Skip to main content

கு. ப. ராஜகோபாலன் என்கிற முழுமை | க. நா. சுப்ரமண்யம்


கு. ப. ராஜகோபாலனின் கதைகளை, அவை எழுதப்பட்டு சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இன்று படித்துப் பார்க்கும்போது கூட அவர் லாகவமும், கதை நடத்தும் திறனும், உருவ, கருத்து அமைதியுடன் மிகவும் சிறப்பாகவே உள்ளத்தில் தட்டுகின்றன. வாழ்க்கையை முழுப்பார்வையுடன் பார்ப்பது அவர்க்கு மிகவும் சிறிய கதைகளிலும் கூடச் சாத்தியமாக இருந்திருக்கிறது.
ஆண், பெண் உறவுகளை, பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக, உரக்க, மனத்தையும் கண்ணையும் ஒருங்கே உறுத்துகிற மாதிரிச் சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால், அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம், கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ரா.வுக்கு மிகவும் சிறப்பாக கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது. இந்த மென்மையும், கலை உணர்ச்சியும் பக்கம் பக்கமாக பச்சையாக எதை எதையோ எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களுக்கு எட்டாத ஒரு விஷயம். அவர்கள் கு.ப.ரா.விடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
புத்தனுடைய துறவுக்கு அசுவகோஷன் முதல் எத்தனையோ இலக்கியாசிரியர்கள் பலர் காரணங்கள் கண்டு சொல்லிவிட்டார்கள். மூப்பு, நோய், சாவு என்ற மூன்றுடன் க்ஷண சுகத்திற்குப் பிறகு ஏற்படுகிற விரக்தியும் ஒரு காரணமாக, இந்தத் தொகுப்பில் முதல் கதையில் முதல் வாக்கியமாக அமைந்துள்ள நாலாவது காரணம் நியாயமானதாகவும், செயல்பாடுள்ளதாகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றியது - இன்று மீண்டும் படிக்கும்போதும் தோன்றுகிறது.
பதினேழு கதைகளில் பதினேழு புதுப்புது அனுபவங்களை முழுமையாக நமக்கு உண்டாக்கி உருவாக்கித் தருகிறார் கு. ப. ராஜகோபாலன். ஸுஜாதா புத்தனுக்கு பதினெட்டு நாட்கள் கடும் தபசுக்குப் பிறகு அளித்த பால்சோறு (அது கருணையின் உருவகமாகவே) கு.ப.ராவின் கதையில் அவருக்கு மகாபோதத்தை விளைவிக்கிறது. டெஸ்டிமோனா மனதில் ஒத்ததெல்லோவிடம் காதல் வித்து தோன்ற அவன் பிரதாபங்கள் உபயோகப்பட்ட மாதிரி அதுவரை கண்ணால் பார்க்காத வேங்கி மன்னனிடம் காதல் வருகிறது குந்தவைக்கு. தர்மயுத்தம் என்கிற தத்துவம் என்ன என்று சிவாஜியின் வீரப்போர்கள் விளக்கியதைக் கடைசிக் கதையில் எடுத்துக்காட்டுகிறார் கு.ப.ரா.
சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் இப்படித்தான் அமையவேண்டும் என்று கூறுவது போல அமைந்திருக்கின்றன கு.ப.ராவின் சரித்திரக் கதைகள் பதினேழும். இவற்றில் ஒரு ஆச்சர்யக் குறிக்குக்கூட இடம் தரவில்லை அவர். ஆச்சர்யக் குறிகளுக்கும் உரத்த குரலுக்கும் படோடாபத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கும் நம்மை ஆளாக்கிவிட்டார்கள் பிற்காலத்தில் சரித்திரக் கதை என்று எழுத வந்த எழுத்தாளர்கள். அவர்கள் எழுத்து இலக்கியமாகவில்லை. கு.ப.ராவின் எழுத்துக்கள் பெருமளவில், மேன்மையான தளத்தில் இலக்கியமாகின்றன என்பது நமக்குப் புரியவருகிறது. கனகாம்பரம் என்கிற கதையை கு.ப.ரா. எழுதியபோது இந்த மாதிரியெல்லாம் கதைகள் எழுதக்கூடாது என்று ரசனையற்ற குரலில் அப்போதைய தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கூறினார் என்பதை நினைக்கும்போது இந்தத் தலைவருக்கும் அவர் கோஷ்டியினருக்கும் என்ன மரமண்டை என்று நினைக்கவே தோன்றுகிறது. இலக்கியம் இந்த சட்டாம்பிள்ளைகளையெல்லாம் மீறி நிற்கிறது என்பது நிதர்சனமாகவே தெரிகிறது. 'திரை' என்கிற கதையை கு.ப.ரா. எழுதியபோது "கணவனில்லாத தாயைப் பற்றிய கதையா? வேண்டாம். நீதி கெட்டுவிடும்" என்று சொன்ன இலக்கிய சட்டாம்பிள்ளைகள் இன்று இலக்கிய கர்த்தாக்களாக உயிருடன் இருந்தாலும் நீடிக்க முடியவில்லை. முருக பக்தர்களாகத்தான், அரசியல் தலைவர்களாகத்தான் தெரியவருகிறார்கள்.
நல்ல எழுத்து எல்லாமே, இலக்கியமாகும்போது புரட்சிகரமாகவும் அமைகிறது என்பது கு.ப.ரா.வின் எழுத்துக்களில் தெரியவருகிறது. புரட்சி என்கிற ஆசையில் எழுதவில்லை அவர். மனிதன் என்கிற நினைப்பில் எழுதினார். சரித்திர புருஷர்கள் பற்றி எழுதுவது இதில் ஒரு அம்சம். இதிலும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, சிலவற்றை விட்டுவிட்டு, புரட்சிகரமாகத் தெரிந்த விஷயத்தையும் கையாள முடியும் என்பதற்கு இந்தப் பதினேழு சரித்திரக் கதைகளும் சான்றுகள்.
கு. ப. ராஜகோபாலன் தனது நாற்பத்தியிரண்டு ஆண்டுகளில் (1902-1944) பலவிதமான இலக்கியச் சோதனைகள் செய்துபார்த்தவர். சிறுகதைகள், சிறு நாடகங்கள், சிந்தனை உலகப் போக்கு, இலக்கிய விமர்சனம், வசன கவிதை, சரித்திரம் என்று பல சோதனைகள் செய்துபார்த்தவர். அற்புதமான சில மொழிபெயர்ப்புகளும் செய்திருக்கிறார். இலக்கியம் பற்றி தெளிவான பல அபிப்பிராயங்கள், கொள்கைகள் அவருக்கிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழில் எழுத, இலக்கியம் படைக்க முன்வருபவர்களின் எதிர்காலத்தில் அவருக்கு ஏராளமான நம்பிக்கையிருந்தது. தான் எனும் அகங்காரமில்லாமல் பலருக்கும் வழிகாட்டியவர்; கை கொடுத்தவர். எல்லா பனித்துளிகளிலும் முழுச்சூரியனும் தெரிகிற மாதிரி அவர் எழுத்துகளில் மிகவும் சுலபமானவை, சிறியவைகளிலும் கூட அவருடைய முழு தனித்வத்தையும் பார்க்க முடியும். அவருடைய கதைகள் மற்றும் எழுத்துக்கள் மீண்டும் தமிழர் தலைமுறைகளுக்குப் படிக்கக் கிடைக்கின்றன என்பது பற்றி மிகவும் சந்தோஷப்படலாம்.
இந்திய சரித்திரத்தின் பல சம்பவங்கள் இந்த நூலில் கதைகளாகப் புனையப்பட்டுள்ளன. ஆனால் இதில் பெரிய அம்சம் இதுவல்ல. இந்தப் பதினேழு கதைகளையும் படிப்பவர்களுக்கும்கூட கு. ப. ராஜகோபாலன் என்கிற "முழுமை" தெரிகிறது என்பது இந்தக் கதைகளின் பெரிய விஷயம். மற்றப்படி இந்தத் தலைமுறை வாசகர்களும் வரப்போகிற தலைமுறை வாசகர்களும் இந்த நூலைப் படித்ததுப் பற்றிப் பெருமைப்படக்கூடிய அளவில் ஒவ்வொரு கதையிலும் பல அம்சங்கள் இருக்கின்றன. படித்துப் பார்த்து அனுபவித்து நினைவுபடுத்திக்கொள்பவர்களும் மீண்டும் ஒருதரம் படித்துப் பார்ப்பவர்களும் நம்மிடையே அதிர்ஷ்டசாலிகள் என்று நான் சொல்வேன்.
க. நா. சுப்ரமண்யம்
மயிலை, சென்னை.
விஜயதசமி, 1987.


('காணாமலே காதல்' என்ற கு.ப.ரா.வின் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை)

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ...

ஐரோப்பியர் வருகை - மயிலை சீனி. வேங்கடசாமி

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, மேல் நாட்டார் நமது இந்தியா தேசத்துடன், சிறப்பாகத் தென் இந்தியாவுடன், வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யவனர் (உரோமர், கிரேக்கர்) என்னும் ஐரோப்பிய ஜாதியார், சேர நாட்டின் கடற்கரைப் பட்டினங்களிற் பண்ட சாலைகள் அமைத்து, அவற்றில் நமது நாட்டுச் சரக்குகளைச் சேமித்து வைத்துக் கப்பல்கள் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்குக் கொண்டு போனார்கள். மதுரை, புகார், (காவிரிப்பூம் பட்டினம்) முதலிய நகரங்களிலும் யவனர் வசித்து வந்ததாகத் தமிழ் நூல்களினால் அறிகிறோம். கி.மு. 22 இல் மதுரையில் அரசாண்டிருந்த பாண்டிய மன்னன், அகஸ்தஸ் ஸீஸர் (Augustus Ceasar) என்னும் யவன அரசனிடம் தூதுவர்களை அனுப்பினான் என்று ஸ்த்ராபோ (Starbo) என்னும் மேல் நாட்டாசிரியர் எழுதியிருக்கிறார். தமிழருக்கும் யவனருக்கும் இருந்த இவ்வர்த்தகத் தொடர்பு, கி.பி. 47 முதல் மேன்மேலும் அதிகப்பட்டது. ஏனென்றால், அந்த ஆண்டில் ஹிப்பலஸ் (Hippalus) என்பவர், இந்து சமுத்திரத்தில் வீசுகிற வட கிழக்கு தென் மேற்குப் பருவக் காற்றைக் கண்டுபிடித்தார். இப்பருவக் காற்று வீசுகிற காலங்களில் பிரயாணம் செய்வதால் மாலுமிகள் விரைவாகக் க...