Skip to main content

பல ரூபங்களில் காந்தி: ஏலம் விடுபவர் | அனு பந்தோபாத்யாயா


தன்னை மகாத்மா என்று சொல்வதையும் ஜனங்கள் தனது கால்களைத் தொட்டுக் கும்பிடுவதையும் தடை செய்வதற்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டால் அதை ஆதரிப்பதற்கு காந்திஜி தயாராக இருந்தார். இருப்பினும் அவர் சென்ற இடங்களில் எல்லாம் பெருந்தலைவர் என்ற முறையில் அவருக்கு அளிக்கப்பட்ட தடபுடலான வரவேற்பை அவரால் தவிர்க்க முடியவில்லை. பல்வேறு நற்பணிகளுக்காகவும் ஜனங்களுடன் எப்போதும் தொடர்பு வைத்துக்கொள்வதற்காகவும் அவர் எப்போதும் பயணம் செய்துகொண்டே இருந்தார். சென்ற இடத்தில் எல்லாம் அவரை மக்கள் அன்புடனும் பக்தியுடனும் வரவேற்றனர் அன்பளிப்பாக அவருக்கு மாலைகளும் மலர்க்கொத்துக்களும், விலை உயர்ந்த கண்ணாடிச் சட்டங்களிலும் பேழைகளிலும் வைக்கப்பட்ட பாராட்டுக் கடிதங்களும், பணப்பைகளும், நகைகளும் அளிக்கப்பட்டன. காந்திஜிக்கு மக்களின் இந்த அன்பு பிடித்திருந்தது. இருந்தாலும் சாதாரண மக்களின் வருவாய் நாள் ஒன்றுக்கு மூன்று பைசா என்று இருந்த நிலையில் பணம், மாலைகளிலும் பாராட்டுக் கடிதங்களிலும் அன்பளிப்புகளிலும் விரயம் செய்யப்படுவதை காந்திஜி விரும்பவில்லை.
இவ்வாறு பணம் வீணடிக்கப்படுவதை காந்திஜியால் எவ்வளவு முயன்றும் தடுக்க இயலவில்லை. இருந்த தேவையற்ற அன்பளிப்புப் பொருள்களை எப்படிப் பயனுள்ளதாக மாற்றலாம் என்று அவர் சிந்தித்தார். அவருக்கு ஒரு வழி தோன்றிவிட்டது. தனக்குக் கிடைக்கும் அன்பளிப்புப் பொருள்களை எல்லாம் ஏலம் விடுவது என்று முடிவு செய்தார். பகிரங்கமான முறையில் அன்பளிப்புப் பொருள்கள் பணமாக மாறும். பொதுக்கூட்ட மேடைகளில் அவர் இப்படி ஆரம்பிப்பார். ''எனது அன்புக்குரிய இந்த மாலைகளை இப்போது என்ன செய்வது! சிறுமிகளை இங்கே காணோம். (சிறுமிகள் அங்கு இருந்திருந்தால் மாலைகளை அவர்களது கழுத்தில் போட்டிருப்பாராம் காந்திஜி! என்ன கிண்டல்). யாராவது இவற்றை வாங்க முன்வருவீர்களா? இரண்டு ரூபாய், ஒருதரம், மூன்று ரூபாய் இரண்டுதரம், ஐந்து ரூபாய் மூன்றுதரம்" என்று ஜாலியாக ஏலம் விடுவார். ஏலம் மேலே மேலே ஏறிக்கொண்டே இருக்கும் - ஒரு சிறிய எலுமிச்சம் பழமானாலும் சரி, ஒரு பூமாலையானாலும் சரி, மாலை சில தடவை முப்பது ரூபாயிலும் விலைபோகும். முந்நூறு ரூபாயிலும் போகும். கிராமவாசிகள்கூட ஏலத்தில் பங்கேற்று பொருள்களை அதிக விலைக்கு வாங்குவதுண்டு. ஒரு முறை காந்திஜி பேழை ஒன்றைக் கையில் எடுத்து "இதன் விலை முந்நூறு ரூபாய், மன்னிக்க வேண்டும் தவறாகச் சொல்லிவிட்டேன். இதன் விலை 75 ரூபாய்தான்", என்றார். அதை முந்நூறு ரூபாயில் ஒருவர் ஏலம் கேட்டபோது ரூ. 300 ரூ. 300 என்று காந்திஜி கூவத் தொடங்கிவிட்டார். ''முன்பு ஒரு தடவை இப்படிப்பட்ட பேழையை ஆயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறேன்'' என்றார். கல்கத்தா நகரமக்கள் மூன்று முறை காந்திஜிக்கு அது போன்ற விலை உயர்ந்த பேழைகளைப் பரிசாக அளித்தனர். மூன்று முறையும் அப்பேழைகளை ஏலம் விட்டுவிட்டார். அவர் கூறுவார் "நீங்கள் பேரன்புடன் எனக்கு அளித்துள்ள பொருள்களை ஏலம் விடுவதன் மூலம் உங்களது அன்பை நான் அலட்சியம் செய்வதாக எண்ண வேண்டாம். என்னிடம் பெரிய டிரங்குப் பெட்டி ஏதும் இல்லாததால் இந்தப் பேழையை என்னால் எடுத்துச்செல்ல இயலாது. ஆசிரமத்திலும் இப்பேழையை வைக்க இடம் எதுவும் கிடையாது. இப்படிப் பொருள்களை ஏலம் விடுவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக மக்கள் மத்தியில் நற்பணிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு தர்ம சிந்தனையும் ஒரு ஆரோக்கியமான போட்டி உணர்வும் ஏற்படுகின்றன. மேலும் பொருள்களை ஏலம் எடுப்பவர்கள் எனக்காக அதிக விலை கொடுப்பதாகவும் நான் நினைக்கவில்லை.''
சில சமயங்களில் அவர் பேச்சைக் கேட்ட பின்பும்கூட தாராளமாக நன்கொடை தர யாருமே முன்வராத சந்தர்ப்பங்களும் இருந்தன. ஆனால், பெரும்பாலும் ஏலத்தில் கணிசமான தொகை அவருக்குக் கிடைத்து வந்தது. ஒரு எலுமிச்சம்பழம் பத்து ரூபாய்க்கு ஏலம் போயிற்று. ஒரு சிட்ட மாலை 201 ரூபாய்க்கு ஏலம் போயிற்று. தங்கத் தக்கிளி ஒன்று 5000 ரூபாய்க்கு ஏலம் போயிற்று. பேழை ஒன்றுக்கு ஏலத்தில் 1000 ரூபாய் கிடைத்தது. கட்டடம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டியபின் அவர் பயன்படுத்திய மண்வெட்டியும் தட்டுக்கூடையும் 1000 ரூபாய்க்கு ஏல விற்பனையாகியது. ஒரு ஏலத்தின் போது ஒரு சிறுவன் அணிந்திருந்த தங்கக் காப்பு அவரது கவனத்தை ஈர்க்கவே, காந்திஜி அந்தப் பக்கமாகக் கையை நீட்டினார். பையனின் தாயார் பையனைத் தூக்கிப் பிடித்து காந்திஜிக்கு உதவினார். காப்பைக் கழற்றிக்கொண்டு பையனைத் தட்டிக் கொடுத்தார். காப்பு ஏலம் விடப்பட்டது.
ஒருமுறை இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டார்: என்னிடம் எண்ணற்ற மோதிரங்கள் உள்ளன. அவற்றை நான் ஏலம் விடப்போகிறேன்.மூன்று தடவை ஏலம் விடப்பட்ட மோதிரம் ஒன்று 445 ரூபாய்க்கு ஏலம் போயிற்று. அதன் அடக்கவிலை ரூ. 30 மட்டுமே. ஒருமுறை அவருக்குக் கிடைத்த நன்கொடைப் பணத்தை எண்ணியபோது அதில் ரூபாய் நோட்டுக்கள், வெள்ளி நாணயங்கள் மற்றும் செப்புக் காசுகளைத் தவிர சோழி ஒன்றும் காணப்பட்டது. அதைக் கண்டு காந்திஜி மனம் நெகிழ்ந்தார். "மிகவும் ஏழையான ஒரு மனிதர் தன்னிடம் பணம் ஏதும் இல்லாததால் தன்னிடம் இருந்த இச்சோழியை அளித்துள்ளார். இது அவரது தியாக மனப்பான்மையின் சின்னம். தங்கத்தைக் காட்டிலும் விலை உயர்ந்தது'' என்று கூறினார்! உண்மையிலேயே தங்கத்தைக் காட்டிலும் அதிக மதிப்பு ஏற்பட்டு அச்சோழி ரூ. 111க்கு விற்பனையாகியது. தொடர்ச்சியான பயணங்களும், நாள் முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவேண்டிய நிர்ப்பந்தமும் பலவித சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் பணியும் இருந்தபோதும்கூட காந்திஜி சற்றும் தளர்ச்சி அடைய மாட்டார். அவரிடம் இருந்த வியாபாரிஎப்போதுமே விழிப்புடனும் உற்சாகத்துடனும் இருப்பார். தனது 78வது வயதில் ஹிந்து முஸ்லீம் கலவரங்களினால் துயரமற்றிருந்த நிலையிலும்கூட பீகார்ப் பயணத்தின்போது மூஸ்லீம்களின் நலனுக்காகப் பணவசூல் செய்து அணிகலன்களையும் அன்பளிப்பாகப் பெற்று அவற்றை ஏலம் விட்டார்.
காந்திஜியிடம் தன்னுடையது என்று பணமோ பொருளோ கிடையாது. அவரே ஒரு ஏழை ஆசிரம வாசி. ஒரு முறை ஒரு பொது நலத்திற்காக செப்புக்காசு ஒன்றை நன்கொடையாக அளித்தார். அதே செப்புக்காசை காந்திஜியிடம் அன்பு கொண்ட ஒரு நபர் 500 ரூபாய் செலுத்திப் பெற்றுக்கொண்டார்!
- தமிழில்: எம். ஆர். ராஜகோபாலன்

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் | இன நனவிலி மனம் | பெ. தூரன்

பி ராய்டு என்ற உளவியலார் நனவிலி மனத்தைப் பற்றி ஆராய்ந்து உளப் பகுப்பியல் முறையைத் தோற்றுவித்தார் என்று கண்டோம். உளப்பகுப்பியலின் தந்தை அவரே. அவரோடு ஆட்லரும், யுங் என்பவரும் மாணவராகப் பல ஆண்டுகள் வேலை செய்தனர். பிறகு இருவரும் கொள்கை வேறுபாடுகளால் வேறு வேறாகப் பிரிந்தனர். ஆட்லரின் பிற்காலக் கருத்தைப் பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது. இங்கு யுங்கின் கொள்கையைச் சுருக்கமாக ஆராய்வோம். நனவிலி மனத்தைப் பிற்காலத்தில் பிராய்டு ‘இத்’ என்றும், அதில் எழும் ஆற்றலை ‘லிபிடோ’ (Libido) என்றும் குறிப்பிட்டார். லிபிடோ பாலியல்பு வாய்ந்தது என்றும், மனக் கோளாறுகளெல்லாம் இது ஒழுங்காக அமையாததால் ஏற்படுகின்றன என்றும், இந்தப் பாலியல்பு குழவிப் பருவ முதற்கொண்டே தொடங்குகிறதென்றும் கருதினார். நனவிலி மனம் குழவிப் பருவத்தில் சிறிதாக இருந்தபோதும், வயது ஆக ஆக அக்குழந்தைக்குத் தடைகளும் விதிகளும் பெருகுகின்ற காரணத்தினால் நனவிலி மனத்தில் பல விதமான இச்சைகளும் ஆர்வங்களும் மிகுதியாகி நனவிலி மனம் விரிவடைகின்றது. அதனால்தான் நனவிலி மனம் நனவு மனத்தினின்றும் வளர்ந்ததேயாகும் என்று பொதுப்படையாகக் கூறுவதுண்டு. இக் கருத்தைப் பல ந

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (