Skip to main content

பல ரூபங்களில் காந்தி: செவிலியர் | அனு பந்தோபாத்யாயா

காந்திஜியுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சில காங்கிரஸ் தலைவர்கள் ஒருமுறை சேவாகிராமத்திற்கு வந்தனர். அப்போது காந்திஜி ஆசிரம நோயாளிகள் சிலருக்கு இடுப்புக் குளியல் சிகிச்சை செய்வதிலும், குளிர்ந்த நீர் ஒத்தடம் கொடுப்பதிலும் ஈடுபட்டிருந்தார். ஒரு தலைவர் காந்திஜியிடம் கேட்டார்: ''இப்பணிகளை எல்லாம் நீங்கள்தான் செய்ய வேண்டுமா?'' காந்திஜி பதிலளித்தார்: "வேறு யார் செய்வார்கள்? நீங்கள் கிராமத்திற்குள் சென்று பாருங்கள், 600 நபர்களில் 300 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனர்.''
சிறுவயது முதலே காந்திஜிக்கு செவிலியர் பணியில் ஈடுபாடு இருந்தது. பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு ஓடிச்சென்று நோயுற்றிருந்த தனது தந்தைக்கு பணிவிடை செய்வார். மருத்துவர்கள் வழங்கி இருந்த ஆலோசனைப்படி மருந்து தயாரித்து, தந்தைக்கு வேளா வேளைக்கு மருந்து கொடுப்பார். கூடவே புண்களையும் சுத்தம் செய்து கட்டுப் போடுவார் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது தினந்தோறும் ஒரு மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கு இலவசச் சேவை செய்ய அவர் தீர்மானித்தார். அப்போது, மருந்துகள் எழுதிக் கொடுக்கவும் அவர் கற்றுக்கொண்டார். செவிலியர் பணிக்கு நேரம் ஒதுக்கும் நிமித்தம், அவருக்கு வந்த வழக்குகளில் சிலவற்றை தனது ஒரு முஸ்லீம் நண்பருக்கு மாற்றி வந்தார்.
1896ம் ஆண்டில் சிறிது காலத்திற்கு இந்தியா வந்த காந்திஜி இந்தியத் தலைவர்களிடம் தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள் பற்றி எடுத்துரைத்தார். அவரது நேரம் முழுவதுமே 'பசுமை அறிக்கை' தயாரிப்பதில் செலவழிந்தது. இருப்பினும் அவரது சகோதரியின் கணவர் நோய்வாய்ப்பட்டபோது சகோதரியால் செவிலியர் யாரையும் உதவிக்கு அமர்த்திக்கொள்ள முடியவில்லை. காந்திஜி நோயாளியைத் தனது வீட்டிற்குக் கொண்டுவந்து அவருக்கு இரவு பகலாகப் பணிவிடை செய்தார்.
கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த தனது எட்டு வயது மகனுக்குக் காயங்களைக் கழுவி ஒரு மாத காலத்திற்கு கட்டுப்போட்டு வந்தார். டாக்டர் கட்டி இருந்த கட்டை அவிழ்த்துவிட்டு, காயங்களைக் கழுவிவிட்டு சுத்தமான மண்சாந்து பூசி கட்டுப் போட்டு வந்தார். காயம் சீக்கிரமே ஆறிவிட்டது. அவரது 10 வயதான மற்றொரு மகன் டைஃபாய்ட் ஜுரத்தால் அவஸ்தைப்பட்டான். 40 நாட்கள் வரை காந்திஜி அவனுக்குப் பணிவிடை செய்தார். பையனின் அலறலைப் பொருட்படுத்தாமல் அவனது உடல் முழுவதையும் ஈரத்துணியால் சுற்றி போர்வைகளைப் போட்டு மூடிவைத்தார். மிகவும் சிரத்தையுடனும் கனிவுடனும் பணிவிடைகள் செய்வார் காந்திஜி. எவ்விதக் குறையும் வைப்பதில்லை. வேறொரு சிறுவனுக்கும் அவர் டைஃபாய்ட் ஜுரம் வந்தபோது சிகிச்சை செய்தார். 15 நாட்கள் வரை மண்சாந்துப் பூச்சும் இடுப்புக் குளியலும் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஒன்றரை மணிநேரத்திற்குப் பின்பும் புதிதாக, மண்சாந்தை ஒன்றரை அங்குல கனத்திற்குப் பூசிவைப்பார். ஜூரம் விட்டதும் பையனை நன்கு கனிந்த வாழைப் பழங்களை உணவாக உட்கொள்ள அனுமதி கொடுத்தார். தாமே 15 நிமிஷங்களுக்கு வாழைப் பழத்தை நசுக்கிக் கூழாக்கிப் பையனுக்கு சாப்பிடக் கொடுத்தார், அவர் இப்பணியைப் பையனின் தாயாரிடம் ஒப்படைத்தால், அவர் அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்துவிடுவாளோ என்று அஞ்சி, இப்பணியைத் தாமே செய்தார். நோயாளிக்குப் பணிவிடை செய்யும் தருணத்தில் அவரை அமைதியாகவும் இருக்க வைப்பார். மனிதர்களுக்கு சார்புத் தன்மையை ஏற்படுத்தும் காப்பி, டீ போன்ற பானங்களை காந்திஜி தவிர்த்து வந்தார். இருப்பினும் நோயுற்றிருந்த ஒரு தென் இந்தியச் சிறுவன் காப்பி வேண்டும் என்று கேட்டபோது, தாமே தமது கைகளால் காப்பி தயாரித்து அவனுக்கு அளித்தார்.
நோயாளிகளுக்கு ஒத்தடம் கொடுப்பது, எனிமா கொடுப்பது, மண்சாந்து அப்புவது போன்ற பணிகளைச் செய்வார். நோயாளிகளைப் பொருத்தவரை அவர் செவிலியருக்கு ஒருபடி மேலாகவே இருந்தார். தன்னை நோய் தொற்றிக்கொண்டுவிடுமோ என்ற அச்சம் அவருக்கு எழுந்ததே இல்லை. வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பிச்சைக்காரர் ஒருமுறை அவரிடம் வந்தார். காந்திஜி அவருக்குத் தங்க இடம் கொடுத்து, புண்களுக்குச் சிகிச்சை அளித்து, சில நாட்கள் தன்னிடம் வைத்துக்கொண்ட பின்பே அவரை மருத்துவமனைக்கு அனுப்பினார். காந்திஜியுடன் சிறையில் இருந்த ஒரு நபர் குஷ்டத்தால் பீடிக்கப்பட்டபோது, காந்திஜி தினமும் அவரைச் சென்று பார்த்து சிகிச்சை செய்து வந்தார். சிறைவாசத்திற்குப் பின் அந்நோயாளி பல ஆண்டுகளுக்கு காந்திஜியுடன் சேவாகிராமிலேயே இருந்தார். காந்திஜி தினமும் அவருக்கு மருந்து போட்டு வந்தார்.
இரண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களில் காந்திஜிக்குத் தமது செவிலியர் பணியைப் பெரும் அளவில் செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டின. முதலாவது, போயர் யுத்தம். இரண்டாவது, ஜுலுக்களின் புரட்சிப் போராட்டம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் காந்திஜி ஒரு இந்திய ஆம்புலன்ஸ் சேவையை நிறுவி காயமுற்றவர்களுக்கும், நோயுற்றவர்களுக்கும் சிகிச்சை அளித்தார். செவிலியர்களுக்குத் தலைமை ஏற்று சிறந்த முறையில் பணியாற்றிய காந்திஜி, நோயாளிகளைத் தூக்குப் படுக்கையில் (ஸ்ட்ரெச்சர்) சுமந்த வண்ணம் மைல் கணக்கில் நடப்பார். சவுக்கடி பட்டுக் காயமுற்றுக் கிடந்த ஜுலு மக்களுக்கு அவர் சிகிச்சை அளித்தார். "காருண்ய சகோதரிகள்" குழுவைச் சேர்ந்த வெள்ளைக்காரச் செவிலியர்கள் காயமுற்று, அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஜுலு இனத்தவருக்குச் சிகிச்சை செய்ய மறுத்துவிட்டனர். அவர்களது காயங்கள் சீழ்ப் பிடிக்கத் தொடங்கி இருந்தன. கறுப்பு இன ஜூலு மக்களுக்கு மட்டுமின்றி, காயமுற்ற வெள்ளையர்களுக்கும் செவிலியப் பணி செய்தார். அவரது பணிகளைப் பாராட்டிய தென் ஆப்பிரிக்க அரசாங்கம் அவருக்கு ஜூலு போர்ப் பதக்கத்தையும் இந்திய கேசரி பதக்கத்தையும் வழங்கியது.
தென் ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்கப் பகுதிகளில் பிளேக் நோய் பரவியபோது, நிறைய இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். அதைப் பற்றிக் கேள்வியுற்ற உடனேயே காந்திஜி நான்கு உதவியாளர்களுடன் அங்கு விரைந்தார். அருகே மருத்துவமனை எதுவும் இல்லை. காலியாக இருந்த ஒரு சேமிப்பு கிடங்கில் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்து 23 நோயாளிகளை அங்கு கொண்டு சென்றார். அவரது பணிகளைப் பாராட்டிய ஊராட்சி மன்றம் அவருக்குக் கிருமி நாசினிகளை வழங்கி ஒரு செவிலியையும் உதவிக்கு அனுப்பியது. அச் செவிலிய மாதிடம் பிராந்தி போத்தல்கள் நிறைய இருந்தன. காந்திஜி அவற்றைப் பொருட்படுத்தவில்லை. மருத்துவ உதவி செய்ததுடன், அவர்களது படுக்கைகளையும் சுத்தம் செய்து இரவெல்லாம் கண்விழித்து அவர்களைப் பார்த்துக்கொண்டார். டாக்டரின் அனுமதியுடன் மூன்று நோயாளிகளுக்கு மண்சாந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இரண்டு பேர் பிழைத்துக்கொண்டனர். அந்தச் செவிலிய மாது உள்பட மற்ற நோயாளிகள் அனைவரும் மாண்டுபோயினர். நோயாளிகளுக்கு எப்படி நாம் நல்ல முறையில் சேவை செய்கிறோமோ அதேபோல் நமது உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்வது அவசியம் என்று காந்திஜி கூறுவார். அவர் எப்போதுமே முன் எச்சரிக்கையுடன் செயல்படுவார். பணி அதிகம் இருந்தபோதெல்லாம், தாம் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக்கொள்வார். அவர் எனிமா கொடுப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல் இடுப்புக் குளியல் செய்வதிலும், மண்சாந்து சிகிச்சையிலும் குளிர்ந்த நீர் ஒத்தடம் கொடுப்பதிலும் நிபுணர். தன்னுடைய ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்குத் தனது நெற்றியில் மண் சாந்தினைப் பூசிக்கொள்வார். யோனே நொகுச்சி என்ற ஜப்பான் நாட்டுக் கவிஞர் ஒருமுறை காந்திஜியைச் சந்தித்தபோது அவரது நெற்றியில் மண்சாந்து பூசப்பட்டிருந்தது. காந்திஜி சிரித்தவண்ணம் சொன்னார்: "நான் இந்திய மண்ணில் பிறந்தேன். இந்திய மண்ணையே என் தலை மீதும் தாங்கிக்கொண்டிருக்கிறேன்.''
நோயாளியின் நிலைமை கவலைக்கிடமான சமயங்களில் காந்திஜி சற்றும் பதட்டம் அடையமாட்டார். தொடர்ந்து அமைதியாக நோயாளிகளுக்குச் சிகிச்சையைச் செய்வார். இரண்டு தடவைகள் தென் ஆப்பிரிக்காவில் கஸ்தூரிபா அன்னையாரின் உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். காந்திஜி பொறுமையாகவும், தைரியத்துடனும் பணிவிடைகளைத் தொடர்ந்து செய்தார். அன்னையாரின் உடல்நிலையும் தேறிவிட்டது. தென் ஆப்பிரிக்கச் சிறையிலிருந்து வெளியே வந்த ஒரு சந்தர்ப்பத்தில் அன்னையார் மிகவும் பலகீனமாகிவிட்டார். காந்திஜி அவருக்கு பல் துலக்கி வைத்து, காப்பி தயாரித்து கொடுத்து, எனிமா கொடுத்து, மலம் கழித்த தட்டுகளை அகற்றி சுத்தம் செய்து, அன்னையாரின் தலையையும் வாரிவிட்டார். அதிகாலையில் அவரைப் படுக்கை அறையிலிருந்து வெளியே தூக்கி வந்து நாள் முழுவதும் திறந்த வெளியில் ஒரு மரத்தடியில் உட்கார வைத்திருப்பார். சூரியன் கிழக்கிலிருந்து மேற்கு திசைக்குமாறும்போது படுக்கையையும் எதிர்ப்புறத்திற்கு மாற்றி வைப்பார்.
தென் ஆப்பிரிக்காவில் இந்தியச் செவிலியர் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது. வெள்ளையச் செவிலியர்கள் கறுப்பர்களுக்குப் பணிவிடை செய்யமாட்டார்கள். கஸ்தூர்பா அன்னையாரின் கடைசிக் குழந்தையின் பேறுகாலம் நெருங்கியபோது, காந்திஜி மகப்பேறு சம்பந்தமான புத்தகங்களைப் படித்தறிந்து, தாமே செவிலியராகப் பணியாற்றி குழந்தைப்பேறு நல்லபடியாக நடக்கும்படி பார்த்துக்கொண்டார்.
ஆகாகான் அரண்மனையில் கஸ்தூர்பா கடைசி முறையாக நோய்வாய்ப்பட்டார். 75 வயதான காந்திஜி அவருக்கு இடுப்புக் குளியல் மூலம் சிகிச்சை அளித்தார்.
செவிலியர் மற்றும் மருந்தாளுனராகப் பணியாற்றிய காந்திஜி ஒருமுறை தாமே நோயாளியாகிவிட்டார். ஏரவாடாச் சிறைவாசத்தின்போது குடல்வால் நோய்க்காக (அப்பெண்டிசைட்டிஸ்) அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செவிலியர்கள் காந்திஜியின் செவிலிய - மருந்தாளுனர் அறிவை மிகவும் பாராட்டினர். ஒரு செவிலி இவ்வாறு கூறினார்: செவிலியர் பணி எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பதுதான். ஆனால், காந்திஜிக்குச் செவிலியப் பணி ஆற்றியது, நான் செய்த பாக்கியம்! அது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.டாக்டர், “இதுபோல் உனது அறிக்கையை நீ எப்போதுமே அச்சடித்து வினியோகித்தது இல்லையே, இப்போது ஏன் அப்படிச் செய்தாய்?” என்றார்.
இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு நோயாளிக்குப் பணிவிடை செய்ததில்லையேஎன்று செவிலி பதில் அளித்தார்.
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத