Skip to main content

அடிமனம் | மனப் பகுப்பியலின் தந்தை | பெ. தூரன்

படம் - பிராய்டும் அவரது நண்பர் கோல்லரும்
பிராய்டு தமது நான்காம் வயதிலிருந்து ஆஸ்திரியாவின் தலைநகராகிய வியன்னாவில் வளர்ந்து வந்தார். அவர் பிறந்தது மொரேவியாவில் உள்ள பிரீபர்க் (Freiberg) என்ற ஊரிலாகும். மொரேவியா இப்பொழுது செக் கோஸ்லோவாக்கியாவில் ஒரு பாகமாக இருக்கிறது. பிராய்டு ஒரு யூதருக்கு அவருடைய இரண்டாம் மனைவியின் பிள்ளையாகப் பிறந்தார். பிராய்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் வைத்தியத் துறையில் கல்வி பயின்று பட்டம் பெற்றுப் பிறகு மனித உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவருடைய ஆராய்ச்சியிலே அவருக்கு நல்ல வெற்றி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்தது. கண்ணில் ரண சிகிச்சை செய்யவேண்டி நேர்ந்தால் அதில் வலி தெரியாமல் இருப்பதற்காக கொக்கேன் என்னும் மருந்தைப் பயன்படுத்த முடியும் என்பதை இவர் தமது ஆராய்ச்சியின் மூலம் அநேகமாகக் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் அதைப் பூர்த்திசெய்து பிறருக்கும் எடுத்துக்காட்டி நிரூபிப்பதற்கு முன்பாக இவர் அந்த ஆராய்ச்சியை விட்டுப் போகும்படி நேரிட்டது. இவருடைய காதலி பல ஆண்டுகளாக வேறொரு பட்டனத்திலே காத்திருந்தாள். அவளால் மேலும் காத்திருக்க முடியவில்லை போலும். அவள் அவசரமாக வரும்படி அழைத்ததை மறுக்க முடியாமல் இவர் தமது ஆராய்ச்சியை முடியும் தருணத்தில் விட்டுவிட்டுப் போய்விட்டார். அந்த ஆராய்ச்சியை இவருடைய நண்பரான கோல்லர் (Koller) முடித்து இவருக்கு உரித்தான புகழை அவர் சம்பாதித்துக்கொண்டார்.
பிராய்டு தமது காதலியை மணந்துகொண்ட பிறகு தமது பழைய ஆராய்ச்சிகளில் சில காலம் ஈடுபட்டிருந்தார். ஆனால் பொருளாதார நிலைமை அவ்வாறு ஆராய்ச்சி செய்வதற்கு இடங்கொடுக்காததால் இவர் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் தொழிலை நடத்தலானர்.
நரம்பு மண்டல நோய்களைத் தீர்ப்பதற்கு மேலும் சிறந்த தகுதிபெற வேண்டுமென்று பிராய்டுக்கு விருப்பம் உண்டாயிற்று. அதனால் இவர் 1885-ல் பாரிஸுக்குச் சென்றார். அந்த சமயத்தில் பாரிஸில் ஷார்க்கோ என்பவர் ஹிஸ்டிரியா நோயைக் குணமாக்குவதில் பெருங்கீர்த்தி பெற்றிருந்தாரென்று முன்பே கூறினேன். அவரோடு பிராய்டு ஒராண்டு வேலை செய்தார். ஷார்க்கோ மனவசிய முறையைக் கையாண்டு ஹிஸ்டிரியா நோயாளிகளைக் குணமாக்குவதைக் கண்டு அம்முறையைப் பாராட்டினார்.
1886-ல் பிராய்டு வியன்னாவுக்குத் திரும்பிவந்து ஜோசப் பிராயருடன் சேர்ந்து தொழில் நடத்தலானர். பிராயரும் ஹிஸ்டிரியா நோயைக் குணப்படுத்துவதில் புகழ் வாய்ந்தவர். அவர் தற்செயலாகக் கண்டுபிடித்த ஒரு முறைதான் பிற்காலக்கில் பிராய்டுக்குத் தமது மனப்பகுப்பியல் கொள்கையை நிறுவுவதில் உதவியாக இருந்தது. மனவசிய நிலையில் இருக்கும்போது ஹிஸ்டிரியா நோயாளியான ஒரு பெண்மணி தனது பழைய அநுபவங்களைக் கூறியதும் அவ்வாறு கூறியதால் அவளுடைய நோய் குணமாகி வந்ததையும் பிராயர் கவனித்த விஷயத்தைப் பற்றி முன்பே தெரிந்து கொண்டோம். இது பிராய்டுக்குப் பெருந்துணையாக இருந்தது. பிராயர் இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்யவில்லை.
ஆனால் பிராய்டு அம்முறையைக் கையாண்டதோடு அம்முறையைக் கையாளுவதற்கு மனவசியமும் அவசியமில்லை என்று கண்டாரென்பதையும் முன்பே அறிந்திருக்கிறோம்.
மனவசிய நிலையில் நோயாளியை வைப்பதற்குப் பதிலாக மனத்திலே தோன்றும் எண்ணங்களையெல்லாம் தாராளமாகச் சொல்லும்படி செய்யும் 'தடையிலாத் தொடர்முறை' என்பது பிராய்டு வகுத்தது. அதுவே அடிமனத்தில் மறைந்து கிடக்கும் இச்சைகளையும் அநுபவங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு நல்ல சாதகமாக அமையலாயிற்று. பிராய்டு இந்த முறையைத் தமது அநுபவத்தின் பயனாக மிகச் சிறப்பாகத் திட்டப்படுத்தினார். இத்துடன் கனவுப் பகுப்பு முதலான வேறு பரிசீலனைகளும் அடிமன இச்சைகளையும், அடிமனத்தில் அழுந்திக்கிடக்கும் அநுபவங்களையும் அறிவதற்கு உதவுகின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார்.

Comments

Most Popular

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...

பெரியம்மை | சுரேஷ்குமார இந்திரஜித்

பெரியப்பா அருமையாகப் பாடுவார். ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’ என்ற டி.எம்.எஸ். பாட்டை ஏற்ற இறக்கங்கள், பிர்காக்கள் பிசகாமல் பாடுவார். அப்போது பெரியம்மை முகத்தைப் பார்க்கவேண்டுமே. அவர் முகம் பெருமிதத்தோடும் பரவசத்தோடும் இருக்கும். பெரியம்மா முருங்கைக்காய் குழம்பு வைத்தால் நிறைய சாப்பிடவேண்டியிருக்கும். குழம்புகள் ருசியாகச் செய்வதற்கென்றே அவள் பிறந்திருக்கிறாள். கத்தரிக்காய் புளிக்குழம்பும் அப்படித்தான் அவ்வளவு ருசியாக இருக்கும். என் அம்மைக்கு இந்தக் குழம்புகள் ருசி கூடி வராது. சப்பென்று இருக்கும். நான் வேலை பார்க்கும் ஊரிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். பெரியப்பாவைப் பார்ப்பதற்கும், அவர் பாட்டைக் கேட்பதற்கும் அவர் வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். இது மார்கழி மாதம். வாசல்களில் கோலம் போட்டு பூசணிப்பூவை மையமாக வைத்திருந்தார்கள். அநேகமாக சில வீடுகள் நீங்கலாக எல்லா வீட்டு வாசல்களிலும் பூசணிப்பூவை வைத்திருந்தார்கள். செண்பகவல்லி மதினி வீட்டைக் கடக்கும்போது மல்லிகைப்பூ வாசம் வந்தது. மதினி வீட்டுக் காம்பவுண்டுக்குள் மல்லிகைப்பூ கொடிக்குப் பந்தல் போட்டிருந்ததைப் பார்த்தேன். வேல...