Skip to main content

ஈப்புலி | ந. பிச்சமூர்த்தி


வீட்டிலே பெரிய தொந்தரவாக இருந்தது. கடவுள் எதற்காக ஈக்களைப் படைத்தார்? குழம்பிலும் சாதத்திலும் விழுந்து செத்துப்போகவா? இருக்கமுடியாது. பின் ஏன்? அவரைத்தான் கேட்க வேண்டும். ஆனால் என் எஜமானி கேட்பது வேறு. வீடு மாற்றுகிறீர்களா அல்லது செத்துப் போகட்டுமா? இப்பொழுது செத்துப்போகக் கூடாது. ஆறில் சாவு வேண்டாம். நூறிலேயே இருக்கட்டும். ஆக வேண்டிய காரியம் ரொம்ப பாக்கி இருக்கிறது.
"உங்கள் ஆசையெல்லாம் சரிதான். ஆனால் ஈக்குழம்பு தின்றால் சாகாமல் இருக்க முடியாதே.''
ஜாகை மாற்றுவதற்கு நான் இருந்த கிராமத்தில் வசதி இல்லை. குருவியானால் கூட்டிலிருக்கலாம். குரங்கானால் மரத்தில் வசிக்கலாம். சாகுருவியானால் கோபுரத்தில் வாழலாம். பாம்பானால் புற்றைத் தேடலாம். நாங்கள் என்ன செய்ய முடியும்? அங்கே வேறு வீடு கிடைக்காது.
கொசுவுக்கும் மூட்டைப்பூச்சிக்கும் மருந்துண்டு என்று கேள்வி. ஈக்கு மருந்துண்டா? மருந்தில்லை. மாற்றுண்டு என்று ஒரு கிராமத்தான் சொன்னான்.
மறுநாள் அந்த ஆள் ஒரு செடியை ஒடித்துக்கொண்டு வந்து கொடுத்தான். ''இதென்ன ?''
''ஈப்புலி.''
''அப்படி என்றால்''
"இதை வீட்டில் வைத்தால் இதிலுள்ள பூச்சிகள் ஈக்களைப் பிடித்துத் தின்றுவிடும். ஈக்குழம்பு பிறகு கிடைக்காது.''
அந்தச் செடியை ஊன்றிப் பார்த்தேன். அதில் கணக்கின்றி வட்டம் வட்டமாய் வாசல்கள், இருந்தன. சிறிய இலைகள் எல்லாம் சேர்ந்து சிலந்தி நூல் போன்றதொன்றினால் பிணைக்கப்பட்டிருந்தது. செடியையும் கூட்டையும் பார்த்தால் குன்றில் மேகம் கவிந்தது போலும், புகை உறைந்து போர்வையானது போலும் இருந்தது.
ஈக்கள் மத்தியில் அதை வைத்தேன். ஒரு வினாடிகூட ஆகவில்லை. ''பஸ்ஸ்ஸ்..'' என்ற சப்தம். அந்தக் கூட்டில் நாலு ஈக்கள் உட்கார்ந்துவிட்டு ஓட முயன்றன. தப்பிக்கொள்ளச் செய்த முயற்சியால்தான் ஈக்களின் சிறகிலிருந்து அந்த ஓசை எழுந்தது. பின்னும் ஒரு வினாடிதான், அதற்குள் கூட்டிலிருந்து பத்துப் பதினைந்து பூச்சிகள் வெளியே வந்தன. சிலந்தியைப் போன்ற உருவம் ஒவ்வொன்றும் வாசலண்டை வந்து முன் கால்கள் இரண்டையும் நீட்டி ஈக்களைப்பற்றி உள்ளே இழுத்துச் சென்றன. அப்புறம் சத்தத்தைக் காணோம். சிறிது நேரம் இந்த வேடிக்கையைச் கவனித்தேன். கூட்டிலுள்ள மேகம் போன்ற நூலில் ஒருவிதமான பசை இருக்கிறதென்று தெரிந்தது. அதனால்தான் உட்கார்ந்த ஈக்கள் ஓடிவிட முடியவில்லை.
ஈப்புலி என்பதில் சந்தேகமில்லை! ஏனென்றால் இரண்டு மணி நேரத்திற்கும் பிறகுகூட கூட்டின்மேல் இங்குமங்கும் ஈக்கள் புலி வாயில் போய்விட்டன. அன்று முழுவதும் வேட்டை ஓயவில்லை.
இரண்டு பகலும் இரவும் கழிந்தன. மறுநாள் காலையில் ஈப்புலி வேட்டையாடுவதைக் காண உட்கார்ந்தேன். பஸ்ஸ்.. என்ற ஓசையைக் காணோம். இதென்ன விநோதம்! ஈப்புலி ஆட்டுக்குட்டியைப்போல் சுத்த சைவமாகிவிட்டதா என்ன என்று ஆச்சரியப்பட்டேன். நேரம் ஆக ஆக ஈக்கள் கூட்டை மொய்த்தன. இந்த ரகசியத்தை அறியவேண்டுமென்பதற்காக நான் அரை ஈப்புலியாகிவிட்டேன். அதாவது ஈயைப் பிடித்துத் தின்னாமல் வெறுமனே விரட்டிவிட்டு கூட்டை ஊன்றி கவனித்தேன். எறும்புகள் கூட்டின் வாசல்களிலிருந்து சாரி சாரியாக வந்துகொண்டிருந்தன. கூட்டைக் கையிலெடுத்து ஆட்டினேன். பேச்சு மூச்சு காணோம். அப்பொழுதுதான் விஷயம் விளங்கிற்று ஈப்புலிக்கும் ஈப்புலி ஒன்று உண்டுஅதாவது ஈப்புலிகள் கூட்டில் செத்துக் கிடக்காவிட்டால் எறும்புகள் சாரி வைப்பானேன்? அவைகள் சாகாவிட்டால் கூட்டின் மேலிருக்கும் பசையில் ஈரமிருக்க வேண்டுமல்லவா? ஈக்கள் வந்து உட்கார்ந்துவிட்டுத் தாராளமாய்ப் பறந்து செல்வதும், கூட்டின் மேல் உலாவுவதும் கூட்டில் பசை இல்லை என்பதற்கு அத்தாட்சி அல்லவா!
ஈப்புலிகள் உயிருடன் இருந்தபொழுதும் அவ்வளவாக ஈக்கள் தொந்திரவு குறையவில்லை. நக்ஷத்திர மண்டலத்திலிருந்து ஒரு ஆயிரம் கழிந்தால் ஆகாசம் பள்ளிக்கூடத்து பிளாக் போர்டைப்போல் சுத்தக் கருப்பாகிவிடுமா?
மனைவியை அழைத்து கூட்டைக் காட்டினேன். எறும்புகள் சாரி வைப்பதுதான் அவள் கண்ணில் பட்டது.
"ஆனால் ஈப்புலி செத்துப்போய்விட்டதா?''
''ஆமாம்?''
''ஏன்?''
"நான் யோசித்துப் பார்த்தேன். சில விஷயங்கள் மனதில் பட்டன. மீன் கரையில் வருமா? அதே மாதிரிதான் ஈப்புலியும். ஈப்புலி வெட்டவெளியில் செடிகளில் கூடு கட்டக் கூடியது. செடியோடு அதன் கூடும் அப்பொழுது ஸ்திரமாக இருக்கும். நாம் என்ன செய்தோமென்றால் ஈப்புலிக் கூட்டைக் கொண்டுவந்து புகை சூழ்ந்த சமயலறையில் வைத்தோம். போதாக்குறைக்கு நம்முடைய குழந்தைகள் கூட்டை அடிக்கடி தூக்கிப் பல இடங்களில் வைத்தார்கள்திருவையாறு சப்தஸ்தான பல்லக்கைப் போல. அந்தமாதிரி மாற்றியதின் காரணமாக ஈப்புலி எச்சிலைத் துப்பிக் கூட்டின் மீது பசை தடவி வலை பின்னுமே அதைச் செய்யவில்லை. செய்யமுடியாது போலிருக்கிறதே; அதனால்தான் மூன்றாவது நாள் காலையில் கூட்டில் உட்கார்ந்த ஈக்கள் ஒட்டிக்கொள்ளாமல் பறந்துவிட்டன. தேளுக்கு கொடுக்கை வெட்டிவிட்டால் சீக்கிரம் செத்துவிடும் என்பார்கள். அதேமாதிரி ஈக்களைப் பிடிக்க முடியாத பொழுது ஈப்புலிகள் பட்டினியால் செத்துவிடுகின்றன தெரிந்ததா?''
"நன்றாகத் தெரிந்தது! ஈக்குழம்புக்கு என்ன செய்கிறதென்று தான் தெரியவில்லை?''
ஈக்கள் அசுரப்பிறப்பு. ஒன்று செத்தால் எட்டு பிறக்கும். தவிர ஈப்புலிகளுக்கும் ஒரு ஈப்புலி இருக்கிறதென்று தெரிந்துவிட்டது. ஆகையினால் குழம்பைப் பண்ணிய பிறகு ஒரு கொசுவலைத் துணியைப் பாத்திரத்தில் வேடு கட்டிவிடு.''
"அதைவிட நல்ல யோசனை தெரியும். மூடுகிறதற்கு வீட்டில் தாம்பாளம் இல்லையா என்ன! ஒரு சமயம் மறந்து போனால் அரோஹரா! கடைசிப் பல்லக்கில் ஏறவேண்டியதுதான்!''

Comments

Most Popular

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு , https://tinyurl.

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர