Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 10


(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1931 (வயது 62)

ஜனவரி 4-ஆம் தேதி இங்கிலாந்தில் முகம்மது அலி காலமானார்.

முதலாவது வட்ட மேஜை மகாநாடு ஜனவரி 18-இல் முடிவடைந்தது. அதில் இந்தியா பற்றிய பிரிட்டிஷ் கொள்கையைப் பிரதம மந்திரி எடுத்துரைத்தார். மன்னர் அனுப்பியிருந்த செய்தியில், இந்தியாவின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருப்பதாகவும், காங்கிரஸ்காரர்களின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஜனவரி 21-இல் அலகாபாத் சுயராஜ்ய பவனத்தில் ராஜேந்திரப் பிரசாத் தலைமையில் காரியக் கமிட்டி கூடி, வட்ட மேஜை மகாநாட்டை அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்று அறிவித்தது. அக் கூட்டத்தில் மாளவியா பிரசன்னமாக இருந்தார்.

காந்திஜியையும், காரியக் கமிட்டி அங்கத்தினர்களையும் நிபந்தனையின்றி விடுவிப்பதாக ஜனவரி 25-ஆம் தேதியன்று லார்டு இர்வின் அறிவித்தார். மறுநாள் காந்திஜியும் சுமார் 30 தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். காங்கிரஸ் ஸ்தாபனங்களுக்குச் சர்க்கார் விதித்திருந்த தடைகள் யாவும் வாபஸ் பெறப்பட்டன.

பிப்ரவரி 6-ஆம் தேதி லட்சுமணபுரியில் மோதிலால் நேரு காலமானார்.

பிப்ரவரி 17-ஆம் தேதி காந்தி - இர்வின் சந்திப்பு நடைபெற்றது. "அரை நிர்வாணப் பக்கிரி, வைசிராய் மாளிகையின் படிகளில் ஏறி நடப்பதா '' என்று சர்ச்சில் சொன்னார். டாக்டர் அன்ஸாரியின் ஜாகையில் கூடிய காரியக் கமிட்டி, காந்திஜிக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்தது.

பிப்ரவரி 22-ஆம் தேதி முஸ்லிம் லீக் கவுன்சில் கூட்டத்தில் காந்திஜி பேசினார். 27-ஆம் தேதி வைசிராயைச் சந்தித்தார். 28-ஆம் தேதி காந்திஜி மறியல் பற்றிய குறிப்பை அனுப்பினார். வைசிராய், உத்தேச சமரசம் பற்றிய குறிப்புக்களை அனுப்பினார். மார்ச்சு முதல் தேதிக்குள் திட்டவட்டமான பதில் வேண்டுமென்று வைசிராய் கூறினார். திரும்பவும் போராட்டங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாது என்பதுபோலத் தோன்றியது. ஆனால், மார்ச்சு முதல் தேதியன்று வைசிராயின் மனப்போக்கு நல்லவிதமாக மாறியது. மார்ச்சு 4-ஆம் தேதி காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அதன்படி, பகிஷ்காரம் நிறுத்தப்படும் என்றும், ஆனால், சுதேசிச் சாமான்களை வாங்கும்படி பிரசாரம் செய்ய அனுமதி உண்டு என்றும் முடிவாயிற்று. அமைதியான முறையில் மறியல் செய்வதும் அனுமதிக்கப்பட்டது. சட்டங்களை மீறுவது நிறுத்தப்பட வேண்டுமென்றும், தடுப்புச் சட்டங்களையெல்லாம் வாபஸ் பெறுவதென்றும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதென்றும் ஒப்பந்தமாயிற்று. கடற்கரையில் வாழும் மக்களுக்கு உப்புக் காய்ச்சவும், விற்கவும் உரிமை அளிக்கப்பட்டது. வட்டமேஜை மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் வகிக்கத் தீர்மானமாயிற்று. அதனால் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்த வழி ஏற்பட்டது.

15 நாட்களுக்குள் வைசிராயைக் காந்திஜி 8 தடவைகள் சந்தித்தார். மொத்தம் சுமார் 24 மணி நேரத்தை அவருடன் கழித்தார்.

இதன் பலனாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. பேச்சு வார்த்தைகளின்போது, பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர், ஸாண்டர்ஸைக் கொலை செய்ததாக லாகூர்ச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்ததை மாற்றுவது சம்பந்தமாகவும் காந்திஜியும் இர்வினும் பேசினர்.

மார்ச்சு 19-ஆம் தேதி வைசிராயைக் காந்திஜி பேட்டி கண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது சம்பந்தமாக விவாதித்தார்.

பகத்சிங்கைத் தூக்கிலிடும் தேதி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கலகங்கள் ஏற்படும் என்று அதிகாரிகள் பயந்ததுதான் இதற்குக் காரணம். ஐரோப்பிய மாதர்கள் குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது, ஐரோப்பிய வட்டாரங்களுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மார்ச்சு 23-க்கும் 24-க்கும் இடையே, இரவில் பகத்சிங் தூக்கில் இடப்பட்டார்.

கராச்சிக் காங்கிரஸில் காந்திஜியின் நிலைமை சிரமமான தாக ஆகிவிட்டது. அவர் கராச்சிக்கு வந்து சேர்ந்ததும், வாலிபப் புரட்சிக்காரர்கள் கறுப்புக் கொடிகளுடன் அவரை வரவேற்று, பக்கத்துக்கு அடையாளமாகக் கறுப்பு மலர்களை அவரிடம் கொடுத்தார்கள்.

காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்துக்கு முன்னதாகக் காந்திஜி நவஜவான் சபையின் தலைவரான சுபாஷ் சந்திர போஸுடன் பேசி அவரைக் காங்கிரஸின் கருத்துக்கு இணங்கும்படி தூண்டினார்.

மார்ச்சு 25-ஆம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் காந்திஜி பேசும்போது, "காந்தி சாகலாம்; ஆனால், காந்தீயம் என்றென்றைக்கும் இருக்கும்'' என்று கூறினார்.

மார்ச்சு 31-ஆம் தேதி கராச்சிக் காங்கிரஸ், திறந்த வெளியில் கூடியது. ஸர்தார் வல்லபபாய் பட்டேல் தலைமை தாங்கினார். மோதிலால் நேருவும், முகம்மது அலியும் காலமானதற்குத் துக்கம் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேறிய பின், பகத்சிங் பற்றிய தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியர் நலன்களுக்கு உகந்தவாறு அவசியமான மாறுதல்களுடன் பூரண சுயராஜ்யம் கோருவதற்கான அதிகாரத்துடன் வட்டமேஜை மகாநாட்டுக்குக் காங்கிரஸ் கோஷ்டியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. காந்திஜியின் பதினோர் அம்சங்களுடன், ஜவாஹர்லால் நேரு தெரிவித்த ஒரு சில புது அம்சங்களையும் கொண்ட ''மக்களின் ஜீவாதார உரிமைகள்'' பற்றிய தீர்மானம் நிறைவேறியது.

ஏப்ரல் 7-ஆம் தேதியன்று ஒரு கூட்டத்தில் பேசிய காந்திஜி, சுயராஜ்யம் என்பது நீதியின் அரசாட்சி என்றும், அதனால் ஆங்கிலேயனுடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார்.

காந்திஜி அமிர்தசரசில் சீக்கிய லீக்குக்குப் போய்விட்டு அகமதாபாத்துக்குத் திரும்பி குஜராத் வித்யாபீடப் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

ஏப்ரல் 18-இல் லார்டு இர்வின் இந்தியாவை விட்டுச் சென்றார். அவரைக் காந்திஜி பம்பாயில் வழியனுப்பினார். லார்டு வில்லிங்டன் வைசிராய் பதவி ஏற்றார். புதிய வைசிராயைக் காந்திஜி சிம்லாவில் சந்தித்தார்.

ஜூன் 10-இல் காரியக் கமிட்டி கூடி, வட்டமேஜை மகாநாட்டுக்குக் காந்திஜியைக் காங்கிரஸின் ஏகப் பிரதிநிதியாக நியமித்தது.

ஆகஸ்டு முதல் தேதியன்று, காந்திஜியின் தேசீயக் கொடியைச் சிற்சில மாறுதல்களுடன் காரியக் கமிட்டி ஏற்றுக்கொண்டது. அதன்படி மஞ்சள், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களும், வெள்ளை வர்ணப்பகுதியில் ராட்டை உருவமும் உடைய கொடி காங்கிரஸின் கொடியாயிற்று. மஞ்சள், தைரியத்துக்கும் தியாகத்துக்கும் அடையாளம். அமைதி, சத்தியம் ஆகியவற்றின் சின்னம் வெள்ளை. பச்சை, விசுவாசத்தையும் சக்தியையும் குறிப்பது. ராட்டை, பொதுமக்களின் க்ஷேம நலனைச் சுட்டிக்காட்டும் அடையாளம். பம்பாயில் இந்தக் கொடியை . . கா. . உத்தியோக பூர்வமாக அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.

காந்திஜி இங்கிலாந்துக்குப் புறப்பட வேண்டிய தருணம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், காந்தி - இர்வின் ஒப்பந்த ஷரத்துக்களை மாகாண சர்க்கார்கள் மீறியதன் காரணமாக நாட்டின் நிலைமை கடுமையாகிக்கொண்டிருந்தது. ஆகஸ்டு 15-ஆம் தேதி லண்டனுக்குப் போவதற்காகக் காந்திஜியும், சரோஜினி நாயுடுவும், மாளவியாவும் வாங்கியிருந்த கப்பல் டிக்கெட்டுகளை ரத்துச் செய்துவிட்டனர். ஆகஸ்டு 11-ஆம் தேதியன்று வைசிராய்க்குக் காந்திஜி தந்தி கொடுத்தார். வில்லிங்டன் கல்கத்தாப் பிரயாணத்தைக் குறைத்துக்கொண்டு சிம்லாவுக்குத் திரும்பினார். காந்திஜி பட்டேலுடனும் நேருவுடனும் சிம்லாவுக்குச் சென்றார். நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வில்லிங்டனும் காந்திஜியும் ஆகஸ்டு 27-இல் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டனர். நேரடியான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் உரிமையைக் காங்கிரஸ் வைத்துக்கொண்டது; பர்டோலி விவகாரம் சம்பந்தமாக விசாரணை நடத்தச் சம்மதம் அளிக்கப்பட்டது.

ஆகஸ்டு 27-இல் காந்திஜி விசேஷ ரெயிலில் சிம்லாவை விட்டுப் புறப்பட்டுப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். 29-ஆம் தேதி நடுப்பகலில் எஸ். எஸ். ராஜபுதனா என்ற கப்பல் லண்டனுக்குப் புறப்பட்டது. காந்திஜி இந்தியாவிலிருந்து புறப்படும்போது, வாயில்லாப் பூச்சிகளாக இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் நலன்களுக்கு முரண்படாத எதற்கும் தாம் பிரதிநிதித்துவம் வகிக்க முயல்வதாகவும், அந்த மக்களுக்காகவே காங்கிரஸ் இன்று இருந்துவருகிறது என்றும் ஒரு செய்தியில் கூறினார். அவரோடு மாளவியா, சரோஜினி நாயுடு, ஸர் பி. பட்டாணி, தேவதாஸ் காந்தி, மீராபென், மகாதேவ தேசாய், பியாரிலால், ஜி. டி. பிர்லா ஆகியோர் இங்கிலாந்துக்கு அதே கப்பலில் சென்றார்கள்.

ஏடனில் அராபியர்களும், இந்தியர்களும் இந்திய தேசியக் கொடியின் கீழ் காந்திஜிக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்தளித்ததுடன், 328 கினிகள் கொண்ட ஒரு பண முடிப்பும் கொடுத்தார்கள்.

"மாபெரும் தலைவர் அல் மகாத்மா காந்திக்கு" எகிப்தின் வாப்த் கட்சித் தலைவர் நஹாஸ் பாஷா வாழ்த்துத் தந்தி அனுப்பினார். சில பத்திரிகை நிருபர்களைத் தவிர எகிப்தியப் பொதுமக்கள் காந்திஜியைப் பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

போர்ட் செயித்தில் ஷௌகத் அலி வந்து காந்திஜியோடு சேர்ந்துகொண்டார்.

மார்ஸேல்ஸ் துறைமுகத்தில் காந்திஜியை, ஆண்டுரூஸ், பேராசிரியர் பிரிவாத், நோய்வாய்ப்பட்டிருந்த ரொமேன் ரோலாந்தின் சார்பில் அவருடைய சகோதரி ஆகியோரும், மாணவர்களும் வரவேற்றார்கள். மார்ஸேல்ஸிலிருந்து போலோனுக்குக் காந்திஜி ரெயிலில் சென்றார். போகும் வழியில் பத்திரிகையாளர்களின் கூட்டத்தில் பேசுவதற்காக வண்டியை நிறுத்தவேண்டியிருந்தது.

செப்டம்பர் 12-ஆம் தேதி காந்திஜி லண்டனுக்குப் போய்ச் சேர்ந்தார். நகரின் கிழக்குப் பகுதியில் கிங்ஸ்லி ஹால் கட்டடத்தில் குமாரி மூரியல் லெஸ்டருடன் தங்கினார். அவரைப் போப் லார் மேயர் வரவேற்றார். அவரைப் பார்ப்பதற்கென்றே நூற்றுக்கணக்கான ஏழைகள் - ஆடவர், பெண்டிர், குழந்தைகள் ஆகிய அனைவரும் வந்து சூழ்ந்தார்கள். அவருடைய படம் தினசரிப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தை அலங்கரித்தது.

காந்திஜியைப்பற்றிப் பத்திரிகைகளில் கட்டுக்கதைகள் வெளியாகத் தொடங்கின. இந்தியாவுக்கு வந்த வேல்ஸ் இளவரசரின் முன் காந்திஜி கீழே விழுந்து வணங்குவதுபோல ஜார்ஜ் ஸ்லோகோம்ப் சித்திரம் வரைந்திருந்தார். காந்திஜி இதைப் பார்த்துவிட்டு, ''இது உங்களுடைய கற்பனா சக்திக்கும் கூடப் பெருமை அளிக்கக்கூடியதாக இல்லை. இந்தியாவில் பரம ஏழையான கக்கூஸ் சுத்தம் செய்பவர் முன்னிலையிலும், பரம ஏழையான தீண்டாதார் முன்னிலையிலும், அவர்களைப் பல நூற்றாண்டுகளாக நசுக்கி வந்ததில் பங்கெடுத்துக் கொண்ட குற்றத்திற்காக நான் மண்டியிட்டு வணங்குவேன். அவருடைய கால்களைக் கழுவவும் கழுவுவேன். ஆனால், நான் மன்னரின் (சக்கரவர்த்தியின்) முன்னிலையில்கூட விழுந்து வணங்க மாட்டேன். அப்படியிருக்க, வேல்ஸ் இளவரசரை வணங்குவது எங்கே?'' என்றார். "காந்தி மாமா"வைப் பார்ப்பதற்காகத் தினந்தோறும் காலையில் குழந்தைகள் திரண்டு வந்தார்கள்.

காந்திஜி லண்டனுக்குச் சென்ற இரண்டாவது நாள், அவருடைய பழைய நண்பரான பிஷர் பாதிரியாரின் வேண்டுகோளின் படி, காந்திஜி கிங்ஸ்லி ஹாலில் இருந்தபடியே அமெரிக்காவுக்கு அரை மணி நேர ரேடியோப் பிரசங்கம் ஒன்று செய்தார். அவருடைய முதல் ரேடியோப் பேச்சு அதுவே. "இதில்தான் நான் பேசவேண்டுமா?'' என்று மைக்ரோபோனைக் காட்டிக் காந்திஜி கேட்டார். அவருடைய பேச்சு அப்பொழுதே கலிபோர்னியாவில் பதிவு செய்யப்பட்டது. கண்களை மூடித் தலையைக் குனிந்தார். பிறகு பேசத் தொடங்கினார். "பலாத்கார வழிகளின் மூலம் என் நாட்டுக்குச் சுதந்திரம் பெற முயல்வதை விட, அதற்காக நான் தனிப்பட்ட முறையில் - அவசியமானால் - யுகக் கணக்கில் காத்திருப்பேன்" என்றார் காந்திஜி.

செப்டம்பர் 15-ஆம் தேதி வட்டமேஜை மகாநாட்டுக் கமிட்டியில் பேசிய காந்திஜி, காங்கிரஸின் லட்சியங்களை எடுத்துக் கூறி, ''பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே கெளரவமான, சமத்துவமான பங்காளித்துவம் ஏற்படப்போகிறது என்ற உறுதியான நம்பிக்கையுடன் திரும்பவே நான் விரும்புகிறேன்" என்றார்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்திஜியின் பிறந்த நாள். கிங்ஸ்லி ஹாலில் ஒரே கோலாகலம். ஒரு ஸ்வீடிஷ் பெண்மணியால் பழைய ஆங்கில ராட்டை ஒன்று காந்திஜிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.

நவம்பர் 13-ஆம் தேதியன்று மைனாரிடிகள் கமிட்டியில் பேசும்போது, "தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குத் தனித்தொகுதி தேர்தல்கள் கூடாது. இதை என் உயிரைக் கொடுத்தும் எதிர்ப்பேன்" என்றார் காந்திஜி.

டிசம்பர் முதல் தேதியன்று மகாநாடு முடிவடைந்தது. தலைவருக்குக் காந்திஜி வந்தனோபசாரம் கூறினார். அப்போது காந்திஜி கூறியதாவது: ''என்னுடைய வழி எந்தத் திசையில் செல்லும் என்பதை நான் அறியேன். அது எனக்கு முக்கியமல்ல. நேர் எதிர்த் திசையில் செல்ல நேர்ந்தாலும், நீங்கள் என் இருதய ஆழத்திலிருந்து வந்தனோபசாரம் பெறுவதற்கு உரிமை படைத்திருக்கிறீர்கள்.''

காந்திஜியின் லண்டன் நடவடிக்கைகளில் வட்டமேஜை மகாநாடு ஒரு சிறு பகுதியே. எல்லாப் பிரிவுகளையும், கோட்பாடுகளையும் சேர்ந்த பிரதிநிதிகளை காந்திஜி சந்தித்தார். பெர்னாட்ஷா காந்திஜியைச் சந்தித்துக் கைகுலுக்கும்போது தம்மைச் "சின்ன மகாத்மா" என்று சொல்லிக்கொண்டார். இருவரும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். காந்திஜிக்கும் மற்ற இந்தியப் பிரதிநிதிகளுக்கும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது. மன்னரைச் சந்திப்பதற்குச் சம்பிரதாயமான உடையில் தான் செல்லவேண்டுமென்று காந்திஜியிடம் கூறியபோது அவர், தாம் வழக்கமாக உடுக்கும் முழங்கால் வேஷ்டியுடன் தான் மன்னரைப் பார்க்க முடியும் என்றும், அதை அனுமதிக்கவில்லை என்றால், அவரைப் பார்க்கப்போவதில்லை என்றும் சொல்லிவிட்டார். காந்திஜியைச் சந்தித்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், தாம் தென் ஆப்பிரிக்காவில் பார்த்தபோதும், அதற்குப் பிறகு 1918 வரையிலும் காந்திஜிநல்ல மனிதராக இருந்ததாகவும், அப்புறம் காந்திஜியிடம் ஏதோ குறை ஏற்பட்டுவிட்டதாகவும் சொன்னார். இதற்குக் காந்திஜி ஒரு பதிலும் சொல்லாமல் மெளனமாக இருந்தார். “நீங்கள் ஏன் என் மகனைப் பகிஷ்காரம் செய்தீர்கள்?” என்று ஜார்ஜ் மன்னர் கேட்டதற்கு, “உங்கள் மகனைப் பகிஷ்காரம் செய்யவில்லை. பிரிட்டிஷ் மகுடத்தின் உத்தியோக பூர்வமான பிரதிநிதியைத் தான் பகிஷ்கரித்தேன்என்று காந்திஜி பதிலளித்தார். காந்திஜியின் முழங்கால் துணியை, யாரோ குறிப்பிட்டபோது, காந்திஜி கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, “எங்கள் இருவருக்கும் சேர்த்து மன்னர் உடையணிந்திருக்கிறார்என்று சொன்னார். பிரிட்டிஷ் ராணியோடும் காந்திஜி பேசினார்.

ஜவுளித் தொழிலின் கேந்திர ஸ்தானமான மான்செஸ்டர் நகருக்குக் காந்திஜி விஜயம் செய்தபோது, நட்புறவோடும், அன்போடும் வரவேற்கப்பட்டார். அப்புறம் ஈட்டன், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் ஆகிய இடங்களுக்குச் சென்றார். பேராசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றார்கள். பெர்னாட்ஷா, ஆர்தர் ஹெண்டர்ஸன், லாயிட் ஜார்ஜ், கான்டர்பரி மதகுரு, நடிகர் சார்லி சாப்ளின், லார்டு இர்வின், ஹெரால்டு லாஸ்கி முதலிய பிரபலஸ்தர்களைச் சந்தித்தார். குழந்தைக் கல்வி பற்றிக் கலந்து பேசுவதற்கு அவரை மான்டிஸோரி அம்மையார் சந்தித்தார். காந்திஜியைப் பற்றிப் பெர்னாட்ஷாவிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவர், ''காந்தியைப்பற்றி அபிப்பிராயம் கூறவா! இதைவிட இமயமலையைப்பற்றி அபிப்பிராயம் கூறும்படி நீங்கள் கேட்டிருக்கலாமே" என்றார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாலஸ்தீனம், எகிப்து, ஹங்கேரி, டென்மார்க், அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு காந்திஜிக்கு அழைப்புக்கள் வந்தன. ஆனால், அவற்றை அவர் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

டிசம்பர் 5-ஆம் தேதி காந்திஜி லண்டனை விட்டுப் புறப்பட்டார். அன்று மாலையில் பாரிஸ் நகரிலுள்ள மிகப் பெரிய சினிமாக் கொட்டகையில் ஒரு மேஜைமீது உட்கார்ந்து கொண்டு பிரெஞ்சு மக்களை நோக்கிக் காந்திஜி சொற்பொழிவாற்றினார். பாரிஸில் ஒரு நாள் தங்கினார். ஸ்விட்ஜர்லாந்துக்குப் புறப்பட்டார். வில்லனூவேயிலிருந்த ரொமேன் ரோலாந்தின் ஜாகைக்கு 6-ஆம் தேதி விஜயம் செய்து அவருடன் ஐந்து நாட்கள் தங்கினார்.

டிசம்பர் 12-ஆம் தேதி ரோம் நகரில் முஸோலினியைச் சந்தித்தார். போப்பைப் பார்க்க இயலவில்லை. ஆனால், வாடிகன் பொருட்காட்சிச் சாலைக்கும் நூல் நிலையத்துக்கும் விஐயம் செய்தார்.

டிசம்பர் 14-ஆம் தேதி காந்திஜியும் அவரது கோஷ்டியாரும் பிரிண்டிஸியை விட்டுப் புறப்பட்டு, 28-ஆம் தேதி காலையில் பம்பாயில் வந்து இறங்கினார்.

காந்திஜி வந்து சேருவதற்கு முன்னதாக, ஐக்கிய மாகாணக் காங்கிரஸ், வரிகொடா இயக்கத்தைப் பிரகடனம் செய்துவிட்டது. எல்லைப்புற மாகாணத்திலும், ஐக்கிய மாகாணத்திலும் வங்காளத்திலும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. டிசம்பர் 25-இல் அப்துல் கபார்கானும் மற்றும் சிலரும் கைது செய்யப்பட்டனர். ஒரு வார காலத்துக்குள் ஆயிரத்துக்கு மேற்பட்ட செஞ்சட்டைப் படையினருக்குக் கட்டுப்பாட்டுத் தடை விதிக்கப்பட்டது. ஜவாஹர்லால் நேரு கைதானார். 1930, 1931-ஆம் வருடங்களில் 10 மாத காலத்துக்குள்ளாக 90,000 பேர் சிறை சென்றனர்.

டிசம்பர் 28-ஆம் தேதி மாலையில் பம்பாய் ஆஸாத் மைதானத்தில் பிரம்மாண்டமான கூட்டத்தில் பேசிய காந்திஜி, தொண்டர்கள் கைது செய்யப்படுவதைப்பற்றிக் கூறும் போது, "இவற்றை நமது கிறிஸ்தவ வைசிராய் லார்டு வில்லிங்டன் கொடுக்கும் பரிசுகளாக நான் கருதுகிறேன். கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் பரிமாறிக் கொள்ளுவது வழக்கம் அல்லவா?'' என்றார்.

டிசம்பர் 29-ஆம் தேதி வைசிராய்க்குக் காந்திஜி தந்தியடித்து, பேட்டியளிக்க வேண்டுமென்று கேட்டார். ராஜீய நிலைபற்றி விவாதிக்க வைசிராய் மறுத்துவிட்டார்.
  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர