Skip to main content

மனமும் அதன் விளக்கமும் | கிலி | பெ. தூரன்

ரு நாள் இரவு எட்டு மணியிருக்கும். புதிதாக வந்த நண்பரொருவரோடு வெளித் திண்ணையிலமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன். சந்தித்துப் பல ஆண்டுகளாகிவிட்டபடியால் அவர் குதுாகலத்தோடு தமது வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் முகத்திலே மகிழ்ச்சி பொங்கிக்கொண்டிருந்தது.
அது கார் காலம். வானத்திற்குப் போர்வையிட்டது போல எங்கும் கருமேகக் கூட்டம். திடீரென்று இடியின் பெருமுழக்கம் கேட்டது. மின்னல் பளிச்சிட்டது. அது வரைக்கும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த நண்பர் இடிக்குரலைக் கேட்டு அலறி நடுங்கலானர். இடியோசை கேட்கும் ஒவ்வொரு தடவையும் அவர் துள்ளியெழுந்தார். மருண்டு மருண்டு அச்சத்தோடு சுற்றுமுற்றும் பார்த்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இடியிடிப்பதைக் கண்டு அவர் இப்படி அஞ்சுவானேன்; கார்காலத்திலே இடியும் மின்னலும் இயல்புதானே என்று நான் உள்ளுக்குள்ளேயே எண்ணிக்கொண்டிருந்தேன்.
“வீட்டிற்குள்ளே போய்விடலாமா?” என்று அந்த நண்பர் விரைவாகக் கேட்டுக்கொண்டே எழுந்து நடந்தார். வீட்டிற்குள்ளே சென்று அமர்ந்த பிறகும் அவருடைய பேரச்சம் தணியவில்லை. இடிக்குரல் கேட்கும் போதெல்லாம் அவர் திடுக்கிட்டெழுந்தார்.
“கார்காலத்திலே எங்கள் ஊரில் இப்படி இடியிடிப்பதுண்டு. ஆனால் எங்கேயாவது இடி விழுந்ததாகவே காணோம். சும்மா வெறும் உருட்டலும் முழக்கமும்தான்” என்று மெதுவாக நான் கூறினேன்.
என் பேச்சு அவருடைய உள்ளத்திலே அமைதியை உண்டாக்கவில்லை, வீண் அச்சங்கொண்டு அவர் தொல்லைபட்டுக்கொண்டிருந்தார். “எனக்கென்னவோ இடியிடிப்பதைக் கேட்டால் ஒரே பயமாக இருக்கிறது" என்று அவர் நெற்றி வியர்வையைத் துடைத்துக்கொண்டே கூறினார்.
அந்த அச்சத்திற்கு அவரால் ஒரு காரணமும் கூறமுடியவில்லை; "என்னவோ அச்சமாக இருக்கிறது" என்று சொல்லிவிட்டுச் சுருண்டு படுத்துக்கொண்டார். விரிப்பை எடுத்துப் போர்த்துக் கொள்ளவும் செய்தார்.
"இப்படி இழுத்துப் போர்த்துக்கொண்டால் இடி விழாதோ?” என்று கேலியாகக் கேட்டேன். அவர் பதில் பேசவேயில்லை. இவரைப் போல வீண் அச்சங்கொள்கின்றவர்கள் பலருண்டு. சிலருக்குப் பூனையைக் கண்டால் ஒரே நடுக்கம். சிலருக்கு இருட்டைக் கண்டால் ஒரே நடுக்கம்; கோழியைக் கண்டு அலறி ஓடுபவர்களும் உண்டு. ஏன் அவ்வாறு அச்சங்கொள்ளுகிறார்கள் என்று கேட்டால் காரணம் அவர்களுக்கே தெரியாது. சொல்லமுடியாத பேரச்சம் ஏனோ உண்டாகிறது.
சிங்கத்தையோ புலியையோ கண்டால் பொதுவாக அனைவருக்கும் அச்சம் உண்டாகும். அவை கொடியவை என்ற காரணத்தினால் அஞ்சுகிறோம். அதை நாம் புரிந்துகொள்ள முடியும். அது தற்காப்பு உணர்ச்சியால் பிறக்கிறது. ஆனால், கோழியைக் கண்டாலும் மின்னலைக் கண்டாலும் உண்டாகின்ற அச்சந்தான், விந்தையாக இருக்கிறது. இருட்டிலே தற்காப்புணர்ச்சியினால் ஓரளவு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டாக வேண்டுமே ஒழிய, பேரச்சம் ஏற்பட வேண்டியதில்லை. இருட்டிலே சாதாரணமாகப் பலர் நடமாடுகின்றார்கள். அதனல் தீங்கு ஏற்படுவதில்லை. அவ்வாறு சாதாரணமாக அச்சமடைய வேண்டாதவற்றைக் கண்டு காரணமின்றி ஏற்படும் பேரச்சத்தை ஒரு வகையான கிலி (Phobia) என்று உளவியலறிஞர்கள் கூறுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன், சிறு வயதில் ஏற்பட்ட ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சிதான் இதுபோன்ற கிலிக்குக் காரணமாக இருக்கிறது. அம்மனக் கிளர்ச்சியும், அது எதனால் உண்டானதென்பதும் மறந்து போய்விடும். ஆனால், அதன் விளைவாகத் தோன்றிய கிலி மட்டும் நிலைத்திருக்கும். என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு மாணவன் காற்று சற்று வேகமாக அடித்தால் கிலியடைவான். அதற்குக் காரணம் அவன் சிறுவனாக இருந்தபொழுது தனது சொந்த ஊராகிய நெல்லூரில் வீசிய பெரும் புயலையும் அதன் காரணமாக விளைந்த உயிர்ச் சேதத்தையும் கண்டு அஞ்சியதே என்று பின்னால் தெரிந்துகொண்டேன். இதுபோலவே ஒவ்வொரு வகையான கிலிக்கும் ஏதாவது காரணமிருக்கும். இயல்பாக எழுகின்ற ஆசைகள் நிறைவேறாமல் போவதாலும், அடிப்படையான உள்ளக் கிளர்ச்சிகளிலே தடுமாற்ற மேற்படுவதாலும் கிலி பிறப்பதுண்டு.
என்னிடம் படித்த மாணவன் ஒருவனுக்குச் சுமார் 12 வயதிருக்கும். அவன் இருட்டறைக்குள் செல்லவேமாட்டான். அவனைக் கேலி செய்யவேண்டுமெனச் சில மாணவர்கள் ஒரு நாள் சூழ்ச்சி செய்தார்கள். ஓர் அறைக்குள்ளே போய் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துவரும்படி அவனை ஏவினர்கள். அவன் உள்ளே சென்றதும் மின்சார விளக்கைச் சட்டென்று அணைத்துவிட்டார்கள். அவன் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடி வந்தான். எல்லாருக்கும் அது விளையாட்டாக இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பெரிய கிலியாக இருந்தது. பிறகு அவனை நிதானமாக ஆராய்ந்து பார்த்ததில் குழந்தையாக இருந்தபோது இருட்டறையில் பேயிருப்பதாக யாரோ கூறி அச்சமுறுத்தியதுதான் அந்தக் கிலிக்குக் காரணமென்று தெரியவந்தது.
பிராணிகளைக் கண்டு ஏற்படும் கிலிக்கு சிக்மண்ட் பிராய்டு வேறொரு காரணமும் கூறுகிறார். பெற்றோரிடம் குழந்தைகளுக்குண்டாகும் அச்ச உணர்ச்சியானது விலங்குகளிடம் அக்குழந்தைகளுக்குக் கிலியாக மாறுகிறதாம். “விலங்குகளைக் கண்டு பிறக்கும் கிலிகளில் பலவற்றை ஆராய்ந்தபோது அவை பெற்றோரிடமுள்ள அச்சத்தால் பிறந்தவை எனத் தெரியவந்தது” என அவர் கூறுகிறார்.
பொதுவாக நோக்கும்போது நிலைமைக்கும் அனுபவத்திற்கும் ஏற்றவாறு பல வகையான கிலிகள் பிறக்கின்றன. மூடப்பட்டுள்ள இடத்தைக் கண்டு கிலி, திறந்த வெளியில் கிலி, செங்குத்தான இடக் கிலி, நெருப்புக் கிலி, இருட்டுக் கிலி, தூசு பட்டு நோய் பிடிக்கும் எனக் கிலி, பூனைக் கிலி, அச்சத்தைப் பற்றிய கிலி என்பன போன்ற பல கிலிகளால் மக்களில் பலர் வருந்துவதை நாம் காணலாம். பரபரப்பும் மன அதிர்ச்சிகளும் நிறைந்த இக்கால வாழ்க்கையிலே பலர் பல வகைப்பட்ட கிலிகளால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.
அவ்வாறு கிலி பிடித்து இடர்ப்படுவது முட்டாள்தனம் என்று கூறுவதாலும் அக்கிலிக்கு ஒரு காரணமும் இல்லையென்று எடுத்துக் காட்டுவதாலும் அதைப் போக்கிவிட முடியாது. இருட்டறையைக் கண்டு கிலி அடைபவனை அதற்குள்ளேயே வலுக்கட்டாயமாக இருக்கச் செய்து அதில் ஒரு தீங்கும் இல்லையெனக் காண்பித்து அக் கிலியைப் போக்கலாமெனச் சிலர் முயல்கின்றனர். அவ்வாறு செய்வதால் கிலி மறைவதே இல்லை.
அக்கிலியைப் போக்குவதற்கு ஒரே ஒரு வழிதானுண்டு. பொதுவாகக் கிலி பிடிப்பதற்கு இளமையில் நடந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சியோ அனுபவமோ காரணமாக இருக்குமென்று முன்பே கூறினேன். அந்நிகழ்ச்சியையும் நிலைமையையும், அனுபவத்தையும் மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும்படி செய்ய வேண்டும். மறை மனத்திலே அழுந்திக் கிடக்கும் அனுபவம் வாய்ந்த உளவியலறிஞரின் உதவியால் அவற்றை நனவு மனத்திற்குக் கொண்டுவந்துவிடலாம். அவ்வாறு கொண்டுவந்து அன்றடைந்த உள்ளக் கிளர்ச்சியைத் திரும்பவும் உணரும்படி செய்து விட்டால் அக்கிலி தானாகவே நீங்கிவிடும். கிலியென்பது காரணமின்றி ஏற்படும் ஒரு பேரச்சம். பொதுவாக அது ஒரு ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சியால் உண்டாவது. அதைப் போக்குவதற்கு மனநோய் சிகிச்சை வல்லுனர்களே தகுதி வாய்ந்தவர்கள்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு...

மனமும் அதன் விளக்கமும் | கனவின் பொருள் | பெ. தூரன்

ப ல கனவுகள் சிக்கல் நிறைந்திருக்கின்றன; அவற்றில் தோன்றும் நிகழ்ச்சிகள் மேலாகப் பார்க்கும்போது பொருளற்றவைகளாகவும் இருக்கின்றன. கோ. என்பவர் கண்ட ஒரு கனவை இங்கே ஆராய்வோம். “ஏதோ ஒரு பெரிய கோயில். அங்கே நானும் என் நண்பர்கள் சி. வே. மா. ஆகிய மூவரும் சேர்ந்து ஒருவனைக் கொலை செய்தோம். அவனுடைய மூக்கை மாத்திரம் அறுத்துச் சந்தனத்தில் வைத்துச் சாமிக்கு வைத்தோம். பிணம் வெளியிலேயே கிடந்தது. சி. தான் மூக்கை அறுத்தவர். கடவுளைத் தொழுவதற்காகப் பலர் ஒரு மோட்டார்க் காரில் வந்தார்கள். உடனே நான் பிணத்தைத் துரக்கிக் கோபுரத்தின் மேல் வீசினேன். இதை எனது ஆசிரியர் ஒருவர் பார்த்துக் கொண்டார்.” “நான் ஒடி வந்துவிட்டேன். வழியில் என் நண்பர் வீ. யைச் சந்தித்து வேறொருவனிடம் சைக்கிள் வாங்கி இருவரும் ஏறிக்கொண்டு ஊருக்குச் சென்றோம். வழியில் சி. தம் அண்ணனிடம் ஒன்றும் நடக்காதது போல் வந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கொலை செய்துவிட்டு இவர் இவ்வளவு தாராளமாக வெளியில் நடமாடுகிறாரே என்று வியந்தேன்.” "நாங்கள் ஒரு சத்திரத்தில் புகுந்துகொண்டிருந்தோம். ஆனால் சி. வேறு சில நண்பர்களிடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.” ...

தமிழில் வசனநடை | க. நா. சுப்ரமண்யம்

எல்லா மொழிகளிலுமே இலக்கிய ரீதியாகக் கவனிக்கும்போது கவிதை என்பதை ஒட்டிப் பின்னர்தான் வசன நடை என்பது எழுந்திருக்கிறது என்பது வெளிப்படை . தமிழும் அதற்கு விலக்கல்ல . தமிழ்க் கவிதை கி . மு . ஐந்தாயிரத்தில் தோன்றியது என்று வைத்துக்கொண்டால் , கவிதை தோன்றி ஆறாயிரத்து எழுநூற்றிருபது வருஷங்களுக்குப் பிறகுதான் வசன நடை தோற்றிற்று . தமிழ்க் கவிதை தோன்றியது கி . பி . மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியே என்று ஏற்றுக்கொண்டால் , வசனம் தோன்றியது ஒரு ஆயிரத்தி நானூறு வருஷங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்ல வேண்டும் . நான் இந்த இரண்டாவது காலவரையே நியாயமானது என்று எண்ணுபவன் . எஸ் . வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிகளும் இதையே வற்புறுத்துகின்றன என்று தான் சொல்லவேண்டும் . உரை என்று சொல்லப்படுவதும் வசனமும் ஒன்றுதான் என்று அபிப்பிராயம் தெரிவித்துக்கொண்டிருப்பதில் சாரமில்லை . உரை இருந்திருக்கிறது . தமிழர்கள் ஊமைகள் அல்ல , ஆரம்ப காலத்திலிருந்தே உரையாடிக்கொண்டுதான் வந்திருக்கிறார்கள் என்று சொல்வது ஹாஸ்யமாகப் பொருத்தமாக இருக்கும் . உ...