Skip to main content

காந்தி யார்? - 1 | வெ. சாமிநாத சர்மா


எழுபத்திரண்டு சதுர மைல் விஸ்தீரணமுள்ள வாழ்க்கையென்னும் யுத்த மைதானத்தில், அன்பு, அஞ்சாமை என்ற இரண்டு ஆயுதங்கள் தரித்துக் கொண்டு, முகத்திலே புன்சிரிப்புத் தவழ, கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிற ஒரு போர் வீரனாகக் காட்சியளிக்கிறார் காந்தியடிகள் இன்று நமக்கு. இந்த எழுபத்திரண்டு வருஷகாலத்தில் அவர் எத்தனையோ போர்களை நடத்தியிருக்கிறார்; எத்தனையோ பேரைத் தாக்கியிருக்கிறார்; எத்தனையோ பேரால் தாக்கப்பட்டுமிருக்கிறார். ஆனால், அவர் தமது முகத்தில் சலிப்புக் காட்டியதோ, அகத்தில் வன்மம் கொண்டதோ கிடையாது. யுத்தத்தில் சகஜமாக ஏற்படக்கூடிய அநேக காயங்களை அவர் பட்டிருக் கிறார். ஆனால், எல்லாம் மார்பிலேதான். அவருடைய முதுகிலே ஒரு வடுவைக்கூடக் காண முடியாது. அப்படியே, எதிரிகளைத் தாக்குகிறபோதும், அவர்களுடைய மார்பிலேதான் காயமுண்டு பண்ணினாரே தவிர, அவர்களுடைய முதுகுப்பக்கம் ஓர் அடிகூடக் கொடுத்ததில்லை. மற்றும், சத்துருக்களின் தனிமையையோ, அசதியையோ, அசட்டு அகங்காரத்தையோ அவர், தமது வெற்றிக்குச் சாதகமாக உபயோகித்துக்கொண்டதில்லை. எதிரிகளுடைய பலஹீனத்தின் மீது வெற்றிக்கொடி நாட்டிவிடக்கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனையோ அவருக்குக் கிடைத்தன. ஆனால், அவர் சந்தர்ப்பவாதியாக இருக்கவில்லை; இருக்க மறுத்துவிட்டார். ஒரு யுத்த வீரனுடைய லட்சணத்தினின்று அணுவளவு பிறழவும் அவர் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட யுத்த வீரனாகிய அவர், இன்று, தமது ஜீவன யாத்திரையின் எழுபத்து மூன்றாவது மைற்கல்லை யடைந்திருக்கிறார். அவரை நாம் வாழ்த்தி வணங்குவோமாக.

காந்தியடிகளின் வாழ்க்கையைச் சதுர மைல் கணக்கில்தான் மேலே நாம் வருணித்திருக்கிறோம். ஏன் தெரியுமா? அவருடைய வாழ்க்கை , எவ்வளவுக்கெவ்வளவு நீளமாகிக்கொண்டு போகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அகலமாகியும் கொண்டுபோகிறதினால்தான். உலகத்திலே தோன்றிய மகான்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், ஒன்று நீளமாகவாவது இருக்கும்; அல்லது அகலமாகவாவது இருக்கும். இரண்டும் ஒன்று சேர்ந்திருக்கக் காண்பது அரிது. சங்கராச்சாரியாரென்ன, விவேகானந்தரென்ன, இப்படிப்பட்டவர்களுடைய வாழ்க்கையெல்லாம் நீளமான வாழ்க்கையல்ல; அகன்ற வாழ்க்கை. ஆனால், புத்தர் பிரானுடைய வாழ்க்கை, நீளமும் அகலமும் சேர்ந்த சதுர வாழ்க்கை. அது போலவே காந்தியடிகளுடைய வாழ்க்கையும் சதுர வாழ்க்கையாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதுமே, யாருடைய சதுர வாழ்க்கையும், தனித்துவமும் மகத்துவமும் பொருந்தியதாகவே இருக்கும். இன்று காந்தியடிகளுடைய திருநாமம் உலகத்தில் எதிரொலியுடன் முழங்கிக்கொண்டிருக்கிறதென்று சொன்னால், அஃது அவருடைய புனித வாழ்க்கைக்குத்தானே தவிர, அவருடைய தளர்ந்த உடலுக்காகவல்ல; குறுகிய உருவத்திற்காகவல்ல. அவர், மகா மேதாவியுமல்ல, அவரைவிடச் சிறந்த அறிஞர்கள், உலகத்தின் நானா பாகங்களிலும் ஆயிரக்கணக்காக இருக்கிறார்கள். அல்லது அவருடைய உறுதியான கடவுள் நம்பிக்கை, அவரை இந்த உன்னத பதவியில் கொண்டு வைத்திருக்கிறதென்றும் சொல்லமுடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களையும், சூர தாஸையும், கபீரையும், மீராபாயையும் இவர்கள் போன்ற நூற்றுக்கணக்கான பேரையும் கண்ட பாரத தேசத்திற்கு, காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை ஒரு புதுமையுமல்ல; விசேஷமுமல்ல. எத்தனையோ பக்தர்களைப் போல் அவர் ஒருவர். அவ்வளவுதான்.

இப்படி அவர் ஒரு சாதாரண மனிதராகக் காணப்பட்ட போதிலும், உலகத்திலுள்ள அறிஞர்களெல்லோரும் அவருக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள்; பக்தர்களெல்லோரும் அவரைப் பூஜிக்கிறார்கள்; பயில்வான்களெல்லோரும் அவர் முன்னே, நூற்றுப் பன்னிரண்டு பவுண்ட் நிறையுள்ள அவர் முன்னே, கைகட்டி நிற்கிறார்கள்; அழகுத் தெய்வங்களெல்லாம், அவருடைய 'பொக்கை வாய்'க்கு முன்னே வாய்பொத்தி நிற்கின்றன; நாவலர்களெல்லோரும் அவருடைய மௌனத்திற்கு முன்னே நாவடங்கி நிற்கிறார்கள்; ஆனால், அவர் நாவசைந்தால் நாடு அசைகிறது. இவை மட்டுமா? மேற்படி அறிஞர்களும், பக்தர்களும், பயில்வான்களும், காவலர்களும், இன்னோரன்ன பலரும் அவருடைய திருமுன்னர், தங்கள் தங்கள் கலைத்திறமை, தொழில் திறமை முதலியவைகளைக் காட்டி அவருடைய ஆசீர்வாதத்தைப் பெறப் போட்டி போடுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைக்கொண்டு பிரகாசிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்; அந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுப் பிரகாசிக்கிற பிரகாசந்தான் உண்மையான பிரகாசமென்று, சாசுவதமான பிரகாசமென்று நம்புகிறார்கள். இஃதென்ன வேடிக்கை!

1927-ஆம் வருஷம், மகாத்மா காந்தி, தேக அசெளக்கியங் காரணமாக, பெங்களூருக்கு வந்திருக்கிறார். 'குமாரா பார்க்' என்ற மாளிகையில் மைசூர் அரசாங்கத்தார் அவருக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து உபசரித்து வருகிறார்கள். ஒருநாள் காலை நேரம். அடிகளார், தமது அறையில் கட்டிலொன்றின் மீது சாய்ந்தவண்ணம் படுத்திருக்கிறார். அவருடைய புகழொளியைக் கண்டு வெட்கப்பட்டோ என்னவோ, சூரியன், ஜன்னல் வழியாக அவரை எட்டி எட்டிப் பார்க்கிறான். அடிகளின் முகம் மலர்ந்திருக்கிறது. அப்பொழுது ஆறரை அடி உயர முள்ள ஒரு கம்பீர உருவம் உள்ளே நுழைந்தது. நரைத்த தாடி மீசை. முற்காலத்து முனிவர்கள் போன்ற முகத்தோற்றம். அந்த முகத்தில் அறிவும் சாந்தமும் குலவிக்கொண்டிருக்கின்றன. உள்ளே நுழைந்த அந்த வடிவம், சாய்ந்து படுத்திருந்த உருவத்தை மூன்று முறை வலம் வந்தது. பின்னர் சாஷ்டாங்கமாக நமஸ்காரஞ் செய்துவிட்டு, கூப்பிய கையோடு, பக்தி மேலீட்டால் கண்களில் தாரை தாரையாக நீர் பெருகிக்கொண்டிருக்க, இமய பர்வதம்போல் அசையாது நின்றுகொண்டிருந்தது. ஆஜானுபாகுவான அந்த உருவத்தைப் பார்த்துக் காந்தியடிகள் ''என்னை இப்படிப் பரிகசிக்கலாமா? தங்களுடைய அறிவுக் கோயிலின் நுழைவாயிலில் கையேந்தி நிற்கும் ஒரு பிட்சுகன் அல்லவா நான்?'' என்றார். ''அப்படிச் சொல்லக் கூடாது; தாங்கள் ஒரு சமுத்திரம். அதிலிருந்து தெறிக்கும் ஒரு திவலை நான். ஆத்ம சக்திக்கு முன்னே அறிவு எம்மாத்திரம்? சூரியன் முன்னே மின்மினிப்பூச்சி மாதிரி. என்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள நான் இங்கு வந்தேனேயன்றி, தங்களைத் தொந்திரவு படுத்துவதற்காகவல்ல" என்றது வேத ஒலியின் எதிரொலி போன்ற அந்தக் குரல். இந்த வார்த்தையைக் கேட்ட மாத்திரத்தில், காந்தியடிகளின் கண்களில் நீர் ததும்பியது. வணங்கி நின்ற அந்த உருவமும், மெளனமாக விடைபெற்றுக்கொண்டு, அறையை விட்டு வெளியே சென்று விட்டது. இந்தக் காட்சியை நாம் எத்தனை தரம் நமது அகக்கண்ணால் தரிசித்தாலும் அத்தனை தரமும் நமது உள்ளத்தில் 'ஊறாத அமிழ்து ஊறி' நம்மைப் பரவசப் படுத்துகின்றது. வணங்கிய அவர் யார்? அப்பொழுது மைசூர் சர்வகலாசாலையின் 'வைஸ் சான்ஸல்ராக' இருந்த ஸர் வ்ருஜேந்திர நாத சீலர், உலக அறிஞர்களிலே ஒருவர். சகல கலைகளிலும் அவருக்குள்ள புலமையைப் பாராட்டு முகத்தான் அவரைச் சாதாரணமாக 'நடக்கும் அகராதி' என்று நண்பர்கள் அழைப்பார்கள். ஸர் ஜகதிஸ சந்திர போஸ், ஸர் பிரபுல்ல சந்திர ரே, ஸர் அஷுடோஷ் முக்கர்ஜி முதலிய அறிவு அரசர்களெல்லோரும், வ்ருஜேந்திர நாத சீலரை, தங்களுடைய அறிவுச் சக்ரவர்த்தியாகப் போற்றி வந்தார்கள். ஆனால், இந்த அறிவுச் சக்ரவர்த்தி, அந்தச் சத்தியாத்மாவுக்கு முன்னே அடங்கி ஒடுங்கி நின்றார். இப்படி இந்திய நாட்டு அறிஞர்கள் மட்டுமல்ல, மேனாட்டு அறிஞர்களான ஆல்பர்ட் ஈன்ஸ்டீன், கில்பர்ட் முர்ரே, சி.இ.எம். ஜோட், பெர்ரி டேல் கீத், கவுண்ட் ஹெர்மான் கெய்ஸர்லிங் முதலிய பலரும் அவருக்குத் தங்களாலான காணிக்கையைச் செலுத்திய வண்ணமிருக்கிறார்கள். இஃதென்ன புதிர்!

(அறிவோம்...)

Comments

Most Popular

சுதந்திரத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புகள் | க. நா. சுப்ரமண்யம்

தமிழிலக்கியத்தில் போதுமான அளவுக்கு இலக்கியபூர்வமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்துள்ளனவா என்று கேட்டால் , இல்லை என்றுதான் பதில் சொல்லவேண்டும். அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்குக்கூட மொழிபெயர்ப்புகள் வெளியாகவில்லை. அதுவும் சமீபகாலத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்த மொழிபெயர்ப்பும் என் கண்ணில் படவில்லை. 1935 க்குப் பிறகு 1950 வரையில் சரசரவெனப் பல உலக இலக்கிய நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்று ஓரளவுக்கு வாசகர்களிடையே ஓர் ஆர்வத்தையும் தூண்டின. அப்போதுங்கூட இலக்கிய வேகத்தை உண்டாக்கித் தாங்கக்கூடிய அளவுக்கு மொழிபெயர்ப்புகள் வந்ததாகச் சொல்வதற்கில்லை. அந்தக் காலகட்டத்தில் மொழிபெயர்ப்புகள் செய்து வெளியிட முன்வந்தவர்கள் ஓரளவுக்குத் தங்கள் ரசனையினால் தூண்டப்பெற்றவர்களாக , இந்த நூல் தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணி , அதனால் தங்களுக்கு லாபம் என்ன கிடைக்கும் என்கிற எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டனர். அந்த அளவுக்குச் சுதந்திரத்திற்குப்பின் ஓர் உந்துதல் , ஈடுபாடு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பிளேட்டோ , ரூஸ்ஸோ , டால்ஸ்டாய் மற்றும் ப...

இரு சகோதரர்கள்

  [ அ. கி. கோபாலன், அ. கி. ஜயராமன் நேர்காணல் ] நேர்கண்டவர்: எஸ். குரு படங்கள்: திரு. சுதாகர் நோபல் பரிசு பெற்ற நாவல்களைப் பதிப்பித்த அ. கி. கோபாலன் நீங்கள் பதிப்பாளரானது எப்படி ? தென்னாற்காடு மேலக்குமாரமங்கலம் என் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் நான்காவது வகுப்பு படித்தேன். கிராமத்தில் எங்கள் அப்பா விவசாயம் செய்துகொண்டிருந்தார். நிறைய நஞ்சை நிலம் இருந்தது. பங்காளிக் காய்ச்சலினால் எங்கள் சொத்துகள் பறிபோயின. முதலில் என் அண்ணன் அ. கி. ஜெயராமன் சென்னைக்கு வந்து ஒரு ஹோட்டலில் சர்வராகச் சேர்ந்துவிட்டு , அப்புறம் என்னை ஊரிலிருந்து வரவழைத்து , என்னையும் சர்வராகச் சேர்த்துவிட்டார். சைனா பஜார் பழைய ஆரிய பவனுக்கு எதிரே ஆனந்த லட்சுமி பவன் என்று இருந்தது. அங்குதான் சர்வராகச் சேர்ந்தோம். இட்லி அரையணா , காபி முக்காலணா , பீடா காலணா , ஸ்பெஷல் பீடா அரையணா விற்ற காலம் அது. ஹோட்டலுக்கு அருகில் ச. சு. சங்கரலிங்கக் கவிராயர் என்ற நாடகாசிரியர் தங்கியிருந்தார். சங்கரலிங்கக் கவிராயர் , சங்கரதாஸ் சுவாமிகளுக்கு இணையானவர். அவரிடம் நாடகப் பாடல்கள் கேட்டேன். ஹோட்டலில் சக ஊழியர்களிடம் சொல்லிவிட்டு , ஆ...

இலவச நூல்கள்

புயலிலே ஒரு தோணி EPUB  |  MOBI கடலுக்கு அப்பால் EPUB  |  MOBI சத்திய சோதனை EPUB | MOBI காந்தி: சத்திய சோதனைக்குப் பின் EPUB | MOBI நவகாளி யாத்திரை EPUB | MOBI பதிவிறக்கி வாசிப்பது எப்படி ? 1. இந்த நூல்களை MOBI அல்லது EPUB கோப்பாக பதிவிறக்கிக்கொள்ளலாம். கிண்டிலில் வாசிக்க ஏற்றது MOBI கோப்புதான். அதை பதிவிறக்கவும். 2. கிண்டில் ரீடரில் Settings > Your Account சென்றால் அங்கு Send-to-Kindle E-mail என்ற பெயரில் ஒரு ஈமெயில் முகவரி (உதாரணமாக , xyz@kindle.com) இருக்கும். அந்த ஈமெயில் முகவரிக்கு பதிவிறக்கிய MOBI கோப்பை , ( அமேசான் கணக்கில் பதிவு செய்துள்ள உங்கள் ஈமெயில் முகவரிலிருந்து மட்டும்) அனுப்புக. 3. கிண்டிலில் Wifi On செய்ததும் அனுப்பிய MOBI புத்தகம் தானாகவே டவுன்லோட் ஆகிவிடும். அமேசான் தளத்தில் வாங்கிய நூலில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும். 4. இவ்வாறு கிண்டில் ஈமெயிலுக்கு அனுப்பிய கோப்புகள் தமிழில் இருந்தால் , அவற்றை கிண்டில் ரீடரில் மட்டுமே வாசிக்க முடியும். கிண்டில் கைப்பேசி செயலிலும் கணினியிலும் வாசிக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு...