Skip to main content

அடிமனம் | அடிமனம் வகுத்த வாய்க்கால் | பெ. தூரன்


சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிகமாக அன்பு காட்டுவதில்லை. குழந்தைகளிடம் அன்பிருந்தாலும் சாதாரணமாக அதை வெளிக்குக் காட்டுவதில்லை. ஆனால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் அப்பொழுது அவற்றினிடம் விசேஷமான அன்பும் கவனமும் செலுத்துவார்கள். நோய் வந்துவிட்டதே என்று பெரிதும் கவலைப்படுவார்கள். இதைக் கண்டு ஒரு சில குழந்தைகள் அந்த அன்பையும் கவனத்தையும் பெறுவதற்காகவே நோயாகப் படுத்துவிடுவதுண்டு. குழந்தை தெரிந்தே அவ்வாறு செய்வதாகக் கருத வேண்டியதில்லை. எப்படியோ அந்த நிலைமை உண்டாகுமாறு இந்த மாய மனம் செய்துவிடுகிறது.
சிலருக்கு எதிர்பாராத ஒரு துரதிஷ்டம் அல்லது துன்பம் வந்துவிடுகிறது. அவர்களில் ஒரு சிலர் ஏதாவது ஒரு துறையில் தங்கள் மனத்தை முழுவதும் செலுத்தி அந்தத் துன்பத்தை மெதுவாக மறக்கிறார்கள். ஒருவர் சமூக சேவையிலே ஈடுபடலாம்; ஒருவர் கலைத் துறையிலே இறங்கலாம்; ஒருவர் ஒரு பெரிய தொழில் முறையிலே செல்லலாம். இவ்வாறு ஏதாவது ஒரு துறையில் சென்று தங்கள் துன்பத்தை மறக்கிறார்கள். மற்றும் சிலருக்கு இவ்வாறு ஒன்றும் செய்ய முடிகிறதில்லை. துன்பத்தை மறக்கவும் முடியாமல் அதை எதிர்த்துப் போராடி உண்மையை உணர்ந்து துணிவோடு நிற்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுகிருர்கள். இப்படிப்பட்டவர்களிடந்தான் மனக்கோளாறுகள் தோன்றுகின்றன.
வேறொரு வகையில் மனக் கோளாறுகள் தோன்றுவதையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். மனத்திலே ஏதாவதொரு இச்சை தோன்றுகின்றது என்று வைத்துக்கொள்வோம். அது இழிந்ததாக இருக்கலாம் அல்லது சமூகம் ஏற்காததாக இருக்கலாம். அதே சமயத்தில் அந்த இச்சையை எதிர்த்து வேறொரு சக்தி மனத்தில் தோன்றுகிறது. இரண்டிற்கும் நனவு மனத்திலேயே போராட்டம் நடைபெறுகிறது. அந்த இச்சைப்படி நடக்கக்கூடாது; அது இழிந்தது என்கிற சக்தி வலுவடைந்து விடுகிறதென்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்த இச்சையின் வலுக்குறைந்து மறைந்துபோகிறது. இவ்விதம்தான் சாதாரணமாக வாழ்க்கையில் பெரும்பாலும் நடைபெறுகிறது.
இந்தச் சமயத்திலே பிராய்டு மனத்தை எவ்வாறு பகுத்து நோக்குகிறார் என்பதைச் சற்று விரிவாக நாம் தெரிந்து கொள்ளுவது நல்லது. நனவு மனம், நனவடி மனம், நனவிலிமனம் என்று மனத்தைப் பிரிப்பது ஒரு வகை. இன்னொரு வகையான பிரிவினையை படம் விளக்குகிறது.
குழந்தை பிறக்கின்றபோது அதற்கு இயல்பூக்கமாக அமைந்துள்ள சில உந்தல்களும் ஆசைகளுமே இருக்கின்றன. இவைகளெல்லாம் குழந்தைக்கு ஏதாவது ஒருவகையில் இன்பங்கொடுக்கக்கூடியனவாகவே அமைந்தவை. அதாவது குழந்தையின் மனம் பெரும்பாலும் இன்பம் தரும் செயல்களைத் தூண்டும் உந்தல்களைக் கொண்டதாகவே முதலில் அமைந்திருக்கிறது என்று பிராய்டு கூறுகிறார். இதற்கு இத் (Id) என்று பெயர். இது நனவிலி மனப்பாகமுமாகும். இதுதான் லிபிடோவின் நிலைக்களம். இங்குதான் இயல்பூக்கங்களும், இச்சைகளும் கூத்தடிக்கின்றன. இங்கே இன்பம் என்ற தத்துவமே ஆட்சி புரிகின்றது. இதற்கு நியாய அநியாயம் தெரியாது. இதற்குள்ளேதான் அடக்கப்பட்ட இச்சைகள் வந்து சேர்கின்றன. ஆனால் வாழ்க்கை என்பது வெறும் இன்பம் நாடும் செயல்களாகவே இருக்க முடியாது என்று விரைவில் குழந்தை தெரிந்துகொள்ளத் தொடங்குகிறது. தாய் தந்தையரின் நடத்தையும், சூழ்நிலை அனுபவங்களும் இந்த உணர்வு பிறப்பதற்கு உதவியாக நிற்கின்றன. இவ்வாறு உணர்வு பிறக்கப் பிறக்கக் குழந்தை தனது இன்பத்தையே நாடுவதைச் சிறிது சிறிதாக விட்டுக்கொடுத்து சமூக ஒழுங்குக்கு உட்படுவதற்குத் தயாராகிறது. அதன் காரணமாக இத் என்னும் மனப்பகுதியில் தனது இச்சைகளையே நாடும் பகுதி ஒன்றும், சமூக ஒழுங்குகளின் வலிமையால் தோன்றும் ஒரு பகுதியுமாக இரண்டு பிரிவுகள் தோன்றுகின்றன. இந்தப் புதிய பகுதியே அகம் (Ego) என்பது. ஆனால் இது இத் என்பதிலிருந்து முற்றிலும் தனிப்பட்டிருப்பதில்லை. இதன் அடிப்பகுதி இத்துடன் கலந்திருக்கிறது. இதன் ஒரு பகுதி நனவு நிலையோடும் மற்றப்பகுதி நனவிலி நிலையோடும் தொடர்புடையது என்றும் கூறலாம். இதிலிருந்துதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் செல்கின்றன. இச்சையானது தூய்மையடைந்து சமூகத்திற்கு ஏற்றதான உந்தலாக மாறுவதும் இங்கேதான். இவ்வாறு இழிந்த இச்சைகள் தூய்மையடைவதை உயர்மடை மாற்றம் என்று கூறுவார்கள். இயல்பான உந்தல்கள் அதாவது இயல்பூக்கங்கள் இத்திலிருந்து முக்கியமாக வேலை செய்வதுபோல புலக்காட்சி (Perception) அல்லது புலன் உணர்வு அகத்திலிருந்து முக்கியமான வேலை செய்கிறது. இது நன்னெறியைப் பின்பற்ற முயல்கிறது என்று கூறலாம். ஆனால் தூங்கிப்போவதும் உண்டு. அகம் மூன்று விதமான சக்திகளால் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. வெளியுலகம் அல்லது சமுதாயத்திற்கு அது கட்டுப்பட வேண்டும். அதீத அகத்தின் (Super Ego) ஆணையையும் கவனிக்க வேண்டும்; அதே சமயத்தில் இத்திலிருந்து கூத்தாடும் லிபிடோவின் ஆதிக்கத்திற்கும் உட்பட வேண்டும்.
இத்திலிருந்து கிளம்பும் உந்தல்களையும் இச்சைகளையும் திருப்திப்படுத்த இந்த அகம் தக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கும்; தீமையேற்படாத முறையிலே இந்தத் திருப்தியுண்டாக்குவதற்கு அது முயலும். அப்படிச் செய்யாமல் வேறு சில சமயங்களிலே இத்தின் இச்சைகளை விட்டொழிக்கும்படியோ அல்லது அவற்றை மாற்றியமைத்துக்கொள்ளும்படியோ தூண்டும்; அல்லது அந்த இச்சைகளைத் திருப்தி செய்யும் காலத்தைத் தள்ளிப்போடவாவது முயலும்.
இத்துக்கும் அகத்திற்கும் இடையே போராட்டம் நிகழும். அகத்தால் அடக்கப்பட்ட இச்சை இத்தில் அமிழும்போதுதான் சிக்கலும் மனக்கோளாறும் ஏற்படக் காரணமாகின்றது.
அதீத அகம் என்பது அகத்தினின்று தோன்றியதாகும். இது பெரும்பாலும் நனவிலி நிலையிலிருந்து வேலை செய்கிறது. இதற்கு அகத்தின் மேல் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையுண்டு. இது அவ்வப்போது அகத்தினிடமுள்ள குறைகளைக் கண்டு இடித்துக் கூறுகிறது. அதீத அகத்தை மனச்சான்று என்று கூறலாம். இது சமூகம் வகுக்கின்ற ஒழுக்க முறையை ஏற்றுக்கொண்டு அகத்தை அதற்கேற்றவாறு நன்னெறியில் நிறுத்த முயல்கின்றது. அகம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றபோதுதான் அடக்கப்பட்ட இச்சைகள் இத்துக்குச் சென்று பலவித மனக்கோளாறுகளுக்குக் காரணமாகின்றன.
இங்கு நாம் அடக்கலுக்கும் ஒடுக்கலுக்கும் (Suppression) உள்ள வித்தியாசத்தை நன்கு மனத்திற் கொள்ள வேண்டும். அடக்கல் என்பது நனவிலி நிலையில் நடப்பது; அடக்கப்பட்ட இச்சை இத்துக்குச் சென்று கோளாறுகளை உண்டாக்கக் காரணமாக இருக்கும். ஆனால் ஒடுக்கல் என்பது நனவு நிலையில் நடப்பது. என்னென்னவோ ஆசைகள் நம்மை அடிக்கடி பீடிக்கத் தொடங்குகின்றன; அவற்றை நாம் ஒடுக்க வேண்டியிருக்கிறது. இது நியாயமானதும் இயல்பானதுமான செயலாகும். இப்படி ஒடுக்குவதால் எவ்விதத் தீங்கும் விளைவதில்லை. நாகரிகமான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவனுக்கு இது அவசியமுமாகும்; இதனால் அவன் நன்மையே அடைகிறான்; சமூகமும் அமைதியோடு இருக்கின்றது.

Comments

Most Popular

இராவணன் இலங்கை - மயிலை சீனி. வேங்கடசாமி

தமிழ் நாட்டை அடுத்துள்ள இலங்கைத் தீவினை, இராவணன் ஆண்ட இலங்கை என்று மக்கள் கருதி வந்தனர்; வருகின்றனர். ஆழ்வார்களும் ஏனையோரும் இலங்கையைத் தென் இலங்கை என்று கூறியிருக்கிறபடியால், சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என மக்கள் தவறாகக் கருதி வருகின்றனர் போலும். 'தென் இலங்கை' என்பதற்குத் தமிழ் நாட்டிற்குத் தெற்கிலுள்ள இலங்கை என்று பொருள் கூறுவது சரித்திரத்துக்கு முரண்பட்டது. தென் இலங்கை என்பதற்கு, 'அயோத்திக்குத் தெற்கிலுள்ள இலங்கை' என்று பொருள் கொள்வதுதான் சரித்திரத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமானது. ஆனால், தமிழ் நாட்டை அடுத்துள்ள சிங்களத் தீவாகிய இலங்கைதான் இராவணன் ஆண்ட இலங்கை என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வருகிறது. இத்தவறான கருத்து சங்க நூல்களிலும் இடம் பெற்றுவிட்டது. சங்க நூல்கள் கூறுவன தமிழ் நாட்டிலுள்ள கோடிக்கரை (தனுஷ்கோடி) என்னும் கடற்கரையருகில், ஓர் ஆலமரத்தின்கீழ் இராமர் தங்கி, சீதையை மீட்கும் வழியை வானர வீரர்களுடன் கலந்து யோசித்தார் என்று கடுவன் மள்ளனார் என்னும் புலவர் கூறுகிறார். "வென்வேற் கவுரியர் தொன்முது கோடி, முழங்கிரும் பெளவம...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர...