Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 2(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1921 (வயது 52)

ராவ் பகதூர்ப் பட்டத்தை உதறிய ஜம்னாலால் பஜாஜ், ஜனவரியில் திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார்.

ஜனவரி மாத மத்தியில் தேசபந்து தாஸ் விடுத்த கோரிக்கையின்பேரில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடசாலைகளையும் கல்லூரிகளையும் விட்டு வெளியே வந்தனர்.

பம்பாயில் முதலாவது காதிபந்தரை ஜனவரியில், காந்திஜி ஆரம்பித்து வைத்தார்.

காந்திஜி, கல்கத்தாவுக்கு விஜயம் செய்து பிப்ரவரி 4-ஆம் தேதியன்று தேசீயக் கல்லூரியைத் திறந்து வைத்தார். தேசீயக் கல்விக்கு உத்வேகம் அளித்ததன் பலனாக நான்கு மாதங்களுக்குள் அலிகார் தேசிய முஸ்லிம் சர்வகலாசாலை, குஜராத் வித்யா பீடம், பீகார் வித்யாபீடம், காசி வித்யாபீடம், வங்காள தேசீய சர்வகலாசாலை, திலகர் மகாராஷ்டிர வித்யாபீடம் ஆகியவையும், சகல தரங்களையும் சேர்ந்த ஏராளமான தேசீயப் பாடசாலைகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் தொடங்கப் பெற்றன.

மார்ச்சு 31-இலும், ஏப்ரல் 1-இலும் பெஜவாடாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வசூலிக்கவும், ஒரு கோடி காங்கிரஸ் அங்கத்தினர்களைச் சேர்க்கவும், 20 லட்சம் ராட்டைகளில் நூற்பு வேலை நடைபெறும்படி செய்யவும் தீர்மானித்தனர். கிராமப் பஞ்சாயத்துக்களை ஏற்படுத்துவதற்கும், குடியை ஒழிப்பதற்கும் தீர்மானங்கள் நிறைவேறின. வரிகொடா இயக்கத் திட்டம் காந்திஜியால் ஒத்திப்போடப்பட்டது. வெள்ளை, பச்சை, சிவப்பு ஆகிய மூன்று வர்ணங்களுடனும், நடுவே ராட்டையுடனும் கூடிய ஒரு கொடி வைத்துக்கொள்ளும் யோசனையைக் காந்திஜி தெரிவித்தார். இது வரையிலும் உத்தியோக பூர்வமாக இது ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றாலும் நாடெங்கும் உபயோகிக்கப்பட்டுவந்தது.

அரசாங்கம், தடை உத்தரவுகளைப் போடத் தொடங்கியது. மைமன் சிங்கில் பிரவேசிக்கக் கூடாது என்று தாஸுக்கும், ஆர்ராவில் பிரவேசிக்கக்கூடாது என்று ராஜேந்திரப் பிரசாத்துக்கும், பெஷாவரில் பிரவேசிக்கக் கூடாது என்று லஜபதி ராய்க்கும் மார்ச்சு இரண்டாவது வாரவாக்கில் சர்க்கார் தடை உத்தரவு போட்டது.

மே மாதத்தில் அஸ்ஸாம் தேயிலைத் தோட்டங்களில் 12,000 தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அவர்களைக் கூர்க்கர்கள் தாக்கினார்கள். கிழக்கு வங்காளத்தில் போக்குவரத்துச் சாதனத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. அமைதி நிலவுவதற்குக் காந்திஜி தம்மால் முடிந்ததையெல்லாம் செய்தார். புதிய வைசிராய் லார்டு ரீடிங்கை சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

ஜூலை 8-இல் கராச்சியில் அகில இந்தியக் கிலாபத் மகாநாடு கூடியது. மெளலானா முகம்மது அலி, தலைவர். காந்திஜி அங்கே இல்லை. டிசம்பர் மாதவாக்கில் கிலாபத் சம்பந்தமாகப் பிரிட்டிஷ் மனப்போக்கு மாறவில்லையென்றால், ராணுவத்தில் எந்த ஒரு முஸ்லிமும் பணிபுரியக் கூடாது என்று தீர்மானித்தனர். அத்துடன் சட்ட மறுப்புத் தொடங்கப்படும் எனவும், இந்தியக் குடியரசு பிரகடனம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டது.

ஜூலை 28-இலிருந்து 30 வரை பம்பாயில் . . கா. . கூடியது. திலகர் சுயராஜ்ய நிதிக்கு ஒரு கோடிக்குச் சுமார் பதினைந்து லட்ச ரூபாய் அதிகப்படியாகவே சேர்ந்துவிட்டது. நூற்கும் ராட்டைகளின் எண்ணிக்கை 20 லட்சத்துக்கு உயர்ந்துவிட்டது. அந்நியத் துணியையும், வேல்ஸ் இளவரசர் விஜயம் சம்பந்தப்பட்ட வைபவங்களையும் பரிபூரணமாகப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று கமிட்டி சிபாரிசு செய்தது.

ஆகஸ்டில் அந்நியத் துணியை எரிப்பதைக் காந்திஜி ஆமோதித்தார். நாடெங்கும் அந்நியத் துணிகள் மலைபோலக் குவித்து எரிக்கப்பட்டன. ஆகஸ்டு முதல் தேதியன்று திலகருடைய மரணத்தின் ஞாபகார்த்தமாகப் பம்பாயில் காந்திஜியின் முன்னிலையில், அந்நிய துணிகள் பிரம்மாண்டமாகக் குவித்து எரிக்கப்பட்டன. இதைக் கவி டாகுரும், தீனபந்து ஆண்டுரூஸம் ஆட்சேபித்தார்கள்.

சம்பவங்கள் வேகமாக நிகழலாயின. செப்டம்பரில் அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். நவம்பர் முதல் தேதியன்று அவர்களுக்கு இரண்டு வருடச் சிறைவாச தண்டனை விதிக்கப்பட்டது.

அக்டோபர் 5-இல் பம்பாயில் காரியக் கமிட்டி கூடி, "எந்த ஓர் இந்தியனும் எந்த ஒரு சர்க்கார் உத்தியோகத்துக்கும் போவதோ, அல்லது அதில் இருப்பதோ தேசத்தின் கௌரவத்துக்கும், தேசத்தின் நலனுக்கும் மாறானதாகும்'' என்று பிரகடனம் செய்தது. மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளின் அதிகாரத்தின்கீழ், தனிப்பட்டவர்கள் சட்ட மறுப்பில் ஈடுபட அதிகாரம் அளித்தது.

அக்டோபர் 16-இல் காந்திஜியும், பிரதான காங்கிரஸ் தலைவர்களும் கராச்சித் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். இந்தியா முழுவதிலும் ஆயிரக்கணக்கான மேடைகளில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 17-இல் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். வந்த தினத்தில், கலகமும் ரத்தக்களரியுமாக இந்தது. இது நான்கு நாட்கள் நீடித்தது. மீண்டும் அமைதி நிலவுவதற்குக் காந்திஜி 5 நாட்கள் - நவம்பர் 19-இலிருந்து 23 வரை - உண்ணாவிரதம் இருந்தார்.

தேசபந்து தாஸ் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 25-இல் வேல்ஸ் இளவரசர் கல்கத்தாவுக்கு விஜயம் செய்ய ஏற்பாடாயிற்று. லஜபதி ராய், மோதிலால் நேரு, ஜவாஹர்லால் நேரு ஆகியோர் சிறை வைக்கப்பட்டனர்.

காங்கிரஸுக்கும் சர்க்காருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. காந்திஜியும் ஸ்ரீ தாஸும் எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்றனர். மறியல் செய்யும் உரிமையும் வேண்டும் என்றார் காந்திஜி. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. ஸ்ரீ ஜின்னாவும், பண்டித மாளவியாவும் இரு சாராருக்கும் இடையே தூது சென்றனர்.

கதரைப் பரப்புவதில் காந்திஜி மிகவும் தீவிரமாக ஈடுபட்டார். நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்தார். நாட்டின் வட கோடியிலிருந்து தென்கோடி வரை அநேக பெரிய நகரங்களுக்கும் ஒதுக்குப் புறங்களில் இருக்கும் எண்ணற்ற குக்கிராமங்களுக்கும் விஜயம் செய்தார். சென்னைக்கு வந்து செப்டம்பர் 17-ஆம் தேதி ராமேசுவரம் எக்ஸ்பிரஸில் புறப்பட்டுத் தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தைத் தொடங்கினார். தரங்கம்பாடி, கடலூர், கும்பகோணம் முதலிய நகரங்களுக்கு விஜயம் செய்துவிட்டுத் திருச்சிக்குச் சென்றார். திருச்சியில் செப்டம்பர் 19-ஆம் தேதி காந்திஜி பேசும்போது, அந்நியத் துணி பகிஷ்காரத்தை வற்புறுத்திவிட்டு மேலும் கூறியதாவது:

"தங்களிடமுள்ள அந்நியத் துணிகளையெல்லாம் உடனடியாகத் தூர எறிந்துவிடுவது அநேகருக்குக் கஷ்டமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். தூர எறியப்பட்ட துணிகளுக்குப் பதிலாகப் போதிய கதர் வாங்குவதற்கு இயலாதவாறு கோடிக்கணக்கானவர்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அவர்கள் அரையில் மட்டும் ஒரு துணியைச் சுற்றிக்கொள்ளட்டும். நம்முடைய சீதோஷ்ண நிலையில், வெப்பமான மாதங்களில் நம் உடம்பை நாம் மூடிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. உடை விஷயத்தில் சங்கோஜம் வேண்டாம். ஆண்கள் உடம்பு முழுவதையும் மூடிக்கொள்ளுவது பண்பாட்டின் சின்னம் என்று இந்தியா ஒருபோதும் வற்புறுத்தியது கிடையாது. அதனால், மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக இருக்கும் பொருட்டு, குறைந்தபட்சம் அக்டோபர் 31-ஆம் தேதி வரையிலாவது என்னுடைய தொப்பியையும், அரைக் கோட்டையும் களைந்துவிட்டு இடுப்பில் ஒரு துணியை மட்டும் சுற்றிக்கொள்ளுவேன். உடம்பைப் போர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் சமயத்தில், மேலுக்கு ஒரு நீளத்துண்டை மட்டும் போட்டுக்கொள்ளப்போகிறேன். இந்த மாறுதலை நான் கைக்கொள்ளுவதற்குக் காரணம், நான் பின்பற்றத் தயாராக இல்லாத ஒன்றை மற்றவர்களுக்கு உபதேசிக்க நான் எப்போதும் தயங்கி வந்திருப்பதுதான். மேலும், நான் வழி காட்டுவதன் மூலம், அந்நிய ஆடைகளைத் தூர எறிந்துவிட்டு மாற்றுத் துணிகள் வாங்கச் சக்தியில்லாதவர்களின் நிலையைச் சுலபமாக்குவதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறேன். இந்தத் துறவு எனக்கு ஒரு துக்க அடையாளம் என்ற முறையிலும் தேவைப்படுகிறது. வெறுந்தலையும், வெற்றுடம்பும் என்னுடைய ஊர்ப் பகுதியில் துக்கச் சின்னங்களாக இருந்து வருகின்றன. நாம் மேலும் மேலும் துயர நிலையில் இருந்துவருகிறோம் என்பது எனக்குப் புலனாகி வருகிறது. வருட முடிவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் நாம் இன்னும் சுயராஜ்யம் இல்லாமல் இருக்கிறோம். என் சக ஊழியர்களும், அரைக் கோட்டையம், தொப்பியையும் தூர எறிந்துவிட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். தங்களுடைய சொந்தப் பணிக்கு அவசியம் என்று கருதினாலொழிய, அவர்கள் அவற்றை எறியவேண்டியதில்லை. ஒவ்வொரு மாகாணமும், ஒவ்வொரு ஜில்லாவும், அங்கே போதிய உழைப்பாளிகள் இருந்தால், தனக்குத் தேவையானவற்றை ஒரு மாதத்தில் போதிய அளவு உற்பத்தி செய்துவிடலாம் என்பது என் உறுதியா நம்பிக்கை. சுதேசியைத் தவிர, பிற நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவைக்கும்படி நான் ஆலோசனை கூறுகிறேன்."

செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று காந்திஜி மதுரையில் இருந்தார். காலை 10 மணிக்கு அவருக்கு க்ஷவரம் செய்ய ஒரு க்ஷவரத் தொழிலாளி அழைத்துவரப்பட்டார். மறுநாள் காலையில் 60 மைல் தூரத்திலுள்ள காரைக்குடிக்குக் காந்திஜி காரில் பிரயாணம் செய்ய வேண்டும். அதன்படி மறுநாள் அதிகாலையில் எழுந்திருந்தார். தம் உடைகளை மாற்றிக்கொள்ளப் போனார். தம்முடைய தொப்பியையும், அரைக் கோட்டையும் ஒதுக்கித் தள்ளினார். ஒரு சிறு கதர்ப் பையைத் தயாரித்தார். தம்முடைய கோட்டுப் பையில் வைத்துக்கொள்ளும் சாமான்களைக் கதர்ப் பைக்குள் வைத்தார். அப்புறம் ஒரு முழ அகலமுள்ள ஒரு கதர்த் துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டார். காந்திஜி இப்படிப்பட்ட உடையணிவதை நண்பர்கள் தடுக்க முயன்றார்கள். சந்நியாசியாகிவிடும் உத்தேசம் தமக்கு இல்லை என்று அவர்களுக்குக் காந்திஜி உறுதி கூறினார். தாம் உடுக்கும் புதிய முறை உடையானது தென் இந்திய மக்களுக்குப் புதிதல்ல என்று கூறி, ஒரே உறுதியுடன் அந்தத் துணியைக் கட்டிக்கொண்டார். அதன் பின் காந்திஜி தமது வாழ்நாள் முழுவதிலும் இதே உடையிலேயே காட்சியளித்தார்.

காந்திஜி தமிழ்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தை முடித்துக் கொண்டு ஆந்திர ஜில்லாக்களின் வழியாகப் பம்பாய்க்குச் சென்றார்.

டிசம்பர் கடைசி வாரத்தில் அகமதாபாத் காங்கிரஸ் கூடியது. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிறையில் இருந்தார். ஆகவே, ஹக்கீம் அஜ்மல்கான் தேர்ந்தெடுக்கப்பட்டார். டில்லியில் கூடிய ஹிந்து மகாசபை மகாநாடும் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது.

சட்ட மறுப்பு இயக்கத்தில் ஒரே உற்சாகம் காணப்பட்டது. 20,000-த்துக்கு மேற்பட்டவர்கள் சட்ட மறுப்பில் இறங்கி ஏற்கனவே சிறை சென்றுவிட்டார்கள். காங்கிரஸுக்கு அரசியல் விஷயங்களில் ஆலோசனை கூறுவதில் முஸ்லிம் மதத் தலைவர்கள் பிரதான பங்கெடுத்துக்கொண்டார்கள். காங்கிரஸின் நடைமுறை அமைப்புக் குலைந்துவிட்டால், அந்த ஸ்தானத்தில் புதிதாக ஒன்றை நியமிக்கும் அதிகாரத்துடன் கூடிய ஏகபோகமான நிர்வாக அதிகாரம் காந்திஜிக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸின் அனுமதி பெற்றுத்தான் இயக்கத்தை நிறுத்திச் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவாயிற்று. காந்திஜி ஒவ்வொரு பிரதிநிதியின் முகாமுக்கும் நடந்து சென்று சட்ட மறுப்பு முறையை விளக்கிக்கொண்டிருந்தார்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி  https://amzn.to/3eOnx2r ஆனந்த்  https://cutt.ly/LaTpEs7 ஆர். சிவகும

மொழிபெயர்ப்பு | க. நா. சுப்ரமண்யம்

மொழிபெயர்ப்பு என்பதைச் சாதாரணமாக ஒரு கலை என்று சொல்வது வழக்கமில்லை. கலையோ , தொழிலோ - மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்திலே ஒரு தனித் துறை. அது மிகவும் அவசியமானது. இலக்கிய வளர்ச்சியின் அடிப்படையான காரியங்களிலே மொழிபெயர்ப்பும் ஒன்று. மொழிபெயர்ப்புகள் அதிகம் இல்லாத காலத்திலே இலக்கிய வளர்ச்சி வேகமாக நடைபெறுவதில்லை என்பது சரித்திரபூர்வமாக நமக்குத் தெரிகிற உண்மை. தமிழிலே மொழிபெயர்ப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டன. கம்பனை மொழிபெயர்ப்பு நூல் என்று சொல்லமுடியாது ; ஆனால் திருக்குறளின் ஒரு பகுதி மொழிபெயர்ப்பு நூல் என்று திடமாகச் சொல்லலாம். மனு , பரதர் , கெளடில்யர் முதலியவர்களின் சம்ஸ்கிருத சூத்திரங்களைக் குறளாசிரியர் மொழிபெயர்த்துத் தமிழாக்கித் தந்திருக்கிறார். தமிழாக்கி என்று சொல்வதிலே ஒரு விஷயம் அடங்கியிருக்கிறது. தமிழிலே வெளிவருகிற மொழிபெயர்ப்புகள் தமிழாகத்தான் இருக்கவேண்டுமா என்று என்னை யாராவது கேட்டால் , வேண்டாம் இருக்கக்கூடாது என்றே நான் பதில் சொல்லுவேன். எந்த மொழிபெயர்ப்புமே முதல் நூல் போலாகிவிடக்கூடாது - முழுதும் தமிழாகிவிடக்கூடாது. மொழிபெயர்ப்பாசிரியன் முத