Skip to main content

காந்தி கதையில் பாப்பாங்குளம் | சோ. தருமன்


மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக வானொலி மட்டுமே இருந்த காலம். டி.வி.யெல்லாம் அறிமுகமாகவில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து போர்டு ஆபிசில் வானொலியுடன் வெளியே ஸ்பீக்கரும் கட்டப்பட்டிருக்கும். மக்கள் கூட்டங் கூட்டமாய் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்பார்கள். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு முன்னால், காந்தி மகான் வரலாற்றை 16 மாதங்கள் அதாவது 1965 நவம்பர் முதல் 1967 பிப்ரவரி முடிய வில்லிசையாகப் பாட வேண்டும். அதற்கு எவ்வளவு தொகை வேண்டும் என்று கேட்டு திருச்சி வானொலி நிலையத்தில் இருந்து வேந்தருக்குக் கடிதம் வருகிறது. அவருடைய குழுவினரைக் கலந்து வேந்தர் கணக்குப் போட்டு, நிகழ்ச்சிக்கு ரூபாய் 500. 16 பாகங்களுக்கும் சுமார் நான்கு முறையாவது திருச்சி போய் வரவேண்டும். நான்கு தடவை கச்சேரியிலேயே 16 பாகங்களையும் பதிவு செய்து கொள்ளலாம். ஆக நான்கு முறை வந்துபோக ரூபாய் 1000. ஒரு முறை பதிவு செய்ய ரூபாய் 500. ஆக நான்கு கச்சேரி ரேட் ரூபாய் 2000. மொத்தம் 3000 ரூபாய் வேண்டும் என்று பதில் அனுப்பினார்.
1965இல் இவ்வளவு பெரிய தொகை 'ஏ' கிளாஸ் ஆர்ட்டிஸ்டுக்கே கிடையாது. அதேபோல் காந்தி மகான் கதையை 16 பாகங்களாகப் பிரித்து வில்லிசையில் பாட வேறு யாரும் கிடையாது. கடிதமும் போய்ப் பதிலும் இப்படி வந்தது.
“எங்கள் துறையில் இவ்வளவு அதிகத் தொகை தர சட்டம் இடம் தராது. அதிகபட்சம் ரூபாய் 1000 தான். அதுவும் மேலே எழுதித்தான் சாங்ஷன் வாங்க வேண்டும்.” கடிதத்தைப் படித்ததும் வேந்தர் அவர்கள் இவ்விதமாகப் பதில் எழுதினார்.
“ரூபாய் 3000 கொடுக்க உங்களுக்குப் பவர் இல்லை என்றால் மத்திய சர்க்காரில் யாருக்கு பவர் இருக்கிறதோ அவர்களை அணுகி அனுமதி வாங்குங்கள், ரேட் குறைக்க வழியில்லை.”
இந்தக் கடிதத்திற்குத் திருச்சி வானொலியிருந்து உடனடியாகப் பதில் வந்தது. வேந்தர் கடிதத்தைப் பிரிக்கிறார். படிக்கிறார். கடிதம் இவ்வாறு கூறியது.
“இந்திய ஜனாதிபதி அவர்களின் விசேஷ அனுமதியின் பேரில் நிகழ்ச்சிக்கு சன்மானம் ரூபாய் 2000. போக்குவரத்துக்கு ரூபாய் 1000. நீங்கள் கேட்டபடியே பிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அட்வான்ஸ் பணம் ரூபாய் 1000 அனுப்பி இருக்கிறோம்” என்று இருந்தது. வேந்தருக்கு சந்தோஷம், காந்தி மகானைப் பாடப் போகிறோம் என்று.
காந்தி மகானைப் பற்றிய அத்தனை புத்தகங்களையும் தேடி எடுத்து இல்லாத புத்தகங்களைப் புதிதாக விலைக்கு வாங்கி இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாறுகள் அத்தனையையும் ஒன்றுசேர்த்து அந்த மகானின் வரலாற்றை வில்லுப் பாட்டுக்கு ஏற்ற வகையில் பாடல்களாகவும், வசனங்களாகவும் எழுத ஆரம்பித்தார். ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களையல்லவா சென்றடையப் போகிறது. ஆகவே வரலாறுகள் மாறிவிடாமலும் விட்டுப்போகாமலும் மிகக் கவனமாக அந்த வேலையில் ஈடுபட்டார். முதலில் 4 பாகங்கள் தயாரானதும் திருச்சிக்குப் போய் ரிக்கார்டிங் முடித்தார். ஒவ்வொரு மாதமும் ஒலிபரப்பும் ஆனது.
காந்தியின் வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டம் பஞ்சாப்பிலுள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் ஜெனரல் டயர் என்பவன் மூன்று பக்கமும் சுவர்களால் வளைக்கப்பட்ட இடத்தில் கூடிய பொதுமக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்ட கொடூர நிகழ்ச்சி. மக்களுக்கு ஓட வழியில்லை. சுதந்திரத்திற்காகக் கூடிய மக்கள் கூட்டம் தலையிலும் நெஞ்சிலும் குண்டடிபட்டுச் செத்து விழுகிறது. வேந்தர் இந்த இடத்தை மிக உணர்ச்சிகரமாகப் பாடுகிறார். "சுட்டான் சுட்டான் சுட்டானே, கை சோரும்வரைச் சுட்டானே" என்று கண்ணிகள் தொடங்கி, பின்னர் வசனம். இந்தியா முழுவதும் பொங்கி எழுந்தது. வடக்கில் நேரு, படேல், சாவர்க்கார். தெற்கே விருதை காமராஜர், சென்னையில் தீரர் சத்தியமூர்த்தி, சேலத்தில் ராஜாஜி, செங்கல்பட்டில் பத்தவத்சலம், மதுரையில் வைத்யநாதய்யர், திருநெல்வேலி பாப்பாங்குளத்தில் சொக்கலிங்கம் பிள்ளை எனப்பல தலைவர்கள் கண்டனக் கூட்டம் போட்டு தடியடிபட்டுக் கைதாகி சிறை சென்றார்கள்.
"சீறிப்பாய்ந்தார் தீரர் சத்தியமூர்த்தி
சேலத்திலே கூட்டினார் சக்கரவர்த்தி ராஜாஜி
செங்கல்பட்டில் எழுத்தாரே பக்தவத்சலமும்
மதுரையில் ஊர்வலம் வைத்யநாதய்யர்
விருதுநகர் காமராஜர் வீறுகொண்டு எழுந்தார்"
‘பாப்பாங்குளம் சொக்கலிங்கம் பதறித் துடித்தெழுந்தார்’ என்று பாட்டும் கதையும் பிரமாதமாகப் போகிறது. இதில் வானொலியில் ஒலிபரப்பாகி இரண்டு நாள் கழித்து வேந்தருக்கு ஒரு தபால் வந்தது. ‘எனது பெயர் சொக்கலிங்கம். பாப்பாங்குளம். பஞ்சாப் படுகொலை நடந்ததும் நெல்லையில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தி வசமாக அடிபட்டவர்களில் நானும் ஒருவன். விடுதலை பெற்று காலம் மாறி கிராமத்தில் பழையதை நினைத்துக்கொண்டு சீத்துவார் இல்லாமல் ஒதுங்கி வாழ்ந்து வருகிறேன்.
ரேடியோவில் தாங்கள் பாடிவரும் காந்தி மகான் கதையைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். சென்ற மாதத்தொடரில் பஞ்சாப் படுகொலையைத் தாங்கள் பாடியதில் எனது பெயரும், எனது ஊரின் பெயரும் வரவும் என்னைவிட என் குடும்பத்தாரும் எனது ஊர்க்காரர்களும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஊர்க்காரர்கள் என்னை மதித்துப் பார்க்கும் பார்வை என் நெஞ்சை விட்டு அகலவில்லை. ஒரே நிமிடத்தில் நான் ஒரு புதிய பிறவி எடுத்ததைப் போல் உணர்கிறேன். அந்த அளவுக்கு மக்கள் என்னை மதிக்கிறார்கள். காரணம் உங்களுடைய அந்த ஒருவரிப்பாட்டு. எனக்கு ஒரு சின்ன ஆசை. இந்தப் பக்கம் எங்காவது நிகழ்ச்சிக்கு வந்தால் தெரியப்படுத்துங்கள். உங்களை வந்து சந்திக்க ஆசை. பார்த்தே ஆகனும் அவ்வளவுதான்’ என்று கடிதத்தை முடித்திருந்தார்.
ஒரு மாதம் கழித்து அம்பாசமுத்திரத்தில் நிகழ்ச்சி மங்களம் பாடி முடியவும் வண்டியை நேராகப் பாப்பாங்குளத்துக்கு விடச் சொல்கிறார் வேந்தர். எதிர்பாராத சொக்கலிங்கம் பிள்ளையின் கழுத்தில் ஒரு பெரிய ரோஜா மாலையைப் போட்டு வணங்கினார். ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள் வைத்து 100 ரூபாய் நோட்டு ஒன்றையும் வைத்து நீட்டினார் வேந்தர். தியாகி சொக்கலிங்கம் பிள்ளையோ வெற்றிலை பாக்கு பழங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை வாங்க மறுத்துவிட்டார் வேந்தர் சொல்கிறார்.
“இது என்னுடைய சன்மானத்தில் எனக்கு உரிய பங்கில் தருவது. பணத்திமிரில் நான் தரவில்லை . ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியைக் கவுரவிப்பது என் கடமை. தவிரவும் புத்தக வரிகளில் மட்டுமே கண்ட தங்களை, நேரில் சந்திப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது” என்று சொல்லி சம்மதிக்க வைத்து பணத்தைக் கொடுத்துவிட்டு தியாகி சொக்கலிங்கம் பிள்ளையிடம் ஆசியும் பெற்றுச் சென்றார்.
இதுதான் ஒரு கலையின் வலிமை என்பது. ஒருவருக்கும் தெரியாத தியாகி சொக்கலிங்கத்தை ஒரே நொடியில் ஊரறிய உலகறியச் செய்துவிட்டாரல்லவா வேந்தர் தன் கலை மூலம். சங்க காலத்தில் எத்தனை மன்னர்கள் தங்களை பற்றிப் பாடும்படி புலவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். உயிர் அழியும், உடல் அழியும் கலையும் பாடலும் அழியுமோ!
*

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

பாண்டியர் நிறுவிய தமிழ்ச் சங்கம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்க காலத்திலே, மதுரை மாநகரத்திலே பாண்டிய மன்னர் மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவித் தமிழை ஆராய்ந்தார்கள் என்று இறையனார் அகப்பொருள் உரை முதலிய நூல்கள் கூறுகின்றன. அச்சங்கங்களில் இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழ்கள் ஆராயப்பட்டன. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை முதலிய செய்யுள்கள் கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டன. கடைச் சங்கம் கி.பி. 300க்கு முன்பு இருந்தது என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால், இக்காலத்தில் சிலர், தமிழ் வரலாற்றினையும், நாட்டு வரலாற்றினையும் நேர்மையாகவும் சரியாகவும் ஆராய்ந்து பாராமல், தமிழ்ச் சங்கம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது என்றும், அந்தத் தமிழ்ச் சங்கத்தில் தொல்காப்பியம் தோன்றியது என்றும் கூறுகின்றனர்; எழுதுகின்றனர். இவ்வாறு பிழைபட்ட ஆராய்ச்சியைக் கூறுகிறவர்களில் முதன்மை யானவர் அண்மையில் காலஞ்சென்ற திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். வையாபுரிப் பிள்ளையவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறைத் தலைவராக இருந்தபடியால், அவர் கூறுவன எல்லாம் உண்மை என்று பாமர மக்கள் நினைக்கிறார்கள். பாமர மக்கள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள் கூட, ஆராய்ந்து பார்த்