Skip to main content

பல ரூபங்களில் காந்தி: வேலைக்காரர் | அனு பந்தோபாத்யாயா


வேலைக்காரர்கள் வழக்கமாகச் செய்துவரும் எல்லாப் பணிகளையும் ஆசிரமத்தில் காந்திஜி செய்துவந்தார். ஆசிரம வாழ்வுக்கு முன்பு அவர் வக்கீலாக இருந்தார். அப்போது ஆயிரக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் தினமும் கோதுமையைத் திரிகையில் தன் கையால் அரைத்துவந்தார். கஸ்தூர்பாவும் குழந்தைகளும் அவருடன் சேர்ந்து சப்பாத்தி செய்வதற்கான கோதுமை மாவு அரைப்பது வழக்கம். சபர்மதி ஆசிரமத்தில் இப்பழக்கத்தை காந்திஜி தொடர்ந்துவந்தார். திரிகையில் பழுது ஏற்பட்டால் அதைத் தாமே மணிக்கணக்கில் உட்கார்ந்து சரி செய்வார். ஒரு முறை சமையலறையில் சப்பாத்தி செய்வதற்கு கோதுமை மாவு போதுமான அளவு இல்லை என்று ஒரு ஊழியர் காந்திஜியிடம் சொன்னபோது அவர் உடனே திரிகையின் அருகே அமர்ந்து மாவு அரைக்கத் தொடங்கிவிட்டார். மாவு அரைப்பதற்கு முன் கோதுமையை நன்கு புடைத்து கல் பொறுக்கும் பணியையும் அவர் செவ்வனே செய்வார். ஆசிரமத்திற்கு வருகை புரிந்தவர்கள் பல தடவைகளில் அவர் கோதுமையில் கல் பொறுக்குவதைப் பார்த்திருக்கிறார்கள். வெளி ஆட்களுக்கு எதிரேயும் எவ்விதமான பணியையும் செய்ய அவர் தயங்கியதே இல்லை. தனது ஆங்கில மொழி அறிவு பற்றிப் பெருமை கொண்டிருந்த கல்லூரி ஆசிரியர் ஒருவர் ஒரு முறை காந்திஜியைக் காண வந்தார். "பாபுஜி எனக்கு ஏதாவது வேலை கொடுங்கள்'' என்று அவர் கேட்டார். காந்திஜி , தனக்கு ஏதாவது அலுவலகப் பணி தருவார் என்று அவர் எதிர் பார்த்தார். இதை ஊகித்துவிட்ட காந்திஜி, அவரை கோதுமையைப் புடைத்து கல் பொறுக்கி வைக்கும்படிக் கூறிவிட்டார். கல்லூரி ஆசிரியர் சற்று மலைத்துவிட்டார். ஒரு மணிநேரம் வரை சிரமத்துடன் அப்பணியைச் செய்த பின் தளர்ந்து போய் போய் வருகிறேன்”' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
பல ஆண்டுகளுக்கு காந்திஜி பண்டகசாலையில் உதவியாளராகப் பணிபுரிந்தார். காலைப் பிரார்த்தனைக்குப் பின் காய்களை வெட்டி வைப்பதற்காக நேராகச் சமையலறைக்குச் சென்றுவிடுவார். சமையலறையிலும் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலும் எங்காவது குப்பையோ ஓட்டையோ தென்பட்டால் காந்திஜி பணியாளர்களைக் கடிந்துகொள்வார். காய்கறிகள் பழங்கள் மற்றும் தானியங்களில் அடங்கியுள்ள சத்துக்களைப்பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். ஒருமுறை ஒரு ஊழியர் உருளைக்கிழங்குகளைக் கழுவாமலேயே வெட்டத் தொடங்கிவிட்டார். காந்திஜி அவருக்கு உருளைக்கிழங்கையும் எலுமிச்சம்பழத்தையும் ஏன் முதலில் தண்ணீரில் கழுவவேண்டும் என்று விளக்கினார். வேறு ஓர் ஆசிரமவாசிக்கு காந்திஜி தோல் சற்று கறுத்திருந்த வாழைப்பழங்களைச் சாப்பிடக் கொடுத்தபோது அந்த நபர் சற்று முகம் சுளித்தார். காந்திஜியோ அவரிடம் ''உங்களது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜீரண சக்தியைப் அதிகரிப்பதற்காகத்தான் இப்பழங்களை உங்களுக்குக் கொடுத்தேன்" என்று விளக்கினார். காந்திஜி தாமே ஆசிரமவாசிகளுக்கு அடிக்கடி உணவு பரிமாறிவந்ததால், உணவு காரசாரமாக இல்லையே என்று யாரும் புகார் கூற வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தென் ஆப்பிரிக்கச் சிறைவாசத்தின் போது நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு இரண்டு வேளைகளிலும் அவர் உணவு பரிமாறிவந்தார். ஒவ்வொருவரும் தனது பாத்திரங்களைக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆசிரமத்தின் நியதி. சமையல் பாத்திரங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவினர் கழுவி வைப்பர். ஒரு நாள் காந்திஜி ஒரு பெரிய கனமான பானையைக் கையில் ஏந்தி அதில் படிந்திருந்த கரியை அகற்ற முயற்சித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கஸ்தூர்பா அம்மையார் அப்பானையைத் தன் கைகளில் வாங்கிக்கொண்டு, "இது உங்கள் பணி அல்ல, இதைச் செய்ய வேறு ஆட்கள் இருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டார். காந்திஜியும் அம்மையாரின் பேச்சுக்குக் கட்டுப்படுவதே விவேகமாக இருக்கும் என்று எண்ணி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். உலோகங்களினால் செய்யப்பட்டிருந்த பானைகள் எல்லாமே பளபளப்புடன் விளங்கினால்தான் காந்திஜிக்குத் திருப்தி. ஒரு தடவை சிறையில் தனது உதவியாளரிடம் இரும்புச் சட்டிகள் வெள்ளி மாதிரி பளபளக்கும் விதத்தில் தேய்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஆசிரமத்தில் கட்டிட வேலை நடந்துகொண்டிருந்தபோது நிறையப் பேர் கூடாரங்களில் தூங்க நேர்ந்தது. புதிதாக வந்த ஒருவருக்கு எங்கு தங்கவேண்டும் என்று தெரியாததால் படுக்கையை வெளியே வைத்துவிட்டு உள்ளே விசாரிப்பதற்குச் சென்றார். விசாரித்துவிட்டுத் திரும்பி வரும் சமயம் எதிரே காந்திஜி அவருடைய படுக்கையைத் தோளில் சுமந்த வண்ணம் வருவதைக் கண்டார்.
ஆசிரமத்திற்கு வெளியே இருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் இழுப்பது தினசரிப் பணிகளில் ஒன்றாகும். ஒருநாள் காந்திஜி சற்று உடல்நலம் குன்றி இருந்தார். இருப்பினும், தனது மாவு அரைக்கும் பணியைச் செய்து முடித்திருந்தார். இதற்கு மேலாகவும் உடலுழைப்பு ஏதும் காந்திஜி செய்ய வேண்டியதில்லை என்று எண்ணிய ஒரு தொண்டர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் பணியில் காந்திஜியின் பங்கையும் தாமே செய்துவிட்டார். காந்திஜிக்கு இது சற்றும் பிடிக்கவில்லை. வேறு பகுதியிலிருந்து ஒரு தொட்டியைக் கிணற்றடிக்குக் கொணர்ந்து அதில் தண்ணீர் நிரப்பிவிட்டுச் சென்றார், காந்திஜி. அத்தொண்டர் தம் செயலுக்காக வருந்தினார். அவரது உடல்நிலை நடமாட முடியாத அளவுக்கு மோசமாகப் போனால் ஒழிய, உடல் நலிவுற்றிருந்த சமயத்திலும் உடல் உழைப்பு உட்பட எல்லாப் பணிகளையும் செய்து முடிக்கவேண்டும் என்பது காந்திஜியின் வழக்கம், கொள்கையும்கூட. அதேபோல தான் ஒரு மகாத்மா என்பதாலோ, தனக்கு வயது அதிகம் ஆகிவிட்டது என்பதற்காகவோ, சில சிறிய பணிகளைச் செய்வதைத் தவிர்க்கவும் அவர் விரும்பவில்லை. அவருடைய மனோதிடமும் அவருக்கு இருந்த உழைப்புத் திறனும் அளவிட முடியாதவை. சோர்வை அவர் அறியார். தென் ஆப்பிரிக்காவில் போயர் யுத்தத்தின்போது தூக்குப் படுக்கையை (ஸ்ட்டெச்சர்) சுமந்த வண்ணம் தினமும் 25 மைல்கள் (40 கிலோ மீட்டர்கள்) நடந்திருக்கிறார். சரியான நடைமன்னர்! டால்ஸ்டாய் பண்ணையில் இருந்த சமயத்தில் பல சந்தர்ப்பங்களில் ஒரே நாளில் 42 மைல்கள் (67 கிலோ மீட்டர்கள்) அவர் நடப்பதுண்டு. பையில் கொஞ்சம் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு அதிகாலை 2 மணிக்கே புறப்பட்டு பக்கத்து ஊருக்குச் சென்று கடைகளில் வாங்கவேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டு மாலையில் திரும்பிவிடுவார். மற்ற நண்பர்களும் இளைஞர்களும் காந்திஜியின் உதாரணத்தை மகிழ்ச்சியுடன் பின்பற்றிவந்தனர்!
ஒரு தடவை பண்ணையில் பெரியதோர் பள்ளம் ஒன்றை மூடவேண்டி இருந்தது. பணியாளர்கள் மண்வெட்டிகள் கூடைகள் சகிதம் சென்று காலைப் பணியை முடித்துவிட்டு வரும்போது அவர்களுக்கு பழங்களுடன் கூடிய காலை உணவை காந்திஜி தயாராக வைத்திருந்தார். "எங்களுக்காக ஏன் இவ்வளவு சிரமப்பட்டீர்கள்?'' உங்கள் கையினால் உணவு பரிமாறப்படும் அளவிற்கு எங்களுக்குத் தகுதி இல்லையே'', என்று ஊழியர்கள் கூறினர். காந்திஜி சிரித்த வண்ணம் கொடுத்த பதில் "நீங்கள் பணியை முடித்துவிட்டு களைப்புடன் திரும்பியுள்ளீர்கள். உங்களது காலை உணவைத் தயாரிப்பதற்கு என்னிடம் நேரம் இருந்தது; விஷயம் அவ்வளவுதான்!"
தென் ஆப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் பிரபலமான தலைவர் என்ற முறையில் இந்தியர்கள் சார்பாக வாதாடுவதற்காக ஒரு முறை அவர் லண்டன் நகருக்குச் சென்றார். சில இந்திய மாணவர்கள் அவரை ஒரு சைவ விருந்திற்கு அழைத்திருந்தனர். அம்மாணவர்கள் உணவை அவர்களே தயாரித்துக்கொண்டிருந்தனர். பகல் 2 மணிக்கு அங்கு வந்த மெலிந்த உருவத்துடன் கூடிய ஒரு நபர் அவர்களுடன் இணைந்து காய்களை வெட்டுதல் பாத்திரங்களைக் கழுவுதல் போன்ற பணிகளைச் செய்தார். விருந்திற்கான நேரம் வந்தபோதுதான் மாணவர்களுக்குத் தங்களுடன் பணியாற்றிய நபர் மகாத்மா காந்தி என்பது தெரியவந்தது.
காந்திஜி கடினமாக உழைப்பவர்தான். இருப்பினும் வேறு யாராவது அவருடைய பணியைச் செய்வது அவருக்குப் பிடிக்காது. ஒரு தடவை ஒரு அரசியல் கூட்டம் முடிந்து இரவு 10 மணிக்கு தம் அறைக்குத் திரும்பியதும் கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு அறையைச் சுத்தம் செய்யத் தொடங்கினார். ஒரு தொண்டர் அவருக்கு உதவுவதற்கு ஓடி வந்ததை அவர் விரும்பவில்லை. கிராமங்களில் தங்க நேர்ந்தபோது சில நாட்கள் இரவு நேரங்களில் எண்ணை வற்றி விளக்கு அணைந்து போய்விடும். அப்போது சோர்வுடன் படுத்திருக்கும் யாரையும் எழுப்பித் தொந்தரவு செய்யக் கூடாது என்ற எண்ணத்துடன் அறைக்கு வெளியே வந்து நிலவின் வெளிச்சத்திலேயே கடிதம் எழுதுவார் காந்திஜி!
நவகாளி யாத்திரையின்போது காந்திஜி இரண்டு தொண்டர்களை மட்டுமே தம்முடன் தங்க அனுமதித்தார். அவர்களுக்குக் கஞ்சி எப்படித் தயாரிப்பது என்று தெரியவில்லை. சமையலறைக்குச் சென்று அடுப்பின் முன்பு உட்கார்ந்த காந்திஜி தொண்டர்களுக்குக் கஞ்சி வைப்பதைக் கற்றுக்கொடுத்தார். அப்போது அவருடைய வயது 78.
காந்திஜிக்குக் குழந்தைகளிடம் பிரியம் அதிகம். தன் குழந்தைகள் பிறந்த இரண்டு மாதத்திற்குப் பின் செவிலியரையோ ஆயாவையோ காந்திஜி உதவிக்கு வைத்துக்கொள்ளவில்லை. பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று காந்திஜி கருதினார். ஒரு கைக்குழந்தையை அதன் தாயைப் போன்றே கைகளில் ஏந்தி அரவணைத்துப் பாலூட்டி அன்பு காட்டி அதைச் சந்தோஷமாக வைத்திருப்பது காந்திஜிக்கு கைவந்த கலை. ஒரு தடவை தென் ஆப்பிரிக்காவில் இருந்த சமயம் சிறைவாசம் முடிந்து திரும்பியபோது, அவரது நண்பர் போலாக்கின் மனைவி இளைத்துச் சோர்வுடன் காணப்பட்டார். தனது குழந்தைக்குத் தாய்ப்பாலை மறக்கடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இரவெல்லாம் அவரைத் தூங்கவிடாமல் அக்குழந்தை அழுது தொந்தரவு செய்தது. அன்று இரவே காந்திஜி குழந்தையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார். பல நாட்கள் நாள் முழுவதும் வழக்கம்போல் கடுமையான பணிகளையும், மாலையில் பொதுக் கூட்டங்களையும் முடித்து, பல மைல்கள் நடந்து இரவு 1 மணிக்கு காந்திஜி வீடு திரும்புவார். முதல் காரியமாகத் தாயின் அருகே படுத்திருக்கும் குழந்தையை எடுத்துச் சென்று தன் அருகே படுக்கவைத்துக்கொண்டு உறங்கப் போவார். குழந்தை அழுதால் கொடுப்பதற்காக ஒரு பாத்திரத்தில், தண்ணீர் மட்டும் பக்கத்தில் வைத்திருப்பார். ஆனால், அதற்கு அவசியமே ஏற்படவில்லை. குழந்தை அவர் அருகே அமைதியாக உறங்கிவிடும். 15 நாட்களில் குழந்தை தாய்ப்பாலை மறந்துவிட்டது.
தன்னைவிட வயதில் மூத்தவர்களை காந்திஜி மிகவும் மதித்தார். கோகலே, காந்திஜியுடன் தங்கி இருந்தபோது அவரது துணிகளை இஸ்திரி போட்டுக் கொடுப்பார். அவரது படுக்கையைத் தட்டிப் போடுவார். அவருக்கு உணவளித்தபின் அவரது காலையும் பிடித்துவிடுவார் காந்திஜி. கோகலே, எவ்வளவோ தடுத்தும் காந்திஜி கேட்கமாட்டார். அவருக்கு மகாத்மா பட்டம் அளிக்கப்படுமுன், ஒரு முறை, தென் ஆப்பிரிக்காவிலிருந்து அவர் இந்தியாவுக்கு வந்து காங்கிரஸ் மகாநாடு ஒன்றில் கலந்துகொண்டார். தாமாகவே முன்வந்து அசுத்தமாக இருந்த கழிப்பறைகளை அவர் சுத்தம் செய்தார். பிறகு ஒரு காங்கிரஸ் தலைவரிடம் சென்று "நான் செய்யக் கூடிய பணி ஏதும் உள்ளதா?'' என்று கேட்டார். "ஏராளமான கடிதங்கள் பதில் அனுப்பப்படாமல் கிடக்கின்றன. அவற்றை கவனிப்பதற்கு எழுத்தர்கள் யாரும் இல்லை. நீங்கள் அப்பணியைச் செய்வீர்களா?" என்று தலைவர் காந்திஜியைக் கேட்டதற்கு அவர் "நான் நிச்சயம் செய்கிறேன்" என்று பதிலளித்தார். "என்னால் செய்ய இயலும் எல்லாப் பணிகளையும் நான் செய்வேன்'' என்று மேலும் கூறிய வண்ணம், சிறிது நேரத்திலேயே அப்பணியை முடித்த காந்திஜி, அத்தலைவரின் சட்டைப் பொத்தான்களையும் மாட்டிவிட்டார்.
ஆசிரமத்தில் சற்று அனுபவம் மிக்க ஆட்களின் பணி தேவைப்பட்ட போதெல்லாம் காந்திஜி ஹரிஜனங்களையே தேர்ந்தெடுத்தார். அப்படிச் செய்வதன் மூலம் ஆசிரமத்திலிருந்து தீண்டாமை உணர்வை அகற்ற காந்திஜி முயற்சித்தார். காந்தயின் கொள்கை என்னவென்றால், "வேலைக்காரர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யும் எடுபிடிகள் அல்ல. அவர்கள் நமது சகோதரர்கள். சமயங்களில் சில தொந்தரவுகள், சில திருட்டுகள், சில அதிகப்படி செலவுகள் எல்லாம் ஏற்படக்கூடும்; இருப்பினும் நாம் அவர்களைச் சகோதரர்களாகவே நடத்த வேண்டும்". தன்னிடம் ஒருவரை வேலைக்காரராக எப்படி வைத்துக்கொள்வது என்பதை மட்டும் காந்திஜி கற்கவே இல்லை! இருப்பினும் சிறைவாசத்தின்போது அவரது சகாக்கள் சிலர் அவருக்கு உதவ முன்வருவதுண்டு. ஒருவர் பழங்களைக் கழுவி வைப்பார். ஒருவர் ஆடுகளின் பாலைக் கறந்து வைப்பார். ஒருவர் எல்லா நேரங்களிலும் அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார். ஒருவர் அவரது அறையைச் சுத்தம் செய்வார். ஒரு பிராமணர் அவரது பாத்திரங்களைக் கழுவியதுண்டு. இரண்டு ஐரோப்பியர்கள் தினந்தோறும் அவருடைய கட்டிலைத் தூக்கி வந்து படுக்கையை விரித்து வைப்பார்கள்.
இங்கிலாந்தில் சில பிரபுக்களுக்கும் அவர்களது வேலைக்காரர்களுக்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவு காந்திஜிக்கு மகிழ்ச்சி அளித்தது. ஒரு பிரபுவின் வீட்டிற்கு அவர் விஜயம் செய்தபோது எல்லா வேலைக்காரர்களும் அவருக்கு குடும்பத்தின் அங்கத்தினர்கள் போலவே அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இவர் ஒரு தடவை, ஒரு இந்தியரின் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு விடைபெற்றுச் செல்லும் தருணம் வந்தபோது, வேலைக்காரர்களை அழைத்து இவ்வாறு கூறினார். "என் நன்றியை எப்படி வார்த்தைகளில் சொல்வது என்றே புரியவில்லை. என் வாழ்வில் நான் யாரையுமே வேலைக்காரர் என்று எண்ணியது இல்லை. ஒரு சகோதரராகவோ சகோதரியாகவோதான் எண்ணி வந்துள்ளேன். உங்களையும் அப்படியே எண்ணுகிறேன். உங்களது சேவைக்குப் பதிலாக எதையும் செய்வது என்னால் முடியாத காரியம். ஆனால், கடவுள் உங்களுக்கு நிச்சயம் நல்லது செய்வார்.''
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

'சியமந்தகம்' நூல் வாங்க

நண்பர்களுக்கு வணக்கம். ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்தொகுப்பாக உருவாகியுள்ளது. இத்தொகுப்பை சாத்தியமான குறைந்த பட்ச விலையாக ஒரு பிரதிக்கு ₹900/- நிர்ணயித்துள்ளோம். நூலுக்கான முன்பதிவைத் தொடங்குகிறோம். Account Holder: SRINIVASA GOPALAN Account Type: Savings Bank: HDFC Bank Branch: Vannarpettai, Tirunelveli A/c No. 50100171907983 IFSC code: HDFC0000636 GPay: 7019426274 UPI: 7019426274@apl மேலுள்ள கணக்குக்கு பணம் செலுத்திவிட்டு, 7019426274 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கவும். தொடர்புக்கு: 70194 26274 மின்னஞ்சல்: azhisibooks@gmail.com சியமந்தகம் - ஓர் அறிமுகம்

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

சிறுகதை என்றால் என்ன? | க. நா. சுப்ரமண்யம்

சி றுகதை என்றால் என்ன ? உருவத்தால் சிறியதாக இருக்கவேண்டும் என்றும் , கதையாக இருக்கவேண்டும் என்றும் சட்டென்று பதில் கூறிவிடலாம். ஓரளவு திருப்தி தருகிற பதில் மாதிரித்தான் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது - உருவத்தில் சிறியது என்றால் எவ்வளவு சிறியது என்றும் , கதை என்றால் என்ன என்றும் கேள்விகள் தோன்றுகின்றன. இரண்டாவது கேள்விக்குப் பதில் முதலில் சொல்லிப் பார்க்கலாம். அத்தைப் பாட்டி கதையிலிருந்து , கம்பராமாயணத்தின் கருப்பொருள் வரையில் , ஏசாப்புக் கதைகளிலிருந்து மஹாபாரதத்து குருக்ஷேத்திரம் வரையில் , எல்லாமே கதையை ஆதாரமாகக் கொண்டவைதான். நாவல் , நாடகம் என்கிற இலக்கியத் துறைக்கும் ஆதாரமான விஷயம் கதைகள்தான். சிறுகதைக்கு ஆதாரமான கதை என்ன ? எப்படியிருக்க வேண்டும் ? ஓ. ஹென்றியின் கதைகளிலே பல சம்பவங்கள் அடுக்கடுக்காக வந்து கடைசியில் ஒரு திருப்பம் திரும்பி ஒடித்து வக்கிரமாக நிற்கும். மோபஸான் கதைகளிலே அடுக்கடுக்காகப் பல விஷயங்கள் சொல்லப்பட்டு , ஒரு சம்பவத்தைச் செயற்கை முத்தைப்போல உருட்டித் திரட்டித் தரும். சம்பவங்களை நம்புகிற இந்த இரண்டு கதைகளுக்கும் அப