என்னுடைய வலைப்பதிவில் இசையைப் பற்றி எழுதும் பொழுது , “ உலகிலே மிக அதிகமாகச் சொல்லப்படும் பொய்கள் இரண்டு - எல்லா மதங்களும் போதிப்பது ஒன்றைத்தான் மற்றும் இசை எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்பவை அந்த இரண்டு பொய்கள். மதங்களைப் பற்றி இப்பொழுது ஆராய வேண்டாம். இசையைப் பற்றி நாம் பேசுவோம். இந்தியாவின் தெற்கு மூலையில் - திருநெல்வேலியோ நாகர்கோவிலோ திருவனந்தபுரமோ - வசிக்கும் ஒரு எழுத்தாளனை உன் ஆதர்ச எழுத்தாளர் யார் என்று கேட்டால் , “ டால்ஸ்டாய் , தஸ்தாயெவ்ஸ்கி , டிகேன்ஸ் , நெருடா , மார்க்கெஸ் , போர்ஹே ” போன்ற பெயர்கள் பதிலாக வந்தால் நமக்கு ஆச்சரியம் அளிப்பதில்லை. அதே போல் பெங்காலில் உள்ள ஒரு ஓவியன் “ பிக்காசோ , மோனே , போல்லாக் ” போன்ற பெயர்களை உதிர்த்தால் நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஆனால் ஒர நாதஸ்வர வித்வான் “ பாக் , பீதோவான் ” என்ற பெயர்களைக் கூறினால் நாம் மூக்கின் மேல் விரலை வைக்க வேண்டிவரும். கர்நாடக இசை ரசிகர்களுக்குக் கர்நாடக இசை மற்றும் நம் திரையிசை தான் எல்லைகள். ஹிந்துஸ்தானி இசையைக் கேட்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். எல்லைகளை மீறி மேற்கத்தியச் செவ்வியல் இசையைக் கேட்பது என்பது...