மனம் என்பதிலே வெளிமனம் (நனவு மனம்), இடை
மனம், அடிமனம் (நனவிலி மனம்) என்ற முக்கியமான பகுதிகள் இருப்பதாகக் கொள்ளலாம் என்று
முதலில் பார்த்தோம். ஆராய்ச்சிக்காகவும், மனத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளுவதற்காகவுந்தான்
இவ்வாறு மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டோம் என்றும், உண்மையில் இப்படிப் பிரிவினை
செய்த தனித்தனி பாகங்களே இல்லையென்றும் அப்பொழுதே தெளிவுபடுத்திக் கொண்டோம். மனமே ஒரு
சூக்குமமான மாயம். ஆதலால் அதன் பகுதிகளும் மாயமானதே.
மனத்தை வேறொரு வகையாகப் பகுதிகள் செய்து
ஆராயலாம் என்றும் கண்டோம். அந்தப் பிரிவினைப்படி இத், அகம், அதீத அகம், நனவுமனம் ஆகிய
பகுதிகள் மனத்தில் இருப்பதாகக் கற்பனை செய்யலாம். இத் என்பதுதான் அடிமனம் என்று பொதுவாகக்
கூறலாம். அதிலிருந்து அகம் தோன்றுகிறது. அகத்திலிருந்து அதீத அகம் தோன்றுகிறது.
இத் எப்பொழுதும் இன்பத்தையே நாடுகிறது;
துன்பத்தைத் தவிர்க்க முயல்கிறது. அது சமூகக் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட விரும்புவதில்லை;
சுயநலம் மிகுந்தது; பகுத்தறிவற்றது. அது தனது இச்சைகள் வாழ்க்கையிலே நிறைவேறாமற் போனால்
மனக்கோட்டை கட்டுவதாலும், கனவாலும் பிரமையாலும் அவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் தந்திர
சக்தி வாய்ந்தது.
இத்தைப்பற்றி நேர்முகமாக அறிந்துகொள்வது
இயலாது. அது மறைந்து நிற்கிறது. அதைப் பற்றி மறைமுகமாகவே நாம் ஓரளவுக்குத் தெரிந்துகொள்ளலாம்.
மனக்கோளாறு ஏற்பட்டுள்ள நிலையிலே அதை ஆராய முடிகிறது. ஒருவனுக்கு ஏற்படும் கனவுகளைப்
பரிசீலனை செய்வதன் மூலமும் அதைப் பற்றி அறியலாம். ஒருவன் யோசனை செய்யாமல் உணர்ச்சிவசப்பட்டு
உடனே ஒரு கெட்ட காரியம் செய்ய முயலுகிறானென்று வைத்துக்கொள்ளுவோம். அந்தச் சமயத்திலும்
இத் வெளியாகிறது.
வாழ்க்கை முறை செம்மையாக அமைந்த மனிதனிடத்திலே
அகம் சரியானபடி காரியம் செய்கிறது என்று கூறலாம்; அது இத்தை லகானிட்டுப் பிடித்து அதன்மேல்
ஆதிக்கம் செலுத்தும்; அதீத அகத்தையும் தனது ஆதிக்கத்திற்குள்ளே வைத்துக்கொண்டிருக்கும்.
உலகத்தோடு கொண்டுள்ள தொடர்பிலும் அவனுக்கு ஏற்ற முறையிலேயே காரியங்கள் நடைபெறும். அகம்
தனது கடமையைச் செவ்வனே செய்துவருகின்றபோது வாழ்க்கையில் அமைதி நிலவும். அப்பொழுது அது
தனது அதிகாரத்தை இத்துக்கோ, அதீத அகத்திற்கோ, வெளியுலகத்திற்கோ பெரியதோரளவிற்கு விட்டுக்கொடுப்பதில்லை.
ஆனால் அப்படி விட்டுக்கொடுக்க நேர்கின்ற காலத்தில்தான் தொல்லைகள் உண்டாகின்றன.
இத் என்பது இன்பநாட்டம் என்ற கொள்கையைப்
பின்பற்றியே வேலை செய்கிறதல்லவா? ஆனால் அகம் அப்படிச் செய்வதில்லை. அது உலகத்தோடு ஒட்ட
ஒழுகல் என்னும் கொள்கையைப் பின்பற்றி நடக்கிறது. சமூகத்திற்கு உடன்பாடல்லாத காரியத்தில்
அது இறங்க விரும்புவதில்லை.
அதீத அகத்தை மனச்சான்று என்று சாதாரணமாகச்
சொல்லுகிறோம். இது அகத்திலிருந்து தோன்றுகிறது என்று கண்டோமல்லவா? குழந்தை முதலில்
பெற்றோர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இது நல்லது, இது தீயது என்று உணர்ந்து கொள்ளுகிறது.
பெற்றோர்கள் சொல்லுகிறபடி நடப்பதுதான் நல்லது, நீதிநெறி என்றெல்லாம் குழந்தை நாளடைவில்
உணர்ந்து அவர்கள் கூறுகிறபடி நடந்து அவர்களுடைய நன்மதிப்பைப் பெற முயல்கிறது.
பிறகு பெற்றோரின் உதவி இல்லாமலேயே குழந்தை
தானாகவே நல்லது தீயதைப் பகுத்தறிந்து நடக்கத் தொடங்குகிறது. இந்த வகையிலேதான் மனச்சான்று
என்கிற அதீத அகம் தோன்றுகிறது. குழந்தை நல்ல முறையில் நடந்து கொண்டால் பெற்றோர் மகிழ்ச்சியடைகிறார்கள்;
குழந்தையிடம் தங்கள் மகிழ்ச்சியைக் காட்டுகிறார்கள்; குழந்தையை அணைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்கள்;
குழந்தைக்கு இன்பங்கொடுக்கக்கூடிய காரியங்களும் செய்கிறார்கள். ஆனால் குழந்தை தவறான
முறையிலே நடந்துகொண்டால் பெற்றோர்கள் கோபமடைகிறார்கள்; முகத்தைச் சுளிக்கிறார்கள்;
தாங்கள் குழந்தையின் செய்கையை ஆமோதிக்கவில்லை என்பதை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்துகிருர்கள்;
சில சமயங்களில் குழந்தைக்கு அடிகூடக் கிடைக்கிறது. இதேபோல அதீத அகமும் செய்கிறது. அது
அகத்தின் நல்ல செயலுக்காகத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறது, தீய செயலுக்காகத்
தண்டிக்கிறது. செயல்கூட வேண்டியதில்லை. நினைப்புக்கே வெகுமதியும் தண்டனையும் கிடைக்கும்.
ஒருவன் பிரம்மச்சாரியாகவே வாழத் தீர்மானிக்கிறான்
என்று வைத்துக்கொள்வோம். அவன் மனத்திலே எப்படியாவது சில சமயங்களிலே காம இச்சைகள் கிளம்பிவிடும்.
மனச்சான்று அந்த சமயங்களில் அவனைத் தண்டிக்கிறது. தனது இழிந்த எண்ணங்களுக்காக அவன்
தன்னைத்தானே வருத்திக் கொள்ளுகிறான். பட்டினிக் கிடக்கிறான். அல்லது வேறு விதமாகத்
தன்னையே தண்டித்துக்கொள்ளுகிறான். இவ்விதமாக செயல்களுக்கு மட்டுமல்லாமல் எண்ணங்களுக்காகவும்
அதீத அகம் வெகுமதியோ தண்டனையோ கொடுக்கிறது.
அதீத அகம் ஒரு செயலை அல்லது எண்ணத்தை ஆமோதிக்கிறபோது
அகம் பெருமையடைகிறது; உயர்ச்சியடைகிறது. ஆனால் அதீத அகம் தண்டனை கொடுக்கிறபோது அதாவது
அகம் ஏதாவதொரு தீய செயல் அல்லது தீய எண்ணம் கொண்டு அதீத அகத்தால் கண்டிக்கப்படுகிறபோது
குற்றம் புரிந்ததற்காக அகம் நாணமடைகிறது, தன்னைப் பற்றித் தாழ்வுணர்ச்சி கொள்ளுகிறது.
இவ்வாறு அதீத அகத்தால் வன்மையான கண்டனம்
ஏற்படுகின்ற காலத்தில்தான் தீய இச்சைகள் நனவிலி மனத்தில் புதைந்து மறைகின்றன. அவையே
எப்படியாவது வெளிப்பட்டுவர முயல்கின்றன. இந்த இழிந்த இச்சைகளுக்கும் அதீத அகத்திற்கும்
ஏற்படுகிற போராட்டம் வலிமையேற்று ஓங்குகிறபோதுதான் மனத்திலே குழப்பம் ஏற்பட்டுப் பலவிதமான
மனக்கோளாறுகள் தோன்றுகின்றன. அடக்கப்பட்ட இழிவுணர்ச்சிகள் முற்றிலும் மறைந்து போவதில்லை.
அவை எப்படியாவது வெளியேறித் தமதிச்சையைப் பூர்த்திசெய்துகொள்ள முயல்கின்றன. நேராக வெளிப்பட
முடியாதபோது கனவு முதலான வழிகளிலே மறைமுகமாக வெளிப்படப் பார்க்கின்றன. அடக்கப்பட்ட
தீயவுணர்ச்சிகளை அழிக்க முடியாது; ஆனால் அவற்றை அவை செல்லுகின்ற பாதையிலிருந்து மாற்றி
உயர்ந்த பாதையில் செல்லும்படியாக மாற்றிவிடலாம். வயலிலே பாய்ந்து கொண்டிருக்கிற தண்ணீரை
ஒரளவுக்குத்தான் கட்டித் தேக்கி நிறுத்தலாம். தண்ணீர் மேலும் மேலும் பெருகுகின்றபோது
அதை என்றுமே தேக்கி நிறுத்த முடியாது. ஆனால் அது செல்லுகின்ற வாய்க்காலை அல்லது மடையை
மாற்றி வேறு மடையில் போகும்படி செய்யலாம். அப்படிச் செய்யும் போது தண்ணீர் கரையை உடைக்காது;
புதிய மடையிலே கரைகளின் வரம்புக்கு உட்பட்டுப் போய்க்கொண்டிருக்கும். இப்படி மடை மாற்றம்
இல்லாதபோதுதான் அது கரையை உடைத்துக்கொண்டு நாலா பக்கமும் சிதறியோடி நாசம் விளைவிக்கிறது.
அடக்கப்பட்டு நனவிலி மனத்தில் புதைந்துள்ள தீய உணர்ச்சிகளின் விஷயமும் இதுபோலத்தான்.
அவற்றை நல்ல மடையிலே போகும்படி மாற்றிவிட வேண்டும். அப்படிச் செய்வதற்கு உயர்மடை மாற்றம்
என்று (Sublimation) என்று பெயர்.
ஒருவனிடத்திலே போருணர்ச்சி மிகுந்திருக்கலாம்.
கொலை, வெறுப்பு என்ற தீய எண்ணங்கள் அவனிடத்திலே இருக்கலாம். மானிட ஜாதிக்குத் தீங்கு
விளைவிக்கின்ற கொடிய கிருமிகளை அழிப்பதற்கு வேண்டிய போராட்டத்தைச் செய்ய அவன் தனது
உணர்ச்சிகளை மாற்றிவிடுவானானால் அவன் தனக்கும் உயர்வு தேடிக்கொள்வான்; உலகத்திற்கும்
நன்மை செய்தவனாவான்.
அதீத அகத்தைப் பற்றிப் பேசவந்தவிடத்தில்
மேலே குறித்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பாகச் சில விஷயங்களைச் சொன்னேன். தீய உணர்ச்சிகளைக்
தடுப்பதற்கும் அகத்தைக் கண்டிப்பதற்கும் எவ்வாறு அதீத அகம் பயன்படுகிறதென்பதை அறிந்து
கொள்வதே இங்கு முக்கிய நோக்கமாகும்.
இந்த அதீத அகம் பெற்றோரின் ஸ்தானத்தை வகிக்கத்
தொடங்குகிறது என்றும் முன்பே பார்த்தோம். இது பெற்றோரின் செய்கைகளைக் கவனிப்பதால் குழந்தையிடம்
நாளடைவில் வளர்வதில்லை; பெற்றோர்களின் ஆணைகளையும் கண்டனங்களையும்கொண்டே வளர்கின்றது.
பெற்றோர் சொல்வதொன்று செய்வதொன்றுமாக இருக்கலாம். அவர்களே தங்கள் அறவுரைக்கு மாறாக
நடக்கலாம். ஆனால் அவர்கள் போதிக்கிற வழியைப் பின்பற்றியே குழந்தையின் அதீத அகம் வளர்கிறது.
அதாவது பெற்றோரின் அதீத அகந்தான் குழந்தையின் அதீத அகத்தை உருவாக்குகின்றது; அவர்களுடைய
நடத்தையல்ல. அப்படி உருவாகின்ற குழந்தையின் அதீத அகத்தை மேலும் வலிவடையச் செய்யும்
வேறு சாதனங்களும் இருக்கின்றன. குழந்தையின் மனச்சான்றை அமைப்பதில் ஆசிரியர் முக்கிய
பங்கு கொள்ளுகிறார். சமய நெறிகளைப் போதிக்கும் சான்றோர்களும், நாட்டின் வழிகாட்டிகளாக
அமையும் தலைவர்களும், சமூக அமைதியைப் பாதுகாக்க உதவும் போலீஸ் முதலிய அதிகாரிகளும்
வெவ்வேறு அளவில் இந்த அதீத அகத்தின் அமைப்புக்கு உதவுகிறார்கள். பெற்றோரின் நடத்தையும்
அதற்குச் சாதகமாக இருப்பது மிகுந்த சிறப்புடையதாகும்.
இப்படி அமைகின்ற அதீத அகமானது ஒருவனைச்
சமூகத்திற்கு அடங்கி நடக்கும் குடிமகனாகச் செய்ய உதவுகிறது. அவனிடத்திலே இயல்பாக இருக்கும்படியான
தீய உந்தல்கள் சிலவற்றை ஒடுக்கிச் சமூகத்திற்கு அவற்றால் தீங்கு நேரா வண்ணம் காக்கின்றது.
பாலுந்தல் மிக வலிமையானது. வெறுப்பு பகைமை
உந்தல்களும் வலிமையுள்ளவையே. இவைகளெல்லாம் கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடினால் சமூகம்
நிலைகுலைந்து போகுமல்லவா? இவற்றைக் கட்டுப்படுத்தவே அதீத அகம் வேலை செய்கிறது. அதீத
அகம் இந்த வகையிலே ஒரு சமூகத்தின் சம்பிரதாயங்களையும், பழக்கங்களையும், பண்பாட்டையும்
காக்கும் காவலாளியாகும்.
Comments
Post a Comment