உடலை எவ்வாறு நலமாக வைத்திருக்க வேண்டுமோ அது போலவே மனத்தையும் நலம் குறையாமல்
வைத்திருப்பது வாழ்க்கையின் இன்பத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படையாகும். மனத்தின்
பல விந்தைகளை இதுவரையில் சுருக்கமாக அறிந்து கொண்டோம். அம்மனத்தை எவ்வாறு நலம் செழித்து
ஓங்கச் செய்யலாம் என்பது பற்றியும் ஒரளவு முன்பே கூறப்பட்டுள்ளது. இப்பகுதியிலே மேலும்
சில வழிமுறைகளைப் பற்றி ஆராய்வோம்.
பல வழிகளிலே மனநலம் பாதிக்கப்படலாம். அவற்றை அறுதியிட்டுக் கூறுவது எளிதல்ல.
உடல் நலக்குறைவே மனநலத்தைக் கெடுக்கக்கூடியதாக இருக்கலாம். வீட்டுச் சூழ்நிலை, பள்ளி,
கோவில், நீதிமன்றம், தொழில் நிலைமை என்று இப்படி மிகப் பலவற்றை நாம் எடுத்துக் கூறலாம்.
ஆதலால் மனநலமானது, உடலியல், பொருளியல், சமூகவியல், சமயம், அறவியல் முதலான பல துறைகளோடு
நெருங்கிய தொடர்புடையதாகும். மேலும் மனநலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கைச்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கும். ஒரு மனிதனுக்கு ஏற்றது மற்றொரு மனிதனுக்கு
ஒத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுருக்கமாகக் கூறினால் ஒவ்வொருவனுக்கும்
ஏற்பட்டுள்ள அவனுடைய ஆளுமையின் வளர்ச்சியைப் பொறுத்ததாக மனநலம் இருக்கும்.
பொதுவாகத் துன்பம் நேர்வதால் மனநலம் பாதிக்கப்படும் என்பதை யாவரும் உணர்ந்திருப்பார்கள்.
துன்பம் எத்தனையோ விதங்களில் நேரலாம். பொருளாதார நெருக்கடி, தொழிலில் பெருந்தோல்வி,
உடல் நோய், வேலையில்லாமை, பெருங்குடும்பத்தைத் தாங்கும் பொறுப்பு என்றிவ்வாறு எண்ணற்ற
விதங்களில் துன்பம் உண்டாகலாம்.
இத்துன்பங்களையெல்லாம் சமாளித்து அமைதியோடும், பொறுமையோடும் வாழ்க்கையை நடத்த
அறியாத ஒருவன் மனநலத்தை இழக்கிறான். இடையூறுகளை வெல்ல வேண்டும் எனவும், மனத்திலே சோர்வுக்கும்
தோல்வி மனப்பான்மைக்கும் இடங்கொடுக்கக் கூடாது எனவும் ஒருவன் உறுதியாக முனைந்தால் எவ்வளவு
துன்பத்தையும் அவன் தாங்கிக்கொள்ளுவதோடு மனம் தெளிவாக இருக்கவும் அவன் வல்லமை பெற்றுவிடுகிறான்.
தன்னைத்தானே அலசிப் பார்த்துத் தன்னுடைய குறைகளையும் நிறைகளையும் உணர்ந்து, தன்னிடமுள்ள
குறைபாடுகளை மெதுவாகக் களைய முயல்வதே மனநலத்திற்கு நல்ல முறையில் அடிகோலுவதாகும். தன்னைத்தானே
ஆராய்வது அவ்வளவு எளிதான செயலன்று. இருப்பினும் இதை ஒவ்வொருவனும் பல தடவை செய்துபார்த்து
வெற்றிபெற முயலவேண்டும். எதற்கெடுத்தாலும் சிடுசிடுப்பாக இருப்பவன் தனது குறைபாட்டை
உணர்ந்து கொண்டால் தனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நன்மையை விளைவிக்கும்.
மனநலத்தை ஒருவன் நன்கு பெறுவதற்கு வாழ்க்கையைப் பற்றித் திட்டமான தத்துவத்தைக்
கொண்டிருக்க வேண்டும். நாள்தோறும் தோன்றும் வாழ்க்கைச் சிக்கல்களை நல்ல அமைதியான மனப்பாங்கோடு
நோக்கவேண்டும். அவன் வாழ்க்கையில் மனநிறைவு காணவும் முற்படவேண்டும். வாழ்க்கையின் ஏற்றத்
தாழ்வுகளை எண்ணிப் பார்ப்பதோடு, சமூகத்திலும், தொழிலிலும் தோன்றும் பிரச்சினைகளைத்
துணிவுடன் ஏற்றுக்கொள்ள அவன் தயங்கக்கூடாது. மேலும் சமூகத்திலே பற்றுள்ள மனப்பான்மையும்,
சமூகத்தைப் பற்றிய தெளிந்த அறிவும் மனநலத்தை வளர்க்க உதவும்.
கருத்து முரண்பாடு, மனக்கிளர்ச்சி, பேராசை, மனப்போராட்டம் போன்றவைகளுக்கு ஒருவன்
அடிமைப்படாமலிருக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்றவாறு நடக்க முடியாவிட்டால் மனக்குழப்பம்,
மன நோய், தீய எண்ணங்கள், இழிந்த பழக்கங்கள், பகற் கனவு, அச்சம், கவலை, தாழ்வு மனப்பான்மை,
சங்கடங்களைத் தட்டிக்கழிக்க முயலுதல், சமூகத்திற்கு மாறுபட்ட நடத்தை, இன்னும் இவை போன்ற
தீய இயல்புகளும் நடத்தைகளும் உண்டாகும். நல்ல பழக்க வழக்கங்களை ஒருவன் இளமையிலிருந்தே
கைக்கொள்ளுதல் மிகவும் தேவை. வெறும் அறிவு மட்டும் இருந்தால் போதாது.
வாழ்க்கையில் தெளிவான குறிக்கோள் இருக்க வேண்டும். தனது குறிக்கோளை நிறைவேற்ற
முயல்கின்றவனுடைய மனம் சிதறுண்டு அலையாது. அது ஒரு நிலைப்பட்டு வளம் மிகுந்து நிற்கும்.
குறிக்கோளுடைய ஒருவன் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பான்.
மனத்திலே கொந்தளிப்பான கிளர்ச்சிகள் தோன்றும்படியாக விடுவது மனநலத்தைக் குலைக்கச்
செய்யும். பல வேளைகளிலே மனம் குமுறி எழும்படியான நிலைகள் ஏற்படலாம். ஆனால் அப்பொழுதெல்லாம்
மனக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயலவேண்டும். மனக் கிளர்ச்சியால் ஏற்படும் அதிர்ச்சிகளும்
ஏற்படாதவாறு கட்டுப்படுத்த வேண்டும். அவை மனத்தின் நலத்தைக் குலைப்பதோடு உடல் நலத்தையும்
கெடுக்கும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இளமையிலிருந்தே இவ்விதமான
பழக்கத்தை உண்டாக்குவது இன்றியமையாதது.
மனநலத்தை வளர்ப்பதற்குப் பல வழிகளைக் கூறலாம். சமூகச் சூழ்நிலையோடு இணைந்து
நடப்பது, துன்பத்தின் காரணத்தை அறிய முயற்சி செய்தல், மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்,
வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளையும், ஏமாற்றங்களையும் நகைச்சுவை உணர்ச்சியோடு களைய
முயலுதல், சோம்பலைத் தவிர்த்தல், நாள்தோறும் செய்யும் செயல்களை ஒழுங்காகத் திட்டப்படுத்துதல்,
கடமைகளையும் பணிகளையும் செய்வதில் பற்று கொள்ளுதல், அவ்வாறு பற்று கொள்வதால் துன்பங்களை
மறத்தல், பகற்கனவாலும் பயனற்ற எண்ணங்களாலும் மனநிறைவை அடைய முயலாதிருத்தல், செய்வதைத்
திருந்தச் செய்வதில் இன்பங்காணுதல் முதலானவைகள் எல்லாம் நல்ல மனநலத்திற்குச் சிறந்த
அடிப்படைகளாகும். மன நலம் சிறந்திருப்பதே ஒருவனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு நல்ல அறிகுறியாகும்.
வீட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் சமூகத்திலும் நாம் விரும்பியவாறே எல்லாம்
நடைபெறும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தனமாகும். அவ்வாறு நடைபெறுவதற்கு வேண்டிய
நேர்மையான முயற்சிகளை ஒருவன் கைக்கொள்ளலாம்; ஆனால் அவற்றை விட்டுவிட்டு மனத்தை அலட்டிக்கொள்வதிலும்
பகற்கனவின் மூலம் மனநிறைவு காண்பதிலும் ஒருவன் தன் ஆற்றலை விரயம் செய்வானானால் அது
தனக்குத்தானே கேடு விளைவித்துக்கொள்வதாக முடியும். இறுதியில் மனநலம் குலைவதற்கும் அவைகளே
வழிகளாக ஏற்பட்டுவிடும். மன உறுதியோடு தன் வாழ்க்கை விவகாரங்களை எண்ணிப்பார்த்துத்
திட்டமான முடிவு கண்டு அம்முடிவின்படி செயலாற்ற அவன் முற்பட வேண்டும். அப்படி முற்படும்போதும்
பல இடையூறுகளும், இடையிடையே சிறு தோல்விகளும் ஏற்படலாம். இவற்றை எதிர்பார்த்தே ஒருவன்
செயலில் இறங்க வேண்டும். இந்த முயற்சியில்தான் நகைச்சுவை ஒருவனுக்குப் பெரிதும் உதவுகின்றது.
அத்துடன் அவன் சில நாட்களுக்கு வேறு இடங்களுக்குச் சென்று ஓய்வு பெறுவதும் மனநலத்திற்கு
உகந்ததாகும். நண்பர்கள், அக்கம் பக்கத்தார்கள் முதலியவர்களுடைய வாழ்க்கையில் ஒருவனுக்கு
அக்கறை இருக்குமானால் அவர்கள் வாழ்விலும் மனநிறைவு தராத தொல்லைகள் இருப்பதை உணருவான்.
அந்த உணர்ச்சியும் அவனுக்கு வாழ்க்கையைப் பற்றிய சரியான மனப்பாங்கை உண்டாக்கும்.
பற்றற்ற நிலையைக் கடைபிடித்து ஒருவன் தனது கடமைகளைச் செய்வானானால் அவனுடைய மனம்
எந்த விதமான எதிர்ப்பாலும், இடையூறாலும், தோல்வியாலும் துன்பப்படாது என்று நமது நாட்டுச்
சான்றோர்கள் கூறியுள்ளார்கள். இவ்வாறான ஒரு பற்றற்ற நிலை எளிதில் கைகூடாது என்றாலும்
அதை அடைவதற்கு என்றும் முயற்சி செய்வது நல்லது. சமயப் பற்றுடையவர்கள் தமது சமயக் கொள்கைக்கு
ஏற்றவாறு இறைவனிடம் தமது வாழ்க்கையையே ஒப்படைத்துவிட்டு, “நன்றே செய்வாய் பிழை செய்வாய்;
நானோ இதற்கு நாயகமே” என்ற மனப்பாங்கோடு வாழ்க்கையினை நடத்துவதும் மன நலத்திற்கும்,
மன அமைதிக்கும் மிகச் சிறந்த வழியாகும். சமயப்பற்று இல்லாதவர்களும் தம்மைத்தானே ஆராய்ந்து
அந்த ஆராய்ச்சியின் பயனாக வாழ்க்கையை நடத்தத் தொடங்கினால் மனநலம் சிறக்கும். இதுவே
வாழ்க்கையை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்கும் இன்னல்களை இன்முகத்தோடு ஏற்பதற்கும்
மனநலம் கெடாமல் இருப்பதற்கும் நல்ல வழி. மனத்தைப் பற்றி இந்நூலிலே இதுவரை அறிந்துகொண்டவைகளெல்லாம்
இதற்கு உதவியாக நிற்கும் என்பது என்னுடைய கருத்து.
இக்காலத்திலே மனநலம் குலைந்தோர் பெருகி வருவதால் உளநோய் மருத்துவம், உளவியல்
சிகிச்சை முதலியன தோன்றியிருக்கின்றன. மனநலம் குறைந்தவர்களென்றால் அவர்களெல்லாரும்
பைத்தியமாகவோ, ஹிஸ்டீரியா முதலிய நோய்வாய்ப்பட்டிருப்பவர்களாகவோ இருப்பவர்கள் என்று
எண்ணி விடக்கூடாது. சாதாரணமாக வாழ்க்கை நடத்துபவர்களிடத்தும் இந்த மனநோய் சிறிய அளவிலோ,
பெரிய அளவிலோ இருக்கலாம். அவர்கள் தங்களைத் தாங்களே தெளிவாகப் புரிந்துகொள்ளாததினாலேயே
இந்நோய் தோன்றுகிறது. அவ்வாறு புரிந்துகொள்ளுவதும் எளிதன்று என்பது முன்னாலேயே கூறப்பட்டுள்ளது.
ஒருவன் தன்னுடைய குறைபாட்டைப் பொதுவாக மற்றவர்கள் நோக்கும் கோணத்தை விட்டு வேறு ஒரு
கோணத்திலே நோக்கி அது தனது தனித்திறமை என்றுகூட எண்ணிக்கொள்ளும்படி மனமே செய்துவிடும்.
பலபேருக்கு மேலாக ஒரு நிறுவனத்தில் பதவி வகிக்கும் ஒருவர் முன்கோபியாக இருக்கலாம்;
ஆனால் அவர் தாம் முன்கோபி என்பதைப் புரிந்துகொள்ளாமல், ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும்
நிலைநாட்டுவதில் கண்ணுங்கருத்துமாக இருப்பவர் என்று எண்ணிக்கொள்ளுவார். மனக்கோளாறுகள்
எல்லாம் நனவிலி மனப்பகுதியில் ஏற்படும் சிக்கல்களை விடுவிக்காததாலேயே உண்டாகின்றன என்றும்
அதற்குப் பிராய்டு வகுத்த மனப்பகுப்பியல் என்ற புகழ்பெற்ற முறையையும் நாம் முன்பே தெரிந்திருக்கிறோம்.
உளவியல் சிகிச்சையின் நோக்கங்களைக் கீழ்க்கண்டவாறு வகுத்துக் கூறலாம். மன நோயாளிகள் பொதுவாக வாழ்க்கையைப் பற்றித் தவறான கருத்துடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் காரணமில்லாது சில வெறுப்புக்களையும் உடையவர்களாக இருக்கலாம். தமக்கு நேர்கின்ற சிறிய துன்பங்களையும் பெரியனவாக நினைத்துக்கொள்ளலாம். உளவியல் சிகிச்சை இவற்றை மாற்ற முயல்கிறது. சிலர் உடலுக்கு ஏற்படும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் வல்லமை இல்லாதவர்களாக இருப்பார்கள். அதுபோலவே சிலருக்கு மனக்கவலையைப் பொறுத்துக்கொள்ளும் வல்லமை குறைவாக இருக்கும். இந்த வல்லமையைப் பெருக்குவதும் உளவியல் சிகிச்சையின் நோக்கமாகும். மன நோயாளிகள் தங்களுக்கு இயல்பாக அமைந்துள்ள திறமைகள், குறைபாடுகள் முதலியவற்றை நன்றாக அறியாதவர்களாக இருப்பார்கள். அவற்றை உணர்ந்து தங்களுடைய ஆளுமையின் தரத்தை அறிந்து கொள்ளும்படி செய்வதுவும் சிகிச்சையின் மற்றொரு நோக்கமாகும். நோயாளிகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதும், வாழ்க்கையை இன்பமும் மனநிறைவும் பெறுமாறு செய்வதுவும் இந்தச் சிகிச்சையின் முக்கியமான முயற்சியாகும்.
Comments
Post a Comment