றுக்குமான தொடர்பு. மற்றொன்று fusion வகை இசை பற்றி அவரது பார்வை.

எல்லா கலைஞர்களையும் வெறும் கலைஞர்களாக மட்டுமே பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. அவர்களை அந்தந்த சமூக பின்னணியிலும், வரலாற்றுப் பின்னணியிலும் வைத்துப் பார்க்கவேண்டும். (நான் இங்கு வரலாறு என்று குறிப்பிடுவது சமூக வரலாற்றையும் இசை வரலாற்றையும் சேர்த்துதான்). இந்த தொகுப்பில் உள்ள பாப்லோ கசல்ஸ் இசையாளுமை பற்றிய கட்டுரை (செல்லோ இசைப் புரட்சி) இந்த தொகுப்பின் தலைசிறந்து கட்டுரை என்று கூறுவேன். இதை பாப்லோ கசல்ஸ்சின் வாழ்க்கை வரலாறு என்பதா, இல்லை பாக் செல்லோ இசை வரலாறு என்பதா, இல்லை ஸ்பெயின் நாட்டின் வரலாற்றில் ஒரு பகுதி என்பதா, இல்லை கசல்ஸ் செய்த இசைப் புரட்சியின் வரலாறு என்பதா என்று ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கட்டுரை இது. கசல்ஸ்சின் வாழ்க்கை, அவருக்கும் அவருடைய வாத்திய கருவியான செல்லோவுக்குமான உறவு, அவருடைய அரசியல் சார்ந்த முடிவுகள், அதனால் அவர் இசையின் மேல் ஏற்பட்ட தாக்கம் என்று பல கோணங்களில் மிக நேர்த்தியாக இசை உலகிற்கு கசல்ஸ் ஆற்றிய பங்கை நமக்கு உணர்த்துகிறார். கசல்ஸ் பற்றி நாம் முதல் முறை கேள்விப்பட்டாலும், கிரி வரையும் சொல்லோவியத்தில் நாம் மயங்கி, கசல்ஸ்சின் வாழ்க்கை எந்த பாதையில் செல்லும் என்று நாம் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கிறோம். இதுவே கிரியின் வெற்றி.

இதைப் படிப்பவர்களில் பலர் மேற்கத்தியச் செவ்வியல் இசையை அதிகம் கேட்டிருக்கமாட்டார்கள் என்று ஆசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. அதனால் பல இடங்களில் அவர் இசையின் இலக்கணத்தையும், அதை எப்படி சில மேதைகள் மீறினார்களென்றும் தெளிவாக விளக்குகிறார். அதே போல் இசையில் உள்ள பல கலைச்சொற்களை நமக்கு விளக்கி, கட்டுரையை நாம் படித்துப் புரிந்துகொள்ள உதவுகிறார். ஜான் சிபேலியஸ் இயற்கையின் ஊடாக இசை நிகழ்வுகள்’, படிக்கும்பொழுது இவருடைய பாணி எழுத்து நமக்குத் தோதாக இருக்கிறது. ஜான் சிபேலியஸ் பற்றி எழுதும்பொழுது அவரின் காலகட்டத்தின் இசை, முந்தைய காலகட்டத்தின் இசை மற்றும் அப்பொழுது இசையின் புரட்சிப்போக்கு என்று பல கோணங்களிலிருந்து ஜான் சிபேலியஸ் இசையை கிரி ஆராய்கிறார். இதனால் இந்த கட்டுரைக்கு ஒரு தீவிரத்தன்மை கிடைக்கிறது.

இசை, சமூகம், அரசியல். இவை மூன்றும் எப்படிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதை அறிய கிரியின் தேடல்கள் கட்டுரைகளாக மாறுகின்றன. வாக்னர் போன்ற இசை மேதையின் யூதர் விரோத போக்கும், இஸ்ரேல் நாட்டில் வாக்னர் இசைக்கக்கூடாது என்ற கட்டளைக்கும், பாலஸ்தீன் இஸ்ரேல் விரோதத்தை எப்படி இசை போக்க முடியும் அல்லது புண்ணுக்கு மருந்தாக இருக்க முடியும் என்பதை எல்லாம் வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்மற்றும் இசைவழி இணைதல் - Everything is Connected: Power of Music - Daniel Borenboim” போன்ற கட்டுரைகள் பேசுகின்றன. அதே போல் ஜுபின் மேத்தா பற்றிய கட்டுரையும் மிக முக்கியமான கட்டுரையாகும்.

மேற்கத்தியச் செவ்வியல் இசையை ஆராயும் அதே தீவிரத்துடன் கிரி fusion இசை பற்றியும் பேசுகிறார். ஸிதார் மேதை ரவிஷங்கர் இயற்றிய சிம்பனி இசையைக் கேட்டு (இந்தியாவின் முதல் சிம்பனி) அவர் அடைந்த ஏமாற்றத்தைப் பதிவு செய்கிறார். இந்த வகை இசையில் பல சோதனைகள் செய்த வீ.எஸ்.நரசிம்மனைப் பேட்டி எடுக்கிறார், அவருடைய "ராகா சாகா" என்ற ஆல்பத்தை விமர்சனம் செய்கிறார். அதில் வரும் கீர்த்தங்களை அவர் ரசித்ததைப் பதிவு செய்கிறார்.

’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சிமிக முக்கியமான கட்டுரை என்று நான் கருதுகிறேன். இது இளையராஜாவின் “’How to name it” எனும் ஆல்பத்தை பற்றிய விமர்சனம். இதனால் இந்த கட்டுரை முக்கியமானதாகவில்லை. இந்த கட்டுரையில் ஒரு fusion ஆல்பத்தை எப்படி விமர்சிக்கவேண்டும் என்ற விதிமுறைகளை முன் வைக்கிறார் கிரி. எப்படி இந்த இசைத்தொகுப்பை முழுமையாக அறிந்துகொண்டு விமர்சிக்கவில்லை என்பதை கிரி சுட்டிக்காட்டுகிறார். ஒரு fusion தொகுப்பை எப்படி அணுகவேண்டும், அதற்கு எம்மாதிரி பயிற்சி வேண்டும் என்பதையும் கிரி திட்டவட்டமாக வலியுறுத்துகிறார். ராஜாவின் திருவாசகம் தொகுப்பிற்கு ஞாநி போன்றவர்கள் எழுதிய மிகத் தட்டையான விமர்சனங்களைப் படிக்கும் பொழுது இவர்கள் கிரியின் இந்தக் கட்டுரையைப் படித்திருந்தால் அதைப் போல் விமர்சனம் எழுதியிருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.

கர்நாடகா இசையைப் பற்றியும் கட்டுரைகள் இருக்கின்றன. எஸ்.ராஜம் ஆவணப்படம் பற்றியும், ஜி‌என்‌பி பற்றிய புத்தகத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.

மொழி வளமும் இசை அறிவும் வரலாற்றுச் சிந்தனையும் கூடியிருக்கும் ஒருவர் எழுதிய இந்த கட்டுரைகள் தமிழுக்கு மிக முக்கியமானவை என்று நான் நம்புகிறேன். இந்த தொகுப்பில் எனக்குத் தோன்றிய ஒரே குறை, சில கட்டுரைகள் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்பது தான். மற்றபடி இதை இசை மேல் ஆர்வமுள்ள யாவரும் படித்து இன்புறுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

- ராகா சுரேஷ்

எழுத்தாளர் - பாகேஶ்ரீ சிறுகதைத் தொகுப்பு (2019 உயிர்மை விருது பெற்றது)

suresh0302@yahoo.com

அமேசானில் மின்னூலை வாங்க,

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப