Skip to main content

பல ரூபங்களில் காந்தி: சிறைப்பறவை | அனு பந்தோபாத்யாயா


காந்திஜி, இந்திய மக்களை ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடும்படி தூண்டினார்; ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்; பல முறை சிறைக்கும் சென்றார். கைது செய்யப்பட்ட போதெல்லாம் நீதிபதியிடம் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும்படி கேட்டுக்கொள்வார். தென் ஆப்பிரிக்காவில் ஒரு வழக்கில் அவர் மீதும் அவரது சக ஊழியர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை நிரூபணம் செய்வதற்கு அவரே சாட்சிகளை ஏற்பாடு செய்தார். சிறை வாழ்வின் பயங்கரம், அவமானம், அவதிகள் - எல்லாமே கொடுங்குற்றங்களைப் புரிந்தவர்களுக்காக ஏற்பட்டவை. அச்சூழ்நிலைக்குள் செல்ல தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் அஞ்சினர். காந்திஜி அவர்களது அச்சத்தை அகற்றினார்.
அவர் பதினோரு தடவைகள் சிறை சென்றார். ஒரு சந்தர்ப்பத்தில் நான்கு நாட்களுக்குள் மூன்று முறை அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைகளை முழுமையாக அனுபவித்திருந்தால் அவர் பதினோரு ஆண்டுகள் மற்றும் பத்தொன்பது நாட்களுக்கு சிறையில் இருந்திருப்பார். பல தடவைகளில் அவரது தண்டனை குறைக்கப்பட்டதால் மொத்தம் ஆறு ஆண்டுகள் மற்றும் பத்து மாத காலத்தை சிறைகளில் கழித்தார். தனது 39வது வயதில் அவர் முதல் முறையாகச் சிறைக்குச் சென்றார். தனது 75வது வயதில் கடைசி முறையாக சிறையிலிருந்து வெளியே வந்தார்.
முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவின் ஒரு சிறையில் தனது ஐந்து சகாக்களுடன் நுழைந்தார். சிறைகளைப் பற்றி அச்சமூட்டும் விஷயங்களை அவர் கேள்வியுற்றிருந்தார். தன்னை ஒரு அரசியல் கைதியாக நடத்துவார்களா என்று யோசித்தார். அவர் வக்கீலாக வாதம் செய்த அதே நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றபோது அவருக்கு சற்று சங்கடமாகவே இருந்தது. அவருக்கு இரண்டு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்திலிருந்து ஒரு குதிரை வண்டியில் ரகசியமாக சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஏனெனில் நீதிமன்றத்திற்கு வெளியே பெரியதோர் கூட்டமாக மக்கள் நின்றிருந்தனர். சிறையில் நுழைந்ததும் அவரது பத்து விரல் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. அவரது உடைகள் முற்றிலுமாகக் களையப்பட்டு அவர் எடை பார்க்கப்பட்டார். பிறகு அவருக்கு அழுக்கேறிய சிறைச்சாலையின் சீருடைகள் தரப்பட்டன. அவரைத் தொடர்ந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மேலும் பலர் சிறைக்கு வந்து சேர்ந்தனர். இவ்வாறாக 15 நாட்களில் கைதிகளின் எண்ணிக்கை 150 ஆகியது. 50 நபர்களே இருக்கக்கூடிய அறையில் 150 நபர்கள் அடைக்கப்பட்டனர். இரவு நேரங்களில் மட்டும் கைதிகள் தூங்குவதற்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டன.
சிறையில் ஆய்வாளர், கவர்னர் மற்றும் மேலாளர் சிறையைப் பார்வையிடுவதற்கு தினந்தோறும் நான்கு அல்லது ஐந்து தடவைகள் வந்தனர். ஒவ்வொரு தடவையும் காந்திஜியும் மற்றவர்களும் தொப்பியைக் கையில் ஏந்திய வண்ணம் வரிசையாக நிற்க வேண்டி இருந்தது. காந்திஜி உடலுழைப்பு மேற்கொள்ள விரும்பினார். ஆனால், அனுமதிக்கப்படவில்லை.
சிறையில் அளிக்கப்பட்ட உணவு இந்தியர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. காலையிலும் மாலையிலும் அவர்களுக்கு ஒரு வகையான சோளக்கஞ்சி அளிக்கப்பட்டது. சர்க்கரை, பால், நெய் எதுவும் தரப்படவில்லை. கைதிகளுக்கு அக்கஞ்சியைக் குடிப்பது கஷ்டமாக இருந்தது. சில மாலை நேரங்களில் வேக வைக்கப்பட்ட பீன்ஸ் மட்டுமே வழங்கப்பட்டது. சர்க்கரையோ மசாலாப் பொடிகளோ கிடையாது. உப்பு மட்டுமே தரப்பட்டது. ஐரோப்பிய கைதிகளுக்கோ புலால், ரொட்டி, காய்கறிகள் எல்லாமே கிடைத்தன. ஐரோப்பிய கைதிகளால் ஒதுக்கப்பட்ட காய்கறிகளின் கழிவுகளுடன் கொஞ்சம் காய்களைச் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு இந்திய கைதிகளுக்குத் தரப்பட்டது. நூறு இந்தியக் கைதிகளின் கையெழுத்துக்களுடன் கூடிய புகார் மனு ஒன்றை காந்திஜி சிறையின் அதிகாரிக்கு அனுப்பினார். அவர் எச்சரிக்கப்பட்டார்: "இது இந்தியா அல்ல; இது ஒரு சிறைச்சாலை. உங்களுக்குப் பிடித்தமான உணவு எதுவும் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது." இருப்பினும் பதினைந்து நாட்களுக்குள்ளாக காந்திஜிக்கு வெற்றி கிட்டியது. சாதம்.
காய்கறிகள், நெய் எல்லாமே இந்தியர்களுக்கு வழங்கப்பட்டன. தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே சமைத்துக்கொள்வதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. காந்திஜி சமையல் பணியில் உதவியதுடன் இரு வேளைகளிலும் தாமே உணவைப் பரிமாறினார். இப்போது காந்திஜியுடன் இருந்த இந்திய கைதிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி நல்ல உணவு கிடைத்தது. அவரது மூன்றாவது சிறைவாசத்தின்போது அவருக்கு நல்ல உணவு கிடைத்தது. பழங்களை மட்டுமே அவர் உண்டார். வாழைப்பழங்கள், தக்காளி மற்றும் உலர்ந்த பழங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. சிறையின் கட்டுப்பாடுகளுடன் கூடிய வாழ்க்கை காந்திஜிக்குப் பிடித்துவிட்டது. சிறையிலிருந்து வெளியே வந்ததும் அவர் தேநீர் அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டார். இரவு உணவையும் சூரியன் அஸ்தமனமாவதற்கு முன்பு உண்ணும் பழக்கத்தைத் தொடர்ந்தார்.
அடுத்த இரண்டு சிறைவாசங்களில் காந்திஜி பல இன்னல்களை அனுபவித்தார். அவர் வழக்கறிஞராகப் பத்து ஆண்டுகளுக்கு மேல் வழக்காடிய நீதிமன்றத்திற்கு அவர் விலங்குகளுடன் கொண்டுவரப்பட்டார். அவருக்கு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் தென் ஆப்பிரிக்க கைதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த வழக்கமான சிறைச் சீருடை வழங்கப்பட்டது. கூடவே ஒரு ராணுவத் தொப்பி, முரட்டுத் துணியில் தயாரிக்கப்பட்ட தொளதொளப்பான சட்டை, அதில் கைதி எண் குறிக்கப்பட்டு அம்புக் குறிகளும் போடப்பட்டிருந்தன. அரைக்கால் சட்டையும் கால்களுக்கு கம்பளியில் தயாரிக்கப்பட்ட காலுறைகளும், தோல் செருப்புகளும் தரப்பட்டன. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் கொட்டும் மழையில் தலையில் படுக்கையை சுமந்த வண்ணம் அவர் நடக்க வேண்டி வந்தது. மிகவும் மோசமான நடத்தையுள்ள கறுப்பின (நீக்ரோ) மற்றும் சீனக் கைதிகள் இருந்த அறையில் காந்திஜி அடைக்கப்பட்டார். சில ஜுலு கைதிகள் காந்திஜியைத் திட்டி அடிக்கவும் செய்தனர். கழிப்பறையில்கூட தனி மறைவிடம் கிடையாது. அக்கைதிகளின் நடவடிக்கைகள் அருவருப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அவர்களது மொழி அவருக்குப் புரியவில்லை. சிறிது காலத்திற்குப் பின் நான்கு அடிக்கு ஆறு அடி அளவுள்ள ஒரு இருண்ட தனி அறையில் சிறைவைக்கப்பட்டார். கூரையின் அருகே காற்றுக்காக சிறிய ஜன்னல் ஒன்று இருந்தது. பூட்டப்பட்டிருந்த கதவிற்குப் பின்பாக நின்ற நிலையில் அவர் உணவு அருந்த வேண்டி வந்தது. தினமும் இருமுறை அவர் உடற்பயிற்சிக்காக அறைக்கு வெளியே அழைத்துவரப்பட்டார். நெய் வழங்கப்படாததால் தொடர்ந்து 15 நாட்களுக்கு அவர் சாதத்தை ஏற்க மறுத்தார். ஒருவேளை மட்டும் ஒரு விதமான கஞ்சியை அருந்தினார். இதன் பின்பு அவருக்கு ரொட்டியும் நெய்யும் வழங்கப்பட்டன. கயிற்றில் தயாரிக்கப்பட்ட விரிப்பு ஒன்றும், மரத்தலையணை ஒன்றும் இரு கம்பளிகளும் புத்தகங்களும்கூட அவருக்குக் கிடைத்தன. தினமும் ஒரு வாளி தண்ணீர் வழங்கப்பட்டது. அறையின் ஒரு மூலையில் தண்ணீர் வைக்கப்பட்டது. கைதியைக் கண்காணிப்பதற்காக இரவு முழுவதும் மின்விளக்கு எரிந்தது. ஆனால், அதன் வெளிச்சம் புத்தகம் படிப்பதற்குப் போதுமானதாக இல்லை. சற்று மாறுதலுக்காகத் தன் அறைக்குள் அவர் உலவ முற்பட்டார். காவலர் "நடந்து தரையைப் பாழடிக்காதே" என்று அதட்டுவார். அந்தத் தரை தாரினால் அமைக்கப்பட்டிருந்தது.
காந்திஜி குளிப்பதற்கு அனுமதி கேட்டபோது அவரை நிர்வாணமாக நடந்துசெல்லும்படி காவலர் உத்தரவிட்டார். 125 அடி தூரத்திற்கு உடலில் ஆடையின்றி நடப்பதற்கு அவர் இணங்கவில்லை. குளியல் அறைக்கு வெளியே தனது உடைகளைக் கொண்டு திரை அமைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடம்பில் தண்ணீர் ஊற்றிக்கொள்வதற்குள்ளாகவே 'சாம் வெளியே வா!' என்ற உத்தரவு வந்தது. வெளியே அவர் வந்திராவிட்டால் ஒரு கறுப்பர் அவரை உதைத்து வெளியேற்றி இருப்பார்.
அவருக்கு சட்டைகளின் பைகளைத் தைப்பது மற்றும் கிழிந்த போர்வைகளைத் தைப்பது, இரும்புக் கதவுகளுக்கு வார்னிஷ் செய்வது போன்ற பணிகள் தரப்பட்டன. நாள் ஒன்றிற்கு ஒன்பது மணி நேரம் வேலை இருந்தது. தரையையும் கதவுகளையும் மூன்று மணிநேரம் தொடர்ந்து சுத்தம் செய்த பின்பும் அவற்றில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கழிவறைகளை சுத்தம் செய்யும்படியும் அவர் பணிக்கப்பட்டார். எல்லாப் பணிகளையும் அவர் இன்முகத்துடன் மேற்கொண்டார். ஆனால் அதே பணிகள் அவரது நண்பர்களுக்கும் வழங்கப்பட்டபோது அவர் வருத்தம் அடைந்தார். ஏனெனில், அவர்கள் பணியைச் செய்ய முடியாமல் அவதியுற்று அழுதனர். மயக்கம் அடைந்தனர். நான்தானே இவர்களது இன்னல்களுக்குக் காரணம் என்று எண்ணி வருந்தினார். இப்படியாக அவதியுற்று தியாகம் செய்வதன் மூலமே அடிமைத்தனத்தை அகற்றி மனதில் அமைதி பெற முடியும் என்று அவர் நம்பினார்.
காலைக் கடன்களை ஆறு மணிக்குள் முடிக்க வேண்டும். 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து ஒன்பது மணிநேரத்திற்கு கடினமான வேலைகள் செய்ய வேண்டும், ஒரு மைல் தூரம் நடந்து சென்ற பின் பூமியைப் பிக்காசி கொண்டு பிளக்க வேண்டும். அவர் எடை குறைந்தது. அவர் முதுகில் வலி எடுத்தது. கைகளில் தோன்றி இருந்த கொப்புளங்களிலிருந்து நீர் வடிந்தது. சிறிது நேரத்திற்குக்கூட பணி செய்வதை அவர் நிறுத்தினால் காவலர் "தொடர்ந்து வேலை செய்" என்று சப்தம் போடுவார். காந்திஜி காவலரை எச்சரித்தார்: ''நீங்கள் உங்களது மிரட்டல்களை நிறுத்தாவிட்டால் நான் பணி செய்வதை நிறுத்தி விடுவேன்.'' காந்திஜி தனது மானத்தைக் காக்கும்படியும், கொடுத்த பணியை முடிப்பதற்கான பலத்தை அளிக்கும்படியும் கடவுளை வேண்டிக்கொள்வார்.
இந்தியாவைப் பொருத்தவரை சிறைகளை அவர் மாட்சிமை தங்கிய இங்கிலாந்து மன்னரின் ஹோட்டல்களாகவே கருதினார்! அவரது செலவுகளை அரசே ஏற்றது. இருப்பினும் தனது தேவைக்கு மேல் ஒரு பைசாகூட அவர் செலவு வைக்கமாட்டார். ஒரு தடவை சிறை மேலாளரிடம் தனக்காக அளிக்கப்பட்ட சோபா நாற்காலி மேஜைகளையும் சமையல் பாத்திரங்களையும் அகற்றும்படி கேட்டுக்கொண்டார். ஒரு இரும்புக் கட்டிலையும் ஒரு சில பாத்திரங்களையும் மட்டுமே வைத்துக்கொண்டார். அவருக்காக செய்யப்படும் செலவுகள், கோடிக்கணக்கான ஏழை மக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து ஈடுசெய்யப்படுகிறது என்ற உணர்வு எப்போதும் அவரை விட்டு அகலவில்லை. ஆகாகான் அரண்மனையில்தான் அவர் கடைசியாக சிறை வைக்கப்பட்டிருந்தார். அச்சிறை வாசம் பற்றிக் குறிப்பிடுகையில், “நான் சிறை வைக்கப்பட்டுள்ள இந்தப் பெரும் அரண்மனை மற்றும் ஏராளமான காவலர்கள் காரணமாக மக்கள் பணம் வீண் செலவு செய்யப்படுகிறது. பட்டினியால் ஜனங்கள் செத்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த வீண் செலவு மனித இனத்திற்கெதிராக செய்யப்படும் குற்றம் ஆகும்.
இந்தியாவில் காந்திஜிக்கு எதிரான முதல் வழக்கு மறக்க முடியாத ஒரு சம்பவம். தனது ஆசனத்தில் அமர்வதற்கு முன்பாக நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டவர் கூண்டில் நின்றிருந்த இந்தியருக்கு வணக்கம் செலுத்தினார்! காந்திஜியின் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு தண்டனையாக அவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி இவ்வாறு கூறினார். "அரசியலில் உங்களிடமிருந்து மாறுபட்ட கொள்கை உடையவர்கள்கூட உங்களை நேர்மைக்கு இலக்கணமாக விளங்கும் ஒரு முனிவரைப் போல் மதிக்கிறார்கள்.'' காந்திஜியோ "இந்தியாவின் பெரும் தேசபக்தர்களுக்கு இப்படிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் இது போன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனக்கு சட்டத்தின் அதே பிரிவின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதைக் கௌரவமாகவே கருதுகிறேன். நான் நெருப்புடன் விளையாடினேன் என்று எனக்குத் தெரியும். எனினும் மீண்டும் அப்படியே செய்வேன்.'' காந்திஜி கோர்ட்டில் நுழைந்த சமயத்திலும், வெளியேறிய சமயத்திலும் கோர்ட்டிலிருந்த அனைவரும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். போலீசார் அவருக்காக ஒரு ரகசிய சங்கேதக் குறிப்பைப் பயன்படுத்தினர். "பாம்பே அரசியல் எண் 50" என்பதே அச்சங்கேதக் குறிப்பு. அவரது பெயர் வழக்கறிஞர்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. சிறையில் அவரது உயரமும் அடையாளக் குறிகளும் பதிவு செய்யப்பட்டன. அவர் தனியறையில் சிறைவைக்கப்பட்டார். அவரிடம் இடுப்பில் கட்டியிருந்த அரையாடையைத் தவிர வேறு எதுவும் இல்லை. இருப்பினும் அவரது உடை சோதனை செய்யப்பட்டது. அவரது போர்வையும் சோதனை செய்யப்பட்டது. அவரது மண் பானை மீது பூட்ஸ்கால் படும் வரை அவர் பொறுமை காத்தார். பிறகு ஏற்பட்ட வெறுப்பில் சிறிது காலத்திற்கு அவர் பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை. கடிதங்களும் எழுதவில்லை.
இன்னலுக்கு ஆளான போதெல்லாம் அவர் கசப்புணர்ச்சியைக் காட்டவில்லை. நிதானத்தையும் இழக்கவில்லை. ஒவ்வொரு முறை சிறையிலிருந்து வெளியே வரும்போதும் அவரது மனம் மேலும் உறுதியடைந்து விசாலமாயிற்று. அவரைப் பொருத்தவரை சிறைவாசத்தின்போது நாம் சீரான பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலாம். நண்பர்களுடன் உறவாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டாலும்கூட நல்ல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு உண்டு. சிறைவாசத்தின்போது ஒரு பறவையைப் போல் மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் புத்தகங்களைப் படிக்க விரும்பினாலும்கூட சிறைக்கு வெளியே அவருக்கு எப்போதும் ஏதாவது அலுவல் இருந்ததால் படிப்பதற்கு அவகாசம் கிடைப்பதில்லை. சிறையிலோ படிப்பதற்காக ஒரு கால அட்டவனையே வைத்திருந்தார். உருது மொழியைச் சிறையில்தான் கற்றார் அவர். சமஸ்கிருதம், தமிழ், ஹிந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பல்வேறு நூல்களை அவர் படித்தார். இரண்டு ஆண்டுகளில், மதம், இலக்கியம் மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளில் பல பிரபல எழுத்தாளர்களின் 150 நூல்களை அவர் படித்தார். கீதை, குர்ஆன், பைபிள் மற்றும் புத்த, ஜைன, ஜோராஷ்ட்ர மதங்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தார். கூடவே ராமாயணம், மகாபாரதம், உபநிஷத்துக்கள், மனுநீதி சாஸ்திரம் மற்றும் பதஞ்சலியின் யோக சூத்திரம் ஆகிய நூல்களையும் படித்தார். தனது 65வது வயதில் மற்றொரு சிறைவாசியிடமிருந்து வானியல் பற்றிய முதல் பாடங்களைப் படித்தார். சிறை அதிகாரிகளிடமிருந்து டெலிஸ்கோப் ஒன்றைப் பெற்று நட்சத்திரங்களை ஆராயத் தொடங்கினார்.
சிறையில் காந்திஜி நாள்தோறும் நூல் நூற்றார். நான்கு முதல் ஆறு மணிநேரங்கள் சுறுசுறுப்பாக நடை பயின்றார். ஆகாகான் அரண்மனையில் தனது 75வது வயதில் கஸ்தூர்பா அம்மையாருக்கும், தனது பேத்திக்கும் புவியியல் (பூகோளம்), அளவை இயல் (ஜாமெட்ரி), சரித்திரம், குஜராத்தி இலக்கணம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுத்தந்தார். இதற்கு முன்பாக (தென் ஆப்பிரிக்காவில்) ஒரு சீனக் கைதிக்கு ஆங்கில மொழியையும் ஓர் அயர்லாந்து நாட்டுக் கைதிக்கு குஜராத்தி மொழியையும் கற்றுக்கொடுத்திருந்தார். சத்தியாக்ரஹத்தின் சரித்திரம் மற்றும் தென் ஆப்பிரிக்கச் சிறைவாசம் பற்றி சிறுவர்களுக்கான புத்தகங்களை அவர் சிறைவாசத்தின்போதுதான் எழுதினார். இந்திய முனிவர்கள் எழுதிய உபநிஷதுகளிலிருந்து ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். "சிறைச்சாலையில் எழுதப்பட்ட பாடல்கள்" என்ற தலைப்பில் அப்புத்தகம் வெளியிடப்பட்டது. ஆசிரமவாசிகளுக்கும், சக ஊழியர்களுக்கும், சிறை அதிகாரிகளுக்கும், ஆளுநர்களுக்கும், கவர்னர் ஜெனரல்களுக்கும், இங்கிலாந்து நாட்டின் பிரதம மந்திரிக்கும் அவர் நூற்றுக்கணக்கான கடிதங்களைச் சிறையிலிருந்துதான் எழுதினார். ஒவ்வொரு வாரமும் ஆசிரமக் குழந்தைகளுக்கு சுவையான கடிதங்களை அவர் எழுதுவார்; "நீ மட்டும் இறக்கைகள் இன்றிப் பறக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் உனது கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். என்னிடம் இறக்கைகள் இல்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் கற்பனையில் பறந்து உன்னிடம் வருகிறேன். இதோ விமலாவைப் பார்க்கிறேன். ஹரி அங்கு நிற்கிறான்."
காந்திஜி, சிறையின் கட்டுப்பாடுகளை நன்கு கற்று ஒரு லட்சியக் கைதி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விவரிப்பார். சிறைவாசிகள் தங்களுக்கு இடப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்றும், சட்டதிட்டங்கள் நல்லொழுக்கத்திற்குப் புறம்பாக இல்லாதவரை அவற்றை அனுசரித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உதாரணத்திற்கு, அவர்கள் வேண்டுமென்றே அவமானத்திற்குட்படுத்தப்படாதவரை அல்லது அசுத்தமான உணவு வழங்கப்படாத வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்ளக் கூடாது என்பார். மண்டி இட்டு, உட்கார்ந்தபடி சிறை அதிகாரிகளுக்கு சலாம் போடும் வழக்கத்தை அவரும் அவரது நண்பர்களும் அனுசரிக்கவில்லை.
நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பும்கூட சிறைச்சாலைகள் தேவைப்படும் என்று அவர் கூறிவந்தார். ஆனால், குற்றம் புரிந்தவர்களைத் திருத்தி நல்வழியில் செல்வதற்கு வாய்ப்பு அளிக்கும் விதத்தில் சிறைச்சாலைகள் மறுவாழ்வு இல்லங்களாக இயங்க வேண்டும் என்று அவர் விரும்பினார். கைதிகள் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு சிறைச்சாலைகளின் செலவுகளைச் சமாளிக்கும் விதத்தில் பணிபுரிய வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஒரு கைதி வழங்கிய இதுபோன்ற யோசனைகளை சிறை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்த லட்சியக் கைதி சில சமயங்களில் சிறை அதிகாரிகளை சங்கடத்தில் ஆழ்த்திவிடுவது உண்டு. அவருக்கு ரொட்டி சாப்பிடுவதற்கு அனுமதி தரப்பட்டு ரொட்டியும் வழங்கப்பட்டபோது ரொட்டியை வெட்டுவதற்குக் கத்தி கேட்டார். ரொட்டியைச் சுடுவதற்கு (டோஸ்ட் செய்வதற்கு) அடுப்பும் சாதனங்களும் வேண்டும் என்றும் கேட்டார். நடை பயில்வதற்கு அதிக இடம் வேண்டும் என்று அவர் கேட்பதுண்டு. சிறையில் உடன் இருந்த நண்பர்களுக்குத் தானே பொறுப்பு ஏற்று அவர்கள் நோயால் அவதியுற்றால் அவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி சிறை அதிகாரிகளை வற்புறுத்துவார். தனது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி கோரி திடீர் என்று உண்ணாவிரதம் மேற்கொண்டுவிடுவார். அவர் மிகவும் உடல் நலிவுற்றபோது சிறை அதிகாரிகள் அவரை விடுதலை செய்துவிடுவார்கள். நாட்டின் மிகவும் பிரசித்தமான ஒரு தலைவரின் உடல் நிலை மோசமாகிவிடும்போது நேரக்கூடிய விளைவுகளுக்கு பொறுப்பு ஏற்க அவர்கள் அஞ்சினர். அவருக்கு குடல்வால் நோய் (அப்பெண்டிஸைட்டிஸ்) ஏற்பட்டபோது உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.
காந்திஜி எப்போதுமே நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கிய ஒரு பட்டாளத்துடன்தான் சிறையில் நுழைவார். அன்னை கஸ்தூர்பாவும் அவரது செயலாளரான மஹாதேவ் தேசாயும் ஆகாகான் அரண்மனையில் அவருடன் சிறைவாசம் அனுபவித்தனர். இருவரும் அங்கு உயிர் நீத்தனர். இருவரது உடல்களும் அச்சிறையில் தகனம் செய்யப்பட்டன. காந்திஜி சொன்னார், "செய் அல்லது செத்துமடி" என்ற தாரக மந்திரத்திற்கேற்ப இவ்விருவரும் வாழ்ந்து காட்டினர். சுதந்திர தேவதையின் பலிபீடத்தில் உயிர்த்தியாகம் செய்தனர். அவர்கள் அமரர் ஆகிவிட்டனர்''.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத