Skip to main content

கொள்ளையோ கொள்ளை | பூர்வபீடிகை | ஜே. சி. குமரப்பா

ஓர் அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களிலும், தனிப்பட்ட நபர்களின் பொருளாதார விவகாரங்களிலும் ஒரு முக்கியமான வித்தியாசமுண்டு. தனிப்பட்ட நபரின் வருவாய் முதலில் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இதற்குட்பட்டே அவன் செலவு செய்யக் கடமைப்படுகிறான். இவ்வரம்பை மீறுங்கால் கடன் வாங்க நேரிடுகிறது. அளவு கடந்து கடன் வாங்குவானாயின் அவைகளைத் திருப்பிக் கொடுக்க வகையில் லாதவனாகி இன்ஸால்வென்ட்எனப் பெயர் சூடிக்கொள்வான். தனது வருமானத்தை விடக் குறைவாகச் செலவு செய்பவன் கையில் சிறிது சிறிதாகப் பணம் சேர்ந்துகொண்டே வரும்; இதையே முதல் என்கிறோம். இம்முதலைச் சேமித்து வைக்கலாம். அல்லது மேற்கொண்டு இதை விருத்தி செய்ய வேண்டிப் பிறருக்குக் கடனாகக் கொடுத்து உதவலாம். செலவு செய்யப்படும் தொகை வருவாய்க்குச் சமமாக இல்லாதபோது கணக்கில் துண்டுவிழுகிறது. அதிகச் செலவினால் ஏற்படும் வித்தியாசத்தைக் கடன் (பற்று) என்கிறோம். மற்றதை முதல் (வரவு) என்கிறோம். ஆகவே தனிப்பட்ட ஒரு நபரின் வருமானத்தைக் கொண்டு அவனுடைய செலவுகளையும், பற்று, வரவையும் தீர்மானித்துவிட முடியும்.
அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களோ இதற்கு நேர் எதிரிடையானது. ஓர் அரசாங்கத்தின் செலவுகளைக் குறித்தே அதன் வருமானம், கடன் முதலியன தீர்மானிக்கப்படும். நாட்டின் முன்னேற்றத்திற்கான தொகைகள் முதலில் செலவு செய்யப்படுகின்றன. இச் செலவுத் தொகையைச் சிறுகச்சிறுக ஜனங்களிடமிருந்து வசூலிக்கிறார்கள். இதுவே அந்நாட்டின் வருமானமாகும். நாட்டின் செலவுகள் யாவும் தக்க முறையில் ஜனங்களின் நன்மைக்காகச் செலவு செய்யப்படுதல் அவசியம். அவ்வாறு செய்யப்படாத செலவுகளை ஜனங்களிடமிருந்து வரியென வசூலிக்க முடியாது. செலவுக்குத் தகுந்த வருவாய் இல்லாது போகும். அந்நிலையில் அரசாங்கம் கடனாளியாக நேரிடும். நாட்டின் செலவை முதலில் தீர்மானித்துக்கொண்ட பின் அந்நாட்டின் வருவாயைப் பற்றி யோசனை செய்யவேண்டும். செலவு பூராவையும் ஜனங்களிடமிருந்து வசூலித்துவிட முடியுமா? அவ்வளவு வரியும் ஜனங்கள் கஷ்டமில்லாது செலுத்த முடியுமா? என்பவைகளைச் சிந்தித்து அறியவேண்டும். நாட்டின் செலவுகள் யாவும் ஜனங்களின் நன்மைக்காக இருந்தும் ஜனங்கள் வரிச்சுமையைத் தாங்கமாட்டார்கள் போலிருந்தால் தற்காலிகமாகக் கடன் வாங்குவதும் குற்றமாகாது.
தனிநபரைப்போல் அல்லாது அரசாங்கப் பொருளாதார விவகாரங்களில் செலவுகளைப் பற்றி முதலில் தீர்மானம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. இச்செலவுகள் யாவும் ஜனங்களின் நன்மையைக் குறித்தும் நாட்டின் முன்னேற்றத்திற்கான முறைகளிலும் செய்யவேண்டும். இதற்குத் தேவையான வருமானத்தைத் தீர்மானித்து ஜனங்கள் ஒவ்வொருவரும் இவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்று விதிக்கப்படுவார்கள். ஆகவே அரசாங்கப் பொருளாதார விவகாரத்தில் செலவுக்குத் தகுந்தவாறு வரி வசூலித்துக்கொள்ள முடிகிறது.
அரசாங்கம் செய்யும் செலவுகள் பூராவையும் அவ்வப்பொழுது வரியிலிருந்து ஈடுசெய்துகொள்ள முடியாத சில சந்தர்ப்பங்கள் ஏற்படுவதும் உண்டு. பல வருடங்களுக்குப் பிறகு பலனளிக்கக்கூடிய செலவுகள் அடிக்கடி செய்யவும் நேரிடும். அதுபோன்ற செலவுகளுக்காக இப்பொழுதுள்ள ஜனங்களே வரி செலுத்திவிட வேண்டும் என்று விதிப்பது பொருத்தமாகாது. அதன் பலன்களை அனுபவிக்கவிருக்கும் வருங்காலத்து ஜனங்கள் இச்செலவை ஒத்துக்கொள்ளுவதே முறையாகும். தவிர இதுபோன்ற பெருஞ்செலவுகளை ஒரே தடவையில் ஜனங்களிடமிருந்து வசூலிக்கப் புகுமிடத்தே அவர்கள் பல இன்னல்களுக்கும் உள்ளாகக்கூடும். இதனால் நாடு சீர்கேடடையும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்குக் கடன் வாங்கும்படி நேரிடும். பின்பு இக்கடனைச் சிறுகச்சிறுக ஒவ்வொரு வருஷமும் கொடுத்து அடைக்கவேண்டும். மேலும், எதிர்பாராத சில விபத்துகளைத் தீர்க்க அரசாங்கத்தார் கடன் வாங்கவேண்டியது அவசியமாகிறது. பூகம்பம், பஞ்சம், சேதம், யுத்தம் போன்றவைகளால் ஏற்படும் கஷ்டங்களை நிவர்த்திக்க உடனே பணம் தேவைப்படுகிறது. இதுபோன்ற திடீர்ச் செலவுகளுக்கு வரியை நம்பமுடியாது. கடன் வாங்கவேண்டியதுதான் வழி.
முதலில் சொன்ன கடனுக்கும் பின்பு சொன்னதற்கும் வித்தியாசமிருக்கிறது. ஒன்றைப் பலனளிக்கும் கடன்என்றும் மற்றதைப் பலன் அளிக்காத கடன்என்றும் சொல்லுவார்கள். முதலில் சொன்னதில் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ஜனங்களுக்கு அதிகமான சௌகரியங்களை அளிக்கவும் கடன் வாங்கப்படுகிறது. இதுகொண்டு செய்யப்பெறும் செலவுக்குப் பிரதிப் பிரயோஜனம் ஜனங்களுக்கும் நாட்டிற்கும் ஏற்பட்டுவருகிறது. உதாரணமாக அணை கட்டி விவசாய வேலைக்குத் சாதகமாகத் தண்ணீரைத் தேக்கி வைத்தலைச் சொல்லலாம்.
இரண்டாவதாகச் சொன்ன செலவின் மூலம் ஏதும் நிரந்தரமான பிரதிப் பிரயோஜனம் ஏற்படுவதற்கில்லை. அந்தச் சமயத்தில் திடீரென ஏற்பட்ட ஒரு விபத்தைப் போக்குகிறோம் என்பதே ஆறுதல். ஆகவே இதைப் பலனளிக்காத கடன்எனலாம்.
தற்கால அரசாட்சி முறையில் கணக்குத் திட்டம் செய்துகொள்ளுவது ஒரு முக்கியமான அம்சமாகிறது. ஒரு வருஷத்தில் செய்யப்பட வேண்டிய செலவுகளையும், அதற்குத் தேவையான வருமானத்தையும் முன்கூட்டியே சிந்தித்துத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். ஜனங்களுக்கு அந்த வருஷத்தில் என்னென்ன நன்மைகள் செய்யப்படும் என்பது பற்றியும் அதற்காக அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு வரி செலுத்தவேண்டும் என்பதையும் விவரமாக எடுத்துரைத்துவிட முடிகிறது. முறைப்படி அமைக்கப்பட்ட கணக்குத் திட்டத்தில் செலவுக்குத் தகுந்த வரவு காட்டப்பட்டிருக்கும். செலவு அதிகமாக இருந்து வருவாய் குறைவாக இருக்குமாயின் வித்தியாசப்படும் தொகையை வசூலிக்கக்கூடிய மற்றைய வரிகளைப் பற்றியும் விவரம் தெரியப்படுத்துதல் அவசியம். ஜனங்களிடமிருந்து கிடைக்கவேண்டிய வரித்தொகை அரசாங்க கஜானாவைச் சென்றடையத் தாமதப்படுமாயின் அதற்காகச் செலவுகளை நிறுத்திவைப்பது முடியாத காரியமாகும். ஆகவே தற்காலிகமான சில கடன்கள் வாங்க நேரிடுகிறது. இதை கஜானா 'பில்'கள் என்றும் சொல்லுவார்கள். குறிப்பிட்ட வரித்தொகை வந்தடைந்ததும் இக்கடன்கள் தீர்க்கப்படும். ஆனாலும் இந்த கஜானா 'பில்' என்னும் குட்டிக் கடன்களுக்கும் வட்டி செலுத்தவேண்டும்.
உள்நாட்டிலுள்ள பணக்காரர்களிடமிருந்து கடன் வாங்கி, அவர்களுக்கு வட்டியும் கொடுத்துவருவார்களாயின் நாட்டின் பொருள் நிலையில் அதிக வித்தியாசமேற்படுவதற்கில்லை. நாட்டின் பணம் நாட்டினுள்ளேயே தங்கியிருக்கும். ஆனால் ஒரு சிறு கெடுதல் இதில் ஏற்படுவதற்கிருக்கிறது. அதாவது ஏற்கெனவே பணக்காரர்களாக உள்ளவர்கள்தான் அரசாங்கத்திற்குக் கடன் கொடுத்திருப்பார்கள். அவர்கள் கையில் அம்முதலுடன் வட்டியும் சென்று சேர்ந்தால் மேலும் அதிகப் பணக்காரர்களாக ஆகிவிடுவார்கள். வரியோ ஏழை ஜனங்களிடமிருந்தும் வசூலிக்கப்படுகிறது. ஆகவே பல ஏழை மக்களின் பணம் இப்பணக்காரர்கள் கையில் சென்றடைவதால் ஜனங்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு உண்டாகிறது. இது நிற்க; வெளிநாட்டினரிடமிருந்து கடன் வாங்கப்பட்டிருக்குமாயின் கடன்பட்ட தேசத்திற்கு நல்ல கதியே கிடையாது. கடன் கொடுத்தவர்கள் பல சலுகைகளையும் கோருவது இயற்கை.
அடிக்கடி வெளிநாட்டாருக்குப் பணம் அனுப்பிவரும் அரசாங்கத்தார் அக்கடனையும் வட்டியையும் மட்டும் திருப்பிக் கொடுத்துவருகிறார்கள் என்பதற்கில்லை. அத்துடன் சில சலுகைகள் மூலம் இன்னும் பலவற்றையும் இழக்க நேரிடுகிறது. கடன் கொடுத்துள்ள நாட்டாரின் சட்ட திட்டங்கள் கடன் வாங்கியுள்ள நாட்டாருக்கு அனுகூலமாக இருக்கப்போவதில்லை. கடன்பட்ட நாட்டாரின் சாமான்களைக் குறைந்த விலையில் கொள்ளை கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள். மேலும் தம் நாட்டுச் சரக்குகளை அதிக விலைக்கு விற்கத் தலைப்படுவார்கள்என்கிறார் ஜான் ஸ்டூவர்ட் மில்.
கடன் கொடுத்த நாட்டார் கடன்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார விவகாரங்களின் மீது அதிகாரம் பெற்றுவிடுவார்களாயின் பின்பு இந்நாட்டிற்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களைச் சொல்லிலடக்க முடியாது. நாணய மாற்றுதல், சரக்குகளை இறக்குமதி செய்தல் முதலியவற்றில் பலவிதமான சூதுகளைச் செய்தே வருவார்கள்.
எப்பொழுதாவது அரசாங்கத்திற்கு ஏராளமான தொகைக்குத் தேவை ஏற்படுவது உண்டு. இதைக் கடனாக வாங்கினால் திருப்பிக் கொடுக்க முடியாமலும் போய்விடலாம். மேற்கொண்டு இதற்காகப் பல வருஷங்கள் வரை அநாவசியமாக வட்டி கொடுக்கவும் அரசாங்கம் விரும்பாமலிருக்கலாம். அதுபோன்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் காரணமாகப் பல பணக்காரர்களின் பொருட்களை ஆக்ரமித்துக்கொள்ளவும் உரிமையுண்டு; அல்லது பல பணக்காரர்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளக்கூடும். இதுபோன்ற வருவாய்கள் வழக்கப்படியுள்ள வரித்தொகையை விட அதிகமாக இருந்தபோதிலும் அவைகளைக் கடன் என்று சொல்லமுடியாது.
ஆனால் சர்க்காரின் வருமானம் குறைந்து சாதாரணச் செலவு அதிகமாகித் துண்டு விழுந்தால் அதை வட்டிக் கடனாக்கக் கூடாது.
அரசாங்கத்தார் கடன் வாங்குவது என்பது சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கமாகும். வியாபாரப் பெருக்கம் அதிகமாகி வியாபார நாணயக் கடன்கள் மிகுதியாகப் பழக்கத்திற்கு வந்தது முதல் அரசாங்கக் கடன்களும் முளைத்திருக்கவேண்டும். இதற்கு முன்பு அரசர்களுக்குப் பணத்தேவை ஏற்படுமாகில் அவர்கள் கோயில்களிலோ, இதர பொது ஸ்தாபனங்களிலோ உள்ள மூலதனத்தை எடுத்து உபயோகித்துக்கொண்டார்கள்.
பொது ஜனங்களின் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தார் நாட்டின் நலனைக் குறித்து வாங்கியுள்ள கடனை தேசியக் கடன்என்று சொல்லுவது மரபு. இதில் கடன் கொடுத்துள்ளோர் பெரும்பாலும் அந்நாட்டு மக்களாகவே இருப்பார்கள். அரசாங்கத்திற்கும் பொது ஜனங்களினிடையேயும் இந்த நெருங்கிய தொடர்பு இல்லாத பட்சத்தில் அரசாங்கத்தார் வாங்கிய கடன்களைத் தேசியக் கடன்என்று சொல்லுவதில்லை. அதைப் பொதுக் கடன்என்று மட்டுமே வழங்குவார்கள்.
இந்தியாவில் வெகு சமீபகாலம் வரை பொதுக் கடன் என்றால் என்ன என்றே தெரியாது. இதற்கு முந்திய காலத்தில் அரசர்கள் தனியான முறையில் கடன் வாங்கினார்களானால் அது அவர்களுடைய சொந்தப் பற்று வரவாகவே கருதப்பட்டுவந்தது. அக்கடன் தொகை பூராவையும் அவர்களே அடைக்கவேண்டும். அரசனின் கடனிற்காக பிரஜைகள் பொறுப்பாளியாகமாட்டார்கள்.
கிளைவின் காலத்தில் இந்திய அரசாட்சி கம்பெனியார்களின் கையில் இருந்துவந்தது. இது பெரும்பாலும் ஒரு வியாபார ஸ்தாபனம். அவ்வமயம் சிற்சில இடங்களை ஆளவும், வரிவசூல் செய்யவும் இவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். வியாபாரிகளுக்கு லாபத்தில்தான் கண்ணிருக்கும். அதுபோல் இக் கம்பெனியார்களும் இந்தியாவில் கிடைத்துள்ள அதிகாரத்தைக் கொண்டு சுயநலத்திற்காக எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவையும் தேடிக்கொண்டார்கள். இவ்வாறு திரட்டிய லாபங்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றி இங்கிலாந்து கொண்டுசேர்த்தார்கள். அவ்வமயம் இந்திய அரசாங்கச் செலவுக்காகக் கடன் வாங்க ஏதும் சந்தர்ப்பமே கிடையாது. இந்நாட்டில் பணம் படைத்த பெரிய பெரிய ஜமீன்தார்கள், நவாபுகள் ஏராளமாக இருந்துவந்தனர். நாட்டின் செலவுக்காகப் பொருள் தேவைப்பட்டிருந்தால் அவர்களின் பணத்தைப் பிடுங்கி உபயோகித்துக்கொண்டிருக்கலாம். இந்தியாவின் நிலைமை இவ்வாறிருக்க இங்கிலாந்தின் நிலைமையும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? இங்கிலாந்தின் பொருளாதார நிலை மிகவும் கேவலமாக இருந்துவந்தது. புரூக் ஆதம் என்னும் ஆங்கிலேயரின் அபிப்பிராயத்தையே கவனிப்போம்.  சுமார் 1750-ம் வருஷத்தில் இங்கிலாந்தின் இரும்புத் தொழில்கள் யாவும் தலை கவிழ்ந்திருந்தன. அங்கிருந்த காடுகள் யாவும் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டிருந்ததே இந்நிலைமைக்குக் காரணமாகும். அவ்வமயம் இங்கிலாந்துக்குத் தேவையான இரும்பில் ஐந்தில் நாலு பாகம் ஸ்வீடனிலிருந்து இறக்குமதியாகிக்கொண்டிருந்தது. சுமார் 1760க்கு முன்பு லங்காஷயரிலிருந்த நெசவுக் கருவிகள் யாவும் தற்போது இந்தியாவில் காணப்படுவன போன்று இருந்துவந்தன.ஆராய்ச்சி செய்து புதிய புதிய மெஷின்களைக் கண்டுபிடிக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்கள் பலர் அவ்வமயம் வாழ்ந்துவந்தனர். ஆனால் என்ன பிரயோஜனம்? அவர்கள் கண்டுபிடிப்பதைக் காரியாம்சத்தில் செய்துகாட்டத் தேவையான பணம் அந்நாட்டில் கிடையாது. புதிய விஷயங்களைப் பற்றி மனது நினைக்கக்கூடும்; மூளை யோசனை செய்து வழிதேடக்கூடும். ஆனால் அந்த வழியை முறைப்படி கிரியாம்சையில் அமைக்கக் கைகளில்லாவிடில் எல்லாம் வீணே.
ஆராய்ச்சியாளர்களின் பிரயாசை யாவும் வீணாகிக்கொண்டு வந்தன. பிளாஸி யுத்தத்திற்குப் பிறகு ஏராளமான பணம் இங்கிலாந்துக்கு வந்துசேர வழி ஏற்பட்டது. அதன் பின்னரே இவ்வாராய்ச்சிகளுக்குக் கதி மோட்சம் கிடைத்தது. கம்பெனி அரசாங்கத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் பொது ஜனங்களின் நம்பிக்கையைப் பெறவில்லை. ஆகவே இதை முறையான அரசாங்கம் என்று சொல்லமுடியாது. இவர்கள் தற்காலிகமான பொறுப்பாளிகளே. ஆனாலும் தங்களின் கடமைகளை உணர்ந்துகொள்ளாது கம்பெனியாரின் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இத்துடன் மட்டும் நில்லாது அவ்வப்பொழுது ஏற்படும் தேவைக்குத் தகுந்தாற்போல் தங்களின் விவகாரங்களையும் மாற்றி அமைத்துக்கொண்டே போனார்கள். நாட்டின் வரவு செலவுகள் பற்றிச் சரியான கட்டுப்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை. 1861-ம் வருஷம் முதல் சில உபயோகமற்ற கமிட்டிகளைத் தொடங்கிவைத்தார்கள். இவைகளைக் கொண்டு ஜனநாயக முறைப்படி ஆட்சி செய்வதாக ஜாலம் செய்தார்கள். 1909-ம் வருஷம் வரை நாட்டின் வரவு செலவு திட்டக் கணக்குகளை இவர்களால் நியமிக்கப்பட்ட இந்தக் கமிட்டிகளுக்கும் காட்டவில்லை. அதற்குப் பிறகு சிற்சில கணக்குகளைப்பற்றி மட்டும் விவாதிக்க அனுமதி தரப்பட்டது. 1920 முதல் நாட்டின் மொத்தச் செலவின் கால் பாகத்தை மட்டும் ஜனங்களின் அனுமதியின் மேல் செலவு செய்வதாக ஒப்புக்கொண்டார்கள். அன்று முதல் இன்று வரை நாட்டின் பொருளாதார விவகாரங்கள் யாவும் பொறுப்பற்ற சில அதிகாரிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது, சென்ற வருஷம் இடைக்கால சர்க்கார் அமைக்கப்பட்டதும் ஜனங்கள் பல்வேறு சீர்திருத்தங்களை எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் நடத்தமுடியவில்லை. இப்பொழுது அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலைமையில் இப்பிரதிநிதிகளின் வலதுகை செய்வதை இடதுகையும் அறியமுடிவதில்லை.


கொள்ளையோ கொள்ளை | கிழக்கு இந்தியக் கம்பெனி வழிமறித்தல்

கொள்ளையோ கொள்ளை மின் நூலை வாங்க,
https://tinyurl.com/KollayoKollai

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர