Skip to main content

காந்தி: சத்திய சோதனைக்குப் பின் - 1



(காந்திஜி, தமது சுய சரிதையை 1920-ஆம் ஆண்டு வரையில்தான் எழுதியுள்ளார். அதிலிருந்து அவர் அமரத்துவம் அடைந்தது வரை, மொத்தம் 28 வருட காலத்தில் அவரது வாழ்க்கையிலும், நாட்டு வாழ்விலும் நிகழ்ந்த முக்கியமான சம்பவங்கள் வருடவாரியாக இத்தளத்தில் வெளியாகிறது. சுய சரிதையைப் படித்து முடித்த வாசகர்கள், காந்திஜியின் வாழ்க்கை முழுவதையும் தெரிந்துகொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்தக் குறிப்புகள் மகாத்மா காந்தி நூல்கள் வரிசையில், தொகுதி மூன்றில் சேர்க்கப்பட்டன.)

1920 (வயது 51)


வைசிராயிடம் கிலாபத் தூதுக்கோஷ்டி செல்லுவது சம்பந்தமாக, ஜனவரி 18-ஆம் தேதியன்று டில்லியில் காந்திஜியை மெளலானா அபுல்கலாம் ஆஸாத் முதல் முதலில் சந்தித்தார். அங்கே திலகரும் உடன் இருந்தார்.

ஜனவரி 19-இல் தூதுகோஷ்டிக்குக் காந்திஜி தலைமை தாங்கி, வைசிராயிடம் சென்றார்.

மே மாதத்தில் ஹன்டர் கமிட்டி அறிக்கை வெளியாயிற்று. காந்திஜி மிகவும் அதிர்ச்சியடைந்தார். சர்க்காரின் ஒத்துழைப்பாளராக இருந்தவர், ஒத்துழையாமைக்காரர் ஆனார்.

துருக்கி மீது விதிக்கப்பட்ட சமாதான நிபந்தனைகளும், வைசிராயின் செய்தியும்மே 14- இல் அறிவிக்கப்பட்டன. அவற்றைக் குறித்து மகாத்மா விடுத்த தமது செய்தியில், நிபந்தனைகள் ஏமாற்றம் அளிக்கக்கூடியவையே என்று ஒப்புக்கொண்டிருந்தபோதிலும், தவிர்க்க முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு முஸ்லிம்களுக்கு யோசனை கூறியிருந்தார்.

மே 18-இல் காந்திஜி, மெளலானா ஷௌகத் அலி, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் அடங்கிய கிலாபத் உப கமிட்டி, ஒத்துழையாமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஜூன் 30-இல் அலகாபாத்தில் கூடிய முஸ்லிம் மகாநாடு அதை ஊர்ஜிதம் செய்து அங்கீகரித்தது.

காந்திஜி, வைசிராய்க்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில், "மேன்மை தங்கிய தங்கள் சர்க்காருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி, என் முஸ்லிம் நண்பர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறேன். அவர்களோடு ஹிந்துக்கள் சேர வேண்டுமென்றும் ஆலோசனை கூறியிருக்கிறேன்'' என்று தெரிவித்தார். ஒத்துழையாமையை, ''முட்டாள்தனமானது, எல்லா திட்டங்களையும் விட மிகவும் முட்டாள்தனமான திட்டம் இது'' என்று வைசிராய் வர்ணித்தார்.

ஒத்துழையாமை ஆரம்பமாவதற்கு முன்னதாக ஜூலை 31-ஆம் தேதியன்று உண்ணாவிரதமும், பிரார்த்தனையும் நடைபெறும் என்று காந்திஜி அறிவித்தார்.

ஒத்துழையாமைக்குச் சகலமும் பக்குவமாக இருந்தது. . . கா. . தீர்மானத்தின்படி நடப்பதாகத் திலகர் வாக்களித்தார். ஆனால் ஜூலை 31-ஆம் தேதியன்று இரவு அவர் காலமாகிவிட்டார். ''என் மிகப் பெரிய துணைவர் போய்விட் டார்'' என்று துக்கித்தார் காந்திஜி.

ஆகஸ்டு முதல் தேதியன்று காந்திஜி, வைசிராய்க்குக் கடிதம் எழுதி, தம்முடைய கெய்ஸர் - - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும், போயர் யுத்தப் பதக்கத்தையும் திரும்பக் கொடுத்துவிடுவதாகத் தெரிவித்தார். கவிஞர் ரவீந்திரநாத் டாகுர் தமது 'ஸர்' பட்டத்தை உதறினார்.

இதற்கிடையே முஸ்லிம்கள் ஆப்கானிஸ்தானத்துக்கு ஹிஜ்ராத் பண்ண (ஓடிப்போக) ஆரம்பித்தார்கள். ஆகஸ்டில் 18,000 மக்கள் போய்க்கொண்டிருந்தபோது, ஆப்கன் அதிகாரிகள் அவர்களுடைய பிரவேசத்தைத் தடுத்தார்கள்.

செப்டம்பர் 4-இலிருந்து 9 வரை கல்கத்தாவில் காங்கிரஸின் விசேஷ மகாநாடு நடைபெற்றது. காந்திஜி, தீர்மானத்தில் சுயராஜ்யக் கோரிக்கையைச் சேர்த்தார். இயக்கத்தில் முதலாவதாகச் சேர்ந்தவர் மோதிலால் நேரு. ஸ்ரீமதி அன்னிபெஸன்ட், பண்டித மாளவியா, சி. ஆர். தாஸ் ஆகியோரும் பிரசன்னமாக இருந்தனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் நிறைவேறியது.

அகில இந்தியத் திலகர் ஞாபகார்த்த நிதியும், சுயராஜ்ய நிதியும் சேர்க்க அக்டோபர் 2-இல் ..கா.. தீர்மானித்தது.

ஸ்ரீ பியாரிலால் அக்டோபரில் காந்திஜியிடம் வந்து சேர்ந்தார்.

நவம்பரில் காந்திஜி, குஜராத் தேசீய சர்வகலாசாலையை ஸ்தாபித்தார்.

டிசம்பர் 26-இல் நாகபுரி காங்கிரஸ், லாலா லஜபதிராயும், சி. ஆர். தாஸும் கூறிய யோசனைகளின்பேரில், சிறு மாறுதல்களுடன் ஒத்துழையாமைத் தீர்மானத்தை ஏகமனமாக ஊர்ஜிதம் செய்தது. தீர்மானத்தை ஸ்ரீ தாஸ் கொண்டுவந்தார். லஜபதி ராய் ஆமோதித்தார். காங்கிரஸுக்கு ஸ்ரீ சி. விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார்.

காந்திஜி தயாரித்த காங்கிரஸ் விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. காங்கிரஸின் குறிக்கோள் பற்றிய, "சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது" என்பது பற்றிக் கடுமையான விவாதம் நடந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குள் அடங்கிய சுயராஜ்யம் என்பதை மாளவியாவும், ஜின்னாவும் விரும்பினார்கள். ஆனால் காங்கிரஸ், அசல் தீர்மானத்தை நிறைவேற்றியது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதரைப் பரப்புதல் ஆகியவற்றிற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கொன்னாட் கோமகனுக்கு மரியாதை செய்வதற்காக நடக்கும் வைபவங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று தேசத்துக்குக் கோரிக்கை விடப்பட்டது. ஐரிஷ் சுதந்திரத்துக்காக 65 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த கார்க் மேயர் மாக்ஸ்வினியின் நினைவுக்கு இந்தியா மரியாதை செலுத்தியது.

இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, காந்திஜியும் காங்கிரஸும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்கள் என்ற நிலை ஏற்பட்டது.

தினந்தோறும் அரைமணி நேரம் நூற்பதற்கு முன் சாப்பிடுவதில்லை என்று காந்திஜி பிரதிக்ஞை எடுத்துக்கொண்டார்.

  • (நன்றி: மகாத்மா காந்தி நூல்கள் - தொகுதி மூன்று)

Comments

Most Popular

எழுத்தாளர்களும் மின்னூல்களும்

இது குறைந்தது இரண்டு மின்னூல்களாவது வெளியிட்டுள்ள தமிழ் எழுத்தாளர்களின் அகரவரிசை தொகுப்பு. அவ்வப்போது புதிய இணைப்புகள் சேர்க்கப்படுகின்றன. இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தொகுக்கப்படும். கடைசியாக செப்டம்பர் 03, 2020 அன்று புதுப்பிக்கப்பட்டது.) அசோகமித்திரன் https://amzn.to/3cIKLFC |  https://amzn.to/3avBTS4 |  https://amzn.to/2zqxsLz அம்பை  https://amzn.to/3eIsOsl அருட்செல்வப்பேரரசன்  https://amzn.to/3eOosQr அருண் நரசிம்மன்  https://amzn.to/2VRkUV4 அழ. வள்ளியப்பா  https://amzn.to/2ZcvybO அழகிய பெரியவன்  https://cutt.ly/Lft1hhC அழகுநிலா  https://amzn.to/37bgFc5 அனோஜன் பாலகிருஷ்ணன்  https://amzn.to/2KvZM1n அஜயன் பாலா  https://amzn.to/2xJFC1e அ. கா. பெருமாள்  https://cutt.ly/pfs2w5j அ. வெண்ணிலா  https://cutt.ly/9fhYybK ஆரணி குப்புசாமி முதலியார்  https://amzn.to/2V1OWWD ஆ. இரா. வேங்கடாசலபதி  https://amzn.to/2RZQrD0 ஆ. சிவசுப்பிரமணியன் https://amzn.to/2xHVVvp ஆத்மார்த்தி...

‘எழுத்து’ - 119 இதழ்களின் பொருளடக்கம்

எழுத்து 1: ஜனவரி 1959 எழுத்து வளர - தலையங்கம் சாகித்ய அகாடமி தமிழ்ப் பரிசு – க.நா.சு. பெட்டிக்கடை நாரணன் – ந. பிச்சமூர்த்தி கவிதை - மயன் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்: ஒரு தொகுப்புக்கான சில குறிப்புகள் – க. நா. சுப்ரமண்யம் எழுதுவதெல்லாம்… - சிட்டி தாழை பூத்தது – பெ. கோ. சுந்தர்ராஜன் பாரதிக்குப்பின்-1: டாக்டர் சாமிநாதையர் – க.நா.சு. கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா விண்ணும் மண்ணும் – ந. சிதம்பரசுப்ரமண்யன் இன்றைய தமிழ் இலக்கிய விமர்சன தோரணை – சி. சு. செல்லப்பா வானம் - மயன் கெளமாரி – சாலிவாஹனன் உண்மைதேடியின் அனுபவ இலக்கிய வடிவங்கள் – தி. ஜானகிராமன்   எழுத்து 2: பிப்ரவரி 1959 வாடைக் காற்று - அசுவதி எழுத்தும் அதன் வாசகர்களும் இலக்கியமும் குழுவும் எஸ். வையாபுரிப்பிள்ளை – க. நா. சுப்ரமண்யம் திறனாய்வு - வில்லி அருளும் பொருளும் – ந. சிதம்பர சுப்ரமண்யன் கவி – வேதனை – தி. சோ. வேணுகோபாலன் தர்க்கம் - ஜெயகாந்தன் அன்று வருவாரோ ? – கு. அழகிரிசாமி வெற்றியின் பண்பு - பராங்குசம் தரிசனம் - மயன் கமலாம்பாள் சரித்திரம் – சி. சு. செல்லப்பா ...

நாகம்மாள்: முன்னுரை

முதல் முதலில் ஸ்ரீ ஷண்முகசுந்தரத்தின் சிறுகதைகளைப் படித்தபொழுது அவற்றில் தென்பட்ட கிராமாந்தர வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். அவ்வளவு தேர்ச்சி பெற்றவர் குடியான வாழ்க்கையையே ஆதாரமாகக் கொண்ட நவீனம் ஒன்றை எழுதலாம் என்ற கருத்தை அவருக்குத் தெரிவித்தேன். இரண்டே மாதத்தில் நாகம்மாள் என்ற சிறு நாவலை எழுதி முடித்துக்கொண்டு வந்து காட்டினார். பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் நவீனம் எழுதவேண்டுமென்று வருஷத்திட்டங்கள் போட்டுக்கொண்டு யோசனையளவில் நின்றுகொண்டிருக்கும் பொழுது இளைஞர் ஒருவர் திடீரென்று ஒன்றை எழுதி முடித்துவிட்டதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அதில் கிராம வாழ்க்கை வெகு நுட்பமாகவும் அனுதாபத்துடனும் சித்தரிக்கப்பட்டிருந்தது. நாகம்மாள் நம் கண்முன் நிற்கிறாள் போல இருக்கிறது. ஒய்யாரமும் தனிப்போக்கும் கொண்ட அவளிடம் நற்குணங்களும் நிரம்பி இருக்கின்றன. சின்னப்பன் , ராமாயி , கெட்டியப்பன் எல்லோரும் தத்ரூபமாக இருக்கிறார்கள். நாராயண முதலி முதல் சின்னப்பன் மாமியார் வரை எல்லோரும் உயிர்பெற்று உலவுகிறார்கள். கிராமப் புனருத்தாரணம் என்கிறோம். கிராமக் கைத்தொழில்கள் மறுப...